Published on: ஆகஸ்ட் 7, 2025

நாட்டின் பொருளாதாரம் நிலையான மற்றும் வலுவான பாதையில் உள்ளது.

நாட்டை கவிழ்க்க சதி செய்வது பற்றி யோசிக்கவே வேண்டாம்

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

கடந்த ஓராண்டு காலத்தில் அரசாங்கத்தின் மகத்தான அர்ப்பணிப்பின் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் நிலையான மற்றும் வலுவான பாதையை எட்டியுள்ளது, மேலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார நன்மைகள் மக்களுக்கு தொடர்ந்து செல்வதை உறுதி செய்யப்படும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சிலர் எப்போதும் நாட்டில் பேரழிவு ஏற்படும் என நாசகார கனவு காண்கிறார்கள் என்றும் அது ஒருபோதும் நடக்காது என்றும், எனவே அவர்கள் வேறு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று (07) பாராளுமன்றத்தில் பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அதிகாரத்தைப் பெறும் நோக்கில் எந்த வகையிலும் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, நாட்டையும் மக்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களிலிருந்து விடுவித்து, மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்க அனைவரும் நல்லெண்ணத்துடன் ஒன்றிணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழு உரை

குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் குறித்த பல பிரச்சினைகளை, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்த விவாதத்தின் போது, முன்வைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

அண்மைக் காலங்களில், பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய சூழ்நிலைகள் காரணமாக, அரசாங்கம் சரிந்துவிடும் என்று பலர் விரும்பினர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சில மோதல்களுக்குப் பிறகு, பல்வேறு ஊடக மாநாடுகளை நடத்தியவர்கள்

கொழும்பு மீது குண்டு வீசப்படும் என்று எதிர்பார்த்தனர். அந்த மோதல்களின் போது கூட, நமது பாதுகாப்பு செயலாளரும் இராணுவத் தளபதிகளும் பாகிஸ்தானின் லாகூரில் இருந்தனர். கொழும்பு மீது குண்டு வீசப்படும் என்று எதிர்க்கட்சி எதிர்பார்த்தது.

பின்னர், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு சர்வதேசப் போருக்குப் பிறகு, தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பியிருந்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அதன் பிறகு, அமெரிக்கா விதித்த தீர்வை வரிக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிடும் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு கொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் அமெரிக்க வரி விகிதம் 30% ஆக அன்றி 44% ஆக அதிகரிக்கும் என்று சொல்வதை நான் பார்த்தேன். அது அவர்களின் பிரார்த்தனை. இந்தியாவின் வரி 15%-20% குறையும் என்று அவர்கள் சொன்னார்கள். அதனால்தான் எதிர்க்கட்சிகள் எப்போதும் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவு ஏற்படும் என்ற கொடூரமான, அழிவுகரமான கனவைக் காண்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது.

அமெரிக்காவால் எங்களுக்கு முன்வைக்கப்பட்ட வரிகள் தொடர்பான பிரச்சினையை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் இது அமலுக்கு வரும் என்று ஏப்ரல் 2 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா நம் நாட்டின் மீது அத்தகைய வரியை விதித்தபோது, அவர்கள் முடிவு செய்த ஒரு கொள்கையொன்று இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியில் பாதி சதவீதம் எங்கள் வரிக் கொள்கையாக தீர்மானிக்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக இடைவெளி 88% ஆகும். அதில் பாதி 44% ஆகும். அப்படித்தான் எங்களுக்கு 44% வரி கிடைத்தது. அந்த சமயத்தில் கூட, எதிர்க்கட்சி இலங்கை மீது 44% விதிப்பது அரசாங்கத்தின் தோல்வி என்று கூறியதை நான் கண்டேன். இது அரசாங்கத்தின் தோல்வி அல்ல. இந்த வரியை விதிக்க அவர்கள் தயாரித்த கொள்கை அது.

அமெரிக்காவுடன் இந்த பேச்சுவார்த்தைகளை நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் தான் முன்னெடுத்தோம் என்பதை நாம் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளோம். மறுபுறம், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் தொகை மற்றும் பொருளாதார அளவில் உள்ள வேறுபாடுகளை ஒப்பிடுகையில் இதனை ஓரிடத்திற்குக் கொண்டுவருவதில் சிரமம் உள்ளது. மேலும், நமது ஏற்றுமதியில் 25% க்கும் அதிகமானவை அமெரிக்காவிற்குச் செல்கின்றன.எனவே நமது ஏற்றுமதி பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும், நமது ஆடைகளில் சுமார் 60% அமெரிக்காவிற்குச் செல்கின்றன.

எனவே, சுமார் மூன்றரை இலட்சம் தொழிலாளர்களின் நேரடி வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இந்த பேச்சுவார்த்தைகளில் நாங்கள் சற்று கடினமான தளத்தில் இருந்து நுழைகிறோம். அதன்படி, நாங்கள் மிகவும் வலுவான குழுவை பெயரிட்டோம். பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதன் மூலமோ அல்லது பட்டாசுகளை வெடிப்பதன் மூலமோ, கைதட்டுவதன் மூலமோ நாங்கள் செயல்பட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், இந்த ஆழமான நெருக்கடியின் தன்மையை நாங்கள் உணர்ந்தோம். எனவே, நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தித் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தோம். இந்த பேச்சுவார்த்தைகளை மிகச் சிறப்பாக நிறைவு செய்து, நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பினோம்.

அந்த சவாலை நாங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தோம். அமெரிக்காவால் எங்களிடம் சில முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. அந்த திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கிறோம். இதுவரை, இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை . ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தைகளில் சில ஒப்பந்தங்களை எட்டியுள்ளோம். பேச்சுவார்த்தை செயல்முறையின் விளைவாக, வரி விகிதத்தை 20% ஆகக் கணிசமாகக் குறைக்க முடிந்தது. அவர்களுக்கும் எங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் இது ஒரு முக்கியமான படியாக நாங்கள் கருதுகிறோம். நாட்டின் வர்த்தகங்கள் மற்றும் தொழில்களில் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தொடர்ந்து ஆராய்வதன் மூலம் எங்கள் பேச்சுவார்த்தைக் குழு வெற்றிக்கான பாதையில் பயணித்தது. இல்லையெனில், இது ஒரு அறையில் நான்கு அல்லது ஐந்து பேர் சதி செய்ததாக இருக்கக்கூடாது. ஆனால் தொடர்புடைய பங்குதாரர்களுடன் தொடர்ந்து ஆராய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம்.

எனவே, அமெரிக்க வரிகள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இங்கே முடிவு கட்டப்பட்டுள்ளது. எங்களுக்கு 03 வெளிப்புற சவால்கள் இருந்தன. அவை அமெரிக்க வரிகள், சர்வதேச நாணய நிதியத் திட்டம் மற்றும் GSP வரிச் சலுகைத் திட்டம். பல்வேறு குழுக்கள் IMF திட்டம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பினர்.

நவம்பர் 16 முதல் சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மூன்றாவது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடித்தோம். சேவை வரியை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நான்காவது மதிப்பாய்வையும் முறையாக முடித்துள்ளோம்.

மின்சார கட்டணம் தொடர்பில் சமூகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் இரண்டு அரசு வங்கிகளையும் மின்சார சபை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படவிருந்த கடன்கள் திறைசேரியினால் பொறுப்பேற்கப்பட்டன. வங்கிகளைப் பாதுகாக்கவும் எண்ணெய் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாக்கவும் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட திட்டத்தைத் தயாரித்துள்ளது. நிதிச் சந்தை, எரிசக்தி சந்தை உத்தி, வர்த்தகத்திற்கான சந்தையில் அரசாங்கம் இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். நிதிச் சந்தையில் அரசுக்கு ஒரு பங்கு இருக்க வேண்டும். உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலையை சீர்செய்ய வேண்டும். அந்த சீர்செய்தல் சூத்திரத்தை நாம் ஏற்கிறோம். நுகர்வோர் மீது அழுத்தம் இருந்தால், அரசாங்கம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கும்.

சில அரசு நிறுவனங்கள் வங்குரோத்தாகி விட்டன, சில அரசு நிறுவனங்களின் கணக்கில் பணம் கிடையாது. இதையெல்லாம் பரிசீலித்த பின்னரே மின்சார கட்டணத்தை முடிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திற்கு முன்னதாக மின்சார கட்டணத்தை அறிவித்தார். முந்தைய அரசாங்கத்திற்கு 2024 ஆம் ஆண்டில் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் திறன் இருந்தது. ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நாங்கள் திட்டங்களில் பணியாற்றி வருகிறோம். GSP வரிச் சலுகைகள் மூலம் ஐரோப்பிய சந்தையில் சில நிவாரணங்கள் உள்ளன. பொருளாதாரம் நிலைபெற்றால், இந்த நிவாரணம் கிடைக்காததை நாம் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் இப்போதைக்கு, GSP வரிச் சலுகைகள் நமக்குத் தேவை. நமது நாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அண்மைக் காலங்களில் ஒரு அரசாங்கமாக ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாத்த ஒரே அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் மட்டுமே.

வெளித் தரப்பினர்களிடமிருந்து இலங்கை பெறும் அதிர்ச்சிகளை முறையாக நிர்வகிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இன்று, மக்களுக்கு சேவை செய்ய உண்மையான விருப்பம் கொண்ட ஒரு அரசாங்கம் உள்ளது. வலுவான பொருளாதாரத்தை உருவாக்காமல்,

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது சாத்தியமற்றது. சரிந்த பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இந்த அரசாங்கத்திற்கு இருந்த ஒரே சவாலாகும். ஒரு வருடத்திற்கு டொலரை 300 ரூபாய் அளவில் பராமரிக்க அரசாங்கத்திற்கு முடிந்தது. டொலர் 400 ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தன. கருப்புப் பொருளாதாரம் சரிந்து வருகிறது. அந்நியச் செலாவணி பொருளாதாரம் தொடர்பான ஸ்தீரமற்ற நிலைமை படிப்படியாகக் குறைந்து வருகின்றன. இன்று, எந்த கைத்தொழிலாளரருக்கும் டொலரைப் பற்றி நிச்சயமற்ற தன்மை கிடையாது. இலங்கையில் முதல் முறையாக, ஒரு வருடமாக டொலர் நிலையாக பராமரிக்கப்பட்டுள்ளது.

2015 முதல் 2025 வரையிலான இலங்கையின் ஏற்றுமதி வருவாய் குறித்த தரவுகளை நாம் ஆராயும்போது, வரலாற்றில் மிக உயர்ந்த ஏற்றுமதி வருவாய் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எட்டப்பட்டுள்ளது. ஏற்றுமதி சந்தை பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. நமது ஏற்றுமதியில் 25% அமெரிக்காவிற்கும். 23% ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் செல்கிறது. எனவே, அந்த நாடுகளிலிருந்து பெறப்படும் வரிகள் இலங்கைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் அரசாங்கம் ஏற்றுமதிகளை பன்முகப்படுத்த திட்டமிட்டது.

எதிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று சக்திவாய்ந்த நாடுகளையோ அல்லது இரண்டு அல்லது மூன்று ஏற்றுமதி சந்தைகளையோ சார்ந்திருக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தையும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஆப்பிரிக்க சந்தை ஏற்றுமதி சந்தையில் 57% வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆசிய சந்தையைப் பார்க்கும்போது, ஏற்றுமதி சந்தை முந்தைய ஆண்டை விட 26% விரிவடைந்துள்ளது.

கைத்தாழிலாளர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை நாங்கள் வழங்குகிறோம். அவர்கள் அரசாங்கத்திற்கு முறையாக வரி செலுத்த வேண்டும். நம் நாட்டில் சுற்றுலாத் துறையைப் பார்க்கும்போது, இந்த ஆண்டு பெறப்பட்ட வருமானம் கடந்த ஆண்டு பெற்ற வருமானத்துடன் ஒப்பிடும்போது 10% அதிகரித்துள்ளது. எனவே, 2025 இலங்கை வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானம் கொண்ட ஆண்டாகவும், சுற்றுலாத் துறையிலிருந்து அதிக வருமானம் ஈட்டும் ஆண்டாகவும் இருக்கும். வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம்.

இந்த ஆண்டு அதிக வெளிநாட்டு முதலீட்டின் ஆண்டாக அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு அந்நிய நேரடி முதலீடு தேவை. ஆனால் நாம் பெரிய மூலப்பொருட்கள் மற்றும் பெரிய சந்தையைக் கொண்ட நாடு அல்ல. அந்நிய நேரடி முதலீட்டை மிகுந்த சிரமத்துடன் மட்டுமே ஈர்க்க முடியும். எனவே, அந்நிய நேரடி முதலீட்டிற்கு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும். கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அந்நிய நேரடி முதலீடு 252 மில்லியன் டொலர்களாக இருந்தது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அந்நிய நேரடி முதலீடு 507 மில்லியன் டொலர்களாகக இருந்தது. கடந்த ஆண்டை விட இது 101% வளர்ச்சியாகும்.

இந்த ஆண்டு வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேல் உழைக்க எதிர்பார்க்கிறோம். கொழும்பு நகரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். 1313 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாம் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். இவற்றை அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும். அழிவின் சுமையை சுமந்து நாம் இந்த நாட்டை செழிப்புக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

இந்த டிசம்பர் மாதத்திற்குள் 7 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்பைத் தொடங்குவோம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாகனச் சந்தை திறக்கப்பட்டது. இன்றுவரை, 1268 மில்லியன் டொலர் மதிப்புள்ள கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் 15-20 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் உள்ளன. அவை வீதிகளில் பயணிக்கமுடியாது. வாகனங்கள் என்பதும் ஒரு தொழில்துறை. வாகனங்கள் நாட்டின் பொருளாதாரத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இந்த டிசம்பர் மாதத்திற்குள் சுமார் 1500-1800 மில்லியன் டொலர் கடன் பத்திரங்கள் திறக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், டொலரை பாதிக்க சதித்திட்டங்கள் செய்யப்படுகின்றன. வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. வாகன இறக்குமதி கட்டுப்படுத்தப்படாது என்று நாட்டின் மக்களுக்கு நாங்கள் கூறுகிறோம். திறக்கப்பட்டுள்ள சந்தை இந்த வழியில் தொடர்ந்து பேணப்படும்.

இந்த வருடம் வாகனம் கொள்வனவு செய்ய முடியாவிட்டால், அடுத்த வருடம் கொள்வனவு செய்யலாம். நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் மோசமான செயல்களைச் செய்யாதீர்கள். வரிகளை அதிகரிப்போம் என்று சொல்கிறார்கள். எந்த வாகனத்திற்கும் வரிகளை அதிகரிக்க மாட்டோம் என்று நாங்கள் கூறுகிறோம். தொழில்துறை வாய்ப்புகளை மூடுவதன் மூலம் ஒரு நாடு முன்னேற முடியாது. பொருளாதாரத்திற்குத் தேவையான

சுதந்திரமான இயக்கத்தை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு. டொலர் கையிருப்பு குறித்த சந்தேகம் நடக்கக்கூடிய ஒன்றல்ல.

அதேபோல், முதலீட்டு சபை மூலம் உள்நாட்டு முதலீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உள்நாட்டு முதலீடுகள் 18% அதிகரித்துள்ளன. இது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.
டொலர் பரிவர்த்தனை, வெளிநாட்டு நேரடி முதலீடு, சுற்றுலாத் தொழில்துறை, ஏற்றுமதி வருமானம் என அனைத்திற்கும் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும் என்ற சமிக்ஞைகளை அளித்துள்ளது. நாம் வரவுசெலவுத்திட்டத்தை முன்வைத்தபோது, சுமார் 4.5 டிரில்லியன் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். இந்த வருமானத்தைப் பெற முடியாது என்று பலர் கூறினர். இந்த அரசாங்கம் தரவுகளில் மாயை செய்கிறது என்று அவர்கள் கூறினர். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கம் மற்றும் மது வரித் திணைக்களம் நன்கு மறுசீரமைக்கப்பட்டு, திறமையாக்கப்பட்டு, வரி செலுத்துவதைத் தவிர்த்து வந்தவர்களை வரி செலுத்த ஊக்குவிப்பதன் மூலம் வரிகளை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. 200 பெரிய வரி ஏய்ப்பாளர்களின் பட்டியல் உள்ளது. அதன் மொத்த மதிப்பு 100-150 பில்லியன் ரூபா அளவில் உள்ளது. இவை சேகரிக்கப்பட வேண்டும். இவை தவறா? இரண்டு அரச வங்கிகளுக்கு மோசடி செய்த குழுக்கள் உள்ளன. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளனர். வங்கிகளுக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் சுதந்திரத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். வருமானத்தைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரு நல்ல நிலையான அடைவை எட்டியுள்ளோம். அனைத்துத் துறைகளிலும் வருமானத்தை மிஞ்ச முடிந்துள்ளது. 4.5 டிரில்லியன் வருவாயை எம்மால் பெற முடியும். ஜூலை மாதத்திற்குள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட இலக்கு 101% ஐத் தாண்டியுள்ளது. சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட இலக்கை விட 115% வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. மதுவரித் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்த 136 பில்லியன் ரூபா இலக்கு 143 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் ஏழு மாதங்களில், நாட்டின் மூன்று முக்கிய வரி வருமான மூலங்களும் நாம் வழங்கிய இலக்கை விட அதிகமாக இலக்கை அடைந்துள்ளன. எனவே, அரசாங்கத்திற்குத் தேவையான வருவாயைப் பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சீனித் தொழிற்துறையில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உற்பத்திச் செலவு அதிகம். ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தத் தொழில்துறை நவீனமயமாக்கப்படவில்லை. பல்வேறு காரணங்களுக்காக கரும்பு விலை மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, ஒரு கிலோ சீனி உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகமாக உள்ளது. இப்போது என்ன செய்ய வேண்டும்? உற்பத்திச் செலவுக்குக் குறைவாக விற்பனை

செய்வதன் மூலம் திறைசேரி நட்டத்தை சுமக்க வேண்டியிருக்கும். அல்லது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு வரி விதிப்பதன் மூலம் சீனியின் விலையை நிலைப்படுத்த வேண்டும். இப்போது வரி விதிக்க ஒப்புக்கொள்கிறீர்களா? குறைந்தபட்சம் ரூ. 50 வரி விதிக்கப்பட வேண்டும். யாரும் ஒவ்வொரு துறைகளிலும் வரி நீக்குமாறு கேட்க வேண்டாம். ஒவ்வொரு துறையிலிருந்தும் வரி வசூலிக்கப்படுகிறது, மானியங்கள் வழங்கப்பட வேண்டிய இடங்களில் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் சீனி நிறுவனங்களுக்கு ரூபா.100 கோடியை வழங்குகிறது. வரிகள் குறைக்கப்பட்டாலும், பயனில்லை, வரி செலுத்தியும் இல்லை, சம்பளம் வழங்கியும் இல்லை. இந்த வாரத்திலிருந்து இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும்.

கட்டியெழுப்பப்படும் திட்டத்தின் கீழ் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இன்று, எங்கள் அரசாங்கத்திடம் 1000 பில்லியன் ரூபாய் உள்ளது. திறைசேரிப் பத்திரங்கள் வெளியிடப்பட்டால், நாங்கள் தான் முக்கிய கொள்வனவாளர். கடந்த காலத்தில், செயற்கையான நிலைமைகள் உருவாக்கப்பட்டன. இன்று, மேலும் செயற்கையான நிலைமைகளை உருவாக்க முடியாது. நாங்கள் சந்தையைக் கட்டுப்படுத்துகிறோம். நாங்கள் முரண்பாடுகளை நிறுத்துகிறோம். நாடு இப்படித்தான் ஆட்சி செய்யப்பட வேண்டும் இல்லையா?

பொருளாதாரம் நல்லதா கெட்டதா என்பதை அளவிடும் அளவுகோல்களைப் பற்றி நாம் சிந்தித்தால், எமக்கு அதை ஒரு நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது. பொருளாதார சரிவில் விழுவதன் மூலம் இந்த நாடு வீழ்ச்சி அடையும் என்று எதிர்க்கட்சி நினைத்தால், அது நடக்காது. சமீபத்திய காலங்களில் பொருளாதாரத்தின் மீதான அழுத்தம் காரணமாக பொருளாதாரம் சரிந்தது. பின்னர், அரசியல் நெருக்கடிகள் காரணமாக அரசாங்கங்கள் வீழ்ச்சி அடைந்தன. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி அரசாங்கங்கள் வீழ்ச்சி அடைந்தன.
தேர்தல்கள் மூலம் அரசாங்கங்கள் வீழ்ச்சி அடைந்தன. இந்த அரசாங்கம் அந்த மூன்று வழிகளில், எதிலும் வீழ்ச்சி அடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். டிசம்பரில் வேறு அரசாங்கத்திலா ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார்? உண்மை என்னவென்றால், என்றாவது டிசம்பரில். அந்தப் பணிவை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அந்த இலக்குகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் சூழவுள்ள குழுவின் அதிகாரத்தால் சட்டம் அவர்களை நெருங்க முடியாது என்று யாரும் நினைக்கக்கூடாது. ஆனால் இந்த நாட்டில் அத்தகைய கருத்து உள்ளது. சட்டத்தால் நெருங்க முடியாத பிரஜைகள் உள்ள நாட்டில்,

சட்டத்தால் நெருங்க கூடியவர்கள் கூட சட்டத்திற்கு கட்டுப்படுவதில்லை. எனவே, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால், சட்டத்தின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட வேண்டும்.

சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும்போது, சட்டம் ஒருபோதும் தங்களை நெருங்காது என்று நினைத்தவர்களைச் சட்டம் நெருங்குகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நாங்கள் ஆதரவளித்துள்ளோம், இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்குத் தேவையான வசதிகளை வழங்கியுள்ளோம். அதற்கு அதிகாரம் வழங்கியுள்ளோம். அதைச் செயல்பட இடமளித்துள்ளோம். சட்டம் குற்றவாளிகளைத் தேடி வருகிறது. முன்னாள் கடற்படைத் தளபதியைக் கைது செய்ய நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஊடக மாநாடுகளை நடத்தி, புலிகள் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த அரசாங்கம் இதைச் செய்கிறது என்று கூறுகிறார்கள். எமக்கு யாரையும் திருப்திப்படுத்த வேண்டியதில்லை. இந்த நாட்டு மக்களை மட்டுமே நாங்கள் திருப்திப்படுத்துகிறோம். இன்று, குற்றவாளிக்கு சட்டம் தன்னை நெருங்கி வருகின்றது என்பது தெரியும்.

தனிப்பட்ட செயலாளருக்கு சாட்சியமளிக்க அழைக்கப்படும்போது எங்கு வருகிறார்கள் என்பது தெரியும். சட்டம் அவரை நெருங்குவதற்குள் நாட்டில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அப்போது சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகள் ஓரளவு மிரட்டப்படுகிறார்கள். அவ்வாறான ஒரு வரலாறு உண்டு. நியாயமான விசாரணைகளை நடத்தியதற்காக அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிகாரிகளிடம் இந்த பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் அதிகாரிகளுக்கு அந்தத் தலைமை, ஆளுமை மற்றும் அதிகாரத்தை வழங்கியுள்ளோம். அதேபோன்று அவர்களை எல்லா நேரங்களிலும் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் அரசாங்கத்தில் இருந்தாலும் சரி, அதற்கு வெளியே இருந்தாலும் சரி, இன்று இந்த நாட்டில் சட்டத்தை நிறுவுவதில் உறுதியாக உள்ள ஒவ்வொரு அதிகாரியையும் நாங்கள் பாதுகாக்கிறோம். அரசாங்கத்திற்கு வெளியே இருந்தாலும் சரி, குடிமக்களாக அந்த அதிகாரிகளை பாதுகாப்பதாக நாங்கள் உறுதிசெய்கிறோம்.

இந்த அரசாங்கம் தேவையற்றது என்றால், எதிர்க்கட்சிகளிடம் நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் அவசியம் என்று நினைக்கும் வேலைத்திட்டத்திற்குச் செல்ல வேண்டும். அப்படியானால் உங்களுக்கு ஒரு பாதை இருக்கிறது. அத்தகைய கருத்தாடலை நாங்கள் விரும்புகிறோம். நாட்டின் அபிவிருத்திக்கு நாம் போதுமானவர்களாக இல்லாவிட்டால், தயவுசெய்து விளக்குங்கள். இந்த நேரத்தில் செய்ய வேண்டியதை நாங்கள் செய்கிறோம். இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.

ஸ்தம்பித்திருந்த ஒரு நாட்டை நாம் பெற்றுள்ளோம். வெளிநாட்டு உதவியுடன் பெறப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் ஸ்தம்பித்திருந்தன. ஆனால் இன்று நாம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளோம்.

மீரிகம-கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கான கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி வழங்கியது. அப்போது வழங்கப்பட்ட கடன் இப்போது போதுமானதாக இல்லை. அதனை விட அதிகம் கடன் தேவை. எனவே, கடன் குறித்து மீண்டும் கலந்துரையாடப்பட வேண்டும். சீனாவின் எக்ஸிம் வங்கி யுவானில் மிகவும் சலுகை வட்டி விகிதத்தில் எங்களுக்கு கடனை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த திங்கட்கிழமை அமைச்சரவையில் அதை அங்கீகரிபோம். பின்னர் அதற்கான பணிகளைத் தொடங்க முடியும்.

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கடவத்த-மீரிகம அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் இந்த ஆண்டு பணிகளைத் தொடங்குவோம். கலகெதர-கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானத்திற்காக வெளிநாட்டு நிதியை பெற்றுக்கொள்ளவும் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். அது தோல்வியுற்றால், அடுத்த ஆண்டு உள்நாட்டு நிதியிலோ அந்த வீதியின் கட்டுமானத்தைத் தொடங்குவோம். மேலும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் நாம் விரைவாக கவனம் செலுத்த வேண்டும். அந்த திட்டங்களை விரைவாகத் தொடங்குவோம். மேலும்,பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். இதற்காக, கொலன்னாவையில் 06 புதிய எரிபொருள் தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல தசாப்தங்களாக தாமதமாகி வந்த திருகோணமலை எரிபொருள் தாங்கிகளின் புதுப்பித்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வலுசக்தித் துறையை நிலைப்படுத்துவது மிகவும் முக்கியம். முன்னாள் தலைவர்களின் ஒப்பந்தங்களைச் காப்பாற்ற முடியாததன் விளைவாக, இன்று மக்கள் வலுசக்திக்கு மிக அதிக விலை கொடுக்கிறார்கள். இன்று இந்த விலைமனுக்கலை நாங்கள் கோரியுள்ளோம்.

இந்த முறையில், கிட்டத்தட்ட ஒரு வருடமாக, இந்த நாட்டின் பொருளாதாரத்தின் அத்தியாவசிய காரணிகளை முடிக்க நாங்கள் போராடி வருகிறோம். நமது நிதிச் சந்தைகளில் மீண்டும் ஒருபோதும் நிச்சயமற்ற தன்மை ஏற்படக்கூடாது. எனவே, ஆட்சியாளர்களாக, நம் அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. நமது நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை மறுபடியும் எதிர்கொள்ளக்கூடாது. அதற்காக, பொருளாதாரத்தின் மேல் மட்டத்தை நாம் நன்றாக வலுப்படுத்த வேண்டும்.

சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் ஒரு நாடு நமக்குத் தேவை. உங்கள் விருப்பப்படி அரசியல் செய்யுங்கள். ஆனால், ஊழல்வாதிகளைத் தண்டிக்கும் நடவடிக்கைகளை தடுப்பது பற்றி கனவு கூட காணாதீர்கள். அதற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியை நாங்கள் தொடங்கியுள்ளோம். எந்தவொரு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்காகவும் அரசியலைத் தேர்ந்தெடுத்த குழு நாங்கள் அல்ல.

இன்று, தேசிய அல்லது சர்வதேச ரீதியாக எந்தவொரு தொழிலதிபரும், தொழிற்துறையினரும், அல்லது தொழில்முனைவோரும், முதன்முறையாக இலங்கையில் அரசியல் அதிகாரம் திருடுவதில்லை என்பதை அறிவார்கள். முதலீட்டிற்கு இது மிகவும் முக்கியமானது. நல்ல இராஜதந்திர உறவுகளுடன் உலகின் பார்வையில் நமது நாட்டை ஒரு பிரகாசமான நாடாக மாற்றுவதும் மிகவும் முக்கியம்.

நமது நாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தால் ஒரு கருப்பு நாடு என்று எழுதப்பட்டது. நமது நாடு சர்வதேச அளவில் ஒரு கருப்பு பிம்பத்தைக் கொண்ட நாடு. எதிர்கால சந்ததியினருக்காக இந்த நாட்டை நாம் தூய்மைப்படுத்த வேண்டும். பிள்ளைகள் கண்ணியத்துடன் வாழக்கூடிய நாடாக இந்த நாட்டை மாற்ற வேண்டும்.

அதன்போது, முதலில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். பொருளாதார வளத்தை உருவாக்க வேண்டும். இந்த சமூகத்தின் கீழ் இருக்கும் குற்றவியல் அரசை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். பாதாள உலகம், போதைப்பொருள் கடத்தல், இவை அனைத்தும் பின்னிப்பிணைந்தவை என்பதை நாங்கள் அறிவோம். இவற்றுடன் நாங்கள் போராடி வருகிறோம். அதற்கு எங்களுக்கு இன்னும் கொஞ்சம் காலம் கொடுங்கள். இந்த பேரழிவை நாம் கட்டுப்படுத்த வேண்டும். நாம் பொறுமையாகவும் திட்டமிட்டும் செயல்பட வேண்டும்.

சிறந்த பொருளாதார நிலைமை, சாதாரண குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கை, பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம், சிறந்த சுகாதார சேவை மற்றும் சிறந்த போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அழிக்கப்பட்ட இந்த நாட்டை நாங்கள் கட்டி எழுப்புகிறோம். எனவே, இந்த திட்டம் மிகவும் சீராகவும் வலுவாகவும் முன்னேறி வருகிறது. யாரும் தடுக்க நினைக்கக்கூடாது. சட்டம் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

இந்த முறை வரவுசெலவுத்திட்டத்தை தயாரிக்கும்போது, நாட்டின் அனைத்து துறைகளுடனும் நாங்கள் கலந்துரையாடுகிறோம். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இந்த நாடு

மீண்டும் ஒரு செயற்படும் நாடாக மாற்றப்பட வேண்டும். அதை நோக்கி நாங்கள் உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம்.

நீங்கள் உங்கள் அரசியலைச் செய்யுங்கள். ஆனால், சட்டம் உங்களிடம் வரும்போது சதி செய்து நாட்டில் அராஜகத்தை உருவாக்க முயற்சித்தால், அதை அனுமதிக்க முடியாது. எனவே, யாராவது, எங்கும், பாதாள உலகத்தைப் பயன்படுத்தி அல்லது தோற்கடிக்கப்பட்ட குழுக்கள் அரசியல் சதியில் ஈடுபட்டால், இந்த நாட்டை நல்லெண்ணத்துடன் கட்டியெழுப்பும் பயணத்திற்கு எதிராக எந்த சதித்திட்டமும் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

சட்டங்கள் போதாது என்றால், நாம் சட்டங்களை இயற்றுவோம். இந்த நாட்டை நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அவர்கள் இழந்த சலுகைகள் காரணமாகவோ அல்லது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைப்பதாலோ செய்யப்படும் சதிகளுக்கு நாடு இரையாகக்கூடாது. மற்ற அரசாங்கங்கள் சதித்திட்டங்களில் சிக்கின.

ஆனால் நாங்கள் இவற்றை அடையாளம் கண்டுள்ளோம். எனவே, நாட்டிற்குள் அல்லது வெளியே இருந்து யாராவது இந்த நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தை சதித்திட்டங்கள் மூலம் நாசப்படுத்த முயன்றால், அவர்களை தோற்கடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்போம். இன்று, ஒவ்வொன்றாக, திரிபுபடுத்தப்பட்ட அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
எனவே, ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டம் தீட்டும் எண்ணம் வந்தாலும், அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நீங்கள் அரசியல் செய்யுங்கள். இன்று நாட்டை மிகச் சிறந்த நிலையில் வைத்திருக்கிறோம். நாடும் மக்களும் அனுபவித்த அவமானம் மற்றும் கஷ்டங்களிலிருந்து நாட்டை விடுவித்து வருகிறோம். அந்த தேவை எங்களுக்கு இருக்கிறது. அதற்காக நாங்கள் பாடுபடுகிறோம். அதற்காக எதிர்க்கட்சிகள் எங்களுக்கு நல்லெண்ணத்துடன் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட அபிவிருத்தியில் சிக்கல் எழுந்துள்ளது. அதை நாங்கள் பின்னர் தீர்த்து வைப்போம். உண்மையில் மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கினோம். ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு எம்.பி.யிடமிருந்தும் அந்தப் நிதிக்கு ஏற்றவாறு திட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும். வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது, ஒவ்வொரு எம்.பி.யும் அந்த ஒதுக்கீட்டைப் பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது. மாவட்டத்திற்குப் பணம் சென்ற பிறகு, அந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்தும் அதற்குரிய முன்மொழிவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், சில இடங்களில்

அது தவறிவிட்டதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அது நடக்க வாய்ப்பில்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

மார்ச் 21 ஆம் திகதி நாங்கள் வரவுசெலவுத்திட்டத்தை முன்வைத்தோம். அதன் பிறகு உடனடியாக உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அது மே 6 ஆம் திகதி முடிந்தது. அந்த நேரத்தில், அந்தத் திட்டங்களைத் தொடர தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து தடைகள் இருந்தன. எனவே, இந்தத் திட்டங்களுக்கான பணிகள் மே 6 ஆம் திகதிக்குப் பிறகுதான் தொடங்க முடிந்தது. அதன்படி, நேரம் குறைவு. ஏனெனில் இது டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிக்கப்பட வேண்டும். எனவே, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டங்களை கைவிட்டிருக்கலாம். நம் நாட்டில், அமைச்சிற்கு பணம் ஒதுக்கப்பட்ட பின்னரே நடவடிக்கைகள் தொடங்குகின்றன. இருப்பினும், 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட அனைத்து பணத்தையும் நாங்கள் வழங்குகிறோம். இன்று நாம் பணத்தை வழங்க முடியும். பணிகள் ஓரளவு தாமதமாகிவிட்டன. எனவே, வரவுசெலவுத்திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட பணம் தாமதமாகிவிடும் என்ற பேச்சு இனி நடக்காது. 2026 வரவுசெலவுத்திட்டத்தை நாங்கள் அங்கீகரித்தவுடன், ஜனவரி முதல் பணம் வழங்குவோம்.

அவ்வாறின்றி, இவர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்ற அரசியல் செய்ய மாட்டோம். எம்.பி.க்கள் என்ற முறையில் அனைவருக்கும் உரிய பணம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, எதிர்கால வரவுசெலவுத்திட்டத்தில் எம்.பி.யின் பதவிக் காலத்தில் பயன்படுத்தி திருப்பித் தரவேண்டும் என்ற அடிப்படையில், வாகனம் ஒன்றை வழங்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஒரு நல்ல பயணத்திற்கு நாம் அடித்தளமிட்டுள்ளோம். இது நாம் மேற்கொள்ள வேண்டிய பயணம். நீங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளாக இருங்கள். அதிகாரத்தைப் பெறுவதற்கான நோக்கத்துடன் செயல்படுங்கள். அது நல்லது. ஆனால், சதித்திட்டங்களில் ஈடுபடாதீர்கள். நாட்டில் ஸ்திரமின்மையை உருவாக்க வேண்டாம், பொருளாதாரம் குறித்து நிச்சயமற்ற தன்மையை உருவாக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.