ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிற போதும் , இந்த விஜயத்தினால் நாட்டுக்கு பல நன்மை ஏற்படும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஏனைய உலக வல்லரசுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ருவன் விஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன,
அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றதன் பின்னர், அங்கு வெற்றிகரமாக இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நாட்டுக்கு பல சாதகமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுக்கும் (Ajay Banga) இடையில் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களை வெகுவாகப் பாராட்டிய உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா இலங்கையின் புத்தாக்க பாதைக்கான பிரவேசம் மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை உலக வங்கியின் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
இதன்போது தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோலை ((Yoon Suk Yeol) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்த்தோடு , இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற்திட்டத்திற்கு தான் ஆதரவளிப்பதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் தெரிவித்தார். மேலும், இலங்கைக்கு தற்பொழுது தென்கொரியா வழங்கி வரும் தொழில்வாய்ப்புகளை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் எதிர்காலத்தில் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தென்கொரியாவில் பல புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்க எதிர்பார்க்கப் படுவதாகவும் தென்கொரிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நியூயோர்க் நகரில் நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3 ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த விஜயமானது இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவியது.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்ததுடன், தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு நாட்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியதுடன், கடந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு பங்களாதேஷ் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவிற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பங்களாதேஷ் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவரை சந்தித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் பற்றி சுருக்கமான விளக்கமளித்த ஜனாதிபதி, அதனை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார்.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு இணையாக நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் எதிர்காலத்தில் வலுவாக முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்த நேபாள பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசியையும் சந்தித்ததுடன் (Seyyed Ebrahim Raisi), இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான நீண்ட கால உறவுகள் மற்றும் பல வருடங்களாக ஒருவருக்கு ஒருவர் வழங்கிய ஒத்துழைப்புக்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த காலப்பகுதியில் ஈரான் வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டுக்குள் மின்சார உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் ஊடாகப் பெறுவதற்கும் , வனப் பரப்பை 32% ஆக அதிகரிக்கவும், பசுமை வாயு வெளியேற்றத்தை 14.5% குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2040 இல் நிலக்கரிப் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து, 2050 இல் காபன் நிகர பூஜ்ஜியத்தை அடைய எதிர்பார்த்துள்ளதாகவும், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா (Meta) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர். நிக் கிளெக் Sir (Nick Clegg) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றும் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
இதன்போது, இணையத்தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போலிச் செய்திகளை மட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துக்கூறினார். அது தொடர்பில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தபடவுள்ள உத்தேச சட்டமூலத்தின் மூலம், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உயர் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றக் குழுவில் மீளாய்வு செய்து இந்த சட்டமூலம் தொடர்பில் மேலதிக திருத்தங்களை மேற்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப துறை மேம்பாட்டிற்கான இலங்கையின் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது விரிவாக விளக்கமளித்தார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கும் (Kristalina Georgieva) இடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் உள்ள ஐ. நா சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இலங்கையின் நிதித்துறை சீ்ர்த்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
இதன்போது, இலங்கையில் பணவீக்கத்தைக் குறைத்ததுடன், நாட்டில் வர்த்தகத்திற்கு பொருத்தமான சூழலை உருவாக்கியமை மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தையும் அவர் பாராட்டினார் ” என்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.