• இலங்கை – இந்தியா ஒன்றிணைந்து செயற்பட மேலும் பல வாய்ப்புகள்
• இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கான பணிகளைத் துரிதப்படுத்த பணிப்புரை
சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை நிறுவ இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கான பணிகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு மேலும் பல வாய்ப்புகள் உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்திய சமூகம் (SLIS) கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் நேற்று (15) மாலை நடத்திய ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
2048 ஆண்டாகும் போது வறுமை இல்லா, வளமான நாடாக இலங்கை உருவாக வேண்டும். அத்துடன், வர்த்தக ஒருங்கிணைப்பே இந்தியாவுடனான இலங்கையின் உறவைத் தீர்மானிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள்,
1946 இல், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் முதலாவது ஆசிய உறவுகள் தொடர்பான மாநாடு நடந்தது. இது ஆசிய நாடுகளை ஒன்றிணைக்க வழிவகுத்தது. பின்னர் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு ஒன்றிணைய அது வழிவகுத்தது. அதற்கமைய ஏனைய நாடுகளின் பிரதானியாக இந்தியா இருக்கிறது. இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஆசியாவின் மூன்று முக்கிய சக்திகள்.
இந்தியாவைப் பற்றி பேசும் போது இரண்டு பேரை மனதில் கொள்ள வேண்டும். மாநிலங்களை ஒருங்கிணைத்த பிரதிப் பிரதமர் வல்லபாய் படேல் மற்றும் இந்தியா என்ற தனித்துவத்தை ஏற்படுத்திய ஐவஹர்லால் நேரு ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இந்திய தேசியக் கொடியில் இருக்கும் அசோக சக்கரம் இந்தியாவின் வெற்றியை காட்டுகிறது. அசோக சக்கரவர்த்தியின் கீழ் பௌத்த சமயம் இலங்கைக்கு வந்தது. இலங்கைச் சமூகத்தின் ஆரம்பம் எவ்வாறு அமைந்தது என்பதை இந்திய தேசியக் கொடி பிரதிபலிக்கிறது.
இந்தியா, வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவிலிருந்து பல பழக்கவழக்கங்கள் எமது நாட்டுக்கு வந்துள்ளன. தமிழ் நாடு மற்றும் கேரளாவில் இருந்து வரும் பழக்கவழக்கங்களில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான சிங்கள மக்கள், ராகு காலத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். இந்த நம்பிக்கை கேரளாவில் இருந்து வந்ததாகும். கேரளாவைச் சேர்ந்த பத்தினி தேவியை நாம் இங்கு வணங்குகின்றோம். இங்கு பௌத்தர்களும் இந்துக்களும் அல்லாத ஏராளமான மக்கள் வாழ்கிறார்கள். தென்னிந்தியாவில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆனை படித்து முஸ்லிம்களாக மாறிய இளைஞர்கள் இங்கு உள்ளனர். உபகண்டமாக இந்தியா, இலங்கை மீது செலுத்தும் செல்வாக்கை இது காட்டுகிறது. இரு நாடுகளும் ஆறுமாத இடைவெளியில் சுதந்திரம் பெற்றன. எங்களுக்கு பொதுவான கலாசார, பாரம்பரியங்கள் உள்ளன. மதம், கலாசாரம், நடனம் போன்றவை பொதுவானவையாக காணப்படுகின்றன. இதேபோன்று இருநாடுகளுக்கும் இடையில் வேறுபாடுகளும் உள்ளன. நாங்கள் அந்த வேறுபாடுகளின் ஊடாகவே உருவாகியுள்ளோம்.
இந்த நவீன யுகத்தில் ஜனநாயகம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகும். எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்த கிரிக்கெட் விளையாட்டை எமக்குத் தந்த பிரித்தானியாவிற்கு நன்றி கூறவேண்டும். பொலிவுட்டை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி கூற வேண்டும். இவையே நம்மை ஒன்றிணைத்துள்ள புதிய விடயங்களாகும். அதனால்தான் எமக்கிடையில் இருப்பது இருதரப்பு உறவு மட்டுமல்ல என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறேன். இந்த உறவு அதையும் தாண்டியது. ரவீந்திரநாத் தாகூரின் மாணவர் தான் எமது தேசிய கீதத்தை இயற்றினார். அவர் நம் அனைவருக்கும் சொந்தமானவர்.
ரவீந்திரநாத் தாகூர் இலங்கைக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தைப் பற்றி எனது தாயார் சொல்லியிருக்கிறார். ரவீந்திரநாத் தாகூருடன் பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்தியாவில் இருந்த பலரின் செல்வாக்கை நாம் பெற்றிருக்கிறோம். நாம் அந்த உபகண்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டோம். தென்னிந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு வட இந்தியாவின் சில பகுதிகளை விட இலங்கையின் சில பகுதிகளே நன்கு பரிச்சயமாகவுள்ளது.
அரசாங்கத்தினால் கலாசாரத்தை வளர்க்க முடியாது. அது தானாக உருவாகக் கூடியது. ஆனால் இந்தியப் பிரதமர், தலதா மாளிகையை வணங்கச் செல்வதும், இலங்கை ஜனாதிபதி திருப்பதியை வணங்கச் செல்வதும் முக்கியமான விடயங்களாகும். உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வகையான பிணைப்பை பார்க்க முடியாது.
இலங்கை – இந்திய பௌத்த உறவை மேம்படுத்துவதற்காக இரண்டு பில்லியன் ரூபாவை பரிசாக வழங்கியமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை, மக்களுக்கு உணர்த்தும் வகையில் புதிய யோசனைகள் மற்றும் திட்டங்களை முன்வைக்க நாம் எதிர்பார்க்கிறோம். விஸ்தரிக்கக் கூடிய துறைகள் தொடர்பில் ஆராயப்படுகிறது. வர்த்தகம் மற்றும் வாணிபம் என்பன அவ்வாறு விஸ்தரிக்கக் கூடிய துறைகளாகும்.
குறிப்பாக இந்திய பொருளாதார உறவுகளை வென்றெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சகாப்தத்தில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒருங்கிணைப்பைக் காண்கிறீர்கள். தெற்காசியாவில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எங்கள் கருத்துப்படி, இந்தியா, இலங்கை, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றை உள்ளடக்கிய வர்த்தக ஒருங்கிணைப்பு உருவாக வேண்டும். இந்தியாவுடன் வர்த்தக ஒருங்கிணைப்பை எட்டுவது முக்கியமானது. 2048 ஆண்டாகும் போது வறுமை இல்லா, வளமான நாடாக உருவாக வேண்டும். உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு போதுமான மொத்த உள்நாட்டு வருமானம் இருக்க வேண்டும். இல்லை என்றால் வளமான பொருளாதாரம் இருக்க வேண்டும். வர்த்தக ஒருங்கிணைப்பே, அண்டை நாடான இந்தியாவுடனான நமது உறவை, தீர்மானிக்கிறது. வர்த்தக ஒருங்கிணைப்பு பொருளாதார அடிப்படையை வழங்குகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் சிறந்த அரசியல் உறவுக்கு பொதுவான பொருளாதார அடித்தளம் அவசியமாகும்.
2018, 2019 ஆம் ஆண்டுகளில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களை செய்துகொள்ள முயற்சித்தோம். அதற்குத் தடையாக இருந்த குழுக்கள் அனைத்தையும் நிறுத்தினேன். இதனைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அரசியல் உயர்மட்டத்துக்கு அறிவித்துள்ளேன். எவ்வாறாயினும், இலங்கை தனது சர்வதேச வர்த்தகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால், நாம் வேறுவிதமாக சிந்திக்க வேண்டும். அதற்காக, அனைத்து சர்வதேச வர்த்தகத்தையும் கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகமொன்றை நிறுவ முடிவு செய்துள்ளேன். நிதி அமைச்சின் கீழ் இந்த அலுவலகம் நிறுவப்படும். இதன்மூலம் எமது வர்த்தகத்தை, சர்வதேச வர்த்தகம் வரை விரிவுபடுத்த முடியும். நிறுவனங்களை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நமது வர்த்தகச் செயற்பாடுகளை எளிதாக்க தனியான அமைச்சு உருவாக்கப்பட வேண்டும். பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் நிலுவையில் உள்ளன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்து செயற்பட மேலும் பல வாய்ப்புகள் உள்ளன. புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி, சுற்றுலா, வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் நாம் இணைந்து செயல்பட முடியும்.
செயல்திட்டங்களுள் இரண்டைப்பற்றி மட்டும் நான் கூற விரும்புகிறேன். முதவாவது நீண்டகால வலுச்சக்திக்கு தீர்வு காணும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான மின்சார இணைப்பு, கடலோர காற்றாலை திட்டம், சம்பூர் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் மற்றும் யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி செயல்திட்டங்கள் என்பவற்றை முன்னெடுக்க வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை நாம் வழங்கியுள்ளோம். இவ்விடயத்தில் இந்தியா முதலில் அடியெடுத்து வைத்துள்ளது. எனினும், புத்தளத்திலிருந்து முல்லைத்தீவு வரை பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் அதே சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கும் மின்சாரத்தை வழங்கினால் வடக்கின் பொருளாதாரத்திலும் முன்னொருபோதும் இல்லாத வகையில் முன்னேற்றத்தைக் காண முடியும். இது வடக்கின் பொருளாதாரத்தில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தும்.
அடுத்ததாக இலங்கையில் நிறுவ முன்வரும் இந்திய உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
திருகோணமலையிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. வடக்கைப் பொறுத்தவரை அதன் மேற்குப் பகுதி புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது போன்றே அதன் கிழக்குப் பகுதி துறைமுகத்துக்காக முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவுக்கும் பங்களாதேஷிற்கும் இது பிரதான துறைமுகமாக இருப்பதனால் இதன் அமைவிடம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய எண்ணெய் கம்பனி (IOC) மேலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனத்திடமிருந்து வாங்க தீர்மானித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை இந்திய சமூகத்தில் சுமார் 800 இற்கும் மேற்பட்ட இலங்கை இந்தியப் பிரஜைகள் வாழ்நாள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். இச்சங்கம் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் மிக நெருக்கமாக பணியாற்றி வருகின்றது.
முதல் பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால் பாக்லே, இந்திய இலங்கை சங்கத்தின் தலைவர் கிஷோர் ரெட்டி, ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.