Published on: மார்ச் 28, 2023

வலுசக்தி துறையில் பசுமை முதலீடுகளை அணிதிரட்ட இலங்கை தயார் – காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

  • பசுமை வாய்ப்புக்கள் ஊடாக தற்போதைய நிலையிலிருந்து இலங்கையை மீட்பதே ஜனாதிபதியின் நோக்கு- ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு

வலுசக்தி துறைக்குள் பசுமைய முதலீடுகளை அணிதிரட்ட இலங்கை தயாராகவிருப்பதாகவும் அதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீ்ட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்று (27) நடைபெற்ற இலங்கை பசுமை வலுசக்தி மாநாடு – 2023 இன் தலைவர் என்ற வகையில் ஆரம்ப உரையை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் வலுசக்தி துறையில் பசுமை வலுசக்தி முதலீட்டு வாய்ப்புகளை அடையாளங்காண்பதற்கு முதலீட்டாளர்களுக்கு இந்த மாநாடு பெரும் வாய்ப்பாக அமையுமென சுட்டிக்காட்டிய ருவன் விஜேவர்தன, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அணிதிரட்டும் போது தனியார் துறையின் அவசியம் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.

இலங்கை பெரிஸ் சமவாயத்தை விடவும் குறைந்த மட்டத்தில் “கார்பன் டயொக்சைட்” உமிழ்வு முகாமைத்துவத்துவச் செயற்பாடுகளில் உயர் மனிதவள மேம்பாட்டை பெற்றுக்கொண்டுள்ள நாடு என்பதும் அரிய உதாரணமெனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல் பெரிஸ் சமவாய பங்காளர் என்ற வகையில் இலங்கை 2030 ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 14.5% ஆக மட்டுப்படுத்துவதற்கு அர்பணிப்புடன் செயற்படுவதோடு, 2030 ஆம் ஆண்டில் 70% ஆன மின்சார தேவைகளை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியூடாக பூர்த்தி செய்துகொள்ளவும் 2050 மின்சார உற்பத்தியின் போது கார்பன் மத்தியஸ்த இலக்குகளை அடைதல், நிலக்கரி மின் உற்பத்தியை இனிமேலும் பயன்படுத்தாதிருப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் ஹெரிக் லொச்ஹெய்ம், பசுமை வாய்ப்புக்கள் ஊடாக தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் தெரிவித்தார்.

இன்று வேகமாக அபிவிருத்தி கண்டுவரும் இரு நாடுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பசுமை மாற்றத்தின் தலைமைத்துவத்தை வழங்குவதாக சுட்டிக்காட்டிய எரிக் சொல்ஹெய்ம், அந்த நாடுகள் அபிவிருத்தியை போன்றே பொருளாதார சந்தைகளை கைப்பற்ற எதிர்பார்ப்பதால் சீனா மற்றும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணிவரும் இலங்கைக்கு பசுமை பொருளாதாரத்திற்கு நுழைவற்கு பெருமளவான வாய்ப்பு உள்ளதெனவும் வலியுறுத்தினார்.

இங்கு கருத்து தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, துறைசார் அமைச்சர் என்ற வகையில் தான் உலக அளவில் இலங்கையை போட்டித்தன்மை மிக்கதாக மாற்றியமைப்பதற்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் அநேகமான அரச நிறுவனங்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர், அவற்றின் முகாமைத்துவம் மற்றும் செயற்பாடுகள் மற்றும் பிரிவுகள் ஆகிய மூன்றிலும் புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

தனது நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக இருப்பது இதற்கு அவசியமான நிறுவன ரீதியான கட்டமைப்பை வடிவமைப்பதேயாகும் என தெரிவித்த காஞ்சன விஜேசேகர , இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதே ஒரே நோக்கம் என சிலர் சுட்டிக்காட்டினாலும், உண்மையில் இது அதற்கும் அப்பாற்பட்ட பரந்தளவான வேலைத்திட்டம் இருப்பதாகவும், தற்போது காணப்படுகின்ற நிறுவன ரீதியான கட்டமைப்பிலிருந்து மீண்டு எதிர்காலத்திற்கு அவசியமான வலுசக்தி திட்டமொன்றை தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இம்மாநாட்டில் உரையாற்றிய போது, இலங்கையின் வனவளம் 32% ஆக அதிகரித்துக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் பாரம்பரிய முறைமைகளால் அதனை செய்ய முடியாது என்பதால் கார்பன் கிரெடிட் கருத்தியலை உபயோகிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைச் செய்வதால் நாட்டிற்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடிவதோடு வனவளத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க, மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன, உலக வங்கியின் சிரேஷ்ட வலுசக்தி நிபுணர் ஜெரி வெரினன், இலங்கை முதலீட்டுச் சபையின் நிறைவேற்று அதிகாரி (ஊக்குவிப்பு) பிரசஞ்ஜித் விஜேதிலக, கராச்சி SEED Ventures இன் ஸ்தாபகரும் பணிப்பாளருமான பராஸ் கான் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை இலங்கை வலுசக்தி மாநாடு 2023 இல் மேலும் கருத்து தெரிவித்த ருவன் விஜேவர்தன,

2023 இலங்கை பசுமை வலுசக்தி மாநாட்டின் தலைவராக பணியாற்றக் கிடைத்தமை பெரும் கௌரவமாகும். இந்த முக்கியமான தருணத்தில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்கிறேன். எம்மால் நேர்மையாகவும் நேரடியாவும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.

மாநாட்டை ஆரம்பிப்பதற்கு முன்னதாக மாநாட்டை நாம் நடத்த திட்டமிட்டுள்ள விதம் தொடர்பில் அறிவுறுத்த விரும்புகிறேன். இலங்கையில் அபிவிருத்திக்கான பொருளாதார சூழல், இலங்கைக்குள் முதலீட்டாளர்களுக்கு வசதிகளை வழங்கக்கூடிய இயலுமை மற்றும் காலநிலை மாற்றங்களின் போதான Carbon Credit இன் பங்களிப்பு, வலையமைப்பு முதலீடு உள்ளிட்ட பிரதான விடயங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.

புதுப்பிக்கதக்க வலுசக்தி சாத்தியக்கூறுகளை கொண்ட நாடான இலங்கை, நிலையான அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்காக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைக்குள் பிரவேசிப்பதற்கு வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் அரச நிதியின் மீது சுமையேற்றாது எரிபொருள் இறக்குமதியை குறைப்பது மாத்திரம் எமது நோக்கமல்ல. பெண்களுக்கும் ஏனையோருக்கும் வேலைவாய்ப்புக்களை உருவாக்கித் தரக்கூடியதும் தூய்மையானதும் தாங்கிக்கொள்ள கூடியதுதமான ஒரு வலுசக்தி அடிப்படையிலான பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். இந்த நிலைமாற்றமானது பொருளாதாரம், வலுசக்தி துறை மற்றும் சூழல் பல்வகை வெற்றிகளை பெற்றுத்தரும்.

இலங்கையின் தனிநபர் கார்பன் டையொக்சைட் உமிழ்வு 1.2 என்ற குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. நாட்டின் அபிவிருத்தி பாதையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் குறைந்தளவு காபன் டையொக்சைட் உமிழ்வைப் பேணும் இயலுமையை இலங்கை கொண்டுள்ளது. அதற்கமைய பெரிஸ் சமவாய அளவுகோள்களை விடவும் மிகக் குறைந்த கார்பன் டையொக்சைட் உமிழ்வு முகாமைத்துவத்தை மேற்கொண்டு உயர்ந்த மனித வள அபிவிருத்தியை பெற்ற அரிய முன்னுதாரன நாடாக இலங்கையை சுட்டிக்காட்டலாம்.

பெரிஸ் சமவாய பங்குதாரர் என்ற வகையில் 2030 ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 14.5% ஆல் மட்டுப்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. 2030 ஆம் ஆண்டில் 70% சதவீதமான மின்சார தேவைகளை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியூடாக பூர்த்தி செய்துகொள்ளவும் 2050 மின்சார உற்பத்தியின் போது கார்பன் நடுநிலையை அடைதல், நிலக்கரி மின் உற்பத்தியை இனிமேலும் தேவைகளுக்கு பயன்படுத்தாதிருத்தல் உள்ளிட்ட காரணிகளுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்காக முதலீடுகளை மேற்கொள்வதால் நிறுவனங்கள் தங்களது நிலைத்தன்மை மற்றும் அர்பணிப்பை வெளிகாட்டுவதற்கும் சுற்றுச்சூழல் பாதிப்பை மட்டுப்படுத்துவதற்குமான வழிவகைகள் ஏற்படும். இந்த நிலையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொழில்நுட்பம் அபிவிருத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தனியார் துறையின் பங்களிப்பு மிக அவசியமானதாகும்.

இலங்கை வலுசக்தி துறையின் பசுமை வலுசக்தி முதலீடுகளை மேம்படுத்துவதற்காக இந்நாட்டு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை மேம்படுத்த அரச, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கிறேன். இது தூய்மையான வலுசக்திக்கான பசுமை முதலீடுகளுடன் வலையமைப்பு மற்றும் கூட்டுத் தன்மையைும் உருவாக்கும்.

அதற்கமைய இந்த மாநாடு, குறைந்தளவான கார்பன் பொருளாதாரத்திற்கு நாட்டை மாற்றுவதற்கு துரித மற்றும் காலநிலை இலக்குகளை சாத்தியமாக்கிக் கொள்ள கூட்டு அர்ப்பணிப்பிற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கிறேன். இலங்கையில் பசுமை வலுசக்தி அபிவிருத்திக்கும் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் 2023 இலங்கை பசுமை வலுசக்தி மாநாட்டில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கிறேன்.

இந்த தூய்மையான எண்ணத்தை தோற்றுவித்தமைக்காகவும் வழிகாட்டியமைக்காகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்ளும் அதேநேரம், ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த வாய்ப்பை பயன்டுத்திக் கொள்கிறேன்.

மாநாட்டில் உரையாற்றிய காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம்,

இந்த வார இறுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர் கூறிய விடயமொன்றை மேற்கோள்காட்டி எனது உரையைத் தொடங்க விரும்புகிறேன். “இலங்கைக்கு வந்தவர்கள், இலங்கைக்கு வராதவர்கள் என இரண்டு வகையான மனிதர்கள் உலகில் உள்ளனர்” என்றார். நீங்கள் அனைவரும் இலங்கைக்கு வருகை தந்த குழுவைச் சேர்ந்தவர்கள், மேலும் இலங்கைக்கு வருகை தந்த மக்கள் குழுவில் சேர உலகின் ஏனைய மக்களை ஊக்குவிக்கும் திறமை உங்களுக்கு உள்ளது.

1998 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க என்னை சமாதான முன்னெடுப்புகளில் இணையுமாறு கேட்டுக் கொண்டதில் இருந்து நான் இலங்கையுடன் தொடர்பில் இருக்கின்றேன். இலங்கை பல வருடங்களாக யுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடியின் வலியை அனுபவித்து வந்துள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் இந்த நெருக்கடிகளின் ஊடாக இலங்கை மக்களின் அளவில்லா தாங்கும் திறன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இலங்கையில், கல்வியில் உயர் நிலை, அதிக ஆயுட்காலம் இருப்பதோடு, இலங்கையில் வாழ்க்கைத் தரம் மிக உயர்வாக உள்ளது. எனவே இந்த மாபெரும் முன்னேற்றத்தை நாம் கொண்டாட வேண்டும். ஏனெனில் அது இலங்கை மக்களின் கடின உழைப்பையும் மனப்பான்மையையும் எடுத்துக் காட்டுகிறது.

கடந்த வாரம் இலங்கைக்கு நல்ல செய்தியொன்று கிடைத்தது. அதற்குப் பங்களித்த அனைவரையும் நான் நிச்சயமாக வாழ்த்துகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பை நிறைவேற்றியதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நான் வாழ்த்துகிறேன்.

எதிர்காலத்தில் பல சிரமங்கள் ஏற்படலாம். ஆனால், இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடியை ஒதுக்கி வைத்துவிட்டு, முன்னோக்கிச் சென்று எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கான களமாக அது அமையும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்துள்ளனர். உங்களில் சிலர் இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருக்கலாம். அடுத்த முறை இங்கு வரும்போது சில நாட்கள் வந்து தங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியில் கவனம் செலுத்துவதற்காக நாங்கள் இன்று இங்கு கூடியுள்ளோம். இலங்கையானது புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான அளப்பரிய ஆற்றலைக் கொண்ட நாடாகும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள ஆழமற்ற கடல், கடல் காற்று, ஆறுகள் மற்றும் சூரிய சக்தி ஆகியவை இதற்கு மிகவும் பொருத்தமானவை.

தொடர்ந்து இந்த விடயங்களைப் பற்றி இன்னும் விரிவான அறிவுடன் பேச உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சிலர் பசுமை வலுசக்தி அதிக செலவு கூடியது என்று நினைத்தாலும், அது அவ்வாறு இல்லை. பசுமை வலுசக்தி ஒரு பாரிய வாய்ப்பு, இப்போது அது உலகின் மலிவான வலுசக்தியாக மாறியுள்ளது.

சூரிய ஒளி மூலமான சக்தியை அமெரிக்கா பயன்படுத்தினால் அது நிலக்கரியை விட மலிவாக இருக்கும் என சமீபத்திய அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. அனைத்து நிலக்கரி ஆலைகளையும் இயக்குவதை விட புதிய சூரிய சக்தி ஆலைகளை உருவாக்குவது மலிவானது. எனவே நிலக்கரியிலிருந்து சூரிய சக்திக்கு மாறுவதன் மூலம் அமெரிக்கா சேமிக்கும் ஒவ்வொரு டொலரும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்யும்.

இரண்டு பெரும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் இப்போது பசுமைப் புரட்சியின் இரண்டு தலைவர்கள் என்பது அந்தச் செய்தியில் உள்ள சிறப்பான விடயமாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பல அமெரிக்கர்கள் மற்றும் பல ஐரோப்பியர்கள் உண்மையில் இந்த செய்தியை கவனிக்கவில்லை. சீனா அவர்களின் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில் உண்மையிலேயே முன்னணியில் உள்ளது.

கடந்த ஆண்டு உலகில் உள்ள மொத்த சூரிய களங்களில் (solar panels) 82% ஆன உற்பத்தியை சீனா தான் மேற்கொண்டது. கடந்த ஆண்டு அனைத்து மின்சார பேட்டரிகளில் 70% சீனாவிடமே இருந்தது. கடந்த ஆண்டு, உலகின் புதிய நீர்மின்சாரத்தில் 80% சீனாவிலிருந்து வந்தது. அதேபோன்று, நீங்கள் இந்தியாவுக்குச் சென்றால், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு பசுமை முயற்சிகளை தொடங்கினார் என்பதைக் காணலாம். அவை பசுமைப் பணிகள் என்று அழைக்கப்படுகின்றன. பசுமை ஹைட்ரஜன் உமிழ்வுகள், எலக்ட்ரோமோபிலிட்டி உமிழ்வு, மின்சார மின்கல உமிழ்வுகள், சூரிய களத் தயாரிப்பு போன்றவற்றின் ஊடாக அந்தப் பணிகளை பிரதமர் மோடி எளிதாக்கியுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால் சீனாவும் இந்தியாவும் இந்த வேலைத்திட்டங்களை அமுல்படுத்தியுள்ளன. மேலும் இது மக்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதால். மேலும், இது பொருளாதாரத்திற்கும் ஒரு சிறந்த விடயமாக இருப்பதோடு, அதன் மூலம் சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

எனவே நாம் எதிர்காலத்தில் அடியெடுத்து வைத்து புதிய பசுமை பொருளாதார சந்தையில் இணைய வேண்டும். சீனாவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளதுடன், இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருக்கும் இலங்கைக்கு அதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனுடன் ஜப்பான், கொரியா, ஐரோப்பா, அமெரிக்கா என இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய அனைவருடனும் இணைந்து செயற்படுவது புதிய முதலீடுகளை கொண்டுவருவதற்கான வாய்ப்பை வழங்கும்.

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் Ola என்ற பெயரில் ஒரு நிறுவனம் உள்ளது. இந்திய இளைஞர்கள் 2000 பேர் தமிழ்நாட்டில் மின்சார ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து வருகின்றனர். அது ஒரு அழகான, சுத்தமான, இடம். இந்தியப் பெண்களாலும் சிறுமிகளாலும் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுவதே தனது நோக்கம் என்று அதன் உரிமையாளர் கூறினார். ‘Tesla for the west Ola for the rest’ என்பது அவர்களின் தாரக மந்திரமாகும்.

Ola வினால், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பயணிக்கக் கூடிய இரண்டு, மூன்று, நான்கு சக்கரங்களைக் கொண்ட எந்த சந்தையையும் கைப்பற்ற முடியும் என்பதே அதன் அர்த்தமாகும்

எனவே, எனது கருத்தின்படி, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இந்த முக்கியமான வேலையின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம், சந்தை வாய்ப்புகளைப் பெறல், பொருளாதாரத்தை மேம்படுத்தல், பசுமையாக்கல் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இது உதவும்.

உண்மையில் இலங்கைக்குத் தேவையான நோக்கு இதுவாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் நோக்கும் இதுதான். உண்மையில் இலங்கையை பசுமையான சூழலில் இந்தச் சிக்கலில் இருந்து மீட்டெடுப்பதே ஜனாதிபதியின் தேவையாகவுள்ளது.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.