Published on: மார்ச் 1, 2024

ரொனி டி மெல் உடனான எனது அனுபவம் எனது அரசியல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது

  • ஜே.ஆர்.ஜயவர்தன – ரொனி டி மெல் இணக்கப்பாட்டுடன் கொண்டுவந்த திறந்தப் பொருளாதார கொள்கை நாட்டை முன்னேற்றியது – ரொனி டி மெலுக்கு இறுதிக்கிரியை நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.

திறமையான அரசியல்வாதியும் சிறந்தப் பொருளாதார நிபுணருமான முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம், தனது தற்கால அரசியல் செயற்பாடுகளுக்கு உக்கமளிப்பதாக அமைந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சரியானத் தீர்மானங்களை எடுத்து அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்தி முடிவுகளைப் பெறுவதே ரொனி டி மெல்லின் இயல்பாகும். அது அவருடைய விசேட குணாதிசயமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய அரசியல்வாதி என்ற வகையில் அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாதெனவும் வலியுறுத்தினார்.

ருஹுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் இன்று (01) பிற்பகல் இடம்பெற்ற ரொனி டி மெல்லின் இறுதிக்கிரியை நிகழ்வின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.

ரொனி டி மெல் அவர்களின் இறுதி விருப்பத்தின்படி இறுதிச் சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அன்னாரின் பூதவுடன் வாகன பேரணியாக பல்கலைக்கழக மைதானத்திற்கு கொண்டு வரப்ப்டடதன் பின்னர், ருஹுணு பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இறுதிச்சடங்குள் செய்யப்பட்டன.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன இறுதிச் சடங்கு பேரவையில் வரவேற்புரை ஆற்றினார்.

வண. தெவிநுவர பரம விசித்திரராம விகாராதிபதி சிறி சுனந்த தேரரினால் சமயச் சடங்குகள் செய்யப்பட்டதையடுத்து ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் வெலிகம அக்ரபோதி விகாராதிபதி மிதிகம சோமரத்ன தேரர், கோட்டேகொட சுதர்ஷன பிம்ப மகா விகாரையின் விகாராதிபதி வண. கொடல்லே ரத்னாந்த தேரர், இலக்கியவாதி வண கரதொட்ட பஞ்சசீல தோரர் உள்ளிட்டோர் போதனைகளை வழங்கினர்.

இறுதி சடங்கு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறுகையில்,

“ரொனி டி மெல் ஒரு நாள் என்னிடம் பேசி அவரைச் சந்திக்கச் சொன்னார். நாங்கள் சிறிது நேரம் உரையாடிய பின்னர், எனது மரணத்திற்குப் பின்னர், நீங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இறுதிச் சடங்கு சபைக்கு வந்து உரையாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன்படியே இன்று இருவரும் இந்நிகழ்வில் பங்கேற்கிறோம்.

ரொனி டி மெல் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்ததன் பின்பே அவரை நன்கு அறிந்துகொண்டேன். அதற்கு முன் அவரை நான் சிறுவயதில் சந்தித்திருக்கிறேன். பின்னர் 1970 இல் அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினார். பின்னர் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்தார். அதில் எனக்கும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதன் போதே ரோனி டி மெல்லின் திறமையை அறிந்துகொண்டேன்.

இந்தப் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிக்காக அவர் பெரும் பணியாற்றினார். அதனை நன்கறிவோம். அன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் பெரும் மக்கள் அலை திரண்டது. ஆனால் மக்கள் அலை இருப்பதை மாத்திரம் நினைத்துகொண்டிருக்க வேண்டாம், நாம் தேர்தலை வெற்றிகொள்ள வேண்டுமென ஜே.ஆர் ஜயவர்தன கூறினார். அப்போது ரொனி டி மெல் மக்கள் விடுதலை முன்னணியின் வாக்குகளையும் பெற்றுத்தருவேன் என உறுதியளித்தார்.

அவர் அவ்வப்போது சிறைச்சாலைக்குச் சென்று ரோஹன விஜேவீரவைச் சந்தித்திருந்தார். இறுதியில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் மக்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்ததால் விஜேவீரவை சிறையில் இருந்து விடுவிப்பதற்கான யோசனையை சபையில் சமர்பித்தார். ஜே.ஆர் ஜயவர்தனவும் அதற்கு இணக்கம் தெரிவித்தார். அதன்படி இரு கட்சிகளின் தேவையும் நிறைவேற்றப்பட்டதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் அதிகளவான ஆசனங்கள் கிடைத்தன.

பாராளுமன்றத்திற்கு வந்த பின்னரே ரொனி டி மெலுடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் மிகவும் திறமையாக செயற்பட்டார். நாட்டில் திறந்த பொருளாதாரத்தை உருவாக்கும் பணியும் ஜே.ஆர். ஜயவர்தனவால் ரொனி டி மெல்லிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜூலை மாதத்தில் அந்த பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒக்டோபர், செப்டம்பரில் அந்த பணிகளை முடித்துவிட்டார். அவர் எந்த பணிக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரே தடவையில் அனைத்துச் செயற்பாடுகளையும் செய்து முடிப்பார். அன்று அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அனுபவத்தையே இன்று செயற்படுத்துகிறேன்.

திறந்த பொருளாதாரம் அமுல்படுத்தப்பட்டால் வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என பலரும் கூறினர். இன்று நான் திருகோணமலையிலிருந்து ஹெலிகாப்டரில் இங்கு வந்தேன். வரும் வழியில் நாட்டின் பல நகரங்கள் தென்பட்டன. அவை அனைத்தும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையே காண்பிக்கிறது.

ரொனி டி மெல் இந்த பொருளாதாரத்தை திறந்துவிடவில்லையென்றால், இன்று இவற்றை நாம் காணமுடியாது. அந்தக் காலத்தில் நகரங்களில் இரண்டு மூன்று கடைகள்தான் இருந்தன. இன்று அநேகமான கடைகள் உள்ளன. தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திறந்த பொருளாதாரத்தின் மூலமே இந்த வளர்ச்சி ஏற்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் திறந்து விட்டதற்கு மேலதிகமாக, அதன் பிறகு ஜே.ஆர்.ஜயவர்தனவின் பெருமளவான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவசியமான நிதியையும் தேடிக்கொடுத்தார். அதனால் மகாவலி அமைக்கப்பட்டது, பெருமளவான நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டன. காணி அபிவிருத்தி செய்யப்பட்டு விவசாயத்திற்குகாக பெற்றுக்கொடுக்கப்பட்டது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாராளுமன்றக் கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டது. பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. வீதிகள் அமைக்கப்பட்டன. வர்த்தக வலயங்கள் உருவாக்கப்பட்டன. வீட்டுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. அந்த அனைத்துப் பணிகளுக்கும் நிதியை சேகரித்து அவரது திறமையைக் காண்பித்தார்.

மேலும், 1983 விடுதலைப் புலிகளின் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என சிலர் நினைத்தனர். ஆனால், அந்தக் காலப்பகுதியில் ரொனி டி மெல் நாட்டின் பொருளாதாரத்திற்காக சிரமப்பட்டு முன்னேற்றினார். அவர் இல்லாதிருந்தால் நாட்டில் இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்காது.

யோசனைகள் மற்றும் பிரச்சனைகள் மீதான அவரது பார்வையின் அடிப்படையிலேயே அவர் அந்த அரசாங்கத்திலிருந்த திறமையான உறுப்பினர் என்று கூற முடிந்தது. பொருளாதாரப் பிரச்சனைகளை போன்றே ஏனைய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் இயலுமை அவரிடம் இருந்தது.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் தயாரிக்கப்பட்ட போது அதற்கும் ஒத்துழைப்பு வழங்கினார். அத்தகைய ஒருவருக்கே இன்று நாம் இறுதி அஞ்சலி செலுத்துகிறோம். மேலும், அவரது வெற்றியின் பின்னணியில் அவரது மனைவி மல்லிகா டி மெல் பக்கபலமாக இருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ரொனி டி மெல் அவர்களிடமிருந்து அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், இலக்கியம் மற்றும் மொழி பற்றிய பல்வேறு அறிவைப் பெற்றுக்கொண்டோம். அத்தகைய பரந்த அனுபவம் அவருக்கு இருந்தது. அப்படிப்பட்டவர் அரசியலில் இருப்பது பெரும் பலமாக அமைந்தது.

மேலும், இந்த ருஹுனு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். ரொனி டி மெல் இல்லாவிட்டால் இன்று இந்த இடத்தில் இப்படி ஒரு பல்கலைக்கழகம் இருந்திருக்காது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகராக இறுதிப் பயணம் செல்ல வேண்டும் என்பதே அவரது இறுதி ஆசையாக இருந்தது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றிய போதும் ருஹுனு பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்தவராக வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்றே விரும்பினார்.

ரொனி டி மெல்லிடம் பல விடயங்களைக் கற்றுக்கொண்டேன். அவை பிற்காலத்தில் பயன்பட்டது. இன்றும் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு ஊக்கமளிக்கிறது.

அவரது இறுதி காலத்தில் ஓய்வூதியம் பெற்ற ஒருவராக நாட்டுக்கான வேலைத் திட்டங்களுடன் இணைந்துகொண்டார். அவரின் மறைவு நம் அனைவருக்கும் இழப்பாகும். ரொனி டி மெல் நாட்டிற்கு ஆற்றிய சேவையை நாம் மறந்துவிடக் கூடாது. அவர் இந்த நாட்டில் மாற்றத்தை உருவாக்கிய அரசியல்வாதி. இச்சந்தர்ப்பத்தில்,ரொனி டி மெலுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தி அவர் அமைதியாக இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் எனது அனுதாபங்களை கூறுகிறேன்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன,

”ரொனி டி மெல் வாழ்ந்த காலத்தில் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் ஆற்றிய பங்களிப்பு அளவிட முடியாதது. மேலும், இலங்கை பாராளுமன்றத்தின் சிறந்த விவாதம் செய்பவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். பல்கலைக் கழகத்தின் மூலம் பெற்ற அறிவு அவரது அரசியல் வாழ்வின் பெரும் சொத்தாக இருந்தது. வெளிநாடுகளின் பல்வேறு ஆட்சி முறைகளையும் பற்றிய ஆழமான அறிவு அவருக்கு இருந்தது.

அத்துடன், இந்நாட்டின் அரசாங்க துறைக்கு சிறப்பான சேவையாற்றினார். இன்றும் மாற்றம் செய்யப்படாமலிருக்கும் வயல் சட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். திறந்த பொருளாதாரத்தின் மூலம், கிராமத்தில் கூட்டுறவு முறையையும் பாதுகாக்க முன்வந்தார்.

மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமன்றி பாராளுமன்றத்திலும் தாம் வகித்த அனைத்து பொறுப்புகளையும் உரிய முறையில் நிறைவேற்றிய தலைவராவார். அரசியல் துறை குறித்த அவரது ஆழமான புரிதல் சமூக வளர்ச்சிக்கு உதவியது.

அவர் அரசியல் வாதிகளை போன்றே முழு நாட்டிற்கும் முன்மாதிரியானவர் என்ற வகையில், அவரின் பிரிவு பேரிழப்பாகும்.” என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரங்கல் செய்தியை அமைச்சர் கஞ்சன விஜேசேகர இறுதிச் சடங்கு சபையில் வாசித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் இறுதிக்கிரியை நிகழ்வில் உரையாற்றினர்.

மகா சங்கத்தினர் தலைமையிலான சர்வமத தலைவர்கள், தென் மாகாண ஆளுநர் விலீ கமகே, வட மேல் மாகாண ஆளுநர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, தெவிநுவர பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் துஷார விஜேசூரிய ஆகியோருடன், அரசியல் பிரதிநிதிகள், ரொனி டி மெல்லின் குடும்ப உறுப்பினர்கள், ருஹுனு பல்கலைக்கழகத்தின் கலாநிதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.