Published on: செப்டம்பர் 23, 2022

மகாராணியின் மறைவுக்கு இலங்கை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அனுதாப பிரேரணையின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஆற்றிய உரை

தாய்லாந்து, மியன்மார், கம்போடியா ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் இணைந்து மகாராணியின் முயற்சியில் 2500வது புத்த ஜயந்தி விழா நடத்தப்பட்டது என்பது பலரும் அறியாத உண்மை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் நினைவு கூர்ந்தார்.

பிரித்தானிய மகாராணியின் மறைவுக்காக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தில் இன்று (23) வெள்ளிக்கிழமை அனுதாப பிரேரணை சமர்பிக்கப்பட்டது. இதில் இணைந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது –

ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து எனக்கு கிடைத்த வாழ்த்து மடல்களில் இரண்டாம் எலிசபெத் மகாராணி அனுப்பிய வாழ்த்து மடல் மிகவும் விசேடமானது. அது அவரிடமிருந்து கிடைத்த இறுதி வாழ்த்து மடலாகும்.

மகாராணி அவருடைய கணவரின் மறைவுக்குப் பின்னர் மிகவும் பலவீனமடைந்தவராகவே இருந்தார். என்றாலும் இப்படியானதொரு திடீர் மறைவை நாம் யாரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. அவரது மறைவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பதவி விலகும் மற்றும் பதவியேற்கும் பிரித்தானிய பிரதமர்களுடன் அவரை தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

எது எப்படியோ முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோருடன் சுமார் அரை மணித்தியாலத்தை செலவு செய்தாலே அது யாராக இருந்தாலும் களைப்படைந்து விடுவார்கள். எனவே அது ஒன்றும் விசேடமானதல்ல. அதனைத்தொடர்ந்து அவரது மறைவுச் செய்தி எம் காதை எட்டியது. தற்போது அனைத்து இறுதிச் சடங்குகளும் நிறைவடைந்துள்ளன. அவரது மறைவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கை, இங்கிலாந்து, பொதுநலவாய நாடுகள் மற்றும் உலகிற்கு இரண்டாம் எலிசபெத் மகாராணி செய்தவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும்.

சிலோனின் மகாராணியாக அவர் இருந்த காலப்பகுதியில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

சிலோன் சிறிலங்காவானது. இவரது ஆட்சியின் கீழ் மிகச்சிறந்த அரசியல் தலைவர்கள் உருவானார்கள். தேர்தலில் 1956 இல் வெற்றிக்கண்டது. இனப்பிரச்சினை தோற்றம் பெற்றது. இலவசக் கல்வியைப் பெறும் புதிய தலைமுறையொன்று உருவானது. பொருளாதாரம் அரச கட்டுப்பாடுக்குள்ளானது. இரண்டு சதித்திட்டங்கள் மற்றும் தெற்கில் ஆயுத எழுச்சியின் ஆரம்பம் என்பன அவ்வாறான குறிப்பிட்டுக் கூறும்படி மாற்றங்களாகும்.

மகாராணி தீவிரமான கிறிஸ்தவராக இருந்த போதிலும் அவர் 1815 அம் ஆண்டின் கண்டி பிரகடனத்துக்கமைய பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

நாட்டின் தலைவரென்ற வகையில் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாட்டு அரசர்கள் மற்றும் பர்மாவின் அப்போதைய ஜனாதிபதி ஆகியோருடன் இணைந்து 2500வது புத்த ஜயந்தியை கொண்டாட மகாராணி எடுத்த முயற்சி பலரும் அறியாதவொரு விடயமாகும்.

அவரது ஆட்சியின் இறுதியில் எமது நாடு குடியரசாக மாறியபோதும், இரண்டு விடயங்கள் மட்டும் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன. அதில் ஒன்று இனப்பிரச்சினையின் தோற்றம். இதனால் பாரிய எழுச்சிகள் உருவானது. எனினும் அதன் இறுதிக் கட்டம் இன்னும் தீர்வு காணப்படாமலேயே உள்ளது.

இரண்டாவது விடயம், நாட்டுக்கு பெயரளவு தலைவர் ஒருவர் மட்டுமே போதுமாக இருந்தால், ஏன் மகாராணியை வேண்டாம் என்று கூறினீர்கள்? அப்படியென்றால் பெயரளவு ஜனாதிபதி மட்டும் எதற்காக வேண்டும்? என்பதாகும்.

‘எத்த’ பத்திரிகையின் ஆசிரியர் மறைந்த சிறிவர்தன அவர்கள், சோசலிச நாடு உருவாகுவதற்கு அந்நாடு குடியரசாக வேண்டும் என்பதில்லை என்ற தொனியில் ஆசிரியர் தலையங்கமொன்றை எழுதியிருந்தார். அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜே.ஆர் ஜயவர்தன நாட்டுக்கு பெயரளவு ஜனாதிபதியொருவர் எதற்கு என்று கேள்வி எழுப்பினார். அக்கருத்துக்கு எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ரணசிங்க பிரேமதாச ஆதரவு அளித்திருந்தார். அப்படியே நாட்டுக்கு ஜனாதிபதியொருவர் தேவையென்றால் அது பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி மாதிரியை ஒத்ததாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவே இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும் அப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.

இந்த நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தே இன்று பலரும் தேர்தலில் வெற்றி பெறுகின்றார்கள். எனினும் எவரும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இலங்கைக்கு மட்டுமன்றி முழு உலகத்தின் மாற்றத்திற்கும் இரண்டாம் மகாராணி வழிவகுத்துள்ளார். அவர் மேற்குலகின் பலத்தை ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் மாற்றீடு செய்தார்.

பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் தகர்த்தப்பட்டதை தொடர்ந்து, அது ஜரோப்பாவுடன் இணைந்து கொண்டது. தற்போது பிரித்தானியா, ஜரோப்பாவிலிருந்து விலகி உலகில் தனக்கென தனியொரு இடத்தை உருவாக்கி வருகின்றது.

பிரித்தானிய காலனித்துவத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணி மிகவும் வித்தியாசமானவர். அவர் பிரித்தானிய காலனித்துவத்தின் தலைவியாக இருந்து, பின்னர் பொதுநலவாய நாடுகளின் தலைவியானவர். இந்த மாற்றம் மேற்குலகிற்கு மட்டுமன்றி உலகின் ஏனைய பகுதிகளுக்கும் பாரிய வெற்றியை ஈட்டித் தந்தது. மேற்குலகை உலகின் ஏனைய பகுதிகளோடு இணைத்ததன் மூலம் எமது காலத்தில் வாழ்ந்த பல்வேறு தலைவர்கள் பொதுநலவாய நாடுகளின் கீழ் மகாராணியுடன் இணைந்து செயற்பட்டதைக் காணமுடிந்தது.

சேர் வின்ஸ்டன் சர்ச்சில், டேம் மார்கரெட் தட்சர், பண்டித் ஜவஹர்லால் நேரு, சேர் ராபர்ட் மென்சிஸ், பியர் ட்ரூடோ, லெஸ்டர் பியர்சன், நெல்சன் மண்டேலா, கென்யாட்டாஈ கென்னத் கவுண்டா, நைரேரே, நக்ருமா, லீ குவான் யூ மற்றும் துங்கு அப்துல் ரஹ்மான் ஆகியோர் இவர்களுள் சிலராவர்.

இந்த மாற்றங்கள் காரணமாக இரண்டாம் மகாராணி ஸ்திரத்தன்மை, காலத்துடனான மாற்றம், அழகு என்பவற்றின் அடையாளமாகவும் சின்னமாகவும் விளங்கினார். அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பலரும் வெஸ்ட் மினிஸ்டரிலுள்ள அபேக்கு வருகை தந்திருந்தனர்.

இங்கிலாந்தை விஞ்சி உலகலாவிய சின்னமாக அடையாளப்படுத்தப்படும் மிகப் பெரிய சொத்தான இரண்டாம் எலிசபெத் மகாராணி இல்லாமல் பிரித்தானியா தனது அதிஷ்டத்தை தேடும் பயணத்தை ஆரம்பித்துள்ளது. மகாராணியின் பெயரிடப்பட்ட யுத்தக் கப்பலிலும் பார்க்க 100 மடங்கு பலம் பொருந்தியவர் அவர்.எனவே இலங்கை சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.