ஐக்கிய மக்கள் சக்தி,ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் செய்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி,ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
வழமையான அரசியலில் செயற்பட்டு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை எதிர்த்து, அதனை சீர்குலைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, நாடு 2022ல் இருந்த நிலைமைக்குத் திரும்ப இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (01) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
“மீண்டும் வீழாத பெருமைமிகு நாடு என்றென்றும்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கயாஷான் நவனந்தனவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி முடிவடைந்து விட்டதாகத் தெரிவித்து கட்சியை சிலர் புதைக்கத் தயாராக இருந்தாலும், புதையுண்டுள்ள பொருளாதாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியே மீட்டெடுத்தது.
நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக மற்றும் பொருளாதார மறுமலர்ச்சியையே இன்று நாடு பூராகவும் நடைபெறும் மே தின பேரணிகள் எடுத்துக் காட்டுவதாக தெரிவித்த ஜனாதிபதி, காலி முகத்திடலில் இருந்து துரத்தப்பட்ட எதிர்கட்சி தலைவருக்கு தமது கட்சியின் மேதினக் கூட்டத்தை செத்தம் வீதியில் நடத்தக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கும் திட்டமொன்றை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
முதலில் இந்த மே தின பேரணிக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சி முடிந்துவிட்டதாக சிலர் நினைத்தனர். கட்சியை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்றார்கள். ஆனால் புதையுண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு நாம் புத்துயிர் கொடுக்க வேண்டியிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சவப்பெட்டிக்கு கடைசி ஆணி அடிக்கப்பட்டதாக 1956ஆம் ஆண்டு கூறப்பட்டது. ஆனால் ஐ.தே.க மீண்டும் வலுப்பெற்றது. 1970ல் ஐக்கிய தேசியக் கட்சி முடிந்து விட்டது என்று கூறப்பட்டது. ஆனால் நாங்கள் 17 வருடங்கள் ஆட்சி செய்தோம். முடிந்து விட்டது என்று கூறிய ஐக்கிய தேசியக் கட்சி தான் இன்று நாட்டைக் காப்பாற்ற முன் வந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்குவதற்கு பிரதமர் டி.எஸ். சோனாநாயக்க சுபநேரம் பார்த்தார். அந்தக் கூட்டம் காலையில் நடைபெறாமல் மாலையில் நடைபெற்றது. மேலும் இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதற்கும் சுபமுகூர்த்தம் பார்க்கப்பட்டது. எனவே நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தான் சுபமுகூர்த்தம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால்தான் வீழ்ந்த நாட்டைஎம்மால் உயர்த்த முடிந்தது.
இன்று கொழும்பைச் சுற்றி பல மே தினப் பேரணிகள் நடைபெறுகின்றன. கெம்பல் மைதானத்தில் பொதுஜன பெரமுனவும் , செத்தம் வீதியில் ஐக்கிய மக்கள் சக்தியும் தலவாக்கலையில் திகம்பரமும், கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும், யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பியும் இன்று மே தினக் கூட்டங்களை நடத்துகின்றன. இதுதான் ஜனநாயகம். நான் சர்வாதிகாரி என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இன்று நடுவீதியில் கூட்டங்களை நடத்தலாம். என்னை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். இந்த நிலைமை இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் இருக்கவில்லை.
அன்று எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்பட்டு காலிமுகத்திடலில் இருந்து துரத்தப்பட்டார். ஆனால் இன்று அவரது மே தின பேரணியை செத்தம் வீதியில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஜனநாயகம். இந்த நாட்டின் அரசியல் முறைமை சீர்குலைந்ததால் நான் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆனேன்.
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் பிரதமர் பதவி விலகும்போது எதிர்க்கட்சித் தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவார். ஆனால் நம் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல ஏனைய அனைத்துக் கட்சிகளும் பின்வாங்கி ஓடிவிட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளும் எவருக்கும் ஆதரவளிப்பதாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த பொதுஜன பெரமுன அறிவித்திருந்தது. முதலில் எதிர்க்கட்சித் தலைவரிடம் வினவப்பட்டது. ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் ஜேவிபி முன்வரவில்லை. இறுதியாக, தனியொரு எம்.பி.யை கொண்ட கட்சியின் தலைவர் என்ற முறையில், நான் நாட்டின் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் சவால்களில் இருந்து ஓடியதில்லை. இதை ஏற்க வேண்டாம் என்று சிலர் கூறினர். ஆனால் நாங்கள் அனைவரும் ஒன்றாக முன்னேற்றம் கண்டோம்.
அன்று ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் பாராளுமன்றத்தை கைப்பற்ற முயன்றார்கள். இதையடுத்து பாராளுமன்றத்தில் இருந்த அனைவரும் ஓடிவிட்டனர். நான் என்ன செய்யலாம் என்று இராணுவத் தளபதி என்னிடம் கேட்டார். கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு என்ன நடந்தது என்று கேட்டேன். அனைவரும் சென்றுவிட்டதாக சொன்னார். அப்படியானால் பாராளுமன்றத்தைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு என்று அவரிடம் சொன்னேன்.
அன்று தப்பி ஓடியவர்கள் இன்று பாராளுமன்ற ஜனநாயகம் பற்றி எப்படி பேசுகிறார்கள்? அந்தக் குழு பதவியில் இருந்திருந்தால், இன்றைய நாட்டின் நிலைமையை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
இன்று சகல இடங்களிலும் மே தினக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் பஸ்களில் வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன், பஸ்களை இயக்குவதற்கு எரிபொருள் இருக்கவில்லை. சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்றும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன. புத்தாண்டை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள். இப்போது மே தினத்தை கொண்டாடுகிறோம். இன்னும் மூன்று வாரங்களில் வெசாக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும். அப்பொழுது கொழும்பு மீண்டும் மக்களால் நிரம்பியிருக்கும்.
அரசாங்கத்தை நாம் துணிச்சலுடன் முன்னோக்கிக் கொண்டு வந்ததாலேயே கண்டி பெரஹெராவை கண்டுகளிக்கவும் நல்லூர் திருவிழா மற்றும் தெவிநுவர பெரஹரா போன்றவற்றை பார்வையிடச் செல்வதற்கும் உகந்த சூழல் உருவானது. இதற்காக உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மொட்டுக் கட்சியின் ஒரு பகுதியினர் ஒத்துழைப்பு வழங்கினர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு தரப்பினரும் உதவ முன்வந்தனர். டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பினர் எங்களுடன் இணைந்துச் செயற்படுகின்றனர். கட்சி சின்னமொன்று இல்லை. மொட்டுக் கட்சியின் ஒரு குழு எம்மோடு இணைந்தது. மற்றுமொரு குழு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டது. மிகவும் சிரமப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளோம். எமது தீர்மானங்கள் வெற்றியளிக்கும் என்று எவரும் நினைக்கவில்லை. மேலும், குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சிரமத்துடனாவது அந்த தீர்மானங்களை எடுத்தோம்.
சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தின் போது புதிதாக பணத்தை அச்சிட முடியாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அரச வங்கிகளில் கடன் வாங்கவும் முடியாதென அறிவிக்கப்பட்டது. அரசு வருமானம் ஈட்ட வேண்டும் என்றும் தெரிவித்தனர். ரூபாயை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கஷ்டமாக இருந்தாலும் அதற்கான முடிவுகளை எடுத்தோம். மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியும் அப்போது என்ன சொன்னார்கள்? ஆனால் இன்று நாட்டின் நிலைமை என்ன? இன்று ரூபாயின் பெறுமதி பலப்படுத்தப்பட்டுள்ளது. டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி 280 ஆக உள்ளது. ரூபாய் பெறுமதி வலுவடைந்திருப்பதால் மக்கள் கையிலிருக்கும் பணத்தின் மதிப்பு அதிகரிக்கிறது.
தற்போது, பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகின்றனர். மேலும், கடந்த பெரும்போகத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. மேலும் தொழில்கள் மீண்டும் உயிர்பெறுகின்றன. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்கும் வகையில் பராட்டே சட்டத்தை ஒரு வருடத்திற்கு அமுல்படுத்தாதிருக்க நடவடிக்கை எடுத்தோம். மேற்படித் துறைகளை பாதுகாப்பதற்காக தனிப் பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
அதனால் மிகவும் சிரமப்பட்டே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தினால் அந்த பாதுகாப்பு கிடைத்துள்ளது. இந்த நிலைமையை பாதுகாத்து முன்னேறிச் செல்வதா? அல்லது நாட்டை 2022 இல் இருந்த நிலைக்கு கொண்டுச் செல்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிராக செயற்படக்கூடாதென கேட்டுக்கொள்கிறேன்.
வேலைத்திட்டத்திற்கு இடையூறு செய்யவும் வேண்டாம். இந்த நிலையைப் பாதுகாக்க மக்களைப் பற்றிச் சிந்தித்து அரசாங்கத்துடன் இணைந்துச் செயற்பட முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். 2003 ஆம் ஆண்டு டோக்கியோ மாநாட்டிற்குச் சென்று 03 பில்லியன் டொலர்களை இலங்கைக்குக் கொண்டு வந்தேன். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஒரு பில்லியன் டொலர்களை வழங்கினார்.
அதனால் 04 பில்லியன் டொலர்கள் கிடைத்தன. ஆனால் 2004 ஆம் ஆண்டில் அனைத்தும் மாறியது. அதனால் அவர்கள் திரும்பிச் சென்றனர். அந்த 04 பில்லியன் டொலர்கள் எம்மிடம் இருந்தால் இன்று அதன் பெறுமதி 10 பில்லியன் டொலர்களாக இருக்கும். 2018-2019 க்குள் வரவு செலவுத் திட்டத்தில் உபரி ஏற்பட்டது. அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது.
தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை மாற்றினால் நெருக்கடி ஏற்படலாம். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைகள் மற்றும் நாட்டின் துரித அபிவிருத்திக்கு தேவையான நிபந்தனைகள் அடங்கிய சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன். அதற்கு ஆதரவு தருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் அதற்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதோடு, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாகவும் மாற வேண்டும். இந்த நாட்டின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. நாட்டு மக்கள் இன்னமும் கஷ்டத்தில் வாழ்கின்றனர். பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். 03 வருடங்களாக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஓரளவு சரிவடைந்தது. எனவே இளைஞர்களுக்கான எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். பழைய பொருளாதார முறைமையினால் இதனைச் செய்ய முடியாது. இதற்கு பொருளாதாரம் திறக்கப்பட்டு புதிய முதலீடுகள் கொண்டுவரப்பட வேண்டும்.
கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் நிறுவனங்களின் வருமானம் குறைவடைந்திருந்தது. நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக 04,05 பில்லியன் டொலர்களை தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். வறுமையை ஒழிக்க கிராமப் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்த வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். நலன்புரித் நிவாரணத் தொகை மூன்று மடங்காக மேம்படுத்தப்பட்டுள்ளன. பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தனியார் துறையினருக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதற்கான திட்டத்தை முன்வைக்கிறேன்.எனவே, பாரம்பரிய அரசியலை கைவிட்டு எம்மோடு இணையுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுக்கிறேன். அதேபோல், நாட்டிலிருக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஆதரவளிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.