Published on: மார்ச் 31, 2024

புதிய தொழில்நுட்பத்துடன் திரைப்படக் கூட்டுத்தாபனம் மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும்

  • கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறுவதற்காக வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகள்.
  • நாட்டில் முதலாவது AI திரைப்படம் தயாரிப்பதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் – 2023 ரைகம் விருது விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு.

பழமையான பாரம்பரியத்துடன் காணப்படும் திரைப்படக் கூட்டுத்தாபனம் நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இலங்கை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக அபிவிருத்தி நிறுவனமாக கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேவேளை, கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களை நவீன தொழில்நுட்ப அறிவுடன் வலுவூட்டுவதற்கு வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல திரைப்படம் மற்றும் தொலைக்காட் நாடகத்துறையை தயார் செய்ய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பம் இன்று உலகத் திரைப்படத்துறையில் உள்வாங்கப்பட்டிருக்கிறது. எனவே, அதனை முன்னோக்கி கொண்டுச் செல்லும் வகையில் முதலாவது AI திரைப்படத்தை தயாரிப்பதற்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும் என்றும் ஜனாதிபதி அறிவித்தார்.

கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் நேற்று (30) இரவு நடைபெற்ற 20 ஆவது ரைகம் டெலிஸ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பிரபல தொழில் அதிபரான Kingdom of Raigam குழுமத்தின் தலைவர் கலாநிதி ரவி லியனகேயின் ஆலோயோசனையின் அடிப்படையில் ரைகம் டெலிஸ் தலைமைச் செயலகம் ஆண்டுதோறும் இந்த விருது விழாவை ஏற்பாடு செய்து வருகிறது.

2023 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட தொலைக்காட்சி நாடகங்கள், ஊடக நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளை மதிப்பீடு செய்யும் வகையில் ஏழு பிரிவுகளில் அறுபதுக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ரைகம் சிறப்பு பிரணாம விருதுகள் வழங்க இணைந்து கொண்டதுடன் மூத்த கலைஞர்களான அத்துல ரன்சிறிலால், கிவந்த அர்த்தசாத் மற்றும் கிரேஸ் தென்னகோன் ஆகியோருக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் “ரைகம் பிரதீப பிரபா” கெளரவ விருது கலாநிதி ரோஹண வீரசிங்கவிற்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டதுடன்,இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகராக மூத்த நடிகர் மகேந்திர பெரேராவும், ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருது திருமதி சேமினி இத்தமல்கொடவுக்கும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.

அத்துடன், ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி நாடக இயக்கம் மற்றும் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி நாடகமாகவும் பிரசன்ன ஜெயக்கொடி இயக்கிய வசந்த கன்னங்கரவின் தயாரிப்பில் உருவான “எயா தென் பெந்தலா” என்ற தொலைக்காட்சி நாடகத்திற்கு ஜனாதிபதியால் விருது வழங்கப்பட்டது.

ஆண்டின் சிறந்த ஊடக நிகழ்ச்சி அலைவரிசையாக ஹிரு டி.வி மற்றும் சிரச தொலைக்காட்சி ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் ஜனாதிபதியிடமிருந்து கூட்டு விருதுகளைப் பெற்றனதுடன், ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி நாடக அலைவரிசையாக மற்றும் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி அலைவரிசை என்ற இரண்டு விருதுகளையும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் ஜனாதிபதியினால் விருது பெற்றது.

இந்த விருது வழங்கும் நிகழ்வு பிரபல பாடகர்கள் மற்றும் நடிகர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக நடைபெற்றது.

விருது பெற்ற அனைத்து கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் குழு புகைப்படத்திற்கு இணைந்துகொண்டு ஜனாதிபதி, மூத்த கலைஞர்கள், பாடகர்கள் உள்ளிட்ட அதிதிகளுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

“ரைகம் குழுமத்தால் தொடங்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழா 20ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த விருது விழாவிற்கு பங்களித்த ரைகம் குழுமத்திற்கு நன்றி கூறுகிறேன்.

கடந்த இருபது ஆண்டுகளில் தொலைக்காட்சித் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. இன்று, கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளால் தொலைக்காட்சி சவாலுக்கு உட்ப்டுள்ளது.

இன்று உலகம் Netflix, Amazon மூலம் முன்னேறி வருகிறது. இதனுடன் நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். மற்றைய நாடுகள் பல மொழிகளில் திரைப்படங்களைத் தயாரிக்கின்றன. கிரீஸ் போன்ற சிறிய நாடுகளிலும் அதனை காணலாம். நாமும் அது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

எனவே, திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீனமயமாக்கி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக அபிவிருத்தி நிறுவனமாக மாற்றுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். அதற்கான அறிவை பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளோம்.

தொலைக்காட்சி தொடங்கியபோது, ஜப்பானில் ஏராளமான மக்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அது அந்தக் காலத்தில் யசோராவய போன்ற புதிய தொலைக்காட்சி நாடகங்கள் உருவாக வழிவகுத்தது. மீண்டும் அதுபோன் முயற்சிகளை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.

மேலும், செயற்கை நுண்ணறிவு அல்லது AI தொழில்நுட்பம் கடந்த ஆண்டு முதல் திரைப்படத் துறையில் இணைந்துள்ளது. The Frost குறும்படம் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்தத் திரைப்படங்களின் திரைக்கதையும் AI தொழில்நுட்பத்துடன் தயாராகி உள்ளது. மேலும் இந்தியாவில் Maharaja in Denims திரைப்படமும் AI மூலம் உருவாக்கப்படுகிறது. அதனை இலங்கைக்கும் கொண்டு வர வேண்டும்.

மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலங்கையின் முதலாவது AI திரைப்படத்தை தயாரிப்பதற்காக முயற்சிகளை ஆரம்பித்துள்ளோம். அதற்காக நியமித்துள்ள குழுவிற்கு நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். அதற்கான நிதியையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்.

இதன் மூலம் திரையுலகம் நாம் எதிர்பாராத பல மாற்றங்களை கண்டு வருகிறது. திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீனப்படுத்தி முதல் AI திரைப்படத்தை உருவாக்கி புதிய பயணத்தை தொடர அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.” என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, பேராசிரியர் ஜே. பி. திசாநாயக்க மற்றும் மூத்த நடிகை ஸ்வர்ணா மல்லவராச்சி உட்பட மூத்த நடிகர், நடிகைகள், பாடகர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அதிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த விருது விழாவில் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.