2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்டதன் மூலம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தி நாட்டில் சுதந்திரமான தேர்தலுக்கு ஒத்துழைப்பது ஜனாதிபதி என்ற வகையில் தனதும் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய தரப்பினரதும் பொறுப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர விசேட அதிரடிப் படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (13) கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் எந்த வகையிலும் வன்முறைகளுக்கும் இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர விசேட நடவடிக்கை மையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கௌரவமாக வரவேற்கப்பட்டார்.
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து, விசேட அதிரடிப் படைக் கட்டளை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி, படையினரின் வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தற்போதைய தளபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசில் ஒன்றை வழங்கினார்.
இந்த கட்டளை மையம் பொது ஒழுங்கு முகாமைத்துவம் மற்றும் மோட்டார் சைக்கிள் குழுவில் பிரதான மையமாக செயல்படும்.
பயங்கரவாத மற்றும் வன்முறை, தீவிரவாத தாக்குதல்கள், வன்முறை ஏற்படுத்தும் எதிர்ப்புகள், பணயக்கைதிகள் தொடர்பான விடயங்கள் மற்றும் ஏனைய நெருக்கடிகள் உட்பட பல்வேறு அவசரநிலைகளை கையாளும் பொறுப்பு இந்தப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”போதைப்பொருள் ஒழிப்புக்காக தற்போதுள்ள அனைத்து பொலிஸ், இராணுவ மற்றும் சிவில் நிறுவனங்களை ஒன்றிணைத்து போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தனியொரு நிறுவனமாக உருவாக்கி, அதற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படும்.
பாதாள உலகக் குழுகளுக்கோ அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கோ நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ அனுமதிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை சட்டத்தில் உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
”நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ இடமளிப்பது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகும் என்தைக் கூற வேண்டும். அதை சட்டத்தில் சேர்க்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்.
அடுத்த மாதத்தில், உங்களுக்கு இன்னொரு பாரிய பணியொன்று உள்ளது. ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, இத்தேர்தலை சட்டரீதியாக நடத்த வாய்ப்பளிப்பது பொலிஸ் திணைக்களத்தின் கடமையாகும். ஜனாதிபதி என்ற வகையில் எனதும் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் கடமையும் ஆகும்.
அது மாத்திரமன்றி, தேர்தலுக்குப் பின்னரும் வன்முறைச் செயல்கள் நடப்பதற்கு இடமளிக்க முடியாது. நாம் அவற்றை நிறுத்த வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பிறகு எந்த வகையிலும் வன்முறைகள் நடைபெறக் கூடாது. அது குறித்து நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்பட்டதாலேயே இன்று இந்தத் தேர்தலை நடத்த முடிந்துள்ளது. நமது அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளதால், நாம் அரசியலமைப்பின் பிரகாரமே புதிய அரசாங்கத்தை நிறுவுகிறோம்.
1931 ஆம் ஆண்டு முதல் இலங்கை மாத்திரமே சர்வசன வாக்குரிமை மற்றும் ஜனநாயகத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தியுள்ளது. மனித உரிமை மீறல் உட்பட வேறு குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆனால் இலங்கை மாத்திரமே இந்த ஜனநாயக முறையைத் தொடர்கிறது. இந்த பொறிமுறையை நாம் பாதுகாக்க வேண்டும்.
அதை ஒருபோதும் மீற இடமளிக்கக் கூடாது. அரசியல் கட்சிகளுக்கு இடையே எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வெற்றி தோல்வியை ஏற்று, வெற்றிபெற்றவரிடம் ஆட்சி கைமாற்றப்படுகிறது. இந்த சூழ்நிலையால் தான் இது சாத்தியமாகின்றது.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டின் அரசாங்கம் கவிழும் நிலை காணப்பட்டது. ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ஆகியவற்றை ஆக்கிரமித்து, பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்து, பிரதமர் அலுவலகத்தையும் ஆக்கிரமித்து, பாராளுமன்றத்தை கைப்பற்றவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றனர்.
ஆனால் எமது இராணுவம் உட்பட சட்டத்தைப் பாதுகாக்கும் அனைவரும் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் அன்றைய தினம் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க முடிந்தது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றவும் நான் அரசாங்கத்தை பொறுப்பேற்று தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
அதனால் இன்று நாட்டில் தேர்தலை நடத்த முடிந்துள்ளது. அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்.
அன்று நாம் எடுத்த நடவடிக்கைகளால்தான் இன்று இந்தத் தேர்தலை நடத்த முடிந்துள்ளது. இன்று பங்களாதேஷ் அரசாங்கம் வீழ்த்தப்பட்டுள்ளது. ஆட்சியைப் பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. எம்.பி.க்கள் கொல்லப்படுகின்றனர்.
பாதுகாப்பு செயலாளர், பிரதம நீதியரசர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.
ஆனால், எமது நாட்டின் பாதுகாப்புப் படையினர் என்ற வகையில் நீங்கள் எடுத்த நடவடிக்கைகளால் நாங்கள் அந்த நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டோம். தற்போது செப்டெம்பர் 21ஆம் திகதி இந்நாட்டு மக்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாட்டில் சட்டம் ஒழுங்கை எல்லா நேரங்களிலும் நாங்கள் பாதுகாத்தோம். எனது நண்பர் முஹம்மது யூனுஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பங்களாதேஷில் சட்டம் ஒழுங்கு விரைவில் நிலைநாட்டப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அதை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது.
இந்த நாட்டின் அடிப்படை உரிமை ஜனநாயகம். அதேபோன்று அரசாங்கத்தின் இருப்புமாகும். சட்டரீதியான அரசாங்கம் ஒன்று இருக்கின்றது என்றால், அந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். நான் அதை 1970 இல் கற்றுக்கொண்டேன். ஐக்கிய தேசியக் கட்சி அன்று எதிர்க்கட்சியில் செயற்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக ஜே.ஆர் ஜயவர்தன , “எங்களுக்கு இந்த அரசாங்கம் பிடிக்கவில்லை. இந்த அரசை தூக்கி எறிய வேண்டும். ஆனால் நாம் அதை ஜனநாயகக் கட்டமைப்பில் செய்ய வேண்டும்” அதேபோன்று, “இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்” எனவே பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்கு நான் பூரண ஆதரவை வழங்குகின்றேன். இது எனக்கு விருப்பமான அரசாங்கமாக இல்லாவிட்டாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்” என்று அவர் கூறினார். அன்றிலிருந்து இன்று வரை எங்களிடம் அந்த கட்டமைப்பு உள்ளது.
1989 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அனுருத்த ரத்வத்த ஆகியோர் ஜனாதிபதி பிரேமதாசவைச் சந்தித்து “எங்களுடைய முழு ஆதரவையும் உங்களுக்கு வழங்குகிறோம்” என்று அறிவித்தனர். அதுதான் நமது வரலாறு.
நீங்கள் 2022 ஜூலை மாதம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதினால், 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி, ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க இந்த நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,
”பொலிஸ் மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப் படைத் தளபதி ஆகியோருடன் சிங்கப்பூர் விஜயம் மேற்கொண்டிருந்த போது இவ்வாறானதொரு கட்டளை செயற்பாட்டு மையம் தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டது. அங்கு, சிங்கப்பூர் அரசாங்கம் அத்தகைய கட்டளைச் செயல்பாட்டு மைய செயல்முறையை விளக்கியது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்ட போது, இலங்கையிலும் அவ்வாறானதொரு கட்டளைச் செயல்பாட்டு மையம் ஒன்றை ஆரம்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது. மேலும் அதற்காக இந்த இடம் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்டது.
பொலிஸ் வரலாற்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே பொலிஸாருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். கடந்த இரண்டு வருடங்களில் பொலிஸாருக்கான உணவு மற்றும் பராமரிப்பு கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணக் கொடுப்பனவு உயர்த்தப்பட்டது. மேலும் பொலிசாருக்கு 500 புதிய ஜீப் வண்டிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பின்னணியில் செய்யப்பட்டவை.
இந்த கட்டளைச் செயல்பாட்டு மையம் மூலம் இந்த நாட்டின் தேசிய அமைதியை பாதுகாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டளைச் செயல்பாட்டு மையம் எதிர்காலத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு கொடுக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்ற பெரும் பங்கு வகிக்கும். ” என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் , தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, சிங்கப்பூர் அரசாங்கத்தின் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கே. சண்முகம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.