தேயிலை உட்பட இலங்கையில் பெருந்தோட்ட தொழில்துறையை முன்னேற்றுவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாகவும், அது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சிறந்த வடிவமைப்பாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று (15) பிற்பகல் நடைபெற்ற கொழும்பு தேயிலை வர்த்தகர் சங்கத்தின் 129 ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் பரந்த பங்களிப்பை வழங்குவதற்கு தேயிலை தொழில்துறைக்கு இன்னும் பலம் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அத்துறையில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு, புத்தாக்கத்துடன் அதில் மாற்றத்தை ஏற்படுத்த தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபத ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். ஆனால், நமது நாட்டின் பொருளாதாரத்தில் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டால், இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னெடுக்க முடியாது. எமக்கு வெளிநாட்டுக் கடன் பெற நேரிடும். பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படுவதால் அதிக பணம் அச்சிட வேண்டும். மீண்டும் இந்த பழைய முறைக்கு செல்வதா அல்லது முறையான பொருளாதார முறை மூலம் எழுந்து நிற்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். மேலும் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
யுத்த காலத்திலும் எமது நாட்டின் பொருளாதாரம் வலுவாகவே இருந்தது. யுத்த காலத்திலும் நாம் ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்ததை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். எவ்வாறாயினும், உரிமை மற்றும் ஒழுங்குமுறை ஆகிய இரண்டிலும் அரசாங்கத்தின் ஆதிக்கம் செலுத்தக் கூடிய பொருளாதாரத்தை பராமரிப்பது இன்று கடினமாக உள்ளது. கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவை இப்போது நமக்கு இருக்கும் மாற்று வழிகளாகும்.
தேயிலை உற்பத்தி என்பது அரசாங்க ஆதரவுடன் கட்டமைக்கப்பட்ட தொழில் அல்ல. தனியார் மூலதனத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றவர்களின் தொழில் இது. இதில் சிலர் தோல்வியடைந்தனர். ஆனால் பலர் வெற்றி பெற்றனர். சிலர் விவசாயம் செய்து கொண்டிருந்த காணிகள் கூட சர்ச்சைக்குரிய வகையில் மீண்டும் கைப்பற்றப்பட்டன.
நாம் தற்போது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தில் பரந்த பங்கை வகிக்கும் பலம் தேயிலைத் தொழிலுக்கு இன்னும் உள்ளது. அடுத்த 20-30 வருடங்களில் கவனம் செலுத்தி இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கண்டறிய வேண்டும்.
உலகளாவிய காலநிலை மாற்றத்தால், எதிர்காலத்தில் நாம் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேயிலை தொழிலைக் காப்பாற்ற, இந்த மிதமான காலநிலை வலயத்தை, காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். சர்வதேச மாநாடுகளில் இது தொடர்பான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளோம். இந்த நிலை உலகின் வடக்கு அரைக்கோளத்தில் ஏற்பட்ட பாரிய தொழில்மயமாதலின் பாதகமான விளைவு என்றும் இதனை குறிப்பிடலாம். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும். மேலும் நீர் தொடர்பான நிலைமை மிகவும் ஆபத்தானது என்றுதான் சொல்ல வேண்டும். காலநிலை மாற்றத்தால் இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நீர் மூலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்களை அண்மையில் படித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெரும்பாலான நீர் மூலங்கள் மத்திய மலைநாட்டில் இருப்பதால், அது நேரடியாக தேயிலை தொழிலை பாதிக்கிறது. இன்னும் 50 முதல் 60 வருடங்களில் நமது சந்தை எங்கே இருக்கும் என்று பார்க்க வேண்டும்.
2050 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை வளர்ச்சியின் கணிப்புகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் மக்கள்தொகை மேலும் 400 மில்லியன்களால் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. கென்யா, மலாவி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. அதனுடன் இணைந்ததாக அந்த நாடுகளின் தனிநபர் வருமானமும் அதிகரிக்கிறது.
ஆனால் இலங்கையின் சனத்தொகை அதிகரிக்கவில்லை. எனவே, எங்கள் உற்பத்திகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். சீனா திட்டமிட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில், சீனாவில் இருந்து அதிகமான தேயிலை சந்தைக்கு வரும். இது உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் இந்தியாவும் தேயிலை சந்தைக்கு வருகிறது. எனவே இந்தியா மற்றும் சீனாவுடன் இது குறித்து கலந்துரையாட வேண்டும். எங்களுக்கு தனியாக பயணிக்க முடியாது. அவர்களின் சந்தைப் போக்கை நீங்கள் கவனமாக நோக்க வேண்டும். உலகின் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகள் தேயிலையை கொள்வனவு செய்து அதை பால் அல்லது பிஸ்கட்டுடன் சேர்த்துத் தயார் செய்து குடிக்கிறார்கள். இன்று, கிரீன் டீ உலகில் பிரபலமான பானமாக மாறிவிட்டது. தேயிலை தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உற்பத்திகள் பற்றி சிந்திக்க வேண்டும்.
நான் சிறுவயதில் எங்கள் வீட்டில் மிகப் பெரிய சமையலறை இருந்தது. ஆனால் இப்போது வீடுகளில் மிகச் சிறிய சமையலறை தான் உள்ளது. அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் சமையலறை இல்லாமல் வீடுகள் கட்டப்படும். அவற்றில் ஓரிரண்டு உணவு பதப்படுத்தும் இயந்திரங்கள் இருக்கும். எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் இவை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அந்தச் சவால்களை நாம் உணர்ந்து அதற்கு ஏற்றவாறு மாற்றுவழிகளுடன் முன்னேற வேண்டும். சுவீடன் நாட்டுப் பொருளாதார நிபுணரான குன்னர் மிர்டலினால் 1960களில் எழுதப்பட்ட Asian Drama என்ற புத்தகத்தில் இலங்கையைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டிருந்தது. “ஆங்கிலேயர்கள் தொழில் புரட்சியில் இருந்து நிர்வாகம் மற்றும் நிதி பற்றிய அனுபவத்தைப் பெற்று இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அதனைக் கொண்டு வந்து பின்னர் அவற்றை பெருந்தோட்டத் துறையில் அறிமுகப்படுத்தினர். எனவே, எமக்கு நவீன தோட்ட முகாமைத்துவ முறைமை கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் புதிய முகாமைத்துவ நடைமுறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. இது அனைத்து நவீன டிஜிட்டல் நுட்பங்களையும் உள்ளடக்கிய ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்க வேண்டும்.
அதில் செயற்கை நுண்ணறிவு, உயிரியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளையும் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும். இது தனியார் துறையினரால் உருவாக்கப்பட வேண்டும். லிப்டன் இலங்கைக்கு வரவில்லையென்றால் இன்று இவை எதுவும் இருந்திருக்காது. எனவே, அந்த முறைமையை மேம்படுத்துவதன் மூலம் புதிய தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டுவருவதற்கான வழிகளை அவசரமாக அடையாளங்காண வேண்டும்.
அதற்கு உங்களுக்கு முழு ஆதரவை வழங்குவோம். தேயிலை தொழில்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு அதுதான் எம்மால் செய்ய முடியும். அதனுடன் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் செயற்பட்டு வருகின்றோம்.
சர்வதேச ரீதியில் இலங்கை தேயிலையை தூய (pure) தேயிலையாக கொண்டு செல்லும் இலக்கை அடைய சிறந்த தீர்வுகளுடன் தொடர்ந்து செல்வதற்கு உங்களை அழைக்கிறேன். என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல், இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் துறைமுக நகரம் என்பவற்றின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான தினேஷ் வீரக்கொடி, கொழும்பு தேயிலை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் சஞ்சய் ஹேரத், உப தலைவர் லுஷாந்த டி சில்வா, முன்னாள் தலைவர்களான ஜனக கருணாரத்ன, அன்ஸ்லம் பெர்னாண்டோ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.