சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (IMF/EFF) திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அது ஏப்ரல் 25 முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் தமது நாட்டுக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்கான வாய்ப்பு இதன்மூலம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருதாதர நிலைமை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக கடந்த (10) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இராஜதந்திர பிரதானிகளுடனான இக்கலந்துரையாடலில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்த வேலைத்திட்டம் குறித்து கவனம் செலுத்தியதோடு இந்த வேலைத்திட்டம் நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படாமல், இலங்கையின் மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான நல்லிணக்க செயல்முறை போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சாகல ரத்நாயக்க,
“பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தத்தின் இந்த கடினமான மற்றும் இலட்சியத் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அதற்கு எமக்கு மிகக் குறைவான தெரிவுகளே எஞ்சியிருந்ததோடு, அதற்கான வலுவான முயற்சியாக இந்த ஆரம்பத்தை கருதலாம்.
இந்த வேலைத்திட்டம் நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, குறிப்பாக நிதி சீர்திருத்தம், இலங்கையரின் மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமாகும். நல்லிணக்க செயல்முறை போன்ற விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது வரிக் கொள்கை நடவடிக்கைகளை உள்ளடக்கிய வருமான அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை மீளாய்வு செய்யும் போது, செப்டெம்பர் மாதத்தில் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய மேலும் பல விடயங்கள் உள்ளன உதாரணமாகக் கூறுவதாயின், ஜனவரி மாதத்தில் கலால் வரி 20% இனால் அதிகரிக்கப்பட்டபோது, சட்டப்பூர்வ கொள்முதல் குறைந்ததாலும், சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்ததாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை . 2025 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வரி மற்றும் மொத்த தேசிய உற்பத்தி வீதம் 14% ஆக காணப்படுவதாகவும் கடினமான இலக்காக இருப்பினும் அதனை அடைய முடியும்.
வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் செலவினங்களை சீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிய அரச நிதி முகாமைத்துவ (PFM) சட்டத்தை உருவாக்குவது, அரச கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது மற்றும் ஊழலைக் குறைக்கும் போது, நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக அடிப்படை நிதி கையிருப்பை மீண்டும் அதிகரிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய அரச நிதிக் கொள்கை செயற்பாடுகள், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ் பலப்படுத்தப்படுகிறது.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் கட்டமைப்பு சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் அவை சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் சில நடவடிக்கைகளை வலுப்படுத்துகின்றன..
உலக வங்கி திட்டத்தின் கீழ், நிதி கண்காணிப்பு மற்றும் கடன் முகாமைத்துவத்தின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதோடு அதில் இரண்டு படிகளை உள்ளடக்கியது. அதிலொன்று பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டத்தின் மூலம் பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது அதில் ஒரு முன்னெடுப்பாகும். 2023 ஆண்டு மே மாதத்திற்குள் வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை செயல்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.
இதுகுறித்து, மக்களை தெளிவுபடுத்த கட்டாய கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. அதன்பின், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அரச நிதிக்குழுவுக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இது பாராளுமன்றத்தில் பின்பற்றப்பட வேண்டிய ஒரு செயல்முறையாகும். இது ஏப்ரல் 17 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏப்ரல் 25 முதல் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், தற்போது சட்டத்தின் கீழ் உள்ளடங்காதா பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரச கடன் முகாமைத்துவச் சட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. மறுசீரமைப்பு மற்றும் வணிகமயமாக்கப்படும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இறையாண்மை உத்தரவாதங்களை வழங்குதல் மற்றும் கடன் வழங்குதல் போன்ற செயல்முறைகள் இதில் அடங்கும். ஏற்கனவே பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டாய வருமான வரி சட்டத்துடன் வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதையும் 2024 முதல் காலாண்டில் வரி கணக்காய்வு மற்றும் இணக்கத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.
நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும், தனியார் துறைக்கான கடன் ஓட்டத்தை மீட்டெடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவசர பணப்புழக்க உதவி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவத்திற்கு குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வங்கி விசேட ஏற்பாடுகள் சட்டம் வேகமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. உலக வங்கி திட்டத்தில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க ஏப்ரல் மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அரச நிறுவனங்களின் வணிக செயல்திறன், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் தனியார் துறை பங்கேற்பை மேம்படுத்த, பொது தனியார் கூட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, பொது நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன.
வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கையின் நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கவும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் அமுல்படுத்திய சுங்கவரிகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் சமநிலைமையை உறுதி செய்வதற்காக வரி சீராக்கல் மேற்கொள்ளப்படும். மேலும் அமுலாக்கப்பட்ட சுங்கவரிகளினால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட இந்த சீராக்கலினால் கிடைக்கும் வருமானம் குறித்து கவனத்தில் கொள்ளப்படும்.
இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில், ஒருங்கிணைந்த முதலீட்டுச் சட்டம் செயற்படுத்தப்படும், மேலும் வறியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும். சமூக பாதுகாப்பு நிறுவனங்களை வலுப்படுத்துதல், விநியோக முறைகளை மேம்படுத்துதல் மற்றும் சரியான இலக்கை உறுதி செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
அந்த இலக்குகளை அடைவதற்காக முதல் நடவடிக்கையாக அதிகாரிகளின் எதிர்ப்பால் சவாலான ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என அடையாளங்காணப்பட்டுள்ளது.
தகுதியான பயனாளிகளின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் திரட்டப்பட்டு, குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் தெரிவு செய்வதற்காக ஒரு குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். புதிய நலன்புரி உதவித்தொகை செலுத்தும் முறைக்கான விதிமுறைகள் அமைச்சரவையில் நிறைவேற்றிய பின்னர், பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது ஜூன் 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலக வங்கி திட்டம் முதன்மையாக பொருளாதார ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்துகிறது, அதேசமயம் ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டம் மின்சாரம் மற்றும் நீர் துறைகளில் சீர்திருத்த திட்டங்களையும் நிலையான சுற்றுலா மற்றும் நகர்ப்புற மேம்பாடு என்பவற்றையும் ஆதரிக்கிறது.
இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு, நல்லிணக்க வேலைத்திட்டம் மிகவும் முக்கியமானது. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கிறோம். பொதுமக்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. கடன் நிலைத்தன்மைக்கு அமைவாக மேலதிக சர்வதேச நிதித் திட்டங்கள் இன்றி எதிர்கால திட்டங்களுக்கு அரசு தலைமையிலான கொள்கை பொறிமுறை ஒன்றை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் ஊடாக செயல்படுத்துவோம்.
சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் அதேவேளை தொழிற்சங்கங்கள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் நியாயமற்ற மற்றும் சீர்குலைக்கும் செயல்களை அனுமதிக்க மாட்டோம். அரசு நிறுவனங்களை மறுசீரமைக்க மக்களின் ஆதரவுடன் செயல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.” என்று சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,
”நெருக்கடியான காலத்தில் இலங்கைக்கு கடனுதவி வழங்கியவர்களுக்கு நன்றி. நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து பிரச்சினைக்கு இனக்குழுக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதோடு, ஸ்திரத்தன்மையை உருவாக்கி, பொருளாதாரத்தை பலப்படுத்துவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும்.
நல்லிணக்க நோக்கங்களுக்காக 3 அத்தியாயங்களின் கீழ் அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கம் தொடர்பாக அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் அத்தியாயமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி பாராளுமன்றத்தின் ஏனைய கட்சிகளின் ஆதரவினை பெற்று, அனைத்து இலங்கையர்களுக்கும் கிடைக்க வேண்டிய கௌரவம் தொடர்பான விரிவான இணக்கப்பாட்டினை எட்டுவதாகும்.
அடுத்த கட்டமாக, நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கைதிகளை விடுதலை செய்தல், அவர்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, சர்வதேச தரத்திற்கு அமைவாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசிப்பதாகும்.
பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்காக உண்மையை கண்டறிவதற்கான உள்ளக பொறிமுறை ஒன்றை நிறுவுவதே இதன் மூன்றாம் அத்தியாயமாகும். அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், தென் ஆபிரிக்காவின் அனுபவங்கள் குறித்து ஆராயவும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன,
சர்வதேச அரசியல் நகர்வுகளின் மீளாய்வு செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதோடு, அதனுடன் இணைந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற 25 – 30 வரையிலான அரசாங்க நிறுவனங்களிடமிருந்து அது தொடர்பிலான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, மேற்படி உள்ளக செயற்பாட்டின் பலனாக 294 பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் எந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்தி, முன்னேற்றமடைய முடியும் என்பது தொடர்பில் நாம் ஆராய்து வருகிறோம். அதேபோல் மேற்படி பரிந்துரைகளை தற்போதும் உரிய அமைச்சுக்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சர்வதேச அரசியல் நகர்வுகளின் மீளாய்விற்கு மேலதிகமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 52 ஆவது அமர்வு மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச சமவாயத்தின் கீழான செயற்பாடுகளுக்கும் இலங்கை பங்களிப்பினை வழங்கியுள்ளது.
பெண்களுக்கு எதிரான அனைத்துவிதமான வேறுபாடுகளையும் ஒழிப்பதற்கான அமைப்பின் (CEDAW) கீழ் 9 வருடாந்த மீளாய்விலும் இம்முறை பங்குபற்றவுள்ள அதேநேரம், பொதுநலவாய நாடுகளின் அமைப்புக்குள் வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர்களுக்கான ஒன்றியம் ஒன்றை நிறுவுவது தொடர்பிலான பணிகளும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலகத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முழுமையான பொருளாதார மீட்சி மற்றும் மீள்கட்டமைப்புக்களுடன் முன்னோக்கிச் செல்லவும் பரிந்துரைகள் அடிப்படையிலான முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் வலுவான உள்ளகச் செயற்பாடுகளிலும் இலங்கை அர்பணிப்புடன் ஈடுபடவுள்ளது. ” என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.