Published on: மார்ச் 4, 2024

புதிய பொருளாதாரத்திற்கான புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகம் செய்யப்படும்

  • கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.
  • எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு மேலும் 62 சட்டங்கள் சமர்ப்பிக்கப்படும்.
  • நாட்டை அபிவிருத்தி செய்ய உலகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய சட்டங்கள் அவசியம்.
  • பொதுவான நிதி முகாமைத்துவச் சட்டம், பொதுவான கடன் முகாமைத்துவச் சட்டம் கொண்டுவரப்படும்.
  • கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கும் புதிய சட்டங்கள்.
  • ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்தினால் நீக்க முடியும். ஆனால் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை பாராளுமன்றத்தினால் இரத்து செய்ய முடியாது.
  • மக்களுக்கு வாழும் உரிமையை வழங்குவதே முதலாவது மனித உரிமையாகும். அடுத்து பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதாகும் – ஜனாதிபதி.

நாட்டில் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும், 62 சட்டங்களை, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை இம்முறை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால் அடுத்த பாராளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (03) இடம்பெற்ற சட்ட சீர்திருத்தம் தொடர்பாக ‘வட்ஸ் நிவ்’ இளம் சட்டத்தரணிகளுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஜே.ஆர். ஜெயவர்தன 1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியதைப் போன்று நாட்டின் விரைவான பொருளாதார மாற்றத்திற்காக பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை மாற்றியமைத்து, அனைத்து அரச கூட்டுத்தாபனங்களையும் நிறுவனங்களாக மாற்றி, அந்த அனைத்து நிறுவனங்களையும் பிரதான கம்பனிகளுக்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

பொது நிதி முகாமைத்துவச் சட்டம், பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டம், விவசாயச் நவீனமயமாக்கல் சட்டம் என்பவற்றைப் போன்றே இந்த அனைத்து இலக்குகளை அடையக்கூடிய பொருளாதார மாற்றச் சட்டம் கொண்டு வரப்படும். தற்போதுள்ள முதலீட்டுச் சபைக்குப் பதிலாக முதலீட்டு ஆணைக்குழுவொன்று உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதலீட்டுச் சபைக்குக் கீழுள்ள வர்த்தக வலயங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட வர்த்தக வலயங்கள் என்பன அதன் கீழ் நிர்வகிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், தேசிய உற்பத்தி ஆணைக்குழு நிறுவப்படும். அத்தோடு சுற்றுலா தொடர்பான புதிய சட்டம், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டம், புதிய சுற்றுச்சூழல் சட்டம், சிங்கராஜா, சிவனொளிபாத மலை, ஹோட்டன் சமவெளி, வஸ்கமுவ வனப் பூங்கா என்பவற்றின் பாதுகாப்புக்காக புதிய சட்டங்கள் கொண்டுவர எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வர்த்தகத் திணைக்களம் நீக்கப்பட்டு, புதிய சர்வதேச வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டு, வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பணிகள் செயல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

1944ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டங்களே கல்வித்துறையிலும் அமுல்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கல்வித் துறையிலும் பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த புதிய சட்டங்கள் கொண்டு வருவதை சிலர் தடுக்க முயன்றாலும் பாராளுமன்றம் நிறைவேற்றிய பின்னர் அந்த சட்டங்களை யாராலும் ரத்து செய்யவோ அல்லது மறைமுகமாக செயல்படுத்தாதிருக்கவோ முடியாது. வியாக்கியானம் வழங்கும் போர்வையில் நாட்டின் சட்டங்களை மட்டுப்படுத்தி பாராளுமன்ற அதிகாரங்களை மட்டுப்படுத்த சிலர் முயன்றாலும் அவ்வாறு எதுவும் செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் அதிகாரம் பாராளுமன்றத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இல்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, ஜனாதிபதி என்ற வகையில் தமக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் பாராளுமன்றத்தால் அதனை நீக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் பாராளுமன்றத்தினால் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை நீக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாரேனும் இந்த சட்டங்களை மட்டுப்படுத்த விரும்பினால், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, சட்ட மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு முன்பாக பரிசீலிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆனால், இந்த சட்டங்களை நிறுத்தி, மக்களை இனியும் துன்புறுத்துவதற்கு இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இவற்றை மனித உரிமை மீறல்களாக காண்பிக்க சிலர் முயல்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, முதலாவது மனித உரிமை என்பது நாட்டு மக்களின் வாழ்வுரிமை என்றும், இரண்டாவது இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க:

”2021-2022இல் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த காரணிகளை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அதற்குக் காரணம், நாம் நீண்ட காலமாக கடனில் வாழ்ந்து வருவது தான். கடனை முகாமைத்துவம் செய்ய முடியாமல், நாடென்ற ரீதியில் வீழ்ச்சியடைந்தோம். வருமானம் இல்லாததால் கடனைச் செலுத்த முடியவில்லை. இந்த அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் வெளிப்பட்டது. ஆனால் அதற்கு முன்பிருந்தே கடன் வாங்கத் தொடங்கியிருந்தோம். ஏனைய நாடுகளைப் போல் அல்லாமல், வர்த்தகம் செய்ய முடியாத பொருட்களுக்கு கடன் வாங்கினோம். ஏனெனில் நெடுஞ்சாலைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட நிர்மாணத் துறையால் நாம் பயனடைய முடியாது. மகாவலித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது எங்களுக்கும் மின்சாரம் கிடைத்தது. அத்தோடு விவசாயத்துறையும் முன்னேறியது.

நாடு எதிர்கொள்ள நேரிட்ட இந்த நிலைக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த நிலைமையில் இருந்து, முன்நோக்கிச் செல்ல வேண்டும். இன்று கடனை அடைக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே கடனைத் திருப்பிச் செலுத்த 2026-2027 வரை கால அவகாசம் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதனுடன் இன்னும் பல விடயங்கள் உள்ளன.

2022 அரசாங்க வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3% ஆகும். 2023ல் அதை 10.9% ஆக உயர்த்தினோம். அதனால் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கவில்லை. மறை 2% வீதத்தில் இருந்து இந்த ஆண்டு 13.1% ஆக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். அப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். 2028இற்குள், இது 15.2% ஆக உயரும். 8.3% இலிருந்து 15.2% ஆக அதிகரிப்பதென்பது சுமார் 175% அதிகரிப்பைக் குறிக்கிறது.

முதன்முறையாக, 2023இல் நமது முதன்மை பட்ஜெட் 6.7% உபரியைக் காண்பித்தது. நாம் அதை 2.3% ஆகக் கொண்டு செல்ல வேண்டும். மேலும் பட்ஜெட் பற்றாக்குறை 2022 இல் 10.2% ஆகும். 2028இற்குள் அதை 3.9% ஆக மாற்ற வேண்டும். இவை எளிதான பணிகள் அல்ல. இவைதான் எங்களுக்கு இருக்கும் சவால். எங்கள் கடன் 2022 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128% ஆகும். 2032இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95% ஆக குறைக்க வேண்டும். 2022 இற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% கடன் வாங்கினோம். அதை 13 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

இந்த நிலைமையுடன் நாம் எவ்வாறு தொடர்ந்து முன்நோக்கி செல்ல முடியும்? நாட்டின் பொருளாதாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் பொருளாதாரத்திலிருந்து ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு மாற வேண்டும். இறக்குமதி செய்ய நம்மிடம் அந்நியச் செலாவணி இல்லை. போட்டி நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும். அதே நேரத்தில், டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

இந்த புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதில், புதிய சட்டங்கள் அவசியம். ஐரோப்பிய வர்த்தக அமைப்பு ஒல்லாந்து ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. ரோமன்-ஒல்லாந்து முறைமை இன்றும் நமது சட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 1835 இல் வெள்ளையர்கள் பொருளாதாரத்தை திறந்து விட்டார்கள். பின்னர் அவர்கள் சட்டம் கொண்டு வந்தனர். 1970 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் சோசலிச கட்டுப்பாட்டு பொருளாதாரத்தை உருவாக்கியது. அதற்கும் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

1977 ஜே.ஆர். ஜெயவர்தன திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினார். அதன்போதும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த புதிய பொருளாதார திட்டத்திற்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, ​​கடந்த 14 மாதங்களில் 42 சட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவொரு சாதனையாகும். எஞ்சிய 62 சட்டங்களை எவ்வாறு முன்வைப்பது என்பதுதான் சட்டமா அதிபருக்கு இருக்கும் சவாலாகும். அதற்காக பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. இம்முறை நிறைவேற்ற முடியாததை அடுத்த பாராளுமன்றத்தில் முன்வைக்க நேரிடும். இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டால், அடுத்த சில ஆண்டுகளில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் புதிய சட்டக் கட்டமைப்பு உருவாகும்.

துறைமுக நகர சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும். கடல்சார் பொருளாதாரத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். ஒற்றைக் கரையோரப் பொருளாதாரம் உருவாக்கப்படும்போது இலங்கையின் சட்டத்தால் அந்தச் செயற்பாடுகளைச் செய்ய முடியாது. ஒற்றைப் பொருளாதார கட்டுப்பாட்டு எல்லையில் பிரித்தானிய வணிகச் சட்டங்கள் செயற்படுத்தப்படுகிறன.

இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்த புதிய சட்டத்தரணிகள் குழுவொன்று இருக்க வேண்டும். உலகம் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். ஏனென்றால் உலகத்திற்கு நமது சட்டங்கள் தெரியாது. நாட்டை அபிவிருத்தி செய்ய, நாம் அந்த வழியைப் பின்பற்ற வேண்டும்.

மேலும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு நிறுவனங்களின் கட்டமைப்பை மாற்றி வருகிறோம். அனைத்து அரசுகூட்டுத்தாபனங்களும் கம்பனிகளாக மாற்றப்படுகின்றன. அந்த நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் ஒரு பிரதான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

புதிய பொது நிதி மேலாண்மை சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும், பொதுக்கடன் மேலாண்மை சட்டம் கொண்டு வரப்படுகிறது. மேலும், விவசாய நவீனமயமாக்கல் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த இலக்குகளை அடைய பொருளாதார மாற்றம் சட்டம் கொண்டு வரப்படுகிறது. தற்போதைய முதலீட்டுச் சபைக்குப் பதிலாக பொருளாதாரக் குழுவை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. கம்பனிச் சட்டத்தில் பணிப்பாளர்களுக்கு உள்ள அதிகாரம் இவர்களுக்கும் கிடைக்கும். மேலும் அரச -தனியார் கூட்டுமுயற்சி தொடர்பிலும் சட்டம் கொண்டுவரப்படும்.

மேலும், முதலீட்டு சபையின் கீழ் உள்ள வர்த்தக வலயங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் வர்த்தக வலயங்கள் இதன் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

மேலும் தேசிய உற்பத்தி ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும். நமது தயாரிப்புகளை அதிகரிக்காவிட்டால், உலகத்துடன் போட்டியிட முடியாது. மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனம் நிறுவப்பட்டது. இவை தனித்தனி வரைவுகளாக அளிக்கப்பட்டால், உயர் நீதிமன்றம் அவ்வப்போது தாக்கல் செய்ய வேண்டும். இதை உடனடியாக உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சுற்றுலாத் துறையில் புதிய சட்டம் கொண்டு வருவதோடு, அரசு சொத்துக்களையும் ஒப்படைத்தல், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டம், புதிய சுற்றுச்சூழல் சட்டம், சிங்கராஜா, சிவனொளிபாத மலை, ஹோர்டன் சமவெளி, வஸ்கமுவ வனப் பூங்காக்களின் பாதுகாப்பிற்காக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். மேலும், வர்த்தகத் திணைக்களம் நீக்கப்பட்டு, புதிய சர்வதேச வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டு, வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பணிகள் செயல்படுத்தப்படும்.

மேலும், கல்வித்துறையில் சில புதிய சட்டங்களைக் கொண்டுவர உள்ளோம். தொழிற்கல்வியை ஒரு அதிகார சபையின் கீழ் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சுகாதாரத் துறையில் சீர்திருத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எங்களிடம் 1944 இல் கொண்டுவரப்பட்ட கல்விச் சட்டமே உள்ளது. அந்த நேரத்தில் நாங்கள் யாரும் பிறக்கவில்லை. எனவே, இந்த முறையை புதிய சட்டங்கள் மூலம் மாற்ற வேண்டும். நாம் ஒரு புதிய சமூகத்திற்கு, புதிய பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும். மீண்டும் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படாத, சிறந்த நாடாக இலங்கை மாற்றப்பட வேண்டும்.

எமது இந்தச் செயற்பாடுகளுக்கு ஏற்ப தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. சரிந்த நாட்டை ஓரிரு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள் உயர்த்த முடிந்தது. ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள், நம் நாட்டின் வங்குரோத்து நிலை சட்டப்பூர்வமாக முடிவுக்கு வரும். ஆனால் வாங்கிய கடனை மீளச் செலுத்த வேண்டும். அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த வேண்டும்.

இதற்கான சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம். அந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட பிறகு, உயர் நீதிமன்றத்துக்குச் சென்று, அவற்றை ஆராய்ந்த பின்னர் நிறைவேற்ற வேண்டும்.இந்த சட்டத்தை சிலர் தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். ஒரு சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அதை மீண்டும் ரத்து செய்ய முடியாது. அது தொடர்பில் செயல்படாமல் இருக்க முடியாது. சில சட்டத்தரணிகள் வியாக்கியானம் என்ற போர்வையில் நாட்டின் சட்டத்தை கட்டுப்படுத்தவும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். அவ்வாறு செய்ய முடியாது.

இந்த நாட்டின் பாராளுமன்றத்தின் அதிகாரம் 1972 இல் நிறுவப்பட்ட அரசியலமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதற்கு முன் பிரித்தானிய அரசியலமைப்பு இருந்தது. ரணசிங்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணையாளர், லியனகேவுக்கு எதிரான ராணி போன்ற வழக்குகளின் பிரகாரம் அவற்றை மாற்ற முடியாது. அதன்படி, 1970இல், அரசியலமைப்புச் சபையொன்றை அறிமுகம் செய்து புதிய அரசியல் சாசனத்தைத் தயாரிப்பதற்கான ஆணையை அன்றைய அரசு பெற்றது. அந்தச் சட்டத்தின் ஊடாக மக்கள் இறைமையுள்ள தேசிய ராஜ்ய சபையினால் பாராளுமன்றத்தை செயற்படுத்த கொல்வின் ஆர் டி சில்வா ஒப்புக்கொண்டார்.

அதன்படி, பாராளுமன்றத்திற்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தது. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்பாக இருந்தது. சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் நீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. அதன் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை 1977 இல் கொல்வின் ஆர். டி சில்வா அறிமுகப்படுத்தினார். ஆங்கிலேய சட்டத்தின் பிரகாரம் நாங்கள் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

1977 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியபோது அது மாறியது. அதன்படி, மக்களின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற விடயங்கள் மாற்றப்படவில்லை. மேலும், சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் பாராளுமன்றம் என்பன முன்னிலையில் இருந்தன. மேலும் அதில் அடிப்படை உரிமைகளும் இடம் பெற்றிருந்தன. இந்தப் பணியை பாராளுமன்றம் செய்ய வேண்டும்.

ஜனாதிபதி அமைச்சரவையை நியமிக்கும் போது, ​​அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். அது மாறவில்லை. அதன்படி, இப்போது அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் தான் பிரதான அதிகாரமும் சர்வஜன வாக்குரிமையும் தான் முதன்மையானவை. மற்ற அனைத்தும் இரண்டாம் நிலையில் உள்ளன. மேலும், ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு இன்று நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளன. பாராளுமன்றத்தினால் அதை ரத்து செய்யலாம். ஆனால் பாராளுமன்றத்தின் அதிகாரங்களைப் பாராளுமன்றத்தால் நீக்க முடியாது.

அன்று கொல்வின் ஆர். டி சில்வா பாராளுமன்றத்தில் சோசலிசத்தை கொண்டு வந்தார். ஜே.ஆர். ஜெயவர்தன திறந்த பொருளாதாரத்தை கொண்டு வந்தது போல் நாமும் இந்த பாதையில் முன்னேற முயற்சிக்கிறோம். கொல்வின் ஆர் டி சில்வா மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்தனவும் ரோயல் கல்லூரியில் ஒரே வகுப்பில் கற்றவர்கள். அவர்கள் ஒரே மாதிரியாக சிந்தித்தார்கள். எனவே, பாராளுமன்றத்தின் இறையாண்மை எப்போதும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனவே இப்போது நாம் இங்கிலாந்து நீதிமன்றத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும். இவற்றை யாரேனும் கட்டுப்படுத்த முயன்றால், அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் நீதித்துறை அதிகாரங்களின் முன் இது குறித்து விசாரணை செய்யலாம். இவற்றை நிறுத்த முடியாது. மக்கள் மேலும் துன்பப்பட இடமளிக்க முடியாது.

இவற்றை மனித உரிமைகள் என்று யாராவது கூறினால், மக்களின் வாழ்வுரிமை தான் முதல் மனித உரிமை. இரண்டாவது மனித உரிமை, பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதாகும். ஏனைய விடயங்கள் அதன் பின்னரே வருகின்றன. நீங்கள் விரும்பும் அரசியலை செய்யுங்கள். ஆனால் இந்த மாற்றம் நிகழ வேண்டும். இல்லையெனில் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. அதனால்தான் உங்கள் பங்களிப்பை நான் கேட்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், முன்னாள் சட்டமா அதிபர் திலக் மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி எராஜ் டி சில்வா, சட்டக்கல்லூரி அதிபர் கலாநிதி அதுல பத்திநாயக்க, ஜனாதிபதியின் இளைஞர் விவகாரம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பானபணிப்பாளர் ரந்துல அபேவீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.