Published on: ஜூலை 4, 2025

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

  • கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்
  • சமூக சக்தி வேலைத்திட்டத்தின் நோக்கம் அரச பொறிமுறை, அரச அதிகாரி மற்றும் பிரஜை ஆகியோரை  ஒருங்கிணைந்த பொறிமுறைக்குள் கொண்டு வருவதாகும்
ஜனாதிபதி
நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும்,  எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,  ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், மறுபுறம், பொருளாதாரத்தை விரிவுபடுத்தி கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து, அவர்களை பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.
அலரி மாளிகையில் இன்று (04) பிற்பகல் நடைபெற்ற “சமூக சக்தி” தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
” சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான திட்டமாக, சமூகத்தை வலுப்படுத்துவதற்கும் சமூகத்தில் பொருளாதார நன்மைகளை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிராமியஅபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சக்தி தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களை வரவேற்றதுடன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார்.
பின்னர் ” சமூக சக்தி” தேசிய செயற்பாட்டுக் குழுவின் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சருமான கலாநிதி உபாலி பன்னிலகே சமூக சக்தி தேசிய செயற்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
சமூக சக்தி உத்தியோகபூர்வ இணையத்தளம் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு ஆற்றிய முழுமையான உரை,
குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததை நாம் அறிவோம். இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்களை நாம் அடையாளம் காண முடியும். ஆனால், அந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு எந்தவிதத்திலும் காரணமாகாத கிராமங்களில் உள்ள சாதாரண மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அவர்களுக்கு உணவு கொள்வனவு செய்தல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ளல், கல்விக்கான வசதிகளை உருவாக்குதல், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எனவே, தற்போதைய அரசாங்கத்திற்கு கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சவாலும் பொறுப்பும் உள்ளது. அது கைவிட முடியாத ஒரு பொறுப்பு ஆகும். எமது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணிகளில் கிராமிய வறுமையை ஒழிப்பதை ஒரு அத்தியாவசிய காரணியாக நாங்கள் கருதுகிறோம்.
தற்போது, பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவு நிலையான நிலைக்குக் கொண்டு வர முடிந்துள்ளது. நீண்ட காலமாக டொலரின்பெறுமதியை சுமார் 300 ரூபா அளவில் வைத்திருத்தல், அந்நியச் செலாவணி இருப்புக்களை முறையாக அதிகரித்தல், திறைசேரியின் வருமானத்தை நாம் எதிர்பார்த்த இலக்குகளுக்குக் கொண்டு செல்வது, வங்கி வட்டி விகிதத்தை ஒற்றை இலக்கத்தில் வைத்திருப்பது போன்ற பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கான காரணிகளை கணிசமான அளவில் நிறைவுசெய்ய முடிந்துள்ளது.
மேலும், நமது நாடு குறித்து முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை படிப்படியாக வளர்க்க முடிந்துள்ளது. நிறுத்தப்பட்டிருந்த பல திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.
பல புதிய திட்டங்களுக்கான ஏராளமான முன்மொழிவுகளும் கிடைத்துள்ளன. அதன் பல முக்கியமான முன்மொழிவுகள் கடந்த அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே, புதிய முதலீடுகள் மற்றும் புதிய அபிவிருத்தித் திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். நாம் செயல்படுத்தும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் ஊடாக ஒருபுறம் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் மறுபுறம் பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியும். ஆனால், அந்தப் பொருளாதாரப் பலன்கள் கீழ்நிலைக் கிராமிய மக்களுக்கு செல்லவில்லை  என்றால், புள்ளி விபரத்தில் மாத்திரம் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைவதில் பயனில்லை.
எனவே ஒருபுறம் பொருளாதார வளர்ச்சியும் மறுபுறம் பொருளாதார விரிவாக்கமும் அடைய வேண்டும். கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்படாவிட்டால், அவர்கள் பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக இல்லாவிட்டால், சாதாரண மக்கள் பொருளாதாரத்தில் இருந்து வெளியேறும் குழுவாக மாறிவிடுவார்கள்.
எனவே, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதும், கிராமப்புறங்களில் சிதறிக் கிடக்கும் மக்களை அந்தப் பொருளாதாரத்தில் பங்கேற்பவர்களாக மாற்றுவதும்தான் எங்களின் முக்கிய அணுகுமுறை என்பதைக் கூற வேண்டும். மக்கள் தற்போது ஈடுபட்டுள்ள பொருளாதார மூலங்களை மிகவும் பயனுள்ளதாகவும், திறமையாகவும், இலாபகரமாகவும் மாற்றினால் மாத்திரமே அதனை அடைய முடியும். எனவே, கிராமிய மக்கள்  தற்போது ஈடுபட்டுள்ள துறைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்து, இலாபகரமான தொழிலாக அதனை மாற்ற வேண்டும். மேலும், அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது. அதன்படி, கிராமிய மக்களுக்கு புதிய பொருளாதார மூலங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம்.
அவ்வாறு செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் வலுவான பங்கேற்பாளர்களாக அவர்களை மாற்ற முடியும். வறுமை என்பது பொருளாதார மட்டத்தைத் தாண்டிச் செல்லும் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது. ஏழை மக்கள் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட குழுவாக மாறிவிட்டனர்.
எனவே, கிராமப்புற வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் முக்கிய பணியாகக் கருதப்படுகிறது. இந்த விடயத்தில், கல்வி மிகவும் முக்கியமான துறையாகும். வறுமைக் கோடும், கல்வி அறிவில்லாத கோடும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. எனவே கல்வி வாய்ப்புகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவை அனைத்தையும் செய்தாலும், எந்தவொரு சமுதாயத்திலும், எந்தக் காலத்திலும் கஷ்டப்படும் மக்கள் சமூகம் உள்ளது.
வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில் கூட இத்தகைய சமூகங்கள் உள்ளன. அந்த மக்களைக் கவனித்துக் கொள்ள நிவாரணத் திட்டம் தேவை. நிவாரணம் என்பது ஒரு மோசமான கருவி அல்ல. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு சமூகம் பாதுகாக்கப்படாவிட்டால், அந்த சமூகத்தைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இருப்பினும், இந்தப் பொறுப்பு கணிசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் கருவியாக மாறிவிட்டது. நிவாரணத் திட்டம் குறிப்பிடத்தக்க அரசியல்மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளதால், அது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.  இலக்குமயப்பட்ட  சமூகங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையாகும். யார் யாருக்கு? என்ற இலக்குடன் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு அத்தகைய பொறுப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், மேலும் சமூகமும் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
அரசாங்கம் ஏதாவது வழங்கினால், அவர்கள் பெறும் அனைத்தையும் நாமும் பெற வேண்டும் என்ற ஒரு எண்ணம் நம் சமூகத்தில் உள்ளது. அது தவறு. நமது அரசு அத்தகைய கலாசாரம், சமூக பிணைப்பு கொண்ட அரசு அல்ல. பராமரிக்க வேண்டியவர்களை  எப்போதும் கவனித்துக் கொள்வது நமது கலாசார பண்பு ஆகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட திரிவுபடுத்தப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக, இன்று உதவி பெறத் தகுதியானவர்களுக்கு நாம் உதவி வழங்க முயற்சிக்கும்போது, அதைத் தாங்களும் பெற வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். எனவே, ஒரு புதிய கலாசாரம் தேவை. அரசாங்கம் வழங்கும் உதவிகள் தகுதியானவர்களுக்கு மாத்திரமே கிடைக்க வேண்டும் என்பதை மக்கள் தானாக உணர வேண்டும். தனக்கு  திறன் இருந்தாலும், அடுத்த வீட்டுக்காரருக்கு அதே திறன் இல்லை. மக்களுக்கு  உதவ வேண்டும் என்று உணர வேண்டும்.
ஆனால், இன்று நமது நாட்டின் கலாசாரம் என்ன? ஏதாவது கொடுக்கப்பட்டால், அதைப் பெறுவதற்கு ஒரு போராட்டம் உள்ளது. அது தனக்கு பொருத்தமானதா? இல்லையா?   அவசியமா? இல்லையா? தனக்கு அதற்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்று சிந்திக்காமல். எனவே, மிகவும் வலுவான தரவுக் கட்டமைப்பை உருவாக்க எதிர்பார்க்கிறோம். ஆனால், நாம் அனைவரும் அறிந்தபடி, நாம் எப்போதும் கதைக்கும் இந்த நிவாரணத் திட்டத்தை எப்போதும் நம்பியிருக்க முடியாது. எப்போதும் நிவாரணத் திட்டத்திற்கான தேவை  உள்ளது.
அதனால்தான் எப்போதும் நிவாரணத் திட்டம் உள்ளது. ஆனால் அது ஒரு நபருக்காகவோ, ஒரு சமூகத்திற்காகவோ மாத்திரம் அல்ல. ஏனையவர்களும் பொருளாதாரத்தின் பங்காளர்களாக மாற்றப்பட வேண்டும்.
இதற்காக  குறிப்பிடத்தக்க அளவு அரசாங்கம் பணம் செலவிடப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்திற்கு மட்டும் சுமார் 230 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய நிவாரணத் திட்டங்களுக்கு அதிக அளவு பணம் செலவிடப்படுகிறது. ஆனால், இந்த பணத்தை உதவிகள் சென்றடையவேண்டிய சமூகத்திற்கு நாம் கொடுத்திருக்கிறோமா? அந்த பணத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் நன்மைகள் பெறப்பட்டதா? இல்லை, அந்த நன்மை கிடைக்கவில்லை.
பல்வேறு சர்வதேச அமைப்புகள் இந்த நாட்டில் நிவாரணத் திட்டங்களை செயல்படுத்துகின்றன. அவற்றைப் நோக்கும்போது, அவற்றில் 50% க்கும் அதிகமான தொகை  உதவி வழங்குவதற்கான பொறிமுறையைத் தயாரிப்பதற்கு செலவிடப்படுகின்றன.  ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டதும் அதில் ஒரு பகுதி தனக்குப் பெறுவதற்கு  அதிகாரி ஒருவர் காத்திருப்பார். அவருக்கு ஒரு தொழில் இருக்கும்.  அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒரு கொடுப்பனவு தேவை என்று அவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த நிவாரணத் திட்டத்தில்  ஒரு பெரிய தொகை உதவி, பெற வேண்டிய நபர்களுக்கு அன்றி உதவி வழங்குவதற்கான பொறிமுறைக்கு செலவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அது தொடர்பான  பயிற்சிக்காக அதிக அளவு பணம் செலவிடப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.  உதவி சென்றடையவேண்டிய  சமூகத்திற்கு உதவி வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் அரச அதிகாரிகளுக்கும் உள்ளது.
இதனை  தவறாகப் பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். தகுதியானவர்களுக்கு உதவி வழங்குவதற்கான முன்னெடுப்பொன்றை தொடங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு அமைச்சும் ஏதாவதொன்றை வழங்க வேண்டும் என்று நினைக்கும் போக்கு காணப்படுகிறது. இருப்பினும், மிகவும் துல்லியமான தரவுக் கட்டமைப்பின் அடிப்படையில் என்ன வழங்கப்பட வேண்டும்? எந்த நோக்கத்தில் வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய
வேண்டும். இருப்பினும், தற்போது அவ்வாறு நடக்கவில்லை. ஒவ்வொரு நிறுவனமும் திணைக்களமும் உதவி வழங்க விரும்புகின்றன. இருப்பினும், கிராமப்புற மக்களுக்குச் செல்லும்  உதவிகளும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். உயிர்வாழ்வதற்காக மட்டுமே எங்கள் உதவியில் அதிக  பகுதி வழங்கப்பட்டுள்ளது. அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியவில்லை. அதனால்தான் ஒரு கூட்டு முன்னெடுப்பு தேவை. அந்த  முன்னெடுப்பிற்காக நாங்கள் சமூக சக்தி திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். இது ஒரு இலக்காகக் கொண்ட திட்டமாகும். இந்தத் திட்டம் பிரதேச செயலக மட்டம் வரை தயாரிக்கப்பட வேண்டும்.
தற்போது, நிர்வாகக் கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் ஒரு குழந்தை இனி பிறக்கும் என்று நான் நினைக்கவில்லை. உரிய  வயதை அடையும் போது, அவர்  அடையாள அட்டையை பெறுவார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், டிஜிட்டல் மயமாக்கல் பொறிமுறை செயல்படுத்தப்படும். அப்படியானால், பொறிமுறையில்  கீழ் மட்ட  நிர்வாகத்தின் பொறுப்பு என்ன?  அதன் தன்மையைக் கண்டறிந்து, அந்த அலகை அந்த இயல்புடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல ஒரு திட்டத்தை உருவாக்குவதே கீழ் மட்டத்திலுள்ள  நிர்வாக அலகின் பொறுப்பாகும்.பிரதேச செயலக அலுவலகத்தை  முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அந்த இடத்திற்காக  பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் உள்ளது.அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நமது அரச இயந்திரம் குறிப்பிடத்தக்க அளவிற்கு பழுதடைந்த நிலையில் உள்ள ஒரு அரச இயந்திரம் என்பதையும் நான் ஏற்கிறேன். அரச அதிகாரிகளுக்குச் சொந்தமான அனைத்து வாகனங்களையும் எடுத்துக் கொண்டால்,
அவை 15 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. வீதியில் உள்ள பஸ்களில் 50% க்கும் அதிகமானவை வீதியில் பயணிக்கத் தகுதியற்றவை. அலுவலகத்தில் உள்ள கணினிகள் கணிசமானவை பழமையானவையாகும். எங்கள் நிறுவனங்களில் உள்ள முறைமைகள் புதுப்பிக்கப்படவில்லை. கட்டிடங்கள் சிதைந்து வருகின்றன. ஒவ்வொரு கோணத்திலிருந்தும் பார்த்தால், எங்களிடம் ஒரு அரசு இயந்திரம் பழுதடைந்துள்ளது. ஒரு சாதாரண கிராமவாசியைப் போல, எங்கள் பையில் கொஞ்சம் வெற்றிலையுடனும் பாக்குடனும்  அலுவலகத்திற்கு வருகிறோம். அதுதான் உண்மை. கடந்த வரவு செலவுத்திட்டத்தில், சம்பளம் அதிகரிக்கப்பட்டது. மனித வளங்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்பட்டது.
எனவே, அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரச இயந்திரத்தின் பௌதீக வளங்களை கட்டியமைக்க நாங்கள் பாடுபட இருக்கிறோம்.பெளதீக வளங்களை உருவாக்குவதை விட புதிய மென்பொருள் அமைப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம்  அரச கட்டமைப்பை நவீனமயமாக்குவோம். இருப்பினும், பிரஜைகளுக்காக நாங்கள் அதைச் செய்வோம்.
அவ்வாறு  நவீனமயமாக்கப்பட்ட  அரசாங்கத்தில்,  பழைய நாற்காலியில்  அதே பழைய நபர்அமர்ந்தால், அதில்  எந்தப் பயனும் இல்லை. எனவே, அந்த நவீனமயமாக்கப்பட்ட அரச இயந்திரத்தில் நமக்கு ஒரு புதிய அரச  ஊழியர் அமர வேண்டும். அப்போதுதான் இந்த சவாலை நாம் வெற்றி கொள்ள முடியும். இல்லையெனில், இது ஒரு அரசியல் அதிகாரத்திலுள்ளவர்களின் பொறுப்பு கிராம உத்தியோகஸ்தரின் பணி, அபிவிருத்தி அதிகாரியின் பணி, பிரதேச செயலாளர்  பணி என நாம் ஆங்காங்கே பிரித்து இதனைச் செய்ய  முடியாது. அரசியல் அதிகாரத்தையும் அரச இயந்திரத்தையும் கைவிடாத ஒரு கூட்டு நடவடிக்கை தேவை. அரச இயந்திரம், அரச அதிகாரி மற்றும் குடிமகனை ஒரு கூட்டு பொறிமுறைக்குள் கொண்டுவருவதே சமூக  சக்தி திட்டத்தின் நோக்கமாகும். அவ்வாறின்றி எதையும் வெற்றிகொள்ள  முடியாது.   இருக்கும் ஒரு அரசை பராமரிக்க எமக்குத் தேவையில்லை.  அவ்வாறு செய்வதானால்  இருக்கும் அரசை தற்பொழுது இருப்பது போன்றே பராமரிக்கலாம்.
வீழ்ச்சியடைந்த ஒரு அரசை கட்டியெழுப்ப , அரசியல் அதிகாரம், அரச இயந்திரம் மற்றும் குடிமகனை ஒரு ஒன்றிணைந்த  நடவடிக்கைக்குள் கொண்டு வர வேண்டும். எனவே, வீழ்ச்சியடைந்த  அரசில்  பொருளாதாரத்தை இழந்த ஒரு சமூகம் உள்ளது. பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க அந்த சமூகத்திற்கு ஒரு கூட்டு நடவடிக்கை அவசியப்படுகிறது. இந்த சமூக சக்தி திட்டத்தை வெற்றிபெறச் செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று  கோருகிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
சமூக  சக்தி தேசிய கொள்கைச் சபையின் ஒருங்கிணைப்பாளரும், தேசிய நடவடிக்கைக் குழுவின் தலைவரும் , கிராமிய அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர்  கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்ததாவது, நமது நாட்டில் வறுமை பற்றிப் பேசுகையில், கிராமம் ஒரு முக்கிய  இடத்தைப் பெறுகிறது. இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும், குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பகுதிகளைப் நோக்கினால், கிராமத்தை மறந்துவிடாமல் வறுமையைப்
பற்றி  ஆராய முடியாது. அதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 6 ஆம் திகதியை உலக கிராமப்புற அபிவிருத்தித் தினமாக அறிவித்துள்ளது.
நம் நாட்டில் கிராமப்புற வறுமை பற்றி பல தசாப்தங்களாக  பேசப்பட்டு வருவதோடு அதை மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  உதாரணமாக, 2000 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, நம் நாட்டில்  நிவாரணத்தை நம்பியிருக்கும் மக்களின் எண்ணிக்கை 1.1 மில்லியனாக இருந்தது. 2010 ஆம் ஆண்டளவில், அது 1.5  மில்லியனாக அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், நிவாரணத்தை  நம்பியிருக்கும் மக்களின் எண்ணிக்கை  சுமார் 1.8 மில்லியனை எட்டியது.
வறுமையை ஒழிக்க எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. உலக மக்கள் தொகை வேகமாக நகரமயமாகி வந்தாலும், நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார்  79% ஆனோர் கிராமப்புறங்களில் அல்லது தோட்டங்களை அண்டியதாக வாழ்கின்றனர். எனவே, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாக, எங்கள் கொள்கைகளைத் திட்டமிடும்போது கிராமப்புற வறுமையை ஒழிப்பதை ஒரு முக்கிய எண்ணக்கருவாகக் கொண்டோம்.
இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன், நம் நாட்டில் செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்களின் பலவீனங்களை நாங்கள் கவனமாக ஆய்வு செய்தோம். அந்த பலவீனங்களை ஒதுக்கி நம் நாட்டில் வறுமையை  உண்மையிலேயே எவ்வாறு  ஒழிப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த திட்டத்தை நாங்கள் தயாரித்தோம். இந்த திட்டத்தின் மூலம் பல நோக்கங்களை அடைய நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க,பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பிரதி தொழில் அமைச்சர்  மஹிந்த ஜெயசிங்க உள்ள அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள்  , மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, மாகாண ஆளுநர்கள், அமைச்சுக்களின்
செயலாளர்கள்,அரச அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர்  இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.