Published on: ஏப்ரல் 3, 2023

பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு IMF ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும்

  • 18 ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்கு தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை- ஜனாதிபதி தெரிவிப்பு.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் ஜூன் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (02)நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் பல்கலைக்கழகங்களின் பொருளாதாரப் பிரிவு விரிவுரையாளர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் கருத்துக்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் பொருளாதாரப் பிரிவின் சிறந்த மாணவர்கள் பத்து பேரை அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவித்தார். இதில், தெரிவு செய்யப்படும் சில மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நாட்டில் உற்பத்தி மற்றும் சேவைகள் தானியங்கி முறைமைக்கு செல்ல வேண்டும் எனவும் இல்லையெனில் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாது எனவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதற்காக கல்வி முறையை புதிதாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 18 ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்கு தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், நிதி இராஜாங்க அமைச்சர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் பொருளியல் துறை விரிவுரையாளர்கள் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் சுருக்கமாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

முதலில் ஐஎம்எப் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்க்கிறோம். அனைவரும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். எனவே, ஆதரவு வழங்க கோரும் பிரேரணையை முன்வைக்க இருக்கிறோம்.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் முக்கிய அம்சங்களை சட்டமாக கொண்டு வர உள்ளோம். அதில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டுமானால் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அதிலுள்ள அடிப்படை விடயங்கள் மே மாதத்தில் சமர்ப்பிக்கப்படும். புதுவருடத்தின் பிறகு ஜஎம்எப் குறித்து கிராம மக்கள் அறிவூட்டப்படுவர். இரண்டாவதாக, பசுமைப் பொருளாதாரம் உட்பட நமது திட்டங்கள் என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்தப்படும்.முதலில் இந்தத் திட்டங்கள் தொடர்பிலான கருத்துக்களை பெற வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.. இந்த மூன்று சட்டமூலங்களையும் ஒன்றாக கொண்டு வரக்கூடாது என நீதி அமைச்சர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கோரிக்கை விடுக்கின்றனர். அதற்குக் காரணம், உச்சநீதி மன்றம் அவர்கள் மீதும் வேறு பல காரணங்களுக்காகவும் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது. எனவே, ஏப்ரல் இறுதிக்குள் ஒரு வரைவை முன்வைக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அதன் பிறகு, மற்ற இரண்டு வரைவுகள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் ஜூன் மாதத்திற்குள் மூன்று வரைவுகளும் கொண்டு வரப்படும்.

குறிப்பாக நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், போட்டித்தன்மையுடன் உற்பத்தியை அதிகரிப்பதே எங்கள் நோக்கம். போட்டித்திறன் மற்றும் உற்பத்தி ஆகிய இரு துறைகளும் முன்னேற்ற வேண்டும். அதற்காக நாம் இணைந்து பணியாற்றலாம். அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை இணைத்து தனி விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். தேவைப்பட்டால், பட்டப் படிப்புகளை நிறுவலாம். இதன் ஊடாக ஆராய்ச்சி செயல்முறையை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம். இதிலிருந்து தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இதிலிருந்து அறியலாம். அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவோம்.

ஐஎம்எப் ஒப்பந்தத்தை அனைவரும் படித்திருக்கிறார்கள். இங்குள்ளவர்களுக்கு அதைப் பற்றி தெளிவுபடுத்த முடியும். நாம் வழங்கக்கூடிய எந்தவொரு தீர்வையும் ஜஎம்எப் கட்டமைப்பிற்குட்பட்டு மட்டுமே வழங்க முடியும். அதிலிருந்து வெளியில் வர முடியாது. எங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டமைப்பிற்குள் மட்டுமே நாம் செயல்பட வேண்டும்.

விவசாயிகளும், சுற்றுலாதுறை வர்த்தகர்கள் கூட இது அவசியம் என்கின்றனர். பெரும்பான்மையினரின் கருத்தும் அதுவாகும். தனியார் மயமாக்க வேண்டாம் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. அவ்வாறானால் என்ன செய்யுமாறு கேட்கிறார்கள்? அவற்றுக்காக செலவிடப்படும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கை பல்கலைக்கழகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் வழங்கினால் இதனை விட முன்னேற்றம் ஏற்படும்.அத்தோடு சம்பள பிரச்சினையும் தீர்க்கப்படும். தொழிற்சங்கங்கள் விரும்பியபடி செயல்பட முடியாது. இலங்கை மீண்டும் ஆப்கானிஸ்தானை விட பின்தங்குவதை அனுமதிக்க முடியாது.மறுசீரமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். நாட்டில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்பட ட வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளன.

தொழிற்சாலைகளை உருவாக்க சட்டமொன்றை கொண்டு வந்துள்ளதோடு ஆணைக்குழுவொன்றையும் உருவாக்கியுள்ளோம். ஆனால் நாம் தொழில்மயமாக்கலை முன்னெடுக்கவில்லை. யுத்தத்திலிருந்து சமாதானத்தை ஏற்படுத்த விரும்பினோம்.

1983-1987 களில் யுத்தத்திற்கு செலவழித்த பணத்தை விட அதிக பணம் சிவில் யுத்தத்திற்காக செலவழிக்கப்பட்டது. போருக்குப் பிறகு, நாங்கள் தொழில்மயமாக்கலுக்கு திரும்பவில்லை. மாறாக, நிர்மாணத் துறையில் உள்ள திட்டங்களுக்குச் சென்றுள்ளோம். 2009ல் கைத்தொழில்மயமாக்கலுக்கு சென்றிருந்தால் நிறைய முதலீடுகள் வந்திருக்கும். நிபந்தனைகள் விதித்தால், அந்த முதலீடுகள் வராது. நிலைமை நன்றாக இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் வரமாட்டார்கள். வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பணத்தை வைத்திருந்த நமது முதலீட்டாளர்கள் தான் முதலில் வருவார்கள். அதன் பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவார்கள்.

30 வருடங்களில் நிறைவு செய்யப்பட வேண்டிய மகாவலி திட்டத்தை 10 வருடங்களில் நிறைவேற்ற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நடவடிக்கை எடுத்தார். அதற்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒரே நேரத்தில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. அதன் ஊடாக இலங்கை மக்களுக்கான பணத்தைப் பெறும் முறைகள் அமைக்கப்பட்டன. அவ்வாறு முன்னேறிய குழுக்கள் உள்ளன. அவர்கள் இப்போது வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

நமக்கு இந்தப் பணிகளை அவ்வாறானதொரு நிலையிலேயே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. எமது மக்கள் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து தமது தொழில்கள் வீழ்ச்சியடையும் என அஞ்சுகின்றனர். எனவே, பணம் லண்டன் அல்லது டுபாயில் வைக்கப்படுகிறது. அந்த பணத்தை திரும்ப கொண்டு வர முடிந்தால்,சிறந்தது.

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டில் பொருளாதாரம் கற்கும் மாணவர்களிடமிருந்து திறமையான பத்து மாணவர்களை தெரிவு செய்து வழங்க முடியுமா என அதிகாரிகளுடனும் அமைச்சருடனும் கலந்துரையாடுங்கள். நான்கு திறமையான மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்க்கிறோம். ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் மற்றும் ஸ்டாபோர்ட் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்வோம். என்றார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இன்று நாம் பொருளாதார நிபுணர்களுடன் கலந்துரையாடுகின்றோம். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற ஜனாதிபதி ஒருவர் இன்று இலங்கையின் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் பொருளாதாரப் பிரச்சினை பற்றி கலந்துரையாடுகிறார். சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறிய போது அமைச்சரவையில் இருந்து எழுந்து சென்ற அமைச்சர்கள இருக்கும் நாடு இது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கி வட்டியை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டது. இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியேற்பட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதை நாம் அறிவோம். இதனால் கீழ்மட்ட மக்கள் மட்டுமின்றி நடுத்தரவகுப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. எனவே, சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதைத் தவிர நமக்கு வேறு வழி இருக்கவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி இதனைப் பற்றிப் பேசினார். நாங்கள் அன்று இதற்கு எதிரான தரப்பில் இருந்தோம். அன்று எங்கள் பக்கம் மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த முடிவுகள் தவறானவை என்பதை இப்போது நாம் அறிவோம். நீங்கள் பொருளாதார நிபுணர்கள். 18 ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல மாட்டோம் என ஜனாதிபதி தற்போது கூறினார். அந்தப் பொறுப்புக்காக அர்ப்பணிப்புடன் நாம் செயற்பட வேண்டும். அதற்கு உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க

இது தொழிற்சங்கங்களின் கலந்துரையாடலுக்கு அப்பாற்பட்ட ஒரு தொழில்துறை மட்டத்திலான கலந்துரையாடலே இங்கு நடைபெறுகிறது.. ஐஎம்எப் ற்கு16 முறை சென்றாலும், சில நிபந்தனைகள் முறையாக செயல்படுத்தாததால் வெற்றி பெறவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தான் வரி உயர்வு ஏற்பட்டது. ஒப்பந்தங்களை திரும்பப் பெறுவது ஒரு நாடாக நடைமுறை சாத்தியமில்லை. வரி பெகேஜை அகற்ற இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, அதிக மக்களை வரி செலுத்துபவர்களாக மாற்றுவது. இரண்டாவது வழி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்து சம்பளத்தை அதிகரிப்பது. இவை இரண்டையும் குறுகிய காலத்தில் செய்துவிட முடியாது. தனியார் துறை சில மாற்றங்களைச் செய்துள்ளது. இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அடுத்த முறை மக்களுக்கு சலுகைகளை வழங்கலாம்.அதிக வருமானம் பெறுபவர்கள் தான் இதை தாங்க முடியாது என்று விமர்சிக்கின்றனர்.

உற்பத்திப் பொருளாதாரம் என்பது ஒரு பொருளை உற்பத்தி செய்வதன் மூலம் ஒரு நாடு பெறும் பொருளாதார நன்மை ஆகும். பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மூலம் மொத்தத் தேசிய உற்பத்தியில் வருமானம் அதிகரிக்கிறது. விவசாயத் துறையில் பெறுமதி கூட்டல் இருந்தால் நீங்கள் கூறியது போல் அதிக வருமானம் பெறலாம். ஆனால், இளம் தலைமுறையினர் விவசாயத்துக்குச் செல்ல வேண்டுமானால், அது இதைவிட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது வெளிநாடு செல்லும் இளைஞர், யுவதிகள் பணிபுரிவது விவசாயத்தில் அன்றி சேவைத் துறையிலாகும். விவசாயத்தின் பங்களிப்பு ஏழு சதவிகிதம். ஆனால் அந்தத் துறையில் பணிபுரிபவர்களின் அளவு இருபத்தி ஏழு சதவிகிதம் ஆகும். விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் சேவைத் துறையில் பணிபுரியும் ஒருவரின் வருமானத்தைப் பெற முடிய வேண்டும். உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் ஆகிய இரண்டினதும் வளர்ச்சியின் மூலமே ஒரு நாடு கட்டியெழுப்பப்படுகின்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் குறித்து கலந்துரையாட பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டது.இதனை பல்கலைக்கழக கட்டமைப்புக்கு கிடைத்த மரியாதை என்று கூறலாம். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துணைவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் இளம் விரிவுரையாளர்கள் கூட இதில் கலந்து கொண்டிருப்பதன் மூலம் இதன் பெறுமதியை காணலாம்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி என்றால் என்ன என்பதை நாம் அனுபவித்து வருகிறோம். பல ஆண்டுகளாக கடன் பெறுவது குறித்து சமூகத்தில் ஒரு கருத்தாடல் இருக்கின்றது. மாற்று முன்மொழிவு, மாற்று ஆலோசனை, மாற்று மாதிரி இருந்தால், நாமும் அதை அறிய விரும்புகிறோம். பாராளுமன்றத்தில் யாராவது இந்த வேலைத்திட்டத்தை எதிர்த்தால், மாற்று மாதிரியொன்றை முன்வைக்க வேண்டும்.

தொடர் நஷ்டத்தை சந்தித்த இந்தியா சமீபத்தில் தனது விமான நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கியது. இந்தியாவுக்கு இல்லாத பலகோடி நஷ்டம் கொண்ட விமான சேவை இலங்கைக்கு ஏன் தேவை?
நெருக்கடி நிலையில் எமக்கு இணையான நெருக்கடியை முகங்கொடுத்த நியூசிலாந்து அதிலிருந்து மீள்வதற்கு 1980களில் எடுத்த முடிவுகளையும், நெருக்கடியிலிருந்து வெளியேறிய விதத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். முக்கியமாக நெருக்கடியிலிருந்து வெளிவர சிறந்த கொள்கைகளை உருவாக்கியுள்ளனர். அவர்கள் செய்தது நெருக்கடியிலிருந்து அரசாங்கத்தின் மீதான பொருளாதாரச் சுமையைக் குறைத்து, தனியார் துறையை வணிகம் செய்ய வழிவகுத்தது.

வயம்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே ஜயசிங்க

நிபுணர்கள் குழுவுடன் சேர்ந்து, விவசாய உணவு தொடர்பான கொள்கையை நாங்கள் தயாரித்தோம். இது சரியாகவும், அறிவியல் பூர்வமாகவும் தான் தயாரிக்கப்பட்டது. இதை ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த முடிந்தால் பாரிய விடயங்களைச் செய்ய முடியும்.மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு இது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் பிரேமகுமார் டி சில்வா

உலகப் பொருளாதாரத்துடன் தொடர்பில்லாத ஏராளமான மக்கள் நமது நாட்டின் கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு எனக்கு ஆர்வம் உண்டு. அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும் திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழைகள் முன்னேற வேண்டும். நடுத்தரக் குடிமகனாகிய நானும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளேன். நாம் அனைவரும் சில தியாகங்களை செய்ய வேண்டும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இளைஞர்களின் ஒரு பெரிய குழுவும் உள்ளனர். அவர்களுக்கு தொழில்முறை அறிவு வழங்கப்பட வேண்டும். நாட்டில் ஏராளமான தொழில் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது யாருக்கும் தெரியாது. சுயவிமர்சனத்துடன் இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும்.

பேராசிரியர் சிரந்த ஹீன்கென்த

கடன் பெற்று முன்னேறுவது எவ்வாறு என்ற நம்பிக்கை குறித்து, நாட்டு மக்களுக்கு இன்னும் தெளிவு இல்லை என்றே தோன்றுகிறது. மக்களுக்கு சில விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். நாட்டின் அபிவிருத்தி குறித்து மக்களுக்கு மேலும் விளக்கமளிக்க வேண்டும். கடன் பெற்று மேற்கொள்ளப்படும் நாட்டின் அபிவிருத்தித் திட்டம் குறித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆறு மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டுமானால், வரி விதிப்பு நடவடிக்கை தொடர்பில் நம்பிக்கை இருக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை குறித்தும் கருத்தாடல்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க

நாட்டின் பொருளாதாரத்திற்காக ஜனாதிபதி என்ற வகையில் நீங்கள் எடுத்த தீர்மானங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன். திறமையற்ற அரச துறையை மறுசீரமைப்பது மற்றும் போட்டிமிக்க பொருளாதாரத்தை உருவாக்குவது குறித்தும் நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆனால் இன்று எமது நாட்டில் தனியார் துறை சேவை வழங்குநர்களிலும் பாரிய பிரச்சினை உள்ளது. போக்குவரத்து, கல்வி தொடர்பான சேவைகள், சுகாதார சேவைகளில் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் என்பனவே விலையை நிர்ணயம் செய்கின்றன.

தனியார் துறையின் போட்டித்தன்மையை பேணுதல் மற்றும் சந்தையின் வீழ்ச்சியை தொடர்பில் கவனம் செலுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவது கட்டாயம் செய்ய வேண்டும். ஆனால் இந்தக் கடனைப் பெறும்போது குறைந்த விலைக் கடன் ஆதாரங்களில் நாம் எவ்வாறு கவனம் செலுத்துவது? அதில் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் ஒரு கட்டத்தில் பசுமை பொருளாதாரம் பற்றி பேசியிருக்கிறீர்கள். இது சம்பந்தமாக இன்னும் நிறைய செயற்பாடுகள் உள்ளன.

களனி பல்கலைக்கழக பேராசிரியர் அஜித் திசாநாயக்க,

கடந்த கால பொருளாதாரத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நாம் சுயவிமர்சனத்திற்கு செல்ல வேண்டும். இரண்டாவது விடயம் என்னவெனில் இவர்கள் அனைவரும் கடந்த கால அனுபவத்துடனே சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெறுவதையே நோக்குகின்றனர். அந்த கடனை என்ன செய்தார்கள்? அவற்றின் பயன்கள் என்ன? பொதுமக்களிடம் இது குறித்து நல்ல மனப்பாங்கு இல்லை. வாங்கிய கடனை முறையாக முதலீடு செய்யவில்லை என்பதுதான் தற்போதைய மக்களின் மனநிலை. எனவே, ஒரு நல்ல மனப்பாங்கை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலந்தி டி சில்வா

எங்கள் பல்கலைக்கழக அமைப்பின் தர நிர்ணயப் பிரிவில் நான் நீண்ட காலம் பணியாற்றியுள்ளேன். நமது உயர்கல்வி முறையானது பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கக் கூடிய தரத்தில் இருப்பதாக நான் கருதுகிறேன். ஆனால் நாம் பயன்படுத்தும் மாதிரி மற்றும் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.கற்ற பணியாளர்கள் கண்டிப்பாக வேண்டும். எனவே, உயர்கல்விக்கான பிரவேசத்தை விரிவுபடுத்த வேண்டும். ஆனால் நமது அரச துறையில் உள்ள உயர்கல்வித்துறை மூலம் மட்டும் அதை செய்ய முடியாது. அப்படியானால், அரசு அல்லாத தனியார் உயர்கல்வித் துறை தெளிவாக விஸ்தரிக்கப்பட வேண்டும். ஆனால் இது ஒரு நல்ல மேற்பார்வை மூலம் செய்யப்பட வேண்டும்.

கலாநிதி இந்திரஜித் அபொன்சு

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விவாதத்தை இரண்டு கோணங்களில் விவாதிக்கிறேன். முதலாவதாக, IMF கொள்கைகளால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இரண்டாவதாக, IMF இன் கவனம் நம் நாட்டின் நீண்ட கால பிரச்சினைகளை தீர்க்குமா.2000 இல் இருந்து 2020 வரை 90 பில்லியனுக்கும் அதிகமான செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் அடிப்படை பிரச்சினை என்பவற்றை ஆராய்வது முக்கியமானதாகும்.
எங்கள் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் இப்போது உயர் தரத்தில் உள்ளன. அவர்களுக்கு நவீனமயப்படுத்தவும் ஏற்றுமதியில் கவனம் செலுத்த முடிந்தால் அவர்களை மதிப்புச் சங்கிலியில் சேர்க்க முடியும். சுற்றுலா மற்றும் பணம் அனுப்புவதும் முக்கியம்.

பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம். டி. லமாவங்ச

நாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து, பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தபோதிலும், விரயத்தை குறைக்கவும், பின்தங்கிய நிலையை அகற்றவும் பல்கலைக்கழக மட்டத்தில் பல முடிவுகளை எடுத்துள்ளோம். இந்த இக்கட்டான காலத்தை சமாளிக்க ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அளித்த ஆதரவையும் பாராட்ட வேண்டும். இப்போது எங்கள் கவனம் சர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பதில் உள்ளது. தற்போது எங்களிடம் சுமார் 50 சர்வதேச மாணவர்கள் உள்ளனர். இன்னும் சில மாதங்களில் அதிக மாணவர்களை சேர்க்க முடியும் என நம்புகிறேன்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலாநிதி அனஸ் காதர்

இது நாம் பார்த்த முதல் கீழிருந்து மேல் நோக்கி செல்லும் கொள்கை பிரவேசமாகும். இது மிகவும் நல்ல ஆரம்பமாகும். நம் அனைவருக்கும் நல்ல யோசனைகள் உள்ளன. பொருளாதார வல்லுநர்கள் தங்கள் யோசனைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்கி அவற்றை செயல்படுத்தக்கூடிய ஒரு நிறுவனத்தை உருவாக்குவது ஒரு நல்ல படியாகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஏ. ரமீஸ்

நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. Payee tex மூலம் அரசாங்கம் 100 பில்லியன் ஈட்ட முடிந்தது. எவ்வாறாயினும், எட்டு மாதங்களில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மின்சார சபையின் இழப்புகளால் அரசாங்கத்திற்கு சுமார் 113-117 பில்லியன் ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இழப்பு வருடத்திற்கு 600 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது. எனவே, அரசுக்குச் சொந்தமான இந்த நிறுவனங்கள் அனைத்தையும் சீர்திருத்த வேண்டிய பாரிய அவசியம் உள்ளது. எனவே ஜனாதிபதி அவர்களே, நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள், இந்த அரச நிறுவனத்தை சீர்திருத்த மக்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன

அடுத்த ஆறு மாதங்களுக்கு வரிச் சலுகை எதுவும் கிடைக்காது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், மற்ற எல்லா அறிஞர்களும் தொழிற்சங்க நடவடிக்கையின் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது நடக்காது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் தரப்பில் கேட்டபோது, பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொழிற்சங்கத் தலைவர்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றார்கள். எனவே, ஆறு மாதங்கள் கடக்கும் வரை இந்த முன்மொழிவுகளை ஆராய முடியாது என்பதை இந்த குழு புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு அது தொடர்பில் ஆராயத் தயார் என்று சொல்ல வேண்டும்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து ஆறு மாதங்களுக்குள் கலந்துரையாடப்படும் என்று மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் அதிகாரிகளுடனும் ஜனாதிபதி செயலகத்துடனும் கூட பல்வேறு சுற்றுக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். இது தொடர்பில், இந்த தொழிற்சங்கத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் புரிந்து கொள்ள விரும்பாமலோ அல்லது புரியாதது போல் பாசாங்கு செய்வதோ வருத்தமளிக்கிறது. ஆனால் இந்தச் செய்தியை நாம் சரியாகப் வழங்க வேண்டும். இந்த தொழிற்சங்க தலைவர்கள் சரியான செய்தியை தெரிவிக்கவில்லை என்றால், அவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளாக இருக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன,

சில பகுதியினருக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது உண்மைதான். நாட்டின் அரச நிதி கடுமையான சரிவைச் சந்தித்திருந்தது. பல தசாப்தகால பழக்கவழக்கங்களை திடீரென்று மாற்ற முடியாது. அரச நிதி ஒழுங்குமுறையை கட்டாயம் சரிசெய்ய வேண்டும். வரிக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரி அடிப்படையை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்போது ஒரு தற்காலிக பாதிப்பொன்றே ஏற்படுகின்றது. அரச வருமானம் அதிகரிக்கும் போது, படிப்படியாக பாதிப்புகள் மறைந்துவிடும்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிதானியுமான சாகல ரத்நாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் பல்கலைக்கழக துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.