எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பிற்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால், மக்கள் வீடுகளிலேயே தங்கி அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருவதாக டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவியும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.
இந்த திட்டத்தைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு வாரத்திற்கு நுளம்பு குடம்பிகளை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் டெங்கு ஒழிப்புக்கான அமைச்சர் குழுவொன்றையும், நிபுணர் குழுவொன்றையும் நியமித்ததோடு நிபுணர் குழுவினால் மாகாண மட்டத்தில் 09 உப குழுக்கள் நியமிக்கப்பட்டு நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
டெங்கு நுளம்புகள் அதிகம் பெருகும் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் கைவிடப்பட்ட காணிகள் என்பவற்றில் பரிசோதனை மேற்கொள்ள விசேட தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு இந்த செயற்திட்டங்கள் மேல்மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்களுக்குத் தனித்துவமான பிரச்சினைகளை அடையாளங்கண்டு விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஊக்குவிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.
டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல இதனைத் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் முதல் இதுவரை 47,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 50% இற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், தற்போது நிலவும் காலநிலையுடன் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தாவிட்டால் கோவிட் தொற்றைப் போன்று டெங்கு நோயும் அபாயகரமான நிலைமைக்கு மாறக் கூடும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல,
“டெங்கு பரவுவது உலகளாவிய பிரச்சினையாக மாறிவிட்டது. இந்த வருடத்தின் முதற்பாதியில் மாத்திரம் 47,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மற்றும் 27 டெங்கு மரணங்கள் எமது நாட்டில் பதிவாகியுள்ளன.
இந்நிலைமையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சர் குழுவும் நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டது. நிபுணர் குழுவில் விசேட வைத்திய நிபுணர்களான ஆனந்த விஜேவிக்ரம, லக்குமார் பெர்னாண்டோ, உபுல் திஸாநாயக்க மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பேராசிரியர் நிலிகா மளவிகே ஆகியோர் அடங்குவர்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துகையில் நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதும், நுளம்புக்கு வைரஸ் வராமல் தடுப்பதும் மிகவும் முக்கியமானது.மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து நுளம்புகள் உற்பத்தியாவதை தடுக்க முடியும். நுளம்பு கடிக்கும் வாய்ப்புகளை குறைக்க மக்களுக்கு அறிவூட்டுவது மிக அவசியம். மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில், ஒரு நுளம்பிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு டெங்கு பரவும் வாய்ப்பு கூடுதலாகக் காணப்படுகிறது.
மாகாணங்களில் நியமிக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு உப குழுக்களின் ஊடாக தொடர் அவசர வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் மாதங்களில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளர் தொகை அதிகரிப்பதை மட்டுப்படுத்த இந்த செயற்பாடுகளின் ஊடாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் வார இறுதியில் முப்படையினரின் ஆதரவுடன் கொழும்பு நகரில் விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. டெங்கு ஒழிப்புப் பிரிவு, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் இந்தப் பணியில் இணைந்து கொள்ளவுள்ளதுடன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் உரிய அறிவித்தல்களை மேற்கொள்ளும். அதன்படி, எதிர்வரும் வார இறுதியில் மக்கள் வீட்டிலேயே தங்கியிருந்து இதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதன் பின்னர், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் குறிப்பிட்ட நாட்களில் பாடசாலைகள், மத ஸ்தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், கைவிடப்பட்ட காணிகள் உள்ளிட்ட டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களில் ஒரு வாரத்திற்கு நுளம்புக் குடம்பிகள் குறித்து பரிசோதனை செய்யப்படும்.
அதேநேரம், மாகாண சுகாதார அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தான் நோயாளி என்பதை உணர்ந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ள டெங்கு நோயாளர்கள் முன்வர வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த சமயத்தில் ஊடகங்களினால் பெரும் பங்காற்ற முடியும் என்றார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101 கலந்துரையாடல்’ நிகழ்வில் உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்த கருத்து
இந்நாட்களில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தலையீட்டின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் டெங்கு ஒழிப்பு திட்டத்தினை அரச,தனியார் துறைகள் பொதுமக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். தொடர்ச்சியாக இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் இயலுமை காணப்படுகின்றது. எதிர்வரும் பருவகாலத்தை தொடர்ந்து டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும். பொதுவாக ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடியும். அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் நோயாளர்கள் அதிகரிக்க கூடும் என்பதால் அனைத்து துறையினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.
டெங்கு நோய் எந்த வயதினரையும் பாதிக்கும். பதிவாகும் நோயளர்களில் 75 சதவீதமானவர்கள் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதற்கு முன்பாக சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் தற்போது இளைஞர்களே இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு என்பது ஒருவகை வைரஸ் ஆகும். டெங்கு நோயாளர்களை டெங்கு நுளம்புகள் கடிக்கும் பட்சத்தில் அந்த நுளம்பினால் ஏனையவர்களுக்கு டெங்கு நோய் பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும். பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும். அதனால் டெங்கு கட்டுபாட்டிற்கு இந்த காரணங்கள் பற்றி அவதானம் செலுத்த வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.
முதலில் நுளம்புகள் பரவக்கூடிய பகுதிகளை தூய்மைப்படுத்துவது மிகவும் அவசியமாகும். தூய்மையான நீர் சேரும் பகுதிகளிலேயே டெங்கு நுளம்புகள் தங்கியிருக்கும். பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட பிளாஸ்டிக், டயர், பூச்சாடிகள் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் இடங்களில் டெங்கு நோய் அதிகரிக்கும். முடிந்தளவிற்கு மேற்படி பகுதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதேபோல் நுளம்பு கடியிலிருந்து தப்பிக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
டெங்கு நோய்க்கு இலங்கானவர்கள் மற்றையவர்களுக்கு பரவாமலிருக்கும் வகையில் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டியது அவசியமாகும். அதற்காக உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். நுளம்பு கடியிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான பூச்சி விரட்டித் திரவியங்கள் ஊடகாகவும் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பு பெற முடியும். எவ்வாறாயினும் இந்த முறைமைகள் 100 சதவீதம் பலன் தருபவை அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
பிரதேச சபைகள், நகர சபைகள், பொது சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார பிரிவுகள், பாதுகாப்பு பிரிவுகளின் பங்களிப்புடன் நுளம்பு பெருகும் இடங்களை தூய்மைப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. டெங்கு நோய் அதிகளவில் பரவும் மாகாணங்களை மையப்படுத்திய விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நோயாளர்கள் பதிவாகும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் எதிர்வரும் வாரங்களில் விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அப்பகுதிகளில் காணப்படும் கழிவுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும். அதற்காக இராணுவத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.
நீர் நிரம்பிய பாத்திரங்களில் நீரை அகற்றினாலும் குடம்பிகள் தங்கியிருக்கூடும். எனவே நீர் நிரம்பாத வகையில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாக ஐந்து அல்லது ஆறு நாட்கள் மாத்திரமே நுளம்புகள் உயிர்வாழும். அதனால் வாராந்தம் சுற்றுச்சூழலை தூற்மைப்படுத்த வேண்டியது அவசியமாகும். நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அண்மித்த பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அதனால் நோய் கட்டுப்பாட்டினை ஒருவரால் மாத்திரம் செய்துவிட முடியாது. இந்நாட்டில் அனைவரிதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் வலியுறுத்தினார்.
டெங்கு நோய்க்கு இலக்கானவர் எனின் கடினமான வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இல்லாவிட்டால் நோயின் பாதிப்பு அதிகரிக்கும். காய்ச்சல் ஏற்படும் போது பெரசிடமோல் தவிர்ந்த ஏனைய மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு காய்ச்சல் நோயாளிக்கும் வேறு மருந்துகளை வழங்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கவில்லை. சில நேரங்களில் பெரசிடமோல் மருந்தினால் நோய் முழுமையாக குணமடையாமல் இருக்கலாம். அந்த சந்தர்பங்களில் நோயாளர்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. நோய் இருப்பதால் பாரிய பிரச்சினைகள் ஏற்படாது. ஓய்வெடுப்பதால் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள முடியும். இளநீர்,தேசிக்காய், தோடம்பழம், ஜீவனி உள்ளிட்ட திரவ வகைகளை உட்கொள்வது மிகவும் உகந்தது என்றும் தெரிவித்தார்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.