வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு- பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்இதற்காக வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நிறைவுசெய்வதற்காக மேலதிக குழுக்களை நியமித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அடுத்த வருடம் கொண்டாடப்படும் 75 ஆவது சுதந்திர தினத்தின் போது இந்தப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநபர்கள் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என்றும் நாமே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொப்-27 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்து சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பிய நிலையில், பாராளுமன்றத்தில் இன்று (10) ஆற்றிய விசேட உரையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கொப் – 27 மாநாடு, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்ததோடு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் , உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு மற்றும் ஊழல் தொடர்பில் புதிய சட்டங்கள் உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனவரி, பெப்ரவரி மாதமளவில் இது தொடர்பான சட்டங்களை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான உரை வருமாறு,

எமது சட்டங்களை மறுசீரமைக்க வேண்டும். அந்த பொறுப்பு நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியே இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திலும் அடுத்த வருடத்திலும் அவர் பாராளுமன்றத்தில் அவை அனைத்தையும் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கிறேன். பாராளுமன்றத்தை மேலதிக நாட்களில் கூட்டியாவது இவற்றை நிறைவேற்றுமாறு கோருகிறேன். சட்டங்களை புதுப்பிக்க வேண்டும்.

சுற்றாடல் அமைச்சருடன் கொப் 27 மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவன் விஜேவர்தன மற்றும் எமக்கு உதவி வரும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அஹ்மட் நசீட் ஆகியோரும் இதில் கலந்து கொண்டார்கள். 2015 இல் இது தொடர்பான ஒப்பந்தத்திற்கு உடன்பட்டது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மின்உற்பத்தி நிலையங்களை மட்டுப்படுத்த உடன்பாடு காணப்பட்டது. அதன் படி புதிய உற்பத்தி நிலையங்கள் ஆரம்பிக்கப்படவில்லை. கொப் 26 மாநாடு கொவிட் காரணமாக தாமதமடைந்தது. ஆனால் பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தலைமையில் நடந்த மாநாட்டில் நாம் முக்கிய யோசனை ஒன்றை முன்வைத்திருந்தோம். 2050 ஆம் ஆண்டாகும் போது எமது நாட்டில் காலநிலை மாற்றங்களை தடுப்பதற்கும் எவ்வாறாவது அதனை 1.5 பாகை சென்றிகிரேட்டிற்கு குறைக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டது. விசேடமாக நாம் எடுத்துள்ள முன்னெடுப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இதில் கலந்து கொண்டோம்.

கொப்-26 இற்குப் பின்னர் எவ்வித முன்னேற்றமும் இருக்கவில்லை என்பதை நாம் கொப் -27 இற்குச் சென்றிருந்தபோது அறிந்து கொண்டோம் . ஜி-20ஐச் சேர்ந்த பல அபிவிருத்தியடைந்த நாடுகள் 2050 இற்கான 1.5பாகை சென்ரிகிரேட் இலக்கு தொடர்பில் கேள்விகளை எழுப்பின.

ஜி-20 நாடுகள் எந்த வகையிலும் தமது தொழிற்சாலை உழிழ்வை குறைத்துக் கொள்ளவில்லை.அவர்கள் ஏற்கனவே வாக்குறுதி அளித்தது போல நிதியை இதற்காக வழங்கவில்லை. அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கொப்-27 இற்கு சென்றபோதே கோப்-26 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் இலக்குகளும் பின்னடைவைக் கண்டிருப்பதனை அறிய முடிந்தது.

கொப்-27 மாநாட்டின் ஏற்பாட்டைப் பார்த்தால் அங்கே தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கு அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் ஜி-20 அமைப்புக்கள் இருக்கவில்லை.

சில தலைவர்கள் ஆரம்ப நிகழ்வுக்கு மாத்திரமே வருகை தந்திருந்தனர். அவர்கள் பிரதான மாநாட்டில் கலந்துரையாடுவதாக இருந்தபோதிலும் அதனையொட்டி நடைபெற்ற ஏனைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்து விரைவாக வெளியேறி விட்டனர்.

ஜி -20 இன் பிரதான தலைமைத்துவம் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷவுக்கே சென்றிருந்தது. இந்த பின்னணியில் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகள் ஜி-20, ஜி7 மற்றும் ஏனைய அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் கொண்ட நாடுகளை சாடவும் விசனம் தெரிவிக்கவும் நேரிட்டது.

நாம் இதே மாதிரி தொடர்ந்து செல்ல முடியாது.2030 இல் நிலைமை மோசமடையுமென ஐ.நா பொதுச் செயலாளர் தனது உரையில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமரிடம் இருந்து இமாலயம் கரைவதைப் பற்றி அறிந்து கொண்டோம். அது பாகிஸ்தானை பாதிப்பதாக தெரிவித்தாலும் அது கூடவே நேபாளம், இந்தியா,பங்களாதேஷ்,மியன்மார்,மாலைதீவு, இலங்கை மற்றும் தென்னிந்தியாவையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.எனினும் பாரிய நாடுகள் இது தொடர்பான எவ்வித கருத்தையும் இன்னும் முன்வைக்கவில்லை.

இந்நிலைமை தொடருமாக இருந்தால் 2050 இல் 1.5பாகை செல்சியஸ் இலக்கு தொடர்பில் கொப்-28 இல் ஜி-20 நாடுகளுடன் முட்டிமோதுவதை விட வேறு வழியில்லை.

எம்மைப் போன்ற நிலைப்பாடுடைய நாடுகளுடன் பேச்சு நடத்த ஆயத்தமாக இருக்கின்றோம்.

இன்னும் பல நாடுகள் இதற்காக காத்திருக்கின்றன. வெளிவிவகார அமைச்சரும் சுற்றாடல் அமைச்சரும் அதற்கான ஏற்பாடுகளை செய்வார்களென நான் எதிர்பார்கின்றேன். இலங்கை இதுபோன்ற கலந்துரையாடல்களில் கலந்துகொள்ள வேண்டும்.தவறுகளை சுட்டிக்காட்டும் அதேநேரம் அவசியமான இடங்களில் தலைமைத்துவம் வகிக்கவும் வேண்டும்.

அடுத்ததாக உள்ள பிரச்சினை உணவு பாதுகாப்பு. இவ்விடயம் தொடர்பில் எமக்கு பாரிய அச்சுறுத்தல் இருக்காது என நம்புகின்றோம். எனினும் ஆபிரிக்க நாடுகள் சற்று அபாயமான நிலையிலேயே உள்ளன.இதனால் சுமார் 20-30 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதுடன் அங்கே பெரும் எண்ணிக்கையான இறப்புக்கள் ஏற்படுமென்றும் அஞ்சப்படுகிறது. எனினும் இதுபோன்ற நாடுகளுக்காக எவ்விதமான உதவிகளோ நிதியுதவியோ பற்றி அங்கு கலந்துரையாடப்படவில்லை.

சிலருக்கு உணவுகளை உற்பத்தி செய்ய முடியாது. மேலும் சிலருக்கு உணவு உற்பத்திக்கு அவசியமான உரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.அவர்களுள் அநேகமானவர்கள் கடனில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டுமென நான் சர்வதேச நாணய நிதியத்திடம் கூறியுள்ளேன். சர்வதேச நாணய நிதியம் உக்ரேனுக்கு உதவுகின்றது. அந்நாடு ரஷ்யாவுடன் போர் செய்கின்றது. அதுபோலவே இதுவும் வாழ்க்கைக்கானதொரு போராட்டமே என்பதனால் உக்ரேனுக்குப் போலவே இந்நாடுகளுக்கும் உதவுமாறு நாம் மேற்குலகை கேட்கின்றோம்.

எதிர்த் தரப்பு பிரதம கொறடா ஜெனீவா பற்றி தெரிவித்திருந்தார். அது அடிப்படை உரிமை.வாழ்வதற்கான உரிமை.இளம் சமுகத்தினர் குறிப்பாக 2050 இல் 40,50 வயதாகுபவர்களுக்கும் இன்னும் பிறக்காதவர்களுக்கும் இது இனபடுகொலையாகும்.

இளைஞர்களின் உரிமைகளை புறக்கணித்தால் அதுதான் மிகவும் மோசமான இனபடுகொலையாக இருக்கும். எனவே இலங்கையைப் பற்றி பேசுவதற்கான சந்தர்ப்பம் வரும்போது நாம் இவைப் பற்றி எடுத்துக்கூறுவோம்.அதை நான் இனப்படுகொலையிலும் இனப்படுகொலையிலும் இனப்படுகொலையென்றே கூறுவேன்.

நாம் எமது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். பயங்கரவாத தடுப்புச் சட்டம் , உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு மற்றும் ஊழல் தொடர்பில் புதிய சட்டங்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். ஜனவரி,பெப்ரவரி மாதமளவில் இரு அமைச்சர்களும் இதனை சமர்ப்பிக்க உள்ளனர்.

வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலரை விடுதலை செய்துள்ளோம். மேலும் சிலர் விடுவிக்கப்பட வேண்டியுள்ளனர். எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு எதிரான வழக்கு உள்ளது. வழக்கு நிறைவடைந்த பின்னர் அவர் தொடர்பிலும் செயற்படுவோம். இந்தப்பிரச்சினைகளை தீர்ப்பதே எமது நோக்கமாகும்.

2019 இல் எமது ஆட்சி நிறைவடைகையில் காணமல் போனோர் தொடர்பில் 65 கோப்புகள் தான் எஞ்சியிருந்தன. தற்பொழுது 2000 பேர் தொடர்பான விடயங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

தேவையானால் மேலும் நபர்களை நியமித்து எஞ்சியவற்றையும் பூர்த்தி செய்ய முடியும். அவற்றை துரிதமாக நிறைவு செய்யுமாறு நீதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். இவை தொடர்பில் எமக்கு மேலும் ஆராய முடியும்.இதற்கான ஒரே வழி விசாரணைகளுக்காக மேலும் பல குழுக்களை நியமிப்பதேயாகும். அது மட்டுமே இதற்குள்ள ஒரே தீர்வு. அடுத்த வாரமளவில் வடக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலொன்று உள்ளது. எனது நல்ல நண்பர் கஜேந்திர குமார் பொன்னம்பலமும் அதில் பங்கெடுப்பார் என நினைக்கிறேன். அவர் அதில் அரைவாசி வரை பயணித்தால் கூட பெரிய விடயமாக இருக்கும்.

வடக்கிற்காக நாம் பல அபிவிருத்தி திட்டங்களைக் கொண்டுள்ளோம்.அதற்கான மதிப்பீடுகளும் எம்மிடமுள்ளன.வடக்கில் புதுப்பித்தக்க சக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

திருகோணமலையில் அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இவை யாவும் இலங்கையர்களாகிய நமக்காகவே முன்னெடுக்கப்படுகின்றன.

75 ஆவது சுத்திர தின கொண்டாட்டத்தின்போது இந்தப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.யாரும் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை. எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் இணைந்தே 17 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினோம்.19,21 ஆம் திருத்தங்களும் அவ்வாறே இணைந்து நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக அரசியலமைப்பு சபையை ஸ்தாபிக்க வேண்டும். இதில் சிவில் பிரதிநிதிகள் மூவர் தொடர்பில் பிச்சினை இருந்தாலும் அது பிரச்சினையே கிடையாது. பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து தான் சிவில் பிரதிதிநிதிகள் மூவரையும் முன்மொழிய வேண்டும். அதனை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும். பாராளுமன்றம் எவ்வாறு அதனை நிராகரிக்க முடியும். அவ்வாறு நிராகரிப்பதாக இருந்தால் பிரதமருக்கு பாராளுமன்ற ஆதரவு இல்லை,எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிரணி ஆதரவு இல்லை, சபாநாயகருக்கு இருதரப்பு ஆதரவும் இல்லை என்றே கருத நேரும். அவ்வாறாயின் மூவரும் பதவி விலக வேண்டியிருக்கும். இது நடக்க முடியாத ஒன்று. இரு தலைவர்களும் உடன்பட்டு சபநாயாகரும் அனுமதி வழங்கியிருந்தால் அதனை முன்னெடுக்க வேண்டும். 19 ஆவது திருத்தத்திலும் இந்த நியமனம் இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி அல்லாத எந்த எம்.பியை நியமிப்பது என்பது தொடர்பான பிரச்சினை உள்ளது. இரண்டாவதாக அதிக எம்.பிகள் தமிழ் கட்சிகளில் இருப்பதால் தமிழ் கட்சிகள் ஒருவரை பெயரிடுவதாக இருந்தால் அடுத்த இரு உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு முஸ்லிம் ஒருவரையும் பெண் பிரதிநிதி ஒருவரையும் நியமிப்பது குறித்து கவனம் செலுத்தலாம். இந்த நியமனங்களை துரிதமாக மேற்கொண்டால் ஏனைய குழுக்களை துரிதமாக நியமிக்கலாம்.

கொப் 27 மாநாட்டின் போது சர்வதேச நாணய நிதிய முகாமைத்துவப் பணிப்பாளரை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.எனவே நாம் அச்சப்படத் தேவையில்லை. சீனா மற்றும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய வேண்டும். பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதமாகும் போது இதனை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். உலக வங்கியின் தலைவரையும் சந்தித்தேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சர்வசேத நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் எதிர்த்தரப்பு பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி,

இதற்கு முன்னர் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் மாத்திரம் தான் செல்ல வேண்டும். ஆனால் தற்பொழுது ஏனைய நாடுகளுடனும் பேச வேண்டியுள்ளது. ஜப்பான்,சீனா மற்றும் இந்தியா என்பன பரிஸ் கழக அங்கத்துவ நாடுகளல்ல. அந்த பேச்சுவார்தைகளிலும் திருத்தங்கள் வரலாம் . அவர்கள் இலக்கு ஒன்றை தந்துள்ளனர். இது 4 வருட திட்டமாகும்.

உடன்பாடுகள் நிறைவடையும் வரை ஒப்பந்தத்தை வெளியிடக் கூடாது என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலக்குகளை அடைவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனவே அதிலுள்ள இலக்குகள் ஒருபோதும் மாறாது. சீனாவும் இந்தியாவும் என்ன சொல்லப் போகின்றன என்று தெரியாது. மூன்று முக்கிய தரப்புகள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச வேண்டியுள்ளது. அதன் பின்னர் அறிவிப்போம் என்றார்.

விமல் வீரவங்ச எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி,தனிப்பட்ட கடன், சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெற்ற கடன் மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் பெற்ற கடன் குறித்து கவனம் செலுத்த வேண்டும். இரு தரப்பு கடன் இதில் பிரதானமானது. வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும் அது உடன்பாட்டுக்கு வரும் என கருதுகிறோம்.தனிப்பட்ட கடன் தொடர்பில் சிக்கல் இருக்கும் என்று கருதவில்லை. பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏதாவது ஒரு நாடு உடன்படாவிட்டால் ஏற்படும் தாக்கம் குறித்து விமல் வீரவங்ச எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி ,

இங்கு இரண்டு மாற்றுவழிகள் தான் உள்ளன. கடனை ரத்துச் செய்வதா அல்லது கடனை மீளச் செலுத்தும் காலப்பகுதியை நீடிப்பதா ஆகிய இரண்டு வழிகள் குறித்தே ஆராயப்படும். அதில் ஒரு மாற்று வழியை தேட முடியுமாக இருக்கும் என்றார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் உதவியில் மாற்றம் வரும் நிலையில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என சந்திம வீரக்கொடி எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி,

குறிப்பிட்ட எல்லைக்குள் தான் நாம் செயற்படுகிறோம். அந்த எல்லைக்கு மாற்றமாக ஏதும் நடந்தால் நாம் அது பற்றி அறிவிப்போம். மக்கள் மீது அதிக சுமையேற்றுவதா ? நேரடி வரியை அதிகரிப்பதா ? என்பது குறித்தும் அரசின் செலவுகளை குறைப்பது தொடர்பிலும் தான் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த மூன்று வழிகள் தான் உள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.