Published on: ஜனவரி 12, 2023

நாட்டின் அடுத்த 25 ஆண்டுகளுக்காக புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திரதின விழா பெருமையுடன்

– ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாடளாவிய ரீதியில் பல சமய மற்றும் கலாசார நிகழ்வுகள்

அடுத்த 25 ஆண்டுகளுக்காக அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

“நமோ நமோ மாதா – நூற்றாண்டுக்கு ஒரு படி” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த பெருமை மிகு விழாவில், 2048 ஆம் ஆண்டு 100 ஆவது சுதந்திர தினம் வரை மாறாத அரச கொள்கையை அமுல்படுத்தும் வகையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

தேசிய சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.

சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் உள்ள தேசிய மாவீரர்களின் உருவச்சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் வைபவம் ஆரம்பமாகவுள்ளது.

75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல கலாசார மற்றும் சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

அதன்படி, பௌத்த சமய நிகழ்வுகள், பெப்ரவரி 02 ஆம் திகதி மாலை ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறவுள்ளதுடன், அன்றிரவு விக்டோரியா அணைக்கு அருகில் 9:00 மணிக்கு தர்ம பிரசங்கமும் ஆரம்பமாகவுள்ளது. மறுநாள் காலை அன்னதான நிகழ்வும் நடைபெறும்.

பெப்ரவரி 04 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு மருதானை பாத்திமா தேவாலயத்தில் கத்தோலிக்க மத வழிபாடுகளும், அதே நேரத்தில் காலி முகத்திடல் கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்தவ மத வழிபாடுகளும் நடைபெறவுள்ளன. இந்து சமய நிகழ்வுகள், பெப்ரவரி 03 ஆம் திகதி காலை திருகோணமலை கோணேஷ்வரம் ஆலயத்தில், இடம்பெறவுள்ளன. பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் சமய வழிபாடுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கொழும்பிலும் பௌத்த மற்றும் இந்து சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பெப்ரவரி 4 ஆம் திகதி முற்பகல் 6.30 மணிக்கு கொழும்பு 3 பொல்வத்தை தர்மகீர்த்தியாராம விகாரையில் பௌத்த சமய நிகழ்வும் கொழும்பு 4 பம்பலபிட்டி புதிய கதிரேசன் கோவிலில் இந்து மத நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் மார்ச் மாதம் ஸ்ரீ தலதா கண்காட்சி, கபில வஸ்து தாது கண்காட்சி, மே மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ளதுடன், சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் தாது கண்காட்சி ஜூன் மாதம் அனுராதபுர நகரில் நடைபெறவுள்ளதுடன், மேலும் பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்படும் தாது கண்காட்சியொன்றை ஜூலை மாதம் தென் மாகாணத்தில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கலாசார கலை விழாவான “லங்காரலங்கா” பெப்ரவரி 03 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 750 கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

யாழ் கலாசார நிலையம், பெப்ரவரி 11ஆம் திகதி காலை ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், யாழ் கலாசார நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும் கலாசார ஊர்வலம் யாழ்.நகரின் ஊடாக வீதி உலா வந்து யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் நிறைவடையும். (பழைய பேருந்து நிலையம்) அங்கு கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், அன்று இரவு அதே இடத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்து நடன மரபுகளையும் ஒன்றிணைத்து, வீதி உலாவரும் ஊர்வலம் எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு கண்டி நகரில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் பூரண பங்கேற்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுதந்திரம் தொடர்பான 30 நிமிட குறும்படமொன்றை தயாரித்து அனைத்து திரையரங்குகளிலும் கலையரங்குகளிலும் காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இளைஞர் சமுதாயத்தை இலக்கு வைத்து “சுதந்திரம்” என்ற தலைப்பில் குறும்படங்கள், தேசபக்தி பாடல்கள் மற்றும் ஓவியப் போட்டிகள் உள்ளிட்ட வடிவமைப்புப் போட்டியொன்றை மே மாதம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சி சிரேஷ்ட ஓவியக் கலைஞர் எச்.எஸ். சரத் தலைமையில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய அருங்காட்சியக திணைக்களம், மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலங்கையின் வரலாற்றை பிரதிபலிக்கும் கலைப்பொருட்கள் கண்காட்சி பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தேசிய சுதந்திர தின விழாவின் போது பத்திரிகை செய்திகள் மற்றும் பிற கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட உள்ளது . 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட முத்திரை ,சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்க ,சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் சுதந்திர பாகிஸ்தானின் முதல் பிரதமர் முஹம்மது அலி ஜின்னா ஆகியோரின் உருவப்படங்களை உள்ளடக்கிய அரிய வகை விசேட நினைவு முத்திரையையும் வெளியிடப்பட உள்ளது. மேலும் ரூ.1000/- மதிப்புள்ள சிறப்பு நினைவு நாணயமும் வெளியிடப்படும்.

ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட நகர்ப்புற வன எண்ணக்கரு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதுடன், ஸ்ரீலங்கா டெலிகொம் அனுசரணையுடன் பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரையிலான சுதந்திர தின சைக்கிள் சவாரி ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இது தவிர, மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பொது பூங்காக்கள், தேசிய விலங்கியல் திணைக்களத்திற்கு வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்குரிய தேசிய பூங்காக்கள் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்திற்குரிய தேசிய பூங்காக்கள் என்பன சுதந்திர தினத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படும்.

குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு 02 மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ வீதம் அரிசி வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் குறித்த வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

2023 ஆம் ஆண்டு 75 ஆவது சுதந்திர தினத்துடன் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் புதிய சீர்திருத்தப் பயணத்தை 2048 ஆம் ஆண்டு 100 ஆவது சுதந்திர தினம் வரையில் மாற்றமில்லாத அரச கொள்கையாக மாற்றுவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் நோக்கமாகும். எதிர்வரும் 25 வருடங்களுக்கான திட்டமும் இந்த தேசிய சுதந்திர தினத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும்.

இதன்படி, பல புதிய நிறுவனங்கள் மற்றும் சட்டங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் ஒரு வரலாற்று நிறுவனம், பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனம் , பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான நிறுவனம் என்பன நிறுவப்படும்.

அரச மற்றும் அரசாங்கக் கொள்கைப் பல்கலைக்கழகம், விவசாய ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம், காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் என்பனவும் நிறுவவுதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழு , பாலின சமத்துவச் சட்டம், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டம், சமூக நீதிக்கான ஆணைக்குழுச் சட்டம், காடுகளை மீள உருவாக்கல் மற்றும் விருட்சப் பாதுகாப்புச் சட்டம் என்பனவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

மகாவலி கங்கை, சிங்கராஜ வனம் , சிவனொலிபாத பிரதேசம், ஹோர்டன் சமவெளி, நக்கிள்ஸ், ஆதாம் பாலம் போன்ற இயற்கை வளங்களின் பாதுகாப்பிற்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கடல் வள ஆய்வு மற்றும் முகாமைத்துவம் தொடர்பில் புதிய சட்டங்கள் மற்றும் முதுராஜவெல பாதுகாப்பு சட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதில் 75 நகர்ப்புற காடுகளின் திட்டம் மற்றும் கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கொழும்பில் 1996 வீடுகள் கட்டும் திட்டம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதோடு தேசிய இளைஞர் தளம் உட்பட பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.