Published on: ஆகஸ்ட் 24, 2023

தற்போதுள்ள அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானது

  • அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர.

தற்போது கையிருப்பில் உள்ள அரிசி, அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு தேவையான மூன்று வகையான உரங்களையும் உரிய நேரத்தில் வழங்கியதாலும் நிதி உதவி அளித்ததன் காரணத்தினாலும் கடந்த பெரும் போகம் வெற்றியடைந்ததாகவும், வறட்சி இல்லாத ஏனைய மாகாணங்களில் அதிக அறுவடை கிடைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் பிரிவின் ஏற்பாட்டில் நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற “விவசாயத்துறையின் நவீனமயமாக்கல் மற்றும் அதன் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற துறைசார் நிபுணர் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியதாவது:

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றபோது,விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். விவசாயிகளை மீண்டும் விவசாய வயல் நிலத்திற்குக் கொண்டுவருவது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

அந்த சமயம் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பித்திருந்தன. 275,000 ஹெக்டெயாரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தாலும் உரம் இருக்கவில்லை. தேவையில் லாமல் மக்களை பயமுறுத்துவதாக சிலர் குற்றம் சாட்டினாலும், சர்வதேச சமூகமும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று அறிவித்திருந்தது.

எப்படியோ விவசாயியை மீண்டும் வயில் நிலங்களுக்கு அனுப்பினோம். அதன்படி, 10 வருடங்களின் பின்னர், சிறுபோகத்தில் 512,000 ஹெக்டெயாரில் பயிர்ச் செய்கை செய்வதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்தது. பின்னர் பெரும்போகத்தில் 08 இலட்சம் ஹெக்டெயாரில் பயிர்ச்செய்கை செய்யப்பட்டது. அந்த ஆண்டில் 08 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடமும் அரிசியை இறக்குமதி செய்ய நேர்ந்தால் பாரிய பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில் தற்போது இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

எவ்வாறாயினும், பெரும்போக அறுவடை வெற்றிகரமாக இடம்பெற்றதாலும் மூன்று வகையான உரங்களும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதாலும், நிதி நிவாரணம் வழங்கப்படுவதாலும், எதிர்வரும் பெரும் போக அறுவடை வரை எங்களிடம் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது.
மேலும் தற்போது நிலவும் வறட்சியால் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் நாசமாகியுள்ளது. ஆனால் வறட்சி இல்லாத ஏனைய மாகாணங்களில் விளைச்சல் மிகவும் அதிகமான உள்ளது. எனவே, வெளிநாடுகளில் இருந்து அரிசி கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது நெல் மற்றும் அரிசி விலைகள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய அமைச்சர் என்ற ரீதியில் நெல் விலை உயர்வை நல்லதொரு நிலையாக கருதுகின்றேன். எனினும் நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதை அனுமதிக்க முடியாது.

எனவே, நெல் மற்றும் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த பொருத்தமான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். எங்களிடம் உள்ள குறைந்த அளவிலான நிலத்தில் அதிக அறுவடையைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.

விவசாயிகளை முறையாக அறிவூட்டாமை தொடர்பான குறைபாடு அடையாளங் காணப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட விவசாயத் தலைவர்கள் விவசாயிகளை சரியான அறிவூட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைக் காணமுடிகிறது. எனினும் அரசியலின்றி விவசாயிகள் மத்தியில் சரியான தகவல் எடுத்துச் செல்லப்பட்ட ஹம்பாந்தோட்டை மாவட்டம் இந்த வருடம் சிறந்த விளைச்சலைப் பெற்றுள்ளது.

சரியான விதை நெல் தொடர்பான தகவல்களை விவசாயிகள் மத்தியில் கொண்டுச் செல்லத் தவறும் பட்சத்தில் அந்தச் செயற்பாடுகள் வெற்றியளிக்காது. அதேபோல் புதிய தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் அதன் பலன்கள் தொடர்பான விடயங்களை விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அவை சாத்தியமடையும் பட்சத்தில் எமது விளைச்சல் நிலங்களில் தன்னிறைவான விளைச்சலை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டும்.

புதிய தொழில்நுட்பம் தொடர்பில் கூறுவதாயின் 2018 இல் DJC மாமர நடுகைத் திட்டம் ஏக்கருக்கு 80 கன்றுகள் என்ற அடிப்படையிலேயே ஆரம்பிக்கப்பட்டது. தொழில்நுட்ப பயன்பாட்டின் பலனாக அந்த எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது. 2018 வாகரை பகுதியில் பச்சை வௌ்ளரிக்காய் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு செலவிடப்பட்ட தொகையையும் மிஞ்சிய இலாபத்தை தருகிறது. அதேபோல் மிளகாய், மாதுளை, புளி வாழைப்பழ உற்பத்தி ஆகியனவும் தொழில்நுட்ப பயன்பாட்டினால் சிறந்த பிரதிபலனைத் தருகின்றன.

விளைச்சல் செயற்பாடுகள் தொடர்பில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும், இன்றளவில் விவசாயிகள் தங்களது பிள்ளைகளும் விவசாயிகளாவதை விரும்புவதில்லை. அந்த எண்ணக்கருவை நாம் மாற்றியமைக்க வேண்டும். அந்த அனைத்துச் செயற்பாடுகளிலிலும் வெற்றிகாண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய,

கடந்த வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்று உரம் இருக்கவில்லை. விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்தனர். ஜனாதிபதியால் அந்த நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. அதற்கிடையில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதனால் மின்சாரத்திற்காக 80 கோடி ரூபாவை மேலதிகமாகச் செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஏற்படக்கூடிய உணவுத் தட்டுப்பாடு காரணமாக பெருமளவானவர்கள் பட்டினியால் இறக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் உரிய முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு சென்ற வேலைத்திட்டத்தின் பலனாக எதிர்வுகூறப்பட்ட உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் நிலை நாட்டிற்கு ஏற்படவும் இல்லை. அதனால் எவரும் உயிர் துறக்க வேண்டிய நிலைமை உருவாகவும் இல்லை.

எவ்வாறாயினும் விவசாயத் துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து சரியான தீர்மானங்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதனூடாகவே விவசாயத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தை சாத்தியமாக்கிக்கொள்ள முடியும்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட,

விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பமோ அல்லது வேலைத்திட்டங்களோ எவ்வளவு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவற்றை கிராம மட்டத்தில் கொண்டு செல்லும் போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கிராமத்தின் விகாரைகள், பாடசாலைகள், கிராமசேவகர்கள், சமுர்த்தி மற்றும் விவசாய அதிகாரிகளை இணைத்துக்கொண்டு மேற்படி தொழில்நுட்பங்களை துரிதமாக கிராமங்களுக்குள் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு விவசாய அமைப்புக்களின் தலைவர்களிடத்தில் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வித பயிற்சிகளும் இல்லாத குடும்பங்களை தெரிவு செய்து ஏதேனுமொரு பொருளாதார முறைமைக்குள் அவர்களை உள்வாங்குமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார். அதற்கமைய சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து மேற்படி குடும்பங்களின் பொருளாதாரத்தை வலுவூட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ. சிரில், விவசாய திணைக்களத்தின் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன் உள்ளிட்டவர்களால் விவசாய நவீனமயப்படுத்தல் தொடர்பிலான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

விவசாய அமைப்புக்களின் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களும் இங்கு கருத்துகளை தெரிவித்தார்கள்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.