பல்வேறு புதிய சீர்திருத்தங்களுடன் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவி முன்னெடுத்து வரும் வலுவான வேலைத்திட்டத்தின் காரணமாக, கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் பணவீக்கம் 62.1% சதவீதத்தினால் குறைந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டின் முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் 66.7% ஆக இருந்த பணவீக்கம், 2023 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 4.6% வரை, குறைக்க முடிந்துள்ளதாக பதில் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பதில் நிதி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிடிய இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பதில் நிதி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிடிய,
1.8 பில்லியன் டொலர்களாக இருந்த நாட்டின் அந்நியச்செலாவணிக் கையிருப்பை, கடந்த ஓராண்டில், 3.8 பில்லியன் டொலர்களாக உயர்த்த அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், ஒரு டொலருக்கு நாம் 361 ரூபாய் செலுத்தினோம். ஆனால் இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் ஒரு டொலரை 321 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும். இது செயற்கையான கட்டுப்பாடு இல்லை. ஆனால் டொலருக்கான கேள்வி – தேவைக்கு ஏற்ப உறுதியாக ரூபாயின் பெறுமதியை மிதக்க வைத்து, இந்த நிலைக்கு வரமுடிந்தமை பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானது என்றே கூற வேண்டும்.
2022 இல் 14% ஆக இருந்த வங்கி வைப்பு வட்டி விகிதம் தற்போது 11% ஆகக் குறைந்துள்ளதுடன், 15.5% ஆக இருந்த கடன் வட்டி விகிதத்தை, இந்த ஆண்டு 12% வரை குறைக்க முடிந்துள்ளது. கடந்த ஆண்டு முதன்மைக் கணக்குப் பற்றாக்குறை -247 பில்லியன் ரூபாவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு + 27 பில்லியன் ரூபாவாக அதனை அதிகரிக்க முடிந்துள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்மைக் கணக்கு இருப்பு மேலதிகமாக இருப்பதையும் இங்கு கூற வேண்டும்.
2022 இல் 496,430 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, இந்த ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 904,318 ஆக அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் சுற்றுலா வருமானம் 832.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த்துடன், அது, இந்த ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 1,304.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது, 56.7% வளர்ச்சியைக் காட்டுகிறது.
மேலும், கடந்த வருடம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணத்தின் அளவு 2,214.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அது இந்த வருடம் 3862.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மாறியுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 74.4% அதிகரிப்பு என நிதி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பணப் பரிமாற்றப் பற்றாக்குறை (Exchange deficit ) காரணமாக எரிபொருளின் கேள்வியைக் கட்டுப்படுத்த, QR குறியீடு முறை 2022 ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, சாதாரண கேள்விக்கும் விநியோகத்திற்கும் இடையே பாரிய இடைவெளி ஏற்பட்டது. 2023 ஜூன் மாதத்தில், QR முறை சிறிது தளர்த்தப்பட்டபோது, டீசல் நுகர்வு 28% ஆகவும், பெட்ரோல் நுகர்வு 83% ஆகவும் அதிகரித்தது. பொருளாதார வளர்ச்சியை நேரடியாகப் பாதிக்கும் எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்ட QR குறியீடு முறை செப்டம்பர் 01ஆம் திகதி முதல் முழுமையாக நீக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது 14 மணிநேர மின்வெட்டு காணப்பட்டது. இது நேரடியாக பொருளாதாரத்தைப் பாதிக்கும் ஒரு விடயம். தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க முடிந்துள்ளது.
அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையால், 2023 ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி, 1467 வகையான இறக்குமதிப் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. தற்போது 279 பொருட்களுக்கு மாத்திரமே தடை அமுலில் உள்ளது. 2020 ஆம் ஆண்டில், வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது பொதுப் போக்குவரத்துக்குத் தேவையான பேரூந்துகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2022 ஏப்ரல் மாதமாகும்போது, நாம் கடனை அடைக்க முடியாத நாடாக மாறிவிட்டோம். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவுபடுத்தப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் நாம் இப்போது முதல் தவணையைப் பெற்றுள்ளோம். இவ்வாறு முழுமையாக, இந்த நாட்டின் பொருளாதாரத்தை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.” என்று பதில் நிதி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.