Published on: டிசம்பர் 8, 2022

நாட்டின் நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது – ஜனாதிபதி

தூரநோக்கற்ற பிரபலமான தீர்மானங்களை எடுத்ததன் காரணமாகவே இன்று நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், நாட்டின் எதிர்கால நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே ஜனாதிபதி இன்று (08) இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படும் வகையில் பிழையான தீர்மானங்களை எடுத்தவர்கள் குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கும் ஜனாதிபதி இதன்போது இணக்கம் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
இன்று விவாதத்தில் கலந்துகொண்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள். இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் சில கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்கள். நான் நேற்று முன்தினம் தினம் முன்வைக்கப்பட்ட மகாவலி இடம் தொடர்பான பிரச்சினைக் குறித்து கூற விரும்புகின்றேன்.

இந்நாட்டில் 1977 ஆம் ஆண்டில் காணிகள், காணி ஆணையாளருக்கு கீழேயே இருந்தது. நகர மற்றும் கிராமங்களின் துரித வளர்ச்சி காரணமாக நாம் பெரும் அளவிலான காணிகளை மகாவலியிடமும், நகர அபிவிருத்தி அதிகார சபையிடமும் கையளித்தோம். அதேபோன்ற பல கூட்டுத்தாபனங்களுக்கும் நாம் காணிகளை வழங்கியிருந்தோம். இப்போது எந்த காணி எங்கு வழங்கப்பட்டுள்ளது, அவற்றுக்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பில் எம் யாருக்கும் தெரியாது.

முதலில் அரச காணிகளை அடையாளம் காணவுள்ளோம். அவை யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து தேவையென்றால் அவற்றை ரத்துச் செய்வோம். எனவே இது போன்ற விடயங்களுக்கே நாம் தற்போது கூடுதல் முக்கியத்துவம் வழங்கியுள்ளோம். பிரதேச செயலாளர்களின் கீழ் இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு நாம் கேட்டுள்ளோம்.

பிரதேச செயலாளர் தான் விரும்பியவாறு காணிகளை வழங்க முடியாது. அதற்காக நாம் குழுவொன்றை நியமிப்போம். காணிகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து நாம் அவற்றை ரத்துச் செய்யவுள்ளோம். இதற்காகதான் மகாவலிப் பற்றி இவ்வளவு கூச்சலிடுகின்றார்கள்.

காணிகள் முன்னர் காணி ஆணையாளரிடமே இருந்தன. தற்போது அநேகமான காணிகளில் மக்களை குடியமர்த்திவிட்டார்கள். அந்தக் காணிகள் விசாய அமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை. சில காணிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அக்காணிகளில் குடியமர்த்தி அவற்றை அபிவிருத்திச் செய்யுங்கள்.

விசேடமாக ‘பி’, ‘சி’ ,’எச்’ வலயங்களையும் அநுராதபுரம், பொலனடனறுவை ஆகிய பிரதேசங்களின் பக்கமுள்ள காணிகளையும் நாம் அடையாளம் கண்டு அவற்றை முறையாக மக்களிடம் கையளிக்க வேண்டும். மகாவலி மற்றும் விவசாய அமைச்சு ஆகிய இரண்டினால் விவசாயம் முன்னெடுக்கப்பட்டும்கூட எம்மால் அறுவடையை அதிகரிக்க முடியாமல் போயுள்ளது. ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பிலிருந்து ஆறு மெட்ரிக் தொன் அறுவடைக்கூட எமக்கு கிடைப்பதில்லை.

அதை மட்டுமே நாம் எதிர்பார்க்கின்றோம். இதற்காக யாருக்கும் பயப்பட தேவையில்லை.

அரசாங்கமல்லாத பல்கலைக்கழகங்களை இங்கு உருவாக்குவது தொடர்பில் நாம் இணக்கம் கண்டிருந்தோம். முன்னாள் கல்வி, உயர் கல்வியமைச்சர்கள், காவிந்திய ஜயவர்தன, சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். 2023 ஆம் ஆண்டு பிறந்ததும் ஜனவரி மாதத்தில் நாம் மீண்டும் அனைவரையும் இணைத்துக் கொண்டு இது தொடர்பில் கூடி ஆராய்ந்து ஒரு தீர்மானத்துக்கு வருவோம். அதன் பின்னர் எம்மால் பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும்.

அத்துடன், மேற்பார்வைக் குழுக்களுக்க ஐந்து இளைஞர்கள் வீதம் நியமிப்பதாக நாம் இணக்கம் கணடிருந்தோம். அதற்கான பெயர் விபரங்களை அடுத்தவாரமளவில் அவர்களை தெரிவு செய்யும் பணிகளை ஆரம்பிக்க முடியும். இல்லாவிட்டால் அதற்கு என்ன நடந்தது என இளைஞர்கள் பார்ப்பார்கள்.

உண்மையில் எமக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டது. கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மின் கட்டணத்தை அதிகரித்தோம். எனினும் அது போதுமானதாக இல்லை. தற்போது எமக்கு 151 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது. முழு நட்டத்தைப் பார்த்தால் 2013 ஆம் ஆண்டிலிருந்து எமக்கு 300 பில்லியன் ரூபா நட்டமுண்டு. இந்த 300 பில்லியன் ரூபாவையும் எமக்கு தற்போது தேட நேரிட்டுள்ளது.

அடுத்த வருடம் சுமார் ஆறு மாதங்களுக்கு வறட்சி ஏற்பட இடமுண்டு. அந்நிலையில் எமக்கு 420 பில்லியன் ரூபா மேலதிகமாக தேவைப்படும். சாதாரணமாக மழை கிடைத்தால் 352 பில்லியன் ரூபா தேவைப்படும். மழை கிடைத்து, வெள்ளம் ஏற்பட்டால் 295 பில்லியன் ரூபா தேவைப்படும். இவற்றை நாம் எவ்வாறு தேடுவது? அது தான் பிரச்சினை. அரசாங்கத்துக்கு வருமானம் இல்லை. பணத்தை அச்சடிக்கவா? அப்படிச் செய்தால் பணவீக்கம் ஏற்படும்.

இல்லையெனில என்ன செய்வது? வட் வரியை அதிகரிக்க வேண்டும். அதனையும் அதிகரித்து அதிகரித்து இறுதியில் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்.
மூன்றாவதாக உள்ள ஒரே தீர்வு கட்டணத்தை அதிகரிப்பதாகும். இதிலுள்ள பிரச்சினை எனக்குத்

தெரியும். மின்வெட்டை அமுல்படுத்த முடியும். எனினும் நான் அதனை விரும்பவில்லை. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. எனவே நாம் எப்படியாவது மின் வெட்டைத் தவிர்க்க வேண்டும். பெற்றோரிடம் எதை அறவிட்டாலும் பரவாயில்லை மின்வெட்டை மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டாமென்று தெரிவித்தேன்.

நாம் இது பற்றி பேசினோம். கட்டணத்தை அதிகரிப்பதற்கு யாருக்கும் விருப்பமில்லை. நாம் அரசியலில் இருக்கின்றோம். மக்களின் சுமை எமக்கு தெரியும். எனினும் இதுக்கு என்னதான் தீர்வு உள்ளது?

இந்த நெருக்கடியை நாம் சமாளிக்க வேண்டும். சீனாவுடனான பேச்சுவார்த்தையின் முடிவில் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியும். அப்போது இப்பிரச்சினைகள் அனைத்தையும் வெற்றிகொள்ள முடியும். நாம் உண்மையில் நட்டத்தைக் காட்டி வருமானத்தையும் காட்டா விட்டால் வெளியிலிருந்து எமக்கு நிதியுதவிகளைப் பெற முடியாது.

இதுகுறித்து விரிவாக பேசினோம். விருப்பமில்லாமலாவது இதனை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தோம். நாடு குறித்து சிந்தித்து பணியாற்ற வேண்டியுள்ளது. பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது. ஆனால், இந்தத் தீர்மானங்களினால் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். எப்போதும் பிரபல்யமான முடிவுகளையே எடுக்க முடியாது. கடந்த காலங்களில் பிரபல்யமற்ற

முடிவுகளை எடுக்காததன் காரணமாகவே நாடு இந்தளவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாம் முன்னர் இதுபோன்ற நிலையை எதிர்கொள்ளவில்லை. 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கவில்லை. நாம் அனைவரும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

நாம் உண்மையில் தீர்மானம் எடுக்க வேண்டும். தீர்மானம் எடுக்காத்தன் காரணமாகவே இன்று இந்த நிலையை எதிர்கொண்டுள்ளோம். வெளிநாடுகள் கடினமான தீர்மானங்களை எடுத்தன.

அப்போது நாம் அதிலிருந்து தப்பிச் சென்றோம். என்ன செய்வதென்று இப்போது எம்மிடம் கேட்கின்றார்கள்? என்ன செய்வதென்றுதான் நானும் கேட்கின்றேன்.

400 பில்லியன் ருபா நிதிப் பற்றாக்கறை இருந்தால் என்ன செய்வீர்கள்? முதல் தெரிவு பணத்தை அச்சிடுவது. இரண்டாவதாக வட் வரியை அமுல் செய்வது . மூன்றாவதாக நேரடியாக கட்டணத்தை உயர்த்துவது. அனைவரும் கூச்சலிட முடியும். இதற்கான அதிகாரம் அமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் மாத்திரமே உண்டு.

நானும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் இணைந்து தான் இதற்கான சட்டமூலத்தை தயாரித்தோம். எனவே அதிலுள்ள அதிகாரங்கள் தொடர்பில் எனக்கு நன்கு தெரியும். இது தொடர்பில் சட்டமா அதிபரின் கடித்த்தை நான் சபைக்கு சமர்பிக்க விரும்புகின்றேன்.

நானே பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்கழுவின் சட்டத்தை தயாரித்தேன். இது எனது அமைச்சின் கீழேயே உள்ளது. இதில் உள்ளவற்றை நான் நன்கு அறிவேன். ஏன் மக்களை பிழையாக வழிநடத்துகின்றனர் என்று புரியவில்லை. அதன் தலைவரை நான் சந்திக்க வேண்டும். ஏனென்றால் அவரைப் பற்றியும் அவர் செய்துள்ள பிரசாரங்கள் பற்றியும் பல முறைப்பாடுகள் எனக்கு கிடைத்துள்ளன. அவர், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லையென கூறியுள்ளார். இப்படியென்றால் எவ்வாறு பொருளாதாரத்தை கொண்டு செல்வது? அவருக்கு அதற்கான அதிகாரம் இல்லை.

அவரே ட்ரில்லியம் குழுமத்தின் தலைவர் என்பதை இங்கு விசேடமாக கூற வேண்டும். ட்ரில்லியம் குழுமம் கூடுதலான மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. அனைத்தும் அதிசொகுசானவை.

ட்ரில்லியம் ரெசிடென்சிஸ், ட்ரில்லியம் ஹெவலொக் ரெசிடென்சிஸ், ட்ரில்லியம் ரெசிடென்சிஸ் களம்பு 07, ட்ரில்லியம் நிகம்பு விலாஸ், ட்ரில்லியம் ஹொட்டேல்ஸ் களம்பு 07 ஆகியன இக்குழுமத்தில் உள்ளன.

மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் அவரது செலவு அதிகரிக்கும். எனவே ட்ரில்லியம் குழுமத்தின் தலைவர் என்ற வகையில், மின்சாரக் கட்டண அதிகரிப்பு தன்னைப் பாதிக்கும் என்பதால் தான் இந்தக் கூட்டத்துக்கு வரவில்லையென்றும் ஆணைக்குழுவிற்கு அவர் அறிவித்திருக்கலாம். அல்லது ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. எனவே இது தொடர்பில் விசாரணை ஒன்றை கோரியுள்ளனர். எனினும் சட்டத்தின்படி விசாரணைக்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உண்டு. எனவே அதனை நான் பாராளுமன்ற உறுப்பினர்களிடமே விட்டுவிடுகின்றேன்.

அவர்களே அது தொடர்பான முடிவை எடுக்கட்டும். இதுபோன்ற எண்ணத்துடன் தொடர்ந்து செல்ல முடியுமென நான் நினைக்கவில்லை.அரச கூட்டுதாபனமொன்றின் தலைவர் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது பற்றி அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் மகுடிக்கு ஆடும் பாம்பு அல்ல. அவ்வாறான நிலையில் நானிருந்தாலும் கூட மின் கட்டணம் அதிகரிப்பை விரும்பியிருக்க மாட்டேன்.

மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாமென பொறியிலாளர்கள் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிலுள்ள குறைபாடுகள் எமக்கு தெரியும். இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதுவரையில் அனுமதி பெறாத மின் நிலையங்கள் பற்றி தெரிவித்திருந்தார்.

நுரைச்சோலையிலுள்ள 321 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 100 மெகா வோல்ட் கடலோர காற்றாலை மின்நிலையம், ஹம்பாந்தோட்டையிலுள்ள 1.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான 500 மெகா வோல்ட் கரையோர காற்றாலை மின்னிலையம், மட்டக்களப்பு மாவட்டம் எருமை தீவிலுள்ள 68 மில்லியன் டொலர் பெறுமதியான 100 மெகா வோல்ட் சூரிய சக்தி மின்நிலையம், புத்தளம் டச்சு விரிகுடா 204 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 250 மெகா வோல்ட் காற்றாலை மின்நிலையம் என்பனவே அவையாகும்.

முதலில் இவற்றுக்கான அனுமதியை நிறைவேற்றியதன் பின்னர் மின் கட்டணத்துக்கான வரியை நிறைவேற்றமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

ஆறு மாதங்களுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்வனவு செய்ய வேண்டும். 2001 ஆம் ஆண்டு நான் பிரமர் ஆனபோது இந்த ஆறு மாத பிரச்சினைக் காரணமாக நிதி நெருக்கடி ஏற்படுவதால:,

நான் ஜப்பானுடனான நுரைச்சோலை ஒப்பந்த்த்தை நிறுத்தினேன்.
எமது அரசாங்கம் ஆட்சியை இழந்த பின்னர புதிய அரசாங்கத்திற்கு இதனை முன்னெடுக்க வேண்டாம் என்று கூறினோம். அதனை அன்று செய்தவர்கள் இன்று ஓய்வூதியத்தில் சென்று விட்டார்கள்.

உலக வங்கியின் நிதியின் கீழ் மின்சாரம் பற்றி அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்த்து. அதற்கமைய கருஜயசூரிய, சட்டமூலமொன்றை தயாரித்தார். எனினும், 2004 இல் நாம் தோல்வியடைந்த பின்னர் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நாம் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து இரண்டு எல்.என்.ஜி மின்நிலையங்களைப் பெற்றக் கொண்டோம். எமது ஆட்சி மாறியதும் அதனை ரத்துச் செய்யாமல் அமெரிக்காவின் நிவ் வோர்ட்லஸிடமிருந்து அதனைப் பெற்றுக்கொண்டார்கள். நாளடைவில் சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இதில் உள்ளன. உலக யுத்தம் நடைபெறாமல் விட்டதே பெரிய விடயமாகும். ரஷ்யா மட்டுமே இங்கு இல்லை. அவர்களே உலகின் அனைத்து நாடுகளடனும் மோதுபவர்கள். இப்போது இதற்கு தீர்வு தருமாறு கோருகின்றனர். இறுதியில் இங்கு எல்.என்.ஜியும் இல்லை. எனவே கடிதம் எழுதாதீர்கள் என்ற கேட்டுக் கொள்கின்றேன்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.