வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இணையுங்கள்! அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

• Din Diem பாணியிலான நிர்வாகத்திற்கு அனுமதி இல்லை

அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு டிசம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
வியட்நாமின் டீன் டீயம் மாதிரியான ஆட்சிக்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும், அவ்வாறு முயற்சி செய்தால் அதனைத் தடுப்பதற்கு இராணுவம் மற்றும் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை

உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முன்வைத்த காணி பிரச்சினைகள் குறித்து வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களங்களின் அதிகாரிகளுடன் அண்மைய வவுனியா விஜயத்தின்போது பேச்சு நடத்தினோம். இந்தப் பிரச்சினை வடக்கிற்கு மாத்திரம்

மட்டுப்படுத்தப்படவில்லை. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இப்பிரச்சினை இருக்கிறது. இதுகுறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.
இதனைத்தவிர 1984ஆம் ஆண்டு முதல் இனப்பிரச்சினை உள்ளிட்ட விடயங்களை அனைவரும் அறிவோம். புதிதாக பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இதற்கான தீர்வுகளையே தற்போது காண வேண்டும். அடுத்த வருடம் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் போதாவது இதற்கான தீர்வுகளை காணவேண்டும். இல்லையெனில், 2048ஆம் ஆண்டிலும் நாடு இப்படியே இருக்கும்.

நாம் தமிழ் மக்களுடனான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த விவகாரம் குறித்து அக்கறை செலுத்தும் சிங்கள மக்களுடனான நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டும். இறுதியாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்தும் பேசியுள்ளோம். ஆதாரங்கள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிப்பது குறித்து பாதுகாப்புச் சபையுடன் கலந்துரையாடியுள்ளோம்.
இலாபம் ஈட்டும் நிறுவனங்களை வைத்துக்கொண்டு, நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கொள்ளை விலைக்கு விற்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். அந்நாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச காலத்திலேயே நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கும் மக்கள் மயப்படுத்துவதற்குமான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. கைத்தொழில்துறை அமைச்சராக அப்பணிகளை நானே முன்னெடுத்திருந்தேன்.

இலாபம் ஈட்டும் நிறுவனமான யுனைட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தை முதலில் விற்றோம். சிலோன் ஒக்சிஜன் நிறுவனம் விற்கப்பட்டது. இறப்பர் கூட்டுத்தாபனம் விற்கப்பட்டது. டயர் கூட்டுத்தாபனம், லங்கா மில்க் ஃபுட், லங்கா டிஸ்டலரிஸ் ஆகிய நிறுவனங்களும் விற்கப்பட்டன. இவை அனைத்தும் இலாபமீட்டும் நிறுவனங்கள். பெருந்தோட்ட நிறுவனங்கள் விற்கப்பட்டன. அவற்றில் சில இலாபமீட்டும் நிறுவனங்களாக இருந்ததுடன் சிலது நட்டம் ஈட்டும் நிறுவனங்களாகவும் இருந்தன.
1977ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினார். 1989ஆம் ஆண்டு ஆர்.பிரேமதாச அதன் அடுத்த கட்டத்தை முன்னெடுத்தார். இதற்கமையே அரசாங்க நிர்வாகத்தை நீக்கி, சில பிரிவுகளை தனியார்துறைக்கு ஒப்படைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

சீனாவை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டோம். சீனாவின் லிங் சோ பிங் முன்னெடுத்த வேலைத் திட்டத்தையே நாமும் பின்பற்றினோம். இலாபமீட்டும் வகையில் இப்பணிகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். நட்டமடையும் நிறுவனங்களை மட்டுமே விற்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். அவருக்கு உதவியாக தற்போது எதிர்க்கட்சித் தலைவரும் இதனையே கூறுகின்றார். இதோ உங்களைப் பின்தொடர ஒருவர் இருக்கிறார். ஆகவே என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். பிரதமரின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். முக்கியமான விடயமொன்றைக் குறிப்பிட்டார்.
உண்மையில், இந்த விடயம் குறித்து நாம் சாதாரணமாக விவாதம் செய்கிறோம். இது எந்தவொரு நாட்டிலும் நடக்கும் விடயமாகும். மே 9ஆம் திகதிக்கும் ஜூலை 13ஆம் திகதிக்கும் இடையில் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைத்ததா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்நிலைமை இருக்கவில்லை.

மே 9ஆம் திகதி சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் விசாரணைகள் நடக்கின்றன. ஆளும் தரப்பினரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணைகள் நடக்கின்றன. இதில் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மிலேச்சத்தனமாக வீதியில் வைத்துக் கொல்லப்பட்டார். ‘கோட்டா கோ ஹோம்’ என்று முதலில் சொன்ன பாராளுமன்ற உறுப்பினர் 99 இல் தப்பிக் கொண்டார்.

தீயிட்டனர். இதனை எப்படி அனுமதிப்பது. இதனை நான் முழுமையாக எதிர்க்கிறேன். அதற்கு முன்னர் ஒரு பாராளுமன்ற உறுப்பினருடன் பேசிக்கொண்டிருந்தேன். அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்று அவர் கூறினார். ஒருவரை ஒருவர் கொலை செய்வதில் எவ்விதப் பயனும் இல்லை. அந்த அரசியல் அத்துடன் முடிந்து விட்டது.

வீடுகள் எரிக்கப்பட்டன. அலரி மாளிகை செல்லாதவர்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் வீடுகள் எரிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த உறுப்பினர்கள் வானத்தில் இருந்து விழவில்லை. உறுப்பினர்களுள் நல்லவர்கள், கெட்டவர்கள் என இரு தரப்பினரும் இருக்கின்றனர்.

பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்கள் வாக்காளர்களினாலேயே தேர்தெடுக்கப்பட்டனர். எனவே, அவர்களின் பணிகளை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். இவர்களை விடவும் சிறந்தவர்கள் வேண்டும் என்று கேட்கின்றனர். இப்படி சில சிவில் அமைப்பினர் கோருகின்றனர். அவர்களை முன்வருமாறு கேட்டால் பின்வாங்குகின்றனர். அரசியலுக்குச் சென்று வீடுகளை எரித்துக் கொள்ள வேண்டாம் என்று மனைவி கூறுவதாக சொல்கிறார்கள். அப்படியெனில் யார் முன்வருவது. தொகுதியில் சண்டித்தனம் செய்யும் ஒருவராலேயே போட்டியிட முடியும். இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். நட்ட ஈடு வழங்க வேண்டும்.

ஜூலை 9ஆம் திகதி என்ன நடந்தது. ஜனாதிபதி விரட்டியடிக்கப்பட்டார். ஜனாதிபதி மாளிகைக்கு என்ன நடந்தது? ஜனாதிபதி மாளிகையை சேதப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தைக் கைப்பற்றினார்கள். தரையில் அமர்ந்துகொண்டனர். அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்கள். அன்று கூறிய அனைத்தும் என்னிடம் இருக்கிறது. வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். என்னை பதவி விலகுமாறு கூறி எனது வீட்டை எரித்தார்கள். நான் எப்படி விலக முடியும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தது.
எதிர்தரப்பு சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து, பெரும்பான்மையை நிருபித்திருந்தால் என்னால் பதவி விலகியிருக்க முடியும்.

பாராளுமன்றத்தைக் கைப்பற்ற 13ஆம் திகதி வந்தனர். பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய பின்னர் பாராளுமன்றத்தைக் கைப்பற்ற வந்தனர். பாராளுமன்றத்தைக் கைப்பற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும். பாராளுமன்றத்தைக் கைப்பற்றிய பின்னர் அவர்களுக்கு விருப்பமானதை அறிவிக்க இருந்தனர். பொம்மை அரசாங்கமொன்றை அமைக்க முயற்சித்தனர். நடந்தது நடந்தது தான். எனினும், இவ்வாறான சக்திகளுக்கு அடிபணியக்கூடாது என்று எதிர்க்கட்சிக்கும் கூறவிரும்புகிறேன்.

மக்கள் அதில் இருக்கவில்லை. நான் இதனை நிறுத்தச் சென்றதாக என்னைத் திட்டினார்கள். என்னைப் போன்ற சர்வாதிகாரி எங்கும் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்களுக்கு கூறினார்கள். சந்திரிக்கா அம்மையாரின் உதவியுடன் 17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்தேன். 19ஆவது திருத்தத்தையும் நானே கொண்டுவந்தேன். 21ஆவது திருத்தத்தையும் நானே கொண்டுவந்தேன்.

என்னை தற்போது ஹிட்லரைப் போல் சித்தரிக்கின்றனர். நான் ஒரு சர்வாதிகாரி என்று அல் ஜசிரா ஊடகம் விமர்சிக்கிறது. கட்டார் இராஜ்ஜியத்தின் ஜனநாயகவாதியைபோல மாற வேண்டும் என்று கூறியது. என்னால் அப்படி இருக்க முடியாது. எமது முறைமையை இல்லாது செய்ய முயற்சித்தனர். பாராளுமன்றத்தைக் கைப்பற்றியிருந்தால் அடுத்து என்ன நடந்திருக்கும்? அடுத்து உயர் நீதிமன்றத்திற்குச் சென்றிருப்பார்கள். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள். குமார் குணரத்னத்துடன் முன்னிலை சோஷலிசக் கட்சி இருந்தது.

நாம் 21ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். இதன் பின்னர் பசில் ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று கூறினார்கள். காரணம் அவருக்கு இரட்டைக் குடியுரிமை இருப்பதாக கூறினார்கள். அதனை நாம் ஏற்றுக்கொள்வோம் என்றால் குமார் குணரத்தினத்திற்கும் அவுஸ்திரேலியாவின் குடியுரிமை இருக்கிறது. பசில் ராஜபக்சவை வர வேண்டாம் என்று விரட்டிவிட்டு, அவுஸ்திரேலிய குடியுரிமை உள்ள ஒருவருக்கு அதிகாரத்தை ஒப்படைக்க முயற்சிக்கிறார்கள். பசில் ராஜபக்சவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. நான் பிரதமராக இருந்தபோது அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார். குமார் குணரத்னவிற்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. வடக்கு யுத்தத்தின் போது இந்தியாவின் அமைதி காக்கும் படையினரைக் கொன்றதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுதான் எமது விடுதலை என்று கூறுகிறார்கள்.

மே மற்றும் ஜூலை மாதங்களுக்கிடையில் என்ன நடந்தது. விகாரைகளையும் தீ வைப்பதாக அச்சுறுத்தினார்கள். மல்வத்து, அஸ்கிரி மாநாயக்க தேரர்களை பேசக்கூடாது என்று அச்சுறுத்தினார்கள். இவர்கள் எப்படி அரசியலமைப்பின் 9ஆவது சரத்தை பாதுகாப்பார்கள் என்று தெரியவில்லை. இவர்களுக்கு யார் உதவினார்கள் என்று பார்க்க வேண்டும். இளம் தேரர்களும் இதற்கு ஆதரவளித்தார்கள். இந்து கோயில்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்தார்கள். முஸ்லிம் தலைவர்களையும் அச்சுறுத்தினார்கள். வன்முறையை எதிர்ப்பதாக கத்தோலிக்க பேரவையும் அறிவித்தது.

எமது நாட்டின் நிர்வாகத்தை டீன் டீம் ஆட்சிக்குக் கொண்டுசெல்ல விரும்பவில்லை. டீன் டீம்களுக்கும் அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கும் நான் வாய்ப்பளிக்கமாட்டேன். மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக கூறுகிறார்கள். யாருக்கும் எங்கும் கூட்டங்களை நடத்த முடியும். ஜே.வி.பி கூட்டங்களை நடத்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் கூட்டங்களை நடத்தியது. பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அனுமதி பெற்று கூட்டங்களை நடத்துங்கள். வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துங்கள். நான் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரி என்று கூச்சலிடுங்கள். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அனுமதியைப் பெற்று இவற்றை செய்யுங்கள். வீதியில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள். வேறு ஒன்றையும் கேட்கவில்லை. ஆனால் நடந்ததைப் போல் இன்னுமொரு போராட்டத்தை நடத்த முடியும் என்று நினைக்க வேண்டாம். அனுமதியின்றி வீதியில் செல்ல முயற்சித்தால் அதனைத் தடுக்குமாறு பொலிசாருக்கு அறிவித்துள்ளோம். ஒவ்வொரு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு சென்று இதற்காக வாதிடுகின்றனர். அரசாங்கத்தை மாற்றுவதற்கு இன்னுமொரு போராட்டம் நடத்த முயற்சித்தால் நான் அதற்கு இடமளிக்கமாட்டேன். இராணுவம் பயன்படுத்தப்படும். அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்படும். கடந்தமுறையைப் போன்று செய்ய இடமளிக்கப்படாது.
டீன் டீயம்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை. குமார் குணரத்தினத்துடன் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். குமார் குணரத்னத்தை நல்லவர் என்றால் பசில் ராஜபக்சவிற்கு எதிராகவும் பேச முடியாது. அவர்கள் அனைத்து இடத்திலும் கதைத்தார்கள். ஆனால் மக்கள் இன்று அவர்களுடன் இல்லை. இதனை எந்த ஊடங்கள் செய்தார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

வீடுகளுக்கு தீயிட்டதை ஊக்குவித்தது எந்த ஊடகம் என்பதைப் பார்க்க வேண்டும். இவற்றை விசாரணை செய்ய ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. பலர் சாட்சியமளித்தனர். நானும் வாக்குமூலம் வழங்கினேன். எனவே, வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஆராயவும் ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும். இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.

21ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. குழுக்கள் நியமிக்கப்பட்டன. தேர்தல் செலவுகளைக் குறைக்கும் சட்டதிருத்தம் கொண்டுவரப்படுகிறது. இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. இந்தக் குழுக்களுக்கு இளைஞர் ஐவரை நியமிப்பதற்கான அளவுகோள்களை தீர்மானிக்குமாறு ஆளும், எதிர்க்கட்சியினரைக் கேட்டுக்கொள்கின்றேன். டிசம்பர் மாதத்திற்குள் அந்தப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து ஜனவரி மாதத்தில் இதற்கான பணிகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். காரணம் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். நான் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை. இந்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பிரச்சினை இருக்கிறது. இதனை தீர்த்துக்கொண்ட பின்னர் எதையும் செய்ய முடியும். நாட்டில் பெரும்பாலானவர்கள், அரசியல் கட்சிகளையும் தேர்தல்களையும் வெறுக்கின்றனர். இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்திற்கு சென்றாலும் பழைய முகங்களையே பார்க்க முடிகிறது. புதிய முகங்களைக் காண முடியவில்லை. இளைஞர்கள் இதில் மாற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றனர். அந்த மாற்றத்தை செய்தபின்னர் தேர்தலை நடத்தலாம். அப்போது தேவையானவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம். அதுதான் தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நான் கூறுகிறேன். விருப்பு வாக்குமுறைமை இருக்கும் வரையில் இந்த நாட்டில் ஊழல் இருக்கும். ஒரு ஆசனத்தை வென்றெடுக்க எவ்வளவு செலவிடுகிறார்கள் என்று பாருங்கள். 25 – 50 மில்லியன் ரூபா செலவிடுகின்றனர். இன்று டொலர் 380 ரூபா வரை சென்றுள்ளது. தேர்தலை நடத்த முடியாத நிலை இருக்கிறது. இவை குறித்து சிந்திக்க வேண்டும். எனவேதான், இந்த முறைமையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறுகிறேன். அந்தப் பணியை இணைந்து செய்வோம் என்று மீண்டும் எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுக்கின்றேன். உங்கள் அனைவருடனும் பணியாற்ற எனக்கு முடியும். எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த வருட இறுதிக்கு முன்னர் பேசிக்கொள்வோம்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.