Published on: செப்டம்பர் 25, 2023

சீதாவக்க ராஜசிங்க மன்னரின் வாழ்க்கை தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டும்

  • சீதாவக்கயின் பெருமையை வெளிப்படுத்தும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – ஜனாதிபதி.

துணிச்சலும் தேசப்பற்றும் மிக்க சீதாவக்க ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இராஜசிங்க மன்னனின் ஆட்சிக்காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னர் சூளவம்சத்தில் குறிப்பிடப்பட்ட விடயமொன்றினால் வரலாற்றிலிருந்து இராஜசிங்க மன்னன் மறக்கடிக்கப்பட்டுள்ளார். போரில் வெற்றி பெற்றவர்களை ஒதுக்கி போரில் தோற்றவர்களை மாவீரர்களாக்கிய வரலாற்றை நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

12,000 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்வு இன்று (25) முற்பகல் ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் நடைபெற்றது. “சீதாவக்க – சிசு அருணலு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பன சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும். பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் விநியோகிப்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மாணவர்கள் சிலருக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

சீதாவக்க இராசதானியின் தொல்பொருள் பெறுமதிகளை ஆராயுமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும், சீதாவக்கவின் வரலாற்றை பிரதிபலிக்கும் அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிக்க உத்தேசித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சீதாவக்க இராசதானி மற்றும் சீதாவக்க ராஜசிங்க மன்னரைப் பற்றிய தகவல்களை எழுதி அனுப்புமாறு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, சிறந்த படைப்புக்கு பரிசு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

சுமார் பன்னிரண்டாயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இன்று பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. பிரதமரின் சீன விஜயத்தின் விளைவே இந்த உதவி கிடைத்துள்ளது. ஹங்வெல்ல ,அவிசாவளை என்பது மேல் மாகாணத்தில் மேம்பட்ட கல்வி முறையைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். அதற்காகப் பெரிய அர்ப்பணிப்பை பிரதமர் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக பெருமளவு நிதியை ஒதுக்க முடியவில்லை. ஆனால், அரசாங்கமென்ற வகையில், அடுத்த ஆண்டு முதல் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளோம்.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பற்றிப் பேசும் போது பாடசாலைக் கல்வி முறையும் டியுசன் கல்வி முறையும் செயற்படுகின்றன. கல்விக்காக அரசாங்கம் செலவழிக்கும் பணத்தைப் போலவே, பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுகின்றனர். இதனைக் கண்டறிந்து புதிய கல்வி முறையைத் தயாரிக்க எதிர்பார்க்கிறோம். கல்வியியலாளர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துகளைப் பெறவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குழந்தைகளுக்கு தேவையான தொழில்சார் கல்வியை வழங்க தேவையான சூழலை உருவாக்க வேண்டும். தொழிற்கல்வியை மறுசீரமைத்து இலங்கையை தொழிற்பயிற்சி கேந்திர நிலையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான தொழில்சார் அறிவைக் கொண்ட ஒரு பிரஜையை உருவாக்கும் திறன் எமக்குக் கிடைக்கும். ஆவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டின் எதிர்கால சந்ததியினரை நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் உருவாக்குகின்றன.

ராஜசிங்க மன்னன் பற்றிய கவிதை ஒன்று இங்கு வாசிக்கப்பட்டது. அன்று ராஜசிங்க மன்னர் இருந்திருக்காவிட்டால் இன்று இலங்கை மொசாம்பிக் அல்லது அங்கோலா நாட்டைப் போன்று மாறியிருக்கும். முழுத் தெற்காசியாவிலும் போர்த்துக்கேயர்களை தோற்கடித்த ஒரே மன்னன் இராஜசிங்க மன்னன் தான்.

சீதாவக்க இராசதானியினால் நம் நாட்டின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. அடுத்த தலைமுறைக்கு அது தொடர்பான அறிவை வழங்கும் வகையில் சீதாவக்க பகுதியில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளேன்.

சீதாவக்க இராசதானி பற்றி பல புராணக்கதைகள் உள்ளன. குறிப்பாக முல்லேரியா போர் இடம்பெற்ற இடத்திலும், தந்துரேயுத்தம் இடம்பெற்ற இடத்திலும் நினைவுச் சின்னங்களை அமைக்குமாறும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தொல்பொருள் திணைக்களத்திற்கும் தேவையான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

நாம் வரலாற்றை மறந்துவிடக் கூடாது. மேலும், இந்நாட்டு மன்னர்கள் ஆற்றிய சேவையை நாம் மறந்துவிடக் கூடாது. ராஜசிங்க மன்னருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சூளவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமொன்றின் காரணமாக, ராஜசிங்க மன்னர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.இந்த வரலாற்றைப் பற்றி நாம் சிந்திக்கவில்லை.

தோற்றவர்கள் வீரர்களாக போற்றப்படுகின்றனர். போரில் வெற்றி பெறுபவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். எனவே, சீதாவக்க ராஜசிங்க மன்னரின் வாழ்க்கைச் சரிதம் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.

குறிப்பாக சீத்தாவக்க புராதனத்தன்மையை வெளிக்கொண்டு வருவதற்கான பணிகளை ஆரம்பிக்குமாறு நான் தொல்பொருள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

ஏனென்றால் இன்னும் சில வருடங்களில் இது ஒரு நகரமாக மாறிவிடும். கோட்டை நகருக்கு நடந்தது சீத்தாவக்கவுக்கும் நடக்க வாய்ப்புள்ளது.எனவே, அதற்கு முன்னர் இந்தப் பணியை ஆரம்பிக்க வேண்டும்.

எதிர்காலத்தை உருவாக்கும்போது, கடந்த காலத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அனைத்து சீதாவக்க பாடசாலைகளின் பிள்ளைகளையும் சீதாவக்க இராசதானி மற்றும் சீத்தாவகவின் வரலாறு பற்றிய விடயங்களை எழுதி எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவற்றில் சிறந்த படைப்பை சமர்ப்பிக்கும் பாடசாலைக்கு பரிசு வழங்கவும் நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டதாவது:

நாட்டின் சிறந்த முதலீடு கல்விதான். அதற்காக அரசாங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும். இன்று சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை உபகரணங்கள் விநியோகப்படுகின்றன. அதற்கு ஜனாதிபதி வருகை தந்ததை நான் பாராட்டுகின்றேன்.

களனி பிரதேசத்தின் முதலாவது மத்திய கல்லூரியாக ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பெருமளவிலான மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றனர். இன்று இப்பாடசாலையில் இருந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.ஹங்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரியின் அபிவிருத்திக்கு அனைத்து அரசாங்கமும் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதை நினைவு கூறவேண்டும் என்றார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் (Qi Zhenhong) தெரிவித்ததாவது:

சீனாவும் இலங்கையும் எப்போதும் பரஸ்பரம் மதிப்பதோடு நம்பிக்கையுடன் செயற்படும் நட்பு நாடுகள் என்பதைக் கூற வேண்டும்.இந்த இரு நாடுகளும் எப்போதும் வலுவான கூட்டாண்மை மூலம் பரஸ்பரம் உதவுகின்றன.

இலங்கை மக்கள் தற்போது தற்காலிக சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையின் கீழ், அந்த சவால்களை எல்லாம் முறியடித்து நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் என நான் நம்புகிறேன். நிலைபேறான அபிவிருத்தியை அடைவதற்கும் அத்துடன் தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கும் சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவை வழங்குகிறது என்றார்.

நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் குமார, யாதாமினி குணவர்தன, மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் த எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, ராஜசிங்க மத்திய கல்லூரியின் அதிபர் ஜகத் சூரசேன மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.