மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்தால்
மட்டுமே முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், சர்வகட்சி ஆட்சி
ஒன்றுக்காக பலமான சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சிகளின் மக்கள்
பிரதிநிதிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக கண்டியில் தெரிவித்தார்.
இரண்டு கட்சிகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து, அதற்காக மௌனம்
காக்காமல், நாட்டின் உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு
அணியாக ஒன்றிணைந்து புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும் எனவும்
ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள்
உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் கடந்த (30) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
காலாவதியான பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பதிலாக புதிய பொருளாதாரக் கொள்கையின்
முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், அனைவரும் புதிதாகச்
சிந்தித்து, புதிய பயணத்திற்குத் தயாராக வேண்டும் எனவும், மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு
காணாமல் பழைய கோஷங்களைச் சொல்வதில் பயனில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூறியதாவது:
“இன்று நான் ஜனாதிபதி என்ற வகையில் சம்பிரதாயபூர்வமாக புனித ஸ்ரீ தந்த தாதுவை வழிபடவும்
மகாநாயக்க தேரர்களின் ஆசியைப் பெறவும் கண்டிக்கு வருகை தந்துள்ளேன். குறிப்பாக எமது
மல்வத்து, அஸ்கிரி தேரர்கள் அங்கு வழங்கிய அறிவுரைகளுக்கு நான் நன்றி கூறுகின்றேன்.
இந்தப் பணியை முடித்த பின்னர், இங்கு குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய
தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் இங்கு
கூடவுள்ளனர். இது சம்பிரதாயம் அல்ல, சம்பிரதாயம் என்றால் இரு தரப்பும் வாதிடுகின்றனர்.
யாருக்கும் வழிவிடுவதில்லை. சில நேரம் கொஞ்சம் மோதிக்கொள்வர். ஆனால் இது ஒரு புதிய
விடயம். இவர்கள் அனைவரும் இன்று இங்கே அமர்ந்திருக்கிறார்கள். அதுதான் வித்தியாசம். ஏன்
இந்த மாற்றம் ஏற்பட்டது? இந்த நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்த அழுத்தம்
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மாற்றத்தால் நான் ஜனாதிபதியானேன். தினேஷ்
குணவர்தன அவர்கள் பிரதமரானார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த பதவியை
இராஜினாமா செய்தார். பொருளாதார காரணங்களால் அந்த மாற்றம் ஏற்பட்டது. மற்ற
அறிவித்தல் இல – 15
2022.08.01
2
காரணங்களால் அல்ல, எண்ணெய் இல்லாமல்போனது, உரம் இல்லாமல்போனது இப்படிப் பல
பிரச்சினைகள் எழுந்தன. அங்கிருந்து அந்த அழுத்தம் வெடித்தது.
இவ்வாறு ஏற்பட்ட போராட்டங்களுக்கு, ஆர்ப்பாட்டங்களுக்கு நாம் எதிர்பாராத விதமாக ஏனைய
அமைப்புகள் வந்து போராட்டம் என்ற போர்வையில் வேறு பலன்களைப் பெற்றன.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பாசிச பயங்கரவாதத்தை எதிர்கொண்டோம். வீடுகளை
எரிப்பதும், புத்தகங்களை எரிப்பதும் ஹிட்லரிடமிருந்து கற்றுக்கொண்டதாகும். விடுதலைப் புலிகள்
துப்பாக்கிச் சூடு நடத்தினர், குண்டு வெடிப்புகளை நடத்தினர். எங்களிடம் முதன்முறையாக ஒரு
பாசிசக் குழுவும் சில சிவில் அமைப்புகளும் அங்கு வந்தன. பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதன்
பின்னர்தான் நான் ஜனாதிபதியாக பதவியேற்றேன்.
நான் ஜனாதிபதியாக பதவியேற்றாலும் இந்த நாட்டில் பொருளாதார அழுத்தம் மறையவில்லை.
மக்களின் பிரச்சினைகளும் அவ்வாறே இருக்கின்றன. எரிவாயு இல்லை, உரம் இல்லை, எரிபொருள்
இல்லை, பொருட்களின் விலை உயர்வு, வேலை வாய்ப்பு இல்லை, இன்று அபிவிருத்திக்கான
மூலதனப் பணம் இல்லை. இவை அனைத்தும் இந்த கிராமங்களில் இருக்கின்றன. இம்மக்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாம் அதிகரிக்கிறோமா அல்லது குறைக்கிறோமா என்பதை சிந்திக்க
வேண்டும். அதற்காகத்தான் நீங்கள் அனைவரும் இங்கு வந்திருக்கிறீர்கள். நமது நாட்டின்
பொருளாதார நிலையைப் பார்க்கும்போது இது மேலும் வீழ்ச்சியடைந்தால் நாடு காணாமல்
போய்விடும்.
இந்த ஆண்டு நமது பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% குறைந்துள்ளது. அதாவது அது
அதிக அளவைக் கொண்டது. அடுத்த ஆண்டு நாம் எடுக்கும் நடவடிக்கைகளால் இது 3%
அதிகரிக்கும். அதன் பிறகு வருடத்தில் 1% உபரியாகப் பெறலாம். நமது பணவீக்கம் அதிகரித்து
வருகிறது. இவை யாரையும் பயமுறுத்துவதற்காக கூறவில்லை. இவற்றுக்குத் தீர்வு காண வேண்டும்.
அந்த தீர்வுகளின் மூலமே நாம் புதிய அரசியலுக்கு வர முடியும்.
தீர்வுகளைத் தேடாமல் பழைய கோஷங்களைச் சொன்னால் மட்டும் போதாது. ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷ உரம் கொண்டு வராததால் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக சிலர்
தற்போது கூறுகின்றனர். ஐஎம்எப்க்கு குறித்த நேரத்தில் செல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டது
என்று எங்கள் கட்சி கூறுகிறது. இந்த அரசாங்கம் மாத்திரமன்றி முன்னைய அரசாங்கமும்
பாரியளவில் கடன்களை பெற்றுக் கொண்டமையினால் இவ்வாறு இடம்பெற்றதாக பொதுஜன
பெரமுன கூறுகின்றது. நான் கேட்கிறேன், இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் உள்ளன, நாங்கள்
இதைப் பற்றி விவாதிக்கிறோமா அல்லது நாங்கள் வேலை செய்கிறோமா, கோட்டாபய ராஜபக்ஷ
அவர்கள், உரம் கொண்டு வரவில்லை என்று வாதிடுவதால் என்ன பயன்? ஒரு உரக் கப்பலைக்
கொண்டுவர முடியுமென்றால் தயவுசெய்து வாதிடுங்கள். கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சர்வதேச
நாணய நிதியத்திற்குச் செல்லவில்லை என்று வாதிடுகின்றனர். அதன் மூலம் ஒரு எண்ணெய்
கப்பலைக் கொண்டுவர முடியுமென்றால் வாதிடுங்கள். நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த கடன்
சுமை அதிகரித்தது என வாதிட்டு 50 மில்லியன் டொலர் பெற முடியுமென்றால் வாதிடுங்கள். இந்த
வாதாட்டங்களால் நாடு வளர்ச்சி அடையப் போவதில்லை. இவை இப்போது நடந்து
முடிந்துவிட்டன.
நமது முக்கியமான காலத்தை இந்தப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கா அல்லது இவற்றுக்கு
தீர்வை காண்பதற்கா செலவிட வேண்டும்? ரணில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஊர்வலம்
செல்வதாக சிலர் கூறி வருகின்றனர். தயவு செய்து அப்படி செய்யாதீர்கள். எனக்கு போக வீடு
இல்லை. நீங்கள் தயாரென்றால் ஒரு பெரிய கூட்டத்தை கொண்டு வர, 06 மாதங்களுக்குள் எனது
வீட்டை கட்டித் தாருங்கள்.
3
நான் எனது வீட்டைக் கட்டி, எனது வீட்டுக்குச் சென்ற பின்னர், வீட்டைக் கடந்து செல்லும்போது
ரணில் வீட்டுக்குப் போக வேண்டுமென்று கூறுங்கள். இல்லாவிட்டால் வீடற்றவனை வீட்டுக்குப்
போகச் சொல்வதில் பயனில்லை. இது வெறும் நேர விரயமாகும். கிராமத்தைக் கட்டியெழுப்புங்கள்,
அல்லது எனது வீட்டைக் கட்டுங்கள், அதில் ஒன்றைச் செய்யுங்கள், ரணிலை வீட்டுக்குப் போகச்
சொல்லாதீர்கள்.
நாங்கள் பழைய அரசியலில் இருக்கிறோம். ஆர்ப்பாட்டத்தை நோக்கி விரலை நீட்டுவது, அவரை
நோக்கி விரலை நீட்டுவது, இதன் மூலம் பணவீக்கம் குறையுமா? இதன் மூலம் மொத்த உள்நாட்டு
உற்பத்தி அதிகரிக்குமா? எரிபொருளைப் பெற்றுக்கொள்ள, பெரும் போகத்திற்கு உரத்தைப்
பெற்றுக்கொள்வதற்கு நாம் இப்போது பணம் தேட வேண்டும். இது தானே அரசியல் என்பது,
இவற்றையே நாம் செய்ய வேண்டும்.
நான் பிரதமராகி நிதி அமைச்சரான பின்னர் ஐ.எம்.எஃப். அமைப்புடன் கலந்துரையாடினேன். அந்தக்
கலந்துரையாடல் மூலம் பல தீர்வுகளைக் கொண்டு வந்தோம். ஜூலையில் ஒரு உடன்பாட்டை
எட்டுவதும், பின்னர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தை எட்டுவதும் எனது
நோக்கமாக இருந்தது. ஆனால் ஜனவரி 9 முதல் இன்று வரை எதுவும் இருக்கவில்லை. இப்போது
ஆகஸ்ட் இறுதி வரை அது தாமதமாகிறது. அதன் பிறகு, செப்டெம்பர் மாதத்திற்குள் அதற்கு ஒப்புதல்
அளிக்க முடியும். இந்த ஒப்பந்தம் இல்லாமல் யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள். நாம் இன்னும்
இந்த அரசியலில் செல்வதா? இன்னும் இந்த அரசியலில் இருப்பதா? நாம் புதிதாகச் சிந்திப்பதா?
இந்த நாடு சீர்திருத்தப்பட வேண்டும் என்று முதலில் இந்த இளைஞர்கள் போராட்ட களத்திற்கு
வந்தனர். அதில் எனக்கு எந்த விவாதமும் இல்லை. அது மற்றவர்களால் கையேற்கப்பட்டு
வன்முறையாக மாறியது.
நமது கிராமங்களை எவ்வாறு அபிவிருத்தி செய்வது? IMF உடன் ஒப்பந்தம் செய்தோம். பணம்
கிடைத்ததும் பிரச்சினை முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டாம். எங்களின் கடன் சுமை
அதிகரித்துள்ளது. இந்த கடனை எப்படி செலுத்துவது, மேலும் மேலும் அந்நியச் செலாவணி தேவை.
புதிய வழிகள் வேண்டும், நமது விவசாயத்தை நவீனமயமாக்க வேண்டும். நாம் இவற்றைப் பார்த்துச்
செயற்படுவதா அல்லது கோஷம் போடுவதா என்று இங்குள்ள பொதுஜன பெரமுன
உறுப்பினர்களும் ஐ.தே.க. உறுப்பினர்களும் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும்.
ஏனெனில் இந்த சவாலை ஏற்காவிட்டால் இந்த நாடு இல்லாமல் போய்விடும். அடுத்த தலைமுறை
நம்மை சபிக்கும். நாம் விழுகிறோமா அல்லது எழுவோமா என்பதே இன்று எமக்குள்ள சவாலாகும்.
நாம் இதனைப் பொறுப்பேற்று புதிய இலங்கையை உருவாக்குவதா, பலமான நடுத்தர வர்க்கத்தை
உருவாக்குவதா, விவசாயத்தை நவீனமயப்படுத்துவதா, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை
உருவாக்குவதா?
தற்போதைய பொருளாதாரம் 1977இல் திரு. ஆர். ஜெயவர்தன அவர்களால் உருவாக்கப்பட்டது.
நான் அதில் ஒரு அங்கம். அந்த பொருளாதாரத்தின் காலம் இப்போது முடிந்துவிட்டது. குறிப்பாக
இந்த சம்பவங்களால் பொருளாதாரம் சரிந்துள்ளது. நாங்கள் அங்கு செல்ல முடியாது. அதற்கு முன்
ஆங்கிலேயர் காலத்துக்குச் செல்ல முடியாது. கண்டி யுகத்துக்கும் போக முடியாது. புதிதாக சிந்தித்து
முன்னேற வேண்டும்.
நமது கிராமங்களை நவீனப்படுத்த வேண்டும். நம்மிடம் இன்னும் டிஜிட்டல் பொருளாதாரம் இல்லை.
நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். அந்தப் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். அவற்றை நாம் பிரிந்து
4
செய்வதா, ஒன்றிணைந்து அந்தச் செய்தியை சொல்வதா, வேறு யாராவது வந்து பிரிக்க
இடமளிப்பதா?
கட்சி வேறுபாடின்றி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது நமது முதல் கடமை. வீடுகளை எரிப்பதை நான்
ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். அரசியல் ரீதியாக எமக்கு மாறுபட்ட கருத்துக்கள்
இருந்தாலும் அதன் காரணமாக நட்பை இழக்க விரும்பவில்லை. நாம் புதிதாக சிந்தித்து புதிதாக
முன்னேற வேண்டும். அந்தச் செய்தியை கிராமத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இன்று கிராமம்
வெறுமனே உள்ளது. பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டும்
மௌனமாக உள்ளன. ஏன் மௌனமாக இருக்க வேண்டும். அரசாங்கம் நம் கைகளில் இருக்கிறது?
ஒன்றாக இந்த செய்தியை வழங்குவோம்.
அதனால்தான் அனைத்து கட்சி தலைவர்களையும் சர்வகட்சி ஆட்சி அமைக்க அழைத்தேன். நாட்டின்
பிரச்சினைகளைத் தீர்க்க இதுவே சிறந்த வழியாகும். அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அதைப் பற்றி யாரும் வாதிடுவதில்லை. கொழும்பில் சிலர் வாதிடுகிறார்கள், ஆனால் கிராமத்தில் அது
இல்லை. கிராமத்து விகாரைக்கும் பாடசாலைக்கும் செல்லுங்கள். அங்கு என்ன கூறுகிறார்கள்? நாம்
ஏன் அந்த செய்தியை கொடுக்கக்கூடாது. இப்படித்தான் நடந்தது என்று ஏன் சொல்லக்கூடாது? நாம்
இப்போது இணைய வேண்டுமென்று ஏன் சொல்லக்கூடாது?
கடந்த மே 09 முதல் நீங்கள் அனைவரும் படும் வேதனையை நான் அறிவேன். சிலர் வீடுகளை
இழந்தனர். சிலர் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, பெரிய அச்சுறுத்தல்கள் இருந்தன.
உங்கள் அனைவரையும் கொன்று விடுவார்கள் என்றார்கள். அந்த காலம் இப்போது முடிந்துவிட்டது.
ஒன்று கூடுவோம். நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைப்போம். அதைத்தான் நான் சொல்கிறேன். இங்கு
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய இரு குழுக்களும் உள்ளன. அதை பற்றி
பேசுவதற்கு. நான் வரும்போது இந்த மண்டபத்தின் மீதிப் பகுதியும் நிரம்பியிருக்க வேண்டும் என்று
நான் விரும்புகிறேன். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணி
உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் இவர்களையும் அழைத்து வர முடியாதா?
இதனை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன என மட்டுப்படுத்துவதில் பயனில்லை.
தனித்தனியாக வாக்களிக்க வர வேண்டுமானால் அது தனி. அதைப் பற்றி பிறகு பேசலாம். இன்று
கிராமத்தில் உணவு இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள் இருக்கிறார்கள். அதைப் பற்றி தெரிந்து
கொள்வோம். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் அது தொடர்பில் பொறுப்பு உண்டு என்பதை
நான் கூற விரும்புகின்றேன், அடுத்த இரண்டு வாரங்களில் புதிய முறைமையினை அறிவிப்போம்.
கண்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.தே.க பிரதிநிதிகள் அனைவரும் உள்ளூராட்சி
சபைக்கு சென்று பேச வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன். இந்த செய்தியை நாட்டுக்கு
கொடுங்கள். சர்வகட்சி ஆட்சியை விரும்பும் பெரும் சக்தியை உருவாக்குவோம். இதைச் செய்வது
எளிது, நாங்கள் இப்போது அமைதியாக இருந்தது போதும்.
இப்போதே பேச ஆரம்பியுங்கள். நாட்டு பிரச்சினைகளை மக்களிடம் கூறுவோம், இதுதான்
பிரச்சினை. இப்பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். எண்ணெய் வரிசைகளை
அகற்றவும், உரம் கொடுக்கவும், கிராமத்தில் உள்ள பிரச்சினைகளை சொல்லுங்கள். எனவே,
கண்டியில் உள்ள இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நான் அந்தக் கோரிக்கையை
முன்வைக்கிறேன். இதை இந்த இரண்டு கட்சிகளுடன் மட்டும் மட்டுப்படுத்தாதீர்கள். யார்
வேண்டுமானாலும் வரட்டும். அந்த சக்தியை அதிகரிக்கவும். அப்போது அதிக சக்திவாய்ந்த சத்தம்
இங்கு வருகிறது. நாட்டின் சாமானிய மக்களின் குரல்கள் வருகின்றன. இந்த பொதுவான செய்தியை
5
ஒரு குழுவாக செயற்படுத்தி நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து
அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று கூறுகிறேன்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட
ஆலோசகருமான திரு.ருவன் விஜயவர்தன அவர்கள்.
பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறோம். பொருளாதார நெருக்கடியின் மிக
மோசமான காலகட்டத்தை நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். இந்த பொருளாதார
நெருக்கடியில் இருந்து வெளியே வர வேண்டுமானால், இந்த நாடு முன்னேற வேண்டுமானால், கட்சி
பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கட்சி நிற வேறுபாடுகளை பார்த்துக்
கொண்டிருந்தால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள
முடியாது. இந்த நாட்டை மீட்பதற்கு நாம் அனைவரும் கட்சி அரசியலை விடுத்து பாராளுமன்றத்தில்
உள்ள அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைய
வேண்டும்.
கட்சி அரசியல் மட்டுமின்றி, கடந்த காலத்தில் நாடு என்ற வகையிலும் பிரிந்திருந்தோம். மதம் மற்றும்
சாதியால் பிரிந்திருந்தோம். இவ்வாறான வேறுபாடுகளை வைத்துக்கொண்டு நாம் முன்னேற
வாய்ப்பில்லை. நாம் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும். அதன் மூலமே இந்த
நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.
இந்த நாட்டை எப்படி மாற்ற வேண்டும் என்பது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சில
இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்கள் உள்ளன. போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து
கொண்டனர். நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சர்களின் வீடுகள் பல எரிக்கப்பட்டன. ரணில் விக்கிரமசிங்க
அவர்களின் வீடும் எரிக்கப்பட்டது. நாட்டை சீர்குலைத்து இந்த நாட்டின் தலைமையை எடுக்க
வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். இந்த நாட்டில் ஸ்திரமின்மை ஏற்பட்டால் அவர்களால்
கூட இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்த நாட்டை மீட்க முடியாது.
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்த நாட்டில் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். IMF உடன்
தொடர்ந்தும் பயணிக்க இந்த நாட்டில் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை
இருக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி செல்ல முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார அவர்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன
இரண்டாகப் பிரிந்து சண்டையிட்டும், வீடுகளை எரித்தும், தாக்குதலும், உடமைகளை அழித்தும்,
உயிர் சேதமும் செய்து அரசியலில் ஈடுபட்டன. அந்த வெறுப்புடன் செயற்பட்டவர்கள் அனைவரும்
இன்று ஒரு இடத்திற்கு வந்துள்ளனர். ஜுலை 30ஆம் திகதியை வெறுப்பை நிறுத்தி, எதிர்கால
நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படும் நாளாகவே நான் பார்க்கிறேன்.
இதில் நாளுக்கு நாள் வீழ்ந்தோம். எங்கள் உயிர் போனது. சொத்துக்களை இழந்தோம். வெறுப்பில்
வாழும் மக்களாக நாம் மாறியிருந்தோம். அந்த மாற்றத்தை மீண்டும் மாற்றி, எமது கட்சியின் தலைவர்
கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீது முன்னர் நம்பிக்கை வைக்காத, ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 134
உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்கவும், இன்று வீழ்ந்துள்ள பொருளாதாரத்திற்கு
முகங்கொடுக்கக்கூடிய வகையில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், மருந்துகள், எரிபொருள்,
எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், கல்வியை மீண்டும் இயல்பு நிலைக்கு மீட்டெடுத்தல்,
6
இந்த அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்கக்கூடிய தேசிய மற்றும் சர்வதேச தலைமைத்துவத்தைக்
கொண்ட ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் என்பதை உணர்ந்து, அனைவரும்
ஒன்றிணைந்து ரணில் விக்கிரமசிங்க அவர்களை இந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க
பாடுபட்டனர்.
ரணில் விக்கிரமசிங்க என்பவர், விசுவாசிகள் மத்தியில் நம்பிக்கை உடையவர். எப்போதும் தமது
நலனுக்காக பொய் சொல்லாத மனிதன். எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும், அதிகாரத்தை
இழந்தாலும், அதிகாரத்தை தக்கவைப்பதற்கும், ஆட்சியைப் பெற்றுக்கொள்வதற்கும் மோசடி செய்யும்
ஏமாற்றுக்காரர் அல்ல. அவர் மீது அனைவரும் நம்பிக்கை வையுங்கள். நீங்கள் வைத்திருக்கும்
நம்பிக்கையுடன், முன்னேறிச் செல்வதற்கு இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகளிலிருந்து, இந்த
அழுத்தங்களிலிருந்து மனிதர்களை விடுவிப்போம்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள்
கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த நாட்டில் ஒரு சமூக-பொருளாதார அரசியல்
சீர்குலைவைக் கண்டோம். இந்த நாடு சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் அப்பால் எங்கு
சென்றுள்ளது என்பதை நாம் பார்த்தோம். ஒவ்வொருவருக்கும் வாழ ஒரு நாடு இருக்க வேண்டும்.
ஜனாதிபதி அவர்களே, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேர் இந்த சவாலை
உங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுன
பாராளுமன்றத்தில் 225இல் 127 பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன்படி, இந்தச் சவாலை
நீங்கள்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுனவைச் சேர்ந்த
நாங்கள் தீர்மானித்துள்ளோம். இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், இந்த நாட்டில்
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், உங்களுக்கு ஆதரவளிக்கவும் இந்த பொறுப்பை ஏற்கக்கூடிய
தலைவர் நீங்கள்தான் என ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுன பாராளுமன்றத்தில் தீர்மானித்தது.
கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுன என்ற வகையில் உள்ளூராட்சி மன்ற
தலைவர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், நகரபிதா உட்பட அனைவரும் உங்களுக்கு பலமாக
இருப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை மீண்டும் கூற விரும்புகின்றேன்.
ஐக்கிய லக் வனிதா முன்னணியின் தலைவி திருமதி சாந்தினி கோன்கஹகே
கௌரவ ஜனாதிபதி அவர்களே, சிறுவயதில் இருந்தே இந்த நாடு பல்வேறு சூழ்நிலைகளில் தீப்பற்றி
எரிவதை நாம் பார்த்திருக்கிறோம். 70, 80களில் இந்த நாடு எப்படி எரிந்தது என்பதை நாம்
பார்த்திருக்கிறோம். கண்ணீர் விட்டோம். நீங்கள் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பது
எரிந்துகொண்டிருந்த ஒரு நாட்டை என்பதை நான் நினைவுகூர்கிறேன்
போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இளைஞர் குழுக்களுக்கு திறமைகள் உள்ள இளைஞர்,
யுவதிகளுக்கு இந்த நாட்டில் சிறந்த ஜனநாயக தலைவர் ஒருவர் உருவாகியுள்ளார். பிரச்சினைகளைக்
கலந்துரையாடி தீர்ப்பதற்கு இந்த போராட்டம் திருடப்பட இடமளிக்கக் கூடாது. அவர் தொடர்ந்து
இளைஞர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். எனவே இளைஞர்களின் போராட்டத்தை
இளைஞர்கள் என்ற போர்வையில் சிலர் திருட முயற்சிக்கின்றனர். அதற்கு இடமளிக்காதீர்கள்.
இளைஞர்களை பாதுகாக்குமாறு நான் பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறேன்.
7
நாங்கள் நாட்டைப் பற்றி பேசும் போது, நீங்கள் ஒரு தலைவராக ஆசியாவைப் பற்றி பேசுகிறீர்கள்.
நாங்கள் ஆசியாவைப் பற்றி பேசும்போது, நீங்கள் உலகத்தைப் பற்றி பேசுகிறீர்கள். இவ்வாறான
ஒரு ஜனநாயக தலைவர் உலகில் உருவாகியிருக்க மாட்டார். ஜனநாயகத்தை மதிக்கும் இந்த
நாட்டிலுள்ள அனைத்துக் கட்சியினரும் உங்களுடன் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களான திலும் அமுனுகம, லொஹான்
ரத்வத்த, வசந்த யாப்பா பண்டார, உதேன கிரிடிகொட, கண்டி நகரபிதா கேஷர சேனாநாயக்க
மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
01.08.2022
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.