இளைஞர் இயக்கம் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளது
– ஜனாதிபதி
புதிய அரசியல் மாற்றத்துடன் இந்நாட்டின் இளைஞர் இயக்கம் அரசியல் கைக்கூலியாக மாறாமல், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தமது அரசியல் அதிகாரத்தை பாதுகாக்கும் பங்குதாரர்களாக அன்றி, இளைஞர்களுக்கு உரிய இடத்தை வழங்கி, தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்ட இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்த ஜனாதிபதி, இளைஞர்களை இந்நாட்டின் அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் முன்னோடிகளாகவும், பங்குதாரர்களாகவும் மாற்றும் வேலைத்திட்டத்தை இளைஞர் இயக்கத்தினூடாக ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற “Youth Club” தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்கால இளைஞர் தலைமுறையினர், உலகின் முன் நாட்டை வெற்றிபெறச் செய்யும் தலைமுறையினராகவும், மற்றவர்களிடம் கருணை காட்டும் தலைமுறையினராகவும் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க தகுதியான அந்த இளைஞர் தலைமுறையை உருவாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும், அந்த தகுதிகளைக் கொண்டவர்களாக மாற வேண்டும் என்று இந்த நாட்டில் உள்ள முழு இளைஞர் தலைமுறையினரையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இம்முறை தேசிய இளைஞர் மாநாடு 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றமை சிறப்பம்சமாக உள்ளதோடு, இதில் நாடு முழுவதிலுமிருந்து 6,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தேசிய இளைஞர் மாநாட்டிற்கு முன்னதாக, நாடு முழுவதும்
பிரதேச மட்டத்தில் “Youth Club” நிறுவுதல் தொடங்கப்பட்டதுடன், இன்று நடைபெற்ற தேசிய மாநாட்டில் புதிய உத்தியோகத்தர்கள் குழு அறிமுகப்படுத்தப்பட்டது.
தேசிய இளைஞர் மாநாட்டில் பங்கேற்றதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:
அண்மைய காலங்களில் அதிக கருத்தாடலுக்கும் சர்ச்சைக்கும் உட்பட்ட மாநாடாக இது இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன். பொதுவாக, நமது நாட்டில் பல துறைகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் அதிகாரத்தின் அதிகாரத் தேவைகளுடன் இணைந்திருந்தன. ஒரு போதும், தமது திறமை எதிர்பார்ப்புகள் ஊடாக முன்னேறுவதற்கு எந்த வாய்ப்பும் இந்த இளைஞர் இயக்கத்திற்கு இருக்கவில்லை.
நீங்கள் மாவட்டங்களுக்குச் சென்றபோது, உங்கள் மாவட்டத்தில் அரசியல் தலைமையையோ அல்லது ஏனைய நிறுவனங்களின் தலைமையையோ ஏற்பதில் யாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது? பழைய அரசியல் தலைமையின் மகள்கள், மகன்கள் அல்லது உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. எனவே, இளைஞர் இயக்கம் அதிகாரத்தில் இருப்பவர்களின் அரசியல் நலன்களுடன் அதிகளவில் இணைந்தே இருந்தது. நீண்ட காலம் தமது அரசியல் அதிகாரத்தையும், குடும்ப அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கும், உறவினர் தலைமுறையை ஆட்சியில் வைத்திருப்பதற்கும் ஒரு கருவியாக இந்த இளைஞர் இயக்கம் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்துடன், இந்த இளைஞர் இயக்கம் இனிமேலும் அரசியல் நலன்களின் கைக்கூலியாக மாறாது, நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கத் தயாராக இருக்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. அது இந்த இளைஞர் மாநாடு வரையிலான எமது பயணத்தில் குறிப்பிடத்தக்கது.
சிலர் பதட்டப்படுவதில் ஆச்சரியமில்லை. உண்மையில், இன்று நாம் செய்வது நமது இளைஞர்களை அவர்களுக்கு உரிய இடம் மற்றும் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும், என்ன பொறுப்புகளை ஏற்க வேண்டும்,பொறுப்பான ஒரு இளைஞர் தலைமையை உருவாக்குவதாகும். இல்லையெனில், குடும்ப ஆட்சியாளர்களின் தலைமுறைகளுக்கு நீண்டகாலத்திற்கு அதிகாரத்தைப் பாதுகாக்கும் செயற்பாட்டின் பங்காளர்களாக அல்ல.
நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், உங்கள் கைகளில் இருப்பதாகக் கூறப்படும் நமது நாட்டின் எதிர்காலத்தின் உண்மையான பாதுகாவலர்களாக உங்களை மாற்றுவதே எமது இலட்சியம். குறிப்பாக, இங்கே ஒரு விடயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இன்று, நாம் ஜனாதிபதி பதவி, அமைச்சர் பதவிகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இருப்பினும், இந்தக் கதிரையில் அமரும்போது, எமக்கு ஒரு சிந்தனை இருக்கிறது, நாம் எப்போதும் இந்தப் பதவியில் இருந்து செல்வோம் என்பதை மனதில் கொண்டே இந்தக் கதிரைகளில் அமர்ந்திருக்கிறோம். இந்தக் கதிரைகளில் நிரந்தரமாக உட்காரும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்களிடம் தெளிவான நல்லெண்ணம் உள்ளது. இந்த நாடு மிகவும் அழிவுகரமான குழுவின் கையில் இருந்தது. அந்தக் குழுவிடமிருந்து அரசியல் அதிகாரம் எங்களிடம் கைமாறியுள்ளது. அவ்வாறு மாற்றப்பட்ட அதிகாரத்தை, விரைவில் உங்களிடம் ஒப்படைக்கும் எதிர்பார்ப்புடன் இந்த கதிரைகளில் நாங்கள் அமர்ந்துள்ளோம். மல்டிபொண்ட் பசை போல இந்தக் கதிரைகளில் ஒட்டிக்கொள்ள எதிர்பார்க்கவில்லை. எனவே, இந்த நாட்டைக் பொறுப்பேற்கும் செயற்திறன், திறமை, நேர்மை, மனசாட்சி உள்ள புதிய தலைமுறை இளைஞர்களை உருவாக்க வேண்டும். நமக்குப் பிறகு இந்த நாட்டை பொறுப்பேற்கத் தயாராக இருக்கும் ஒரு தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். நமக்கு எப்படிப்பட்ட தலைமுறை தேவை? ஒன்று, இன்றைய உலகில், மிக விரைவாக அறிவு, உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, விரிவடைந்து வருகிறது. பண்டைய வரலாற்றை நாம் திரும்பிப் பார்த்தால், அறிவில் பெரும் பாய்ச்சல்கள் நீண்ட ஆண்டுகளில் ஏற்பட்டன. ஆனால் இப்போது, பெறப்பட்ட அறிவு விரைவான வேகத்தில் புதிய அறிவை உருவாக்குகிறது.
அதேபோன்று, புதிய அறிவு வேகமாக வளர்ந்து விரிவடைந்து வருகிறது. இருப்பினும், அந்த வளர்ந்து வரும் புதிய அறிவிலிருந்து உருவாகும் பெரும் பாய்ச்சலைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லாத ஒரு இளம் தலைமுறையினரின் கைகளில் இந்த நாட்டை
விட்டுவிடக்கூடாது. எனவே, இந்த இளைஞர் இயக்கத்திற்காக உலகில் வளர்ந்து வரும் புதிய அறிவை விரைவாக உள்வாங்கி அதற்கு ஏற்றவாறு மாற்றக்கூடிய புதிய தலைமுறையை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு. நமது நாட்டின் எதிர்காலத்தை அந்த தலைமுறையிடம் ஒப்படைக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நமக்குள் மனிதநேயமும் கருணையும் இருக்க வேண்டும்.
நமது கல்வி முறை, வாழ்க்கைப் போராட்டம், இவை அனைத்தும் நமது இளைஞர்களை ஒரு சுயநலக் குறுகிய வட்டத்தில் சிக்க வைத்துள்ளன. அத்தகைய குழுவிற்கு சமூகத்தின் மீது எந்த கருணையும் இல்லை. எனவே, சமூகத்தின் மீது உண்மையான கருணை கொண்ட இளைஞர்கள் குழு நமக்குத் தேவை. சுயநலம் நமது சமூகத்தில் உள்ள பல குணங்களை பனிக்கட்டி நீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டது. அனைத்து நல்ல விடயங்களும் கொல்லப்பட்டுவிட்டன.
நமது நாட்டை முன்னோக்கி நகர்த்தவும், சமூக வளர்ச்சியை அடையவும், நாம் ஒரு கருணையுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும். அந்த சமூகத்தை உருவாக்குவதில் இந்த இளைஞர் இயக்கம் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. நீங்கள் கருணையுள்ள பிரஜையாக மாற வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
மேலும், இளம் தலைமுறையினரிடம் இயல்பாகவே இருக்கும் நீதி மற்றும் நியாயத்திற்கான தாகத்தை மீண்டும் எழுப்ப வேண்டும். அநீதி இருக்கும் இடத்தில், நீதிக்காக குரல் எழுப்புவது சாத்தியமாக வேண்டும். குரல் எழுப்புவது போலியாக இல்லாவிட்டால், நீங்கள் முதலில் ஒரு நீதியான மற்றும் நியாயமான நபராக மாற வேண்டும். இன்று, நமது சமூகம் கணிசமான அளவு பொய்களால் சூழப்பட்டுள்ளது. பொதுவான நீதியைப் பற்றிப் பேசுவதன் மூலம் நீதிக்காக நிற்க முயற்சிக்கிறோம். ஆனால், நமது நடைமுறையில் நீதி மற்றும் நியாயத்தை எந்த அளவிற்கு உள்ளடக்கியுள்ளோம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
நீதி மற்றும் நியாயத்திற்காக நம் குரல் எழுப்புவது நம்மை ஒரு நீதியான நபராக மாற்றாது. நம்மை ஒரு நீதியான குடிமகனாக மாற்றுவதற்கான முதல் காரணி, நாம் எவ்வளவு தூரம் நீதியான மற்றும் நியாயமாக செயல்படுகிறோம் என்பதுதான். எனவே, நீதிக்காக உங்கள் குரலை உயர்த்துங்கள். நீதிக்காக எழுந்து நிற்கவும். அதற்கு முன், நீதி மற்றும் நியாயத்தை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தும் மனசாட்சி கொண்ட ஒரு இளைஞன் அல்லது யுவதியாக மாறுங்கள். இந்த நாட்டை நிலையற்ற மக்கள் குழுவிடம் நாம் ஒப்படைக்கக்கூடாது. நமது நாட்டை உலகத்துடன் மிக நெருக்கமாக இணைக்கக்கூடிய மற்றும் சமூகத்தின் மீது இரக்கம் காட்டக்கூடிய ஒரு புதிய தலைமுறை இளைஞர்களிடம்
நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க வேண்டும். எனவே, இந்த நாட்டை ஒப்படைக்க ஒரு தகுதிவாய்ந்த இளைஞர் இயக்கத்தை உருவாக்குவதே எங்கள் முயற்சியாகும். அதற்குத் தேவையான தகுதிகளை பூர்த்தி செய்த இளைஞர்களின் குழுவாக மாறுமாறு நான் உங்களை கோருகிறேன்.
இன்று, வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. நான் அண்மையில் மாலைதீவிற்கு விஜயம் செய்தேன். எங்கள் இளைஞர்களில் சுமார் 30,000 பேர் அங்கு தொழில்புரிகின்றனர். இருப்பினும், அவர்கள் அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றவில்லை. அரசாங்கம் வெளியே ஒரு தனி பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், வெளியே திறன்கள் மற்றும் திறமைகள் உள்ளவர்களுக்கு வேலைகளை உருவாக்கும் பொருளாதாரத்தை உருவாக்க நாம் நீண்ட காலமாகத் தவறிவிட்டோம். அந்தத் தோல்வியின் விளைவாக, வேலைகளை வழங்கும் நிறுவனமாக அரசு மாறியுள்ளது. அரசாங்கம் தொழில் வழங்கும் நிறுவனம் அல்ல. மாறாக தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் நிறுவனம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
20 ஆம் நூற்றாண்டில் உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த நூற்றாண்டுக்கு முன்பு, அத்தகைய தொழில்நுட்பம் கொண்ட ஒரு அரசு உருவாகும் என்று விஞ்ஞானிகள் கருதினர். இது போன்ற ஒரு அரசியல் உலகம் உருவாகும் என்று அரசியல்வாதிகள் மற்றும் அறிஞர்கள் கருதினர். அதேபோன்று அரச ஆட்சிக்குப் பதிலாக மக்களால் தெரிவாகும் ஆட்சி உலகில் உருவாகும் என்று கருதப்பட்டது. இதேபோல், உலகில் உள்ள பொருளாதார வல்லுநர்கள் உலகில் இதுபோன்ற ஒரு பொருளாதார நிலைமை உருவாகும் என்று கருதினர். இவ்வாறு, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் எதிர்கால உலகத்தைப் பற்றிய இவ்வாறான எதிர்வு கூறல்களை நாம் பெரும்பாலும் சந்தித்தோம். இந்த அனுமானங்கள் 20 ஆம் நூற்றாண்டில் மட்டுமே யதார்த்தமாக மாற்றப்பட்டன.
தொழில்நுட்பம், அறிவியல், சந்தை மற்றும் மக்களின் வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட இந்த மாற்றத்தின் காரணமாக, உலகில் ஒரு பாரிய சந்தை உருவாக்கப்பட்டது. இருப்பினும், அந்த சந்தையை அடையத் தவறிய ஒரு தேசமாக நாம் மாறினோம். எனவே, வெளியே ஒரு பொருளாதாரம் கட்டமைக்கப்படவில்லை. அதன்படி, வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனமாக அரசாங்கம் மாறியது.
இடிபாடுகளின் குவியலாக மாறியுள்ள அரசை நவீனத்துவத்திற்குக் கொண்டு வர வேண்டும். அதற்காக, சுமார் 62,000 பேரை அரச சேவையில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளோம். வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு இதனால் தீர்வு ஏற்படாது. அரசாங்க செயல்முறை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதற்கான திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.
இந்த ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எங்கள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 2030 ஆம் ஆண்டுக்குள் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எங்கள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதன் மூலம், சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரம் வெளியில் கட்டமைக்கப்படும். பொருளாதாரத்தின் ஊடாக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
2030 ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் டொலர்களாக வளர்க்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் நாட்டின் தேசிய உற்பத்தியில் 12% டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு. விவசாயம், மீன்வளம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் டிஜிட்டல் மயமாக்கலை இணைப்பதன் மூலம் ஒரு பாரிய மாற்றத்தையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு இளம் தலைமுறை அவசியம். அதன் ஊடாக வேலை வாய்ப்புகள் உருவாகும். துறைமுகத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம் உட்பட பல துறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரிய பொருளாதாரத்தையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, அரசாங்கம் தலையிட்டு வேலைகளை உருவாக்கும் ஒரு நாட்டை உருவாக்குவதே எங்கள் திட்டம்.
எங்கள் இளைஞர்கள் தங்கள் திறன்கள் மற்றும் வாழ்க்கை முறையின் அடிப்படையில் அவர்கள் விரும்பும் தொழிலைத் தொடர நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கிறோம். இன்று நம்பிக்கையை உறுதிப்படுத்திய ஒரு பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்குவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இன்று, இந்த கட்டமைக்கப்பட்ட ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் இந்த நாட்டை ஒரு வளமான நாடாக மாற்றும் பயணத்தைத் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம். இளைஞர்களாகிய உங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உள்ளது.
உங்களிடம் அறிவும் ஆற்றலும் உள்ளது. இந்த இளைஞர் இயக்கத்தின் மூலம் உங்களை இந்த வளர்ச்சியின் தலைவர்களாகவும் பங்காளர்களாகவும் மாற்றும் திட்டத்தைத் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம். நீங்கள் வளர்ச்சியிலிருந்து விடுபட்டவர்கள் அல்ல. நீங்கள்
வளர்ச்சியில் மனித தூசி அல்ல. நாங்கள் தயாரித்த அபிவிருத்திப் பாதையில் உங்களை முக்கிய பங்காளர்களாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
மிகவும் கொந்தளிப்பான பின்னணிக்குப் பிறகு, நீங்கள் ஒரு தலைமைத்துவக் குழுவை நியமித்துள்ளீர்கள். இந்த இளைஞர்கள் நமது நாட்டின் இளைஞர் இயக்கத்தை மிகச்
சிறப்பாக வழிநடத்தும் திறனைப் பெறுவீர்கள் என நம்புகிறேன். எதிர்கால சவால்களை முறியடித்பதற்காக நான் உங்களை வாழ்த்துகிறேன்.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள் , வெளிநாட்டு தூதுவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.