அதிமேதகு ஜனாதிபதி முகமது முய்சு அவர்களே,
கௌரவ அமைச்சர்களே,
மதிப்பிற்குரிய விருந்தினர்களே,
தாய்மார்களே,
ஊடக நண்பர்களே,
வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும்,
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள், நட்பு கூட்டாண்மை, நெருங்கிய நட்புறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலான மாலைதீவுக்கான எனது முதல் அரச விஜயத்தில் மாலேயிற்கு வருகை தரக்கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்குப் புதிய உற்சாகத்தையும் பலத்தையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்.
இலங்கையும் மாலைதீவுகளும் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் எனது மாலைதீவு விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
எனக்கும் எனது பிரதிநிதிகளுக்கும் கிடைத்த அழைப்பிற்கும் அமோக வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் அதிமேதகு ஜனாதிபதி முகமத் முய்சு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீண்ட கால உறவு உள்ளது.
இந்து சமுத்திரத்தில் உள்ள நமது இரு நாடுகளும் பழங்கால கடல்வழி வர்த்தகப் பாதைகள் மற்றும் பொதுவான வரலாறு ஆகியவற்றுடன் நமது தொடர்புகளால் வளம் பெற்றுள்ளன.
சிறிது நேரத்திற்கு முன்பு, ஜனாதிபதி முய்சுவும் நானும் எங்கள் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். நமது உறவுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டதுடன், மேலும் எதிர்காலத்தில் பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் நமது ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். எப்போதும் இலங்கைக்கு வழங்கும் நிலையான ஆதரவிற்கு ஜனாதிபதி முய்சு மற்றும் மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நமது மக்களின் பொது நலனுக்காக நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், நமது உறவை பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி முய்சுவும் நானும் இனங்கண்டோம். மாலைதீவில் ஏராளமான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதற்காக ஜனாதிபதி முய்சுவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாலைதீவின் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பை காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல், இலங்கையில் உள்ள மாலைதீவு மக்கள், இலங்கை பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.
கல்வித் துறையில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே வலுவான பங்காளித்துவம் உள்ளது. பல ஆண்டுகளாக, இலங்கையர்களாகிய நாங்கள் மாலைதீவு மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளோம். இத்துறையில் மேலும் ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஜனாதிபதி முய்சுவும் நானும் கலந்துரையாடினோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீடுகள் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தினோம். மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என்று நான் தெரிவிக்கிறேன்.
முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இலங்கை தற்போது உருவாக்கி வருகின்ற அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் அடைவதற்கான பொறிமுறை மற்றும் முதலீட்டாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தும் நிதி மற்றும் நிதி அல்லாத ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி முயிசுவிடம் தெரிவித்தேன்.
இலங்கையின் நவீன தொழில்நுட்ப பூங்காக்கள் பற்றியும் அவருக்கு விளக்கினேன்.
அவை முதலீட்டாளர் நேய மற்றும் உற்பத்தி – விசேட தொழில்துறை வலயங்களாக உள்ளதோடு, மாலைதீவு முதலீட்டாளர்கள் அந்த வலயங்களில் முதலீடு செய்யலாம்.
மேலும், மாலைதீவு வர்த்தகர்களுக்கு இலங்கையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம்/செயற்கை நுண்ணறிவு, மீன்பிடி மற்றும் விவசாய செயலாக்கம், சுற்றுலா மற்றும் ஓய்வு, ஆதன வர்த்தகம் மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் முதலீடு செய்யுமாறு நான் அழைப்பு விடுத்தேன். நமது இரு நாடுகளிலும் சுற்றுலாத் துறை ஒரு முக்கிய பொருளாதார காரணியாகும். இந்த சூழலில், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
விசேடமாக விமானத் தொடர்புகளை மேம்படுத்துவதுடன், விமான சேவைகள் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடியோம். விவசாயத்துறை, இளைஞர்களை வலுவூட்டுதல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்து சமுத்திரத்தில் உள்ள தீவு நாடுகளாக, மீன்பிடி மற்றும் கடல்சார் துறையின் பெரும் ஆற்றலை நாங்கள் இனங்கண்டோம். நவீன மற்றும் நிலைபேறான மீன்பிடி நடைமுறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாம் கலந்துரையாடினோம்.
இலங்கை மீன்பிடிக் கப்பல்கள் மாலைதீவு கடல் எல்லை வழியாக அரபிக் கடலுக்குள் தடையின்றிச் செல்வதற்கு போக்குவரத்து வழிகளை நிறுவுவது குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இலங்கையும் மாலைதீவும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளன. இலங்கை மற்றும் முழு இலங்கை சமூகத்தையும் நிலைபேறான நிலைக்கு உயர்த்துவதற்காக சமூக அபிவிருத்தி, சுற்றாடல் அபிவிருத்தி மற்றும் தார்மீக அபிவிருத்தி ஆகிய மூன்று முக்கிய கூறுகளின் ஊடாக செயற்படும் ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தை எனது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இதுபற்றி நான் ஜனாதிபதி முய்சுவுக்கு விளக்கினேன். திண்மக்கழிவு முகாமைத்துவத்துக்கான ‘Maldives Clean Environment’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக ஜனாதிபதி முயிசுவைப் பாராட்டினேன்.
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் அதிகரித்தல் ஆகிய சவாலை எதிர்கொள்ள பின்பற்ற வேண்டிய பொதுவான முயற்சிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் இனங்கண்டோம். இலங்கை 2030 ஆம் ஆண்டாகும்போது அதன் மின்சாரத்தில் 70% புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த இலக்கை அடையும் நோக்கில், நமது இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த நான் பரிந்துரைத்தேன்.
பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் வலுவான கலாசார உறவுகள் உள்ளன. எங்கள் மொழிகள் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளதுடன், சிங்களம் மற்றும் திவெஹி மொழி ஆகிய இரண்டும் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும். மக்களிடையேயான தொடர்புகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். பிராந்திய மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புத் துறையில் இலங்கைக்கு மாலைதீவு வழங்கும் ஆதரவை நான் பாராட்டியதுடன், மாலைதீவுக்கு இலங்கை ஆதரவளிக்கும் என்று நான் உறுதி அளித்தேன்.
நமது இரு நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. அந்த ஒத்துழைப்பை தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
அதிமேதகு ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு இரு தரப்பினருக்கும் வசதியான நாளில் இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தேன். எனது விஜயத்தின் போது நான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றுவதுடன் மாலைதீவில் வாழும் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளேன்.
அதிமேதகு ஜனாதிபதி முகமது முய்சு அவர்களே, எனக்கும் எனது குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
மாலைதீவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்பது உறுதி.
நன்றி!
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.