Published on: டிசம்பர் 21, 2023

மூன்று வருடங்களின் பின்னர் மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட வரவு செலவிற்காக 11,250 மில்லியன்

– அந்த நிதி எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கு

– நாட்டின் பொருளாதாரத்திற்கு நிகராக கிராமிய பொருளாதாரத்தையும் மீள உயிர்பிக்க வேண்டும்.

– மத்திய அரசாங்கம், மாகாண சபைகள் என்ற பிரிவை விடுத்து அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான வேலைத்திட்டம் அவசியம்

– மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

மூன்று வருடங்களுக்கு பின்னர் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன்கள், மாவட்டங்களுக்காக விரிவுபடுத்தப்பட்ட வரவு செலவாக ஒதுக்கப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் அந்த நிதியை மாகாண செயலாளர்களுக்கு வழங்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களுடன் இன்று (21) நடைபெற்ற கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியினால் 03 வருடங்களாக மாவட்டங்களுக்காக விரிவுபடுத்தப்பட்ட வரவு செலவுகள் வழங்கப்படவில்லை. அதனால் கிராமிய பொருளாதாரம், சுற்றுலா பொருளாதரம் உட்பட கீழ்மட்ட வேலைத்திட்டங்கள் பலவும் தடைப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அந்த வேலைத்திட்டங்களை மீளவும் ஆரம்பித்து கிராமிய மக்களுக்கு அதன் பலன்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமெனவும், கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டு அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது மத்திய மற்றும் மாகாண அடிப்படையில் பிரிந்துச் செயற்படாமல் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2024 ஆம் ஆண்டு ஒவ்வொரு மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் நிதி பகிர்ந்தளிக்கப்படும் விதம் தொடர்பிலும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குதல் மற்றும் விவசாய நவீனமயப்படுத்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் பிரதான வேலைத்திட்டங்களாக கருதப்பட்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய வேலைத்திட்டங்களுடன் பார்க்கும்போது மேற்படித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து ஜனாதிபதி அலுவலகத்தின் நேரடி தலையீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”கடந்த 03 வருடங்களாக அரசாங்கத்தினதும் மாகாண சபைகளினதும் மூலதனச் செலவுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கிராமிய பொருளாதாரம் பெரும் சரிவை சந்ததித்து. கிராமிய மட்டத்திலான பல வேலைத்திட்டங்களும் முடங்கின. சுற்றுலாத்துறையும் சரிவை சந்தித்தது.

அதனால் மாவட்ட மற்றும் கிராமிய மட்டத்திலான பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிக்கவுள்ளோம்.

அடுத்த வருடத்தில் இந்நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் வருகை தந்தவர்களின் எண்ணிக்கைக்கு நிகரானதாக அமையக்கூடும்.

கீழ்மட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக இம்முறை விரிவுபடுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தை ஒதுக்கியுள்ளோம். அதனை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிப்போம். பிரதேச மட்டத்திலான பிரநிதிகளுடன் கலந்துரையாடி அபிவிருத்திக்கான யோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல் மலைநாட்டு வேலைத்திட்டம் ஒன்றும் உள்ளது. மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதிக்கும் மேலதிகமாக மலையகத்திற்கு வழங்கப்படும். இன்னும் 05 – 06 வருடங்களுக்கு மலையக பகுதிகளின் அபிவிருத்திக்காக அந்த தொகை வழங்கப்படும். மலையக பகுதியில் அபிவிருத்தி குன்றிய தமிழ், சிங்கள கிராமங்களின் மேம்பாட்டிற்காகவே அதனைச் செய்கிறோம்.

அதற்கு மேலதிகமான மாகாண சபைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்காக ஒதுக்கப்பட்ட மூலதனச் நிதியும் உள்ளது. வெளிநாட்டு உதவிகளுடன் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களும் உள்ளன. அதனை செயற்படுத்துவதற்கான தடைகளை நீக்கி கீழ் மட்டத்திலிருந்து வசதிகளை பெருக்க வேண்டும்.

அதற்கு மேலதிகமான காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதி பத்திரங்களை வைத்திருப்போருக்கு காணி உரிமத்தை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படுகிறது. எனக்கு கிடைத்திருக்கும் தரவுகளுக்கமைய 20 இலட்சம் குடும்பங்கள் அதற்கு தகுதி பெற்றுள்ளன. இது இலகுவான பணியல்ல. அதன் முதற்கட்ட வேலைத்திட்டம் 05 ஆம் திகதி தம்புளையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் மாவட்ட மட்டத்தில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். அதற்காக ஒரு மாவட்டத்தில் ஒரு பிரதேச சபையை தெரிவு செய்து அந்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கிறோம். அந்த பணிகள் மார்ச் மாதமளவில் ஆரம்பிக்கப்படும்.

அதேபோல் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும். அதற்காக மத்திய அரசாங்கம் மாற்றும் மாகாண சபைகளை இணைத்துக்கொண்டு அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய புதிய வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படும்.

மேற்படி பணிகளுக்காக எம்.பிக்கள் மற்றும் உரிய குழுக்களின் ஊடாக கீழ்மட்ட தலைவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம். மூன்று வருடங்கள் தாமதமாகிய அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒரே தடவையில் ஆரம்பிப்பது இலகுவானதல்ல. எவ்வாறாயினும் வெளிநாட்டு கடன்களின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களையும் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். இவை ஒரே வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அல்ல. 05 -06 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த திட்டங்கள். இருப்பினும் நாம் இவை அனைத்தையும் ஒரே முறையில் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதற்காக அனைத்து அதிகாரிகளினதும் ஒத்துழைப்பு அவசியம். அதேபோல் எம்.பிக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அரசியல் பிரதிநிதிகளின் யோசனைகளும் ஆலோசனைகளும் அவசியம்.

இதன்போது அனைத்து பிரதமச் செயலாளர்களும் மாவட்டச்செயலாளர்களும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் ஒரே குழுவாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.

பிரதேச அரசியல் தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுக்கள் அமைத்து, குழுவின் வேலைத்திட்டங்களை ஒருக்கிணைப்புச் செய்வதற்கான தலைவராக எம்.பி ஒருவரை நியமிக்க வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களும் அதற்குள் உள்வாங்கப்படுவர். அதன்படி தங்களது பிரதேசங்களில் நடக்கும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான மேற்படி தரப்பினர் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.

அந்த பணிகளை ஆளுநர், பிரதமச் செயலாளர்கள், புதிய மாவட்ட குழுக்களின் தலைவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் இணைந்து மாதாந்த பணிகளை மேற்பார்வை செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

இந்த பணிகளில் இறுதி அம்சமாக இவற்றின் பலன் மக்களை சென்றடைய வேண்டும். கிராமங்களுக்கு நிதி கிடைக்ககூடியவாறு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அதேநேரம் கிராமிய பொருளாதாரத்தையும் ஊக்குவிக்க வேண்டும். கிழக்கு மாகாணம், தம்புளை, கொழும்பை மையப்படுத்தி சுற்றுலாத் துறையை விரிவுபடுத்தும் பட்சத்தில் கிராமிய பகுதிகளிலும் குறிப்பிட்டளவு அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.

அதேபோல் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்துடன் அடுத்த இரு வருடங்களில் விவசாய உற்பத்திகள் உயர்வடையும். அதனால் போட்டித்தன்மையுடன் கூடிய விவசாயத்தை கட்டியெழுப்ப இடைக்கால பிரதிபலன்களை கிராமிய பொருளாதாரத்திற்கு வழங்க எதிர்பார்க்கிறோம். அதனால் கிராமிய பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தி மேற்படி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களை சார்ந்துள்ளது.

இதன்போது தீர்வுகான முடியாத பிரச்சினைகளை பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் குழுவிடம் சமர்பித்து அதற்குரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு தீர்வு கிட்டாத பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவையில் ஆலோசிக்க தீர்மானித்துள்ளோம்.” என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆளும் கட்சியின் முதற்கோலாசானும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க,

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய ஆளும் கட்சியின் எம்.பிக்கள் மற்றும் அமைச்சரவை உறுப்பினர் மேற்படி விரிவுபடுத்தப்பட்ட வரவு செலவுகள் தொடர்பில் கலந்தாலோசித்தோம். இந்த பணிகளை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பிரதமர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் நலனுக்கு அவசியமான முக்கியமான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நிரலில் தொழில்நுட்ப காரணிகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய விதம் குறித்து கலந்துரையாடி வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியது அவசியமாகும்.

இதன்போது அனைவரும் ஒரே வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டியது அவசியமாகும். மாகாண சபைகளும் அதற்குள் உள்வாங்கப்பட வேண்டும். இதன்போது மாகாண குழுக்களையும் செயற்படுத்த வேண்டிய அதேநேரம் அதன் முழுமையான பலன் மாகாண மட்டத்திலிருந்து கிராமிய மட்டத்தை சென்றடைய வேண்டும்.” என்று தெரிவித்தார்.

தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஏ.குமாரசிறி
”2024 வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட தொகையாக 11,250 மில்லியன்களை ஒதுக்கியுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக இந்தச் செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தன. விரிவுபடுத்தலுக்கான கலந்துரையாடல்களில் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்காக பிரதமர் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உரிய ஆலோசனைகள் கிடைத்தன. அது தொடர்பில் மேலும் கலந்துரையாடிய பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முதற்பகுதியில் மாவட்டச் செயலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக இந்தத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கு கிடைத்தன் பின்னர் ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக வேலைத்திட்டங்களுக்கு அவசியமான ஒதுக்கீடுகள் விரைவில் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.

பிரதேச மற்றும் கிராம மட்டத்திலான பல்வேறு வேலைத்திட்டங்களும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன. அவற்றுக்கு முன்னுரிமை அளித்து விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.

அதேபோல் சிறிய அளவிலான நீர்த் திட்டங்கள், குறுகிய மின் இணைப்புக்களை நீட்டித்தல், அரச நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சூரிய சக்தி கட்டமைப்புக்களை நிறுவுதல் உள்ளிட்ட திட்டங்களுக்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. இதனால் கிராமிய பொருளாதாரத்திற்கு பெரும் பலன்கள் கிட்டும் என்பதோடு, மாகாண, கிராமிய மற்றும் தோட்ட பிரதேசங்களின் சிறிய பாலங்கள் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளில் இவ்வருடத்தில் நிறைவுச் செய்யக்கூடியவை தொடர்பில் அறியப்பட்டுள்ளது.

அதேபோல் ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளை மேம்படுத்தல், பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்தல், சுற்றுலா துறையை ஊக்குவித்தல், விலங்குகளினால் ஏற்படுத்தப்படும் வன பாதிப்புக்களை மட்டுப்படுத்தல், குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களை மேம்படுத்தல் உள்ளிட்ட கிராமிய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்கள் என்பவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.