மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக ஒரு கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
மீனவர்களின் மண்ணெண்ணெய்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட அதே பொறிமுறையைப் பயன்படுத்தி எதிர்வரும் 03 நாட்களுக்குள் இலங்கையின் அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் நாளை(29) முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
2022 நவம்பர் 01 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை, நாளொன்றுக்கு 29 மண்ணெண்ணெய் பவுசர்கள் வீதம் விநியோகிக்கப்பட்டு வந்தன. எனினும் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் பிரகாரம் நவம்பர் 23 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்காக 229 பவுசர்கள் (தினசரி சராசரி 45.8) விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இது 17 சதவீத அதிகரிப்பாகுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நெல், தேயிலை, தென்னை, கறுவா, உருளைக்கிழங்கு, மரக்கறிகள், பழங்கள், தானியங்கள், மலர்கள் மற்றும் அலங்கார செடிகள், கால்நடை தீவனம் மற்றும் புல் வளர்ப்பாளர்களின் தேவைகளையும் கருத்திற்கொண்டு விவசாயத் தேவைகளுக்காக மண்ணெண்ணெய், டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிப்பதற்கான முழுமையான பொறிமுறை ஒன்றை மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு கடந்த வாரம் பணிப்புரை விடுத்தார்.
பிரதேச செயலகத்தின் கள உத்தியோகத்தர்களால் உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளை கருத்திற்கொண்டு, விவசாயிகள், விவசாய உற்பத்தி வியாபாரிகள், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய அனைத்து விநியோகிப்பாளர்களென எவரையும் கைவிடாமல், சிக்கனமான முறையில் எரிபொருளை விநியோகிப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று தென்னகோன் தெரிவித்தார்.
மாகாண விவசாயம், கூட்டுறவு அமைச்சுகள், கால்நடை உற்பத்தி, பெற்றோலியக் கூட்டுத்தாபன விநியோக முகாமையாளர்களுடன் இணைந்து, அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் டீசல்/பெட்ரோல்/மண்ணெண்ணெயை விநியோகிப்பதற்காக தயார் செய்யப்படும் கூட்டுத் திட்டம் நவம்பர் 28 ஆம் திகதிக்குள் தயார் செய்து முடிக்கப்படும். இத்திட்டத்தில் விவசாயம், தோட்ட அமைச்சுகள், விவசாய சேவைகள் மற்றும் ஏனைய திணைக்களங்கள் ஆகியன இணைந்து செயற்படுமென்றும் அவர் கூறினார்.
இத்திட்டத்தில் ஒவ்வொரு பிரதேசத்திலும் பெரும்போகத்தின்போது வெவ்வேறு கட்டங்களில் தேவைப்படும் எரிபொருள் (டீசல்/பெட்ரோல்/மண்ணெண்ணெய்) தேவை தனித்தனியாக கருத்திற் கொள்ளப்படுவது இதுவே முதற்தடவையாகும்.
அத்துடன் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட விற்பனைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட எரிபொருள் தேவை பற்றிய ஆய்வும் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான பரிமாற்றப் பண்டமாக எரிபொருள் இருப்பதனால் விவசாயம், ஏற்றுமதி விவசாயம், தோட்டப் பயிர்கள், பூக்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விவசாயத் துறைகளையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
கடந்த போகத்தின்போது இடம்பெற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கத்திலேயே இம்முறை பயிர் அறுவடை இயந்திரங்களுக்கும் மண்ணெண்ணெய் மூலம் இயங்கும் நீர் பம்புகளுக்கும் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கள ஆய்வுகளின்றி, தேவைகள் குறித்து (தவறான) பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டதனால் போதிய எரிபொருள் கையிருப்பு இருந்தும் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய தென்னகோன், விவசாயத் துறையில் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
விவசாயப் பயிர்ச்செய்கைக்காக மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கு அரசாங்கம் ஏறக்குறைய 30 இலட்சம் டொலர் செலவை ஏற்க வேண்டியிருப்பதால், உயர் உற்பத்தி திறனை உறுதிசெய்யும் தேசியப் பொறுப்பு மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடையது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்காக கூட்டுறவு எரிபொருள் நிலையங்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்கு அவசியமான கடன் வசதிகளை கிராமிய வங்கிகளுடன் இணைந்து தயார்படுத்துமாறும் மாகாண சபை கூட்டுறவு ஆணையாளர்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.