Published on: ஜனவரி 19, 2024

டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் என்பன அபிவிருத்தி அடைந்துவரும் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மையை உருவாகியுள்ளன

  • சிறந்த உலகை கட்டியெழுப்ப அணிசேரா நாடுகளின் அமைப்புக்குள் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
  • 05 வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
  • பிரதான நாடுகளின் போட்டி, வர்த்தக மற்றும் பொருளாதார ஒற்றுமையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
  • அணிசேரா நாடுகள் இனியும் வலுவற்ற நாடுகளின் அமைப்பாக இருக்கப்போவதில்லை – அணிசேரா நாடுகளின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.

டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் வாயிலாக, அணிசேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகின் அபிவிருத்தி அடைந்துவரும் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மை உருவாகியுள்ளது என்றும் அதனால் சிறந்த உலகை உருவாக்க வலுவான மற்றும் ஒன்றிணைந்த அணிசேரா அமைப்பின் ஊடாக மேற்படி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை எட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உகண்டா – கம்பாலா நகரில் “உலக சுபீட்சத்துக்காக ஒன்றிணைந்த ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்ளல்” என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (19) ஆரம்பமான அணிசேரா அமைப்பின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவேனியின் (Yoweri Museveni) தலைமையில் 120 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்த மாநாடு இன்றும் நாளையும் (20) நடைபெறுகிறது.

மாற்றமடைந்துவரும் உலகிற்கு ஏற்றவாறு அணிசேரா நாடுகள் அமைப்பின் நோக்கங்களை மீளமைப்புச் செய்து, தென் துருவத்தில் அதிக அங்கத்துவம் கொண்ட அமைப்பாக மாற வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.

அந்த மாற்றம் செல்வந்த நாடுகளின் மோதல் மற்றும் அதற்குள் தலையீடுகள் செய்யாத நாடுகளை உள்ளீர்ப்பதற்கான அழுத்தங்களுக்கு எதிரானதாக அமைந்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அதேபோல் தென் துருவ நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தும் நோக்கங்களை நிறைவேற்றும், பல்முனை உலகை கட்டியெழுப்புவதற்கு அணிசேரா நாடுகளின் அமைப்பு ஒத்துழைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.

அணிசேரா நாடுகள் அமைப்பின் 19 ஆவது அரச தலைவர் மாநாட்டில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“அணிசேரா நாடுகளின் 19 மாநாட்டிற்கு தலைமை ஏற்றுள்ளமைக்காக உகண்டா ஜனாதிபதி யொரேவி முசேவேனிக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். தென்துருவ நாடுகளுக்கிடையில் பொது தெரிவுகள் காணப்பட்ட வேண்டிய தீர்மானமிக்க தருணத்தில் உகண்டா அதற்கான களத்தின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளமை காலோசிதமானதாகும்.

தொற்றுநோய் பரவல், கடன் சுமை, காலநிலை அனர்த்தங்கள், புதிய உலகளாவிய போட்டிகள் மற்றும் உலக நாடுகளும் தென் துருவமும் எதிர்கொண்ட பல்வேறு அழுத்தங்களின் பின்னர் நடத்தப்படும் முதலாவது அணிசேரா நாடுகளின் மாநாடு இதுவாகும்.

அரச தலைவர்களே,

நாம் இங்கு சந்திக்கும் வேளையில் காஸா பகுதிகளிலும் அதற்கு அப்பாலான பகுதிகளிலும் மனிதாபிமான மோதல்கள் நீண்டுச் செல்கின்றன. மூன்று மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீன சிவில் மக்கள் கடுமையான துயரங்களையும் இழப்புக்களையும் சந்தித்துவருவதோடு, வலயத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை என்பனவும் கேள்விக்குரியாகியுள்ளன.

இதுவரையிலும் அணிசேரா நாடுகளின் அமைப்பு அமைதிகாத்தது. காஸா எல்லைகள் அழிவடையும் வேளையில் நாம் எவ்வாறு அமைதிகாப்பது? அந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவில்லை என்பதை போலவே அங்கு அதிகளவான அப்பாவி சிவில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமைதி காப்பதால் நாமும் அதற்கு இணக்கம் தெரிவிப்பதை போல் உள்ளது.

உகண்டாவின் தலைமையில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 19 ஆவது மாநாட்டின் ஊடாக காஸா பகுதிகளின் பிரச்சினைகள் தொடர்பிலும் பாலஸ்தின மக்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் சுயாதீனமானதும், சுதந்திரமானமான உரிமைகளை பறிக்க முடியாது என்ற விடயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரியது.

காஸா பகுதிகள் தொடர்பில் தென் ஆபிரிக்கா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டையும் நாம் வரவேற்க வேண்டும். விரைவில் மனிதாபிமான போர் நிறுத்தத்தையும், பணயக் கைதிகளை விடுவிக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல் அல்லாத தனி இராச்சியத்துக்குள் இரு இராச்சியங்களுக்கு தீர்வை தேட முடியாது. பாலஸ்தீனம் இல்லாமல் எந்த தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது.

ஐக்கிய நாடுகள் சபைக்குள் காணப்படும் யோசனைகள் மற்றும் இந்த மாநாட்டின் முன்மொழிவுகளுக்கு அமைய, மேற்குக் கரை, காஸா பகுதி மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகள் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மேலும், காஸா பகுதியின் இன அமைப்பு மாறக்கூடாது. ஐந்து வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்

அரச தலைவர்களே,

நாம் இப்போது பனிப்போரின் பின்னரான நிலைமைகளின் இறுதி நிலை மற்றும் மாற்றம் கண்டு வரும் பல்முனை உலகின் அணுகுமுறைகளை காண்கிறோம். புவிசார் அரசியல் முன்னணியில், முன்னைய பலவான்கள் மற்றும் பலவான்கள் என்ற அந்தஸ்த்தை தக்கைக்கும் நோக்கில் செயற்படும் தரப்பினர்களுக்கு மத்தியில் மறைமுகமான மற்றும் வெளிப்படையான மோதல்கள் மீண்டும் வெடிப்பதையும் நாம் காண்கிறோம். ஐரோப்பாவின் அட்லாண்டிக் சமுத்திரத்தின் இராணுவக் கூட்டணி வலுப்பெற்றுள்ளது. ஆயுதக் கட்டுப்பாட்டு தொடர்பிலான கடந்த கால ஒப்பந்தங்கள் முறிந்துள்ளன.

இராணுவச் செலவு வரலாற்றில் முன்னர் இல்லாத அளவை எட்டியுள்ளது. மேலும், அணு ஆயுதங்கள் குறித்து மீண்டும் பாரிய அளவில் கொள்கை ரீதியிலான கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும். இந்து மற்றும் பசுபிக் சமுத்திரங்களின், நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட பிராந்தியத்தில் ஒரு புவிசார்-மூலோபாய போட்டி உருவாகி வருகிறது. மேலும், விண்வெளி மற்றும் சமுத்திரங்கள் மோதலுக்கு சாத்தியமான தளங்களாக மாறிவிட்டன.

பிரதான சக்திகளுக்கு இடையிலான மூலோபாய போட்டியின் காரணமாக கொள்கை அடிப்படையிலான வர்த்தக பாதுகாப்புவாதத்தின் எழுச்சியால் சுதந்திர வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு பின்னடைவை நோக்கி நகர்கிறது. பிரிந்து செல்லல் மற்றும் இடர்பாடுகளை மட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களினால் இந்த நிலைமை மேலும் விரிவடைந்துள்ளது.

புதிய வர்த்தக முறை குறித்த ஒருதலைப்பட்சமான அறிவிப்பு, உலக வர்த்தக அமைப்பின் பன்முகத்தன்மையை மேற்கத்திய நாடுகளால் புறக்கணிக்கப்பட்டிருப்பதை காண்பிக்கிறது.

டொலர் ஒரு ஆயுதமாக மாறிவிட்டது. பொருளாதாரம் மற்றும் கடன் நெருக்கடி, காலநிலை நீதி, உணவு மற்றும் வலுசக்தி பாதுகாப்பு ஆகியவை புதிய சவால்களாக மாறியுள்ளன.

டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் வாயிலாக, அணிசேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகின் வளர்ந்துவரும் நாடுகள் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மை உருவாகியுள்ளது.

“உலக சுபீட்சத்துக்காக ஒன்றிணைந்த ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்ளல்” என்ற இந்த மாநாட்டின் தொனிப்பொருள், நமது உலகின் இரு துருவங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதிபலிக்கிறது.

அதில் வெற்றிகாண வேண்டும் எனில், அனைவருக்குமான சிறந்த உலகை கட்டியெழுப்புவதற்கான வலுவான மற்றும் ஒன்றுபட்ட அணிசேரா அமைப்பொன்று அவசியப்படுகிறது. இதைச் செய்ய, நாம் நம்மை மீள்கட்டமைத்துக்கொள்ள வேண்டும். அணிசேரா நாடுகளின் அமைப்பு இனியும் வலுவற்ற நாடுகளின் கூட்டாக இருக்காது.

சில ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அடைந்த விரைவான முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக இது நிகழ்ந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2050 ஆம் ஆண்டாகும்போது, உலகின் முதல் பத்துப் பொருளாதாரங்களில் பெரும்பான்மையானவை இந்த அமைப்பிற்குச் சொந்தமானவையாக இருக்கும்.

உலக விவகாரங்களில் தலைமை தாங்கக்கூடிய நாடுகள் நம்மிடையே உருவாகி வருவதையும் காணமுடிகிறது. அவர்கள் தலைமை தாங்க தயாராக இருக்க வேண்டும். ஒரு பாரிய சக்தியாக மாறுவதற்கு பழைய மற்றும் புதிய வலுவான சக்திகளுக்கு இடையே அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் இராணுவ புவிசார் மூலோபாய போட்டி ஏற்படும் போது நாம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் இருக்கின்றன.

அரச தலைவர்களே,

அணிசேரா அமைப்பு உங்கள் தலைமையின் கீழ் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். மேலும், பல்முனை உலகில் தென் துருவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் மிகப்பெரிய கூட்டாக அணிசேரா நாடுகளின் அமைப்பை மாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கு நாம் நமது இலக்குகளை மறுசீரமைக்க வேண்டும். வளர்ந்து வரும் பல்முனை உலகில் ‘பெண்டுங்’ கொள்கைகளைப் பாதுகாப்பதோடு, செல்வந்த நாடுகளின் மோதல்களுக்குள் தலையீடு செய்யாத நாடுகளை உள்ளீர்ப்பதற்கான அழுத்தங்களை எதிர்த்தல், தென் துருவ நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் காலநிலை மாற்றம் தணிப்பு குறித்த அபிலாஷைகளை உள்ளடக்கிய பல்முனை உலகத்தை உருவாக்குதல் மற்றும் அணிசேரா நாடுகளின் தென் துருவ மற்றும் நட்பு நாடுகள் செயற்திறன்மிக்க கூட்டாக மாற்றுவதற்கு நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதேபோன்று, தென் துருவம் எதிர்கொள்ளும் சமகால சவால்களை சமாளிக்கும் திறன் கொண்ட நிரந்தர செயல்பாட்டுக் கட்டமைப்பை நிறுவுவதற்கு நாங்கள் பணியாற்ற வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். மேலும், இந்த புதிய ஒழுங்கை வடிவமைக்கும் திறன் கொண்ட அமைப்பாக நாங்கள் மாற வேண்டும்.

அரச தலைவர்களே,

மது எதிர்காலம் நம் கையில் உள்ளது. அதை உருவாக்கும் அல்லது அழிக்கும் திறனும் நம்மிடமே உள்ளது. அதனை நாம் செய்வோம். அணிசேரா அமைப்பின் 19 ஆவது அரச தலைவர்கள் அமர்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக உகண்டா ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், நிமல் பியதிஸ்ஸ, குமாரசிறி ரத்நாயக்க, உதயகாந்த குணதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.