இம்முறை நாம் சிறப்பான சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் நாட்டின் மத்தியிலும் வாழும் மக்கள் எதிர்கால வளமான இலங்கை நாடு, நவீன இலங்கை தேசம் ஒன்றிற்காக கனவு காணும் தருணத்திலேயே நாம் இன்று சுதந்திரத்தை கொண்டாடுகிறோம்.
1948 பெப்ரவரி 4 நமக்கான முடிவுகளை நாமே எடுப்பதற்கான அரசியல் சுதந்திரம் நம் நாட்டுக்கு கிடைத்தது. அந்த சுதந்திரம் வரையறுக்கப்பட்டதாக இருந்தாலும், அது முக்கியமானது. அதுவே நமது அரசியல் சுயாதீன தன்மையை பெற்ற வரலாற்றின் முதல் தருணம். 1505 முதல் பகுதியளவில் மேற்கத்தேய ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிபணிந்த இந்த நாடு 1815 இல் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு முழுமையாக அடிபணிந்தது. அதிலிருந்து விடுபட்டு இன்றைக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமுத்திரத்தினால் சூழப்பட்ட இந்நாடு, சுயாதீனமான நாடாக எழுந்து நிற்பதற்குத் தேவையான அரசியல் நியதிகளை நிறைவேற்ற ஆரம்பித்ததும் இவ்வாறானதொரு நாளிலாகும். எனவே இது நாம் கொண்டாட வேண்டிய நாளாகும்.
இந்நாளை நனவாக்க தம் உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நாள் இன்று. சுதந்திரத்தை முழுமையாகப் பெறுவதற்காக 1948ஆம் ஆண்டுக்குப் பின்பும் வீரமிக்க மக்கள் நமது சுதந்திரத்துக்காக மேடுபள்ளம் நிறைந்த பாதையில் பயணித்தனர்.
கிரீடத்திடமிருந்து முழு அரசியல் சுதந்திரம் பெற்ற1972 ஆம் ஆண்டை கடந்து தொடர்ச்சியாக 77ஆவது சுதந்திரத்தை கொண்டாடும் இந்தத் தருணம் வரையில் நீண்ட பயணமாக வந்திருக்கிறோம். அந்தப் பயணத்தில்,நாம் அறியாத, நமது சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் இரத்தத்தினாலும், வியர்வையினாலும் இன்று வரை பயணித்திருக்கிறோம். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நமது கௌரவம் உரித்தாகும்.
இன்று, இந்த நாட்டில் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக, இந்த சுதந்திர சதுக்கத்தில் இந்த பெருமைமிக்க தேசியக் கொடியின் முன், சுதந்திரத்தின் எதிர்கால எதிர்பார்ப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வரலாற்றுச் சுமையைத் ஏற்றுக்கொண்ட உங்கள் சகோதரனாக நான் நிற்கிறேன். என்னைப் போன்றே இந்த சுமையை தாங்கிக்கொண்டு இந்த நேரத்தில் நீங்களும் என்னுடனும் என்னைச் சுற்றியும் நிற்கிறீர்கள் என்று நம்புகிறேன். நமது பொருளாதார சுதந்திரத்திற்காக, நமது சமூக, கலாசார சுதந்திரத்திற்காக, சுருக்கமாகக் கூறினால்,
நவீன பிரஜைகளாக இந்த நாட்டில் பெருமையுடன் வாழத் தேவையான சுதந்திரத்தை உருவாக்குவதற்காக நாம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.
நீண்ட காலமாக காலனித்துவத்துக்கு அடிபணிந்தவர்களாக எம்மை பிரித்து ஆண்ட இன வேறுபாடுகள், மத வேறுபாடுகள், ஜாதி வேறுபாடுகள் மட்டுமன்றி, அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் இடையே, நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர்களிடையே, பயணிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து நடத்துபவர்களிடையே, அரச ஊழியர்கள் மற்றும் தங்கள் தேவைகளை நிறைவேற்ற வருபவர்களிடையே, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வேரூன்றியிருக்கும் தவறான எண்ணங்களை கழுவி அகற்றி இந்த சமூகத்தை தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதேபோல், நவீன உலகத்திற்கான மனித மாண்பு, அன்பு, கருணை என்பவற்றை மனித தொடர்பாடலின் அடிப்படை என்பதை நமக்கு நாமே வலியுறுத்த வேண்டும்.
மேலும், இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் ஒருவருக்குக் கிடைக்கும் கௌரவம் மற்றும் அன்பு என்பன அங்கவீனம், முதுமை, நோய் அல்லது அத்தகைய எந்தவொரு இயலாமை காரணமாகவும் மட்டுப்படுதற்கு இடமளிக்கக்கூடாது. அப்போது மட்டுமே, காலனித்துவ யுகத்திலிருந்து விடுபட்டு 77 ஆண்டுகள் கடந்துவிட்ட ஒரு நாடு என்ற வகையில், சுதந்திரம் குறித்து புதிதாக சிந்திக்க முடியும்.
இதன் காரணமாக நாங்கள் அனைவரும் நாட்டிற்கான முழுமையான பொருளாதார, சமூக மற்றும் கலாசார சுதந்திரத்தை வென்றெடுக்கும் போராட்டகளத்தின் போராட்டக்காரர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த தாய்நாட்டிற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இந்த பணியில், நம் தேசத்திற்கு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பங்குள்ளது. நமது தேசத்திற்கான அறிவை உருவாக்கி எதிர்கால சந்ததியினரை அறிவினால் பூரணப்படுத்தும் ஆசிரியர்களின் வகிபாகமும் உள்ளது. நமது தேசத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சுகாதாரப் பணியாளர்களாக உங்களுக்கும் பங்கு உள்ளது. நமது பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொலிஸ்மற்றும் பாதுகாப்புப் படைகள் என்ற வகையில் உங்களுக்கும் பங்குள்ளது. நம் நாட்டில் வலுவான உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கும், நம் நாட்டை தொழில்மயமாக்கலை நோக்கி இட்டுச் செல்லும், நம் நாட்டின் சேவைப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் இந்த அனைவருக்கும் முக்கியமான வகிபாகம் உள்ளது. ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் முதல் மலையகத்தில் தேயிலை பறிக்கும் பெண்கள் வரையிலும், தொலைதூர நாடுகளில் நமக்காக பாடுபடுவோர் வரையிலும், தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் நம் நாட்டை உயர்த்த பாடுபடும், சுற்றுலாத் துறையின் மூலம் நம் நாட்டை உயர்த்த பாடுபடும் உங்கள் அனைவருக்கும் அதில் வகிபாகமொன்று உண்டு.
உலகப் பொருளாதார அமைப்பில் நலிவடையாமல், அதன் ஒவ்வொரு அசைவிலும் நசுக்கப்படும் அடிபணிந்தவர்களாக அன்றி, பொருளாதாரத்துக்குள் நமது சுதந்திரத்தை அடைய வேண்டுமெனில் அனைவரும் ஒன்றுபட்டு இந்த தாய்நாட்டிற்காக அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. அந்த பொருளாதார
சுதந்திரத்திற்கான நமது போராட்டத்தில் நமது சமூக மற்றும் கலாசார சுதந்திரத்தை ஒருபோதும் நாம் இரண்டாம் பட்சமாக பார்க்க நாம் தயாரில்லை.
எனவே, கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வியியளர்கள் என்ற வகையில் வெறுப்பு மற்றும் கோபத்தால் மாசுபடுத்தப்பட்ட எமது தேசத்தின் உயிர்ப்பை தூய்மைப்படுத்தி குணப்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதில் மதத் தலைவர்களுக்கு பாரிய பொறுப்புள்ளது. மேலும், இந்த நாட்டின் வருங்கால சந்ததியினரை வளர்த்தெடுக்கும் அன்பான தாய்மார் அன்பான தந்தையர் என்ற வகையில் உங்களுக்கு சிறப்பான பணி உண்டு.
மேலும், நாளை இந்த நாட்டைக் பொறுப்பேற்கத் தயாராகும் கல்வி பயிலும் பிள்ளைகள் என்ற வகையில் உங்களுக்கும் தனித்துவமான பங்கு உள்ளது. இதை நாட்டை அதிகமாக நேசிக்கும் மக்களின் உயிர் தியாகம், வியர்வை, இரத்தம் கண்ணீரால் இந்த நாட்டை எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும் பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது போன்று எதிர்காலத்தில் அந்த கௌரவப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைப்போம்.
ஆனால் இன்று, 2025 பெப்ரவரி 4 ஆம் திகதி 77 ஆண்டுகளுக்குப் பிறகு காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்று தேசிய சுதந்திரத்தை கொண்டாடும் உங்களுக்கு நான் ஒன்றை உறுதியளிக்க வேண்டும். நாங்கள் உங்களிடம் ஒப்படைக்கப் போகும் நாடு வரலாற்றால் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நாடாக அன்றி, நீங்கள் உலக பிரஜையாக வாழ விரும்பும், பிரஜை என்ற உங்கள் கௌரவத்தை மதிப்பளிக்கும், மேம்பட்ட கலாசாரத்துடன் கூடிய ஒரு நாடாக அமையும். மேலும், மனித நாகரிகம் இதுவரை அடைந்துள்ள அறிவியல், தொழில்நுட்ப மற்றும் அறிவுசார் சாதனைகள், இந்த இலங்கை நாட்டுப் பிரஜையாக அனுபவிப்பதற்கான உங்களது உரிமையை உறுதிப்படுத்தும் நாடாக அமையும்.
சரித்திரம் நமக்கு வழங்கியிருக்கும் இந்த மாபெரும் வாய்ப்பை நழுவ விட எமக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என்பதை இன்று உங்கள் முன் உறுதியாகச் இவ்வாறு சொல்கிறேன். நாம் அவ்வாறு செய்யவில்லை என்பதற்கு எதிர்காலம் சாட்சியமளிக்கும். மேலும், நாங்கள் உங்களிடம் ஒப்படைக்கும் இந்த அன்பான தாய்நாட்டை நீங்கள் எங்களை விட அதிக அன்புடனும் ஆற்றலுடனும் எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்த பூமியில் பிறந்த மனிதர்கள் என்ற வகையில், இந்த உலகத்தை உயர்ந்த மனித நேயம் மிக்க இடமாக மாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. அந்த உயர்ந்த மனித நேயத்தை அனைத்து மக்களும் சமமாக உள்வாங்குவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். சுதந்திரத்திற்கான போராட்டம் இந்த பரந்த நோக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, சுதந்திரத்தின் கனவை ஒன்றாகப் காண்போம். அந்தக் கனவை ஒன்றாக நனவாக்கிகொள்வோம்.
ஒருவேளை நீங்களும் நானும், நாம் அனைவரும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கும்,சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தொடர்பிலான நவீன உலக அரசியலில் அழியாத முன்னுதாரணமாக நமது தாய்நாட்டை, இந்த இலங்கை நாட்டை மாற்றியமைப்பதற்கான பயணமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் இந்த உலகின் செல்வந்த நாடாக மாற முடியாது என்றாலும், நாம் முயற்சி செய்தால் இந்த உலகத்தில் வளமான தேசிய உயிர்ப்பை தாங்கிக்கொண்டிருக்கும் சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கான முன்னுதாரணமான நாடாக நாம் மாறலாம்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.