Published on: மே 20, 2024

காலநிலை அனர்த்தங்களுக்கு நிதியளிக்கும் வேலைத்திட்டத்தில் துரதிஷ்டவசமாக உலக வட துருவ நாடுகள் தோல்வியடைந்துள்ளன

  • காலநிலை அனர்த்தங்களுக்கு நிதியளிப்பதற்கான வரி.
  • காலநிலை மாற்றமும், தண்ணீர் பிரச்னையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் – உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்தல்.

உக்ரேனில் ஏற்படும் உயிர் அழிவுகளுக்கு நிதியளிக்க தயாராக இருக்கும், உலகளாவிய வட துருவ நாடுகள் காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்கும் பணிகளுக்கு நிதியளிக்க பின்வாங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இந்தோனேசியா, பாலி சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவரும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்விலேயே ஜனாதிபதி இன்று (20) இதனை வலியுறுத்தினார்.

உலகளாவிய வரி ஏய்ப்புச் சொத்துக்களின் வருடாந்த இலாபம் 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டிருப்பதால், அந்த இலாபத்தின் மீது, காலநிலை மாற்ற நிதியத்திற்காக 10% வரி விதிப்பதற்கான யோசனையையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“பொது செழுமைக்கான நீர்” என்ற தொனிப்பொருளின் கீழ் உலக நீர் உச்சி மாநாடு மே 18 ஆம் திகதி இந்தோனேசியாவின் பாலியில் ஆரம்பமானது. உலக நாடுகளின் தலைவர்கள், நிபுணர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

1997 முதல், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலக நீர் உச்சி மாநாடு உலகின் அனைத்து நாடுகளுக்கும் நீர் முகாமைத்துவம் தொடர்பான அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. மேலும் தண்ணீர், சுகாதார சவால்கள், நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பிலும் கலந்தலோசிக்கப்படும்.

ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசிபிக் சமூக,பொருளாதார ஆணைக்குழு, உணவு மற்றும் விவசாய அமைப்பு, சுற்றுச்சூழல் திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம், கல்வி திட்டம், அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புகள், சர்வதேச குழந்தைகள் நிதியம், தொழில்துறை மேம்பாடு அமைப்பு, காலநிலை மாற்றத்துக்கான அமைப்பு ஆகியன இணைந்து உலக நீதி உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தன.

10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வு இன்று (20) காலை இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ (Joko Widodo) தலைமையில் நடைபெற்றது. இதில் உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அரச தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை இந்தோனேசிய ஜனாதிபதி சிநேகபூர்வமாக வரவேற்றார்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆற்றிய முழு உரை வருமாறு:

“பத்தாவது உலக நீர் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுக்கு எனது நன்றிகள்.

“கூட்டு செழுமைக்கான நீர்” என்ற தொனிப்பொருள் அனைத்து உயிரினங்களினதும் உயிர்நாடியான நீர் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை முகாமைத்துவம் செய்வதற்கான கூட்டுப் பொறுப்பை வலியுறுத்துகிறது.

மேலும், இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மாநாட்டின் (UNEA-5) ஐந்தாவது அமர்வில் இந்தோனேசியாவால் முன்மொழியப்பட்ட “நிலையான ஏரி முகாமைத்துவம்” யோசனைக்கு அமைவானதாக காணப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பேரவையின் (UNEA-6) ஆறாவது அமர்வில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் இணைந்து, “6/13 காலநிலை மாற்றம், உயிர் பல்வகைத்தன்மை குறைவடைதல், சுற்றுச்சூழல் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய நிலையான அபிவிருத்திக்கான நீர்க் கொள்கைகளைப் பலப்படுத்த தேவையான முழுமையான தீர்வுகள்” என்ற திட்டத்தை சமர்ப்பித்தது.

G20 பிரசிடென்சியின் கீழ் உலக கூட்டு நிதியத்தை ஸ்தாபிக்க முன்வந்துள்ளமைக்காக இந்தோனேசிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அதன் முன்னோடி உறுப்பினராக இணைய இலங்கையின் விருப்பத்தையும் தெரிவிக்கிறேன்.

காலநிலை மாற்றமும், தண்ணீர் பிரச்னையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். தற்போதைய நீர்வள நெருக்கடிக்கு காலநிலை மாற்றத்தின் விளைவுகளே முக்கிய காரணம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காலநிலை மாற்றத்திற்கான நாடுகளுக்கு இடையிலான குழுவான IPCC இன் 2090 வரையான காலநிலை குறித்த கணிப்பின் படி இலங்கையின் உலர் வலயம் தொடர்ந்து வறண்டு போகும் அதேநேரம், ஈர மண்டலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈரமாக மாறும். அத்துடன் கடல் மட்டம் உயர்வதால் உப்பு நீர் கரையோரப் பகுதிகளுக்குள் ஊடுருவி, நிலத்தில் உப்பு கலக்கும்.

இலங்கையை உதாரணம் காட்டி இந்த விடயத்தை நான் சொல்லியிருந்தாலும் முழு உலகிலும் இதுதான் நடக்கிறது.

உலகளாவிய ரீதியில், நீர் நெருக்கடிக்கான தீர்வு மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணித்தல் உள்ளிட்ட விடயங்கள் அவற்றின் மாற்றத்தின் மீதே தங்கியுள்ளன. நீரை இலக்காகக் கொண்ட குறிப்பிட்ட நடவடிக்கைகளுடன் உலகளாவிய முக்கிய மூன்று பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராட வேண்டியது அவசியமாகும்.

காலநிலை மாற்றத்தால் நீர் மூலங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு பாரிய நிதி வசதிகள் தேவைப்படுகின்றன.

காலநிலை மாற்றத்திற்கான நிதியளிப்புத் திட்டங்களுக்கு ஏற்ப உலகளாவிய வட துருவ நாடுகள் துரதிருஷ்டவசமாக தோல்வியடைந்துள்ளன. கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு முடிவடைந்த பின்னர், இதற்கான அரசியல் ரீதியான விருப்பத்தில் குறிப்பிடத்தக்க வரையறைகளை அவதானிக்க முடிகிறது.

காலநிலை அனர்த்தங்களை பொருட்படுத்ததாத நிலை மேற்குலக நாடுகள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதன் இறுதி முடிவு நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை பொறுத்தே அமையும்.

2021 ஆம் ஆண்டில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) நீர் தொடர்பான உள்கட்டமைப்பு வசதிகளுக்கான உலகளாவிய முதலீடு 2030 ஆம் ஆண்டு 6.7 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2058 ஆம் ஆண்டில் 22 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) 2023 “குறைந்த நிதி – குறைந்த தயார்” அறிக்கையின்படி, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான குறைந்தபட்ச நிதி இடைவெளி ஆண்டுக்கு 194 முதல் 366 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய வட துருவ நாடுகள், உக்ரேனில் இறப்பு மற்றும் அழிவுக்கு நிதியளிக்க தயாராக இருக்கின்றன. ஆனால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுகளுக்கு நிதியளிப்பதில் தயக்கம் காட்டுகின்றன.

எதிர்பார்த்த அளவு மற்றும் எதிர்பார்த்த வேகத்தில் எங்களிடம் நிதிகள் வரவில்லை. இதனால் வள இடைவெளியை சமாளிக்கும் வகையில், COP 28 மாநாட்டில் இலங்கை வெப்ப மண்டலப் பகுதி முன்முயற்சியை (Tropical Belt Initiative) முன்வைத்தது.

இது உலகின் மூன்று மிக முக்கிய பிரச்சினைகளுக்கு ஈடுகொடுப்பதற்கு வெப்ப வலய இயற்கைக் காடுகள், சதுப்புநிலங்கள், புல்வெளிகள், நீர் மூலங்கள் மற்றும் ஏனைய இயற்கை வளங்களுக்கான வர்த்தக முதலீடுகளை பயன்படுத்திக்கொள்ள புதிய வாய்ப்பாக அமையும்.

இந்த பகுதி முழு உலகத்திற்கும் பாதுகாப்பு கவசமாக இருந்தது. தற்போதைய உலகின் மூன்று மிக முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உந்து சக்தியாகவும் இருக்கும். வெப்ப வலயத்தில் முதலீடு செய்வது உலகின் முக்கிய 3 பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவதற்கு வலுசேர்ப்பதாகவும் கருதுகிறேன்.

இந்த சூழலில், உலகளாவிய கலப்பு நிதியியல் தொடர்பான திட்டம் மூலம் உலகின் தென் துருவ நாடுகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் உருவாக்க உதவுகிறது. இந்த நிதியத்தை ஆரம்பிக்கவிருக்கும் 9.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகை நிதியியலுக்கு சிறந்த உதாரணமாக உள்ளது. வெப்ப மண்டல முன்முயற்சிக்கும் இந்த வசதிகள் பயனளிக்கும்.

உலக வரி ஏய்ப்புச் சொத்துக்களின் வருடாந்த இலாபத்திற்கு 10% வரி விதிக்க இலங்கை முன்மொழிகிறது. அந்த ஆண்டு இலாபம் 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரியை அமுல்படுத்த தவறிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரஷ்ய வங்கிகள் மீது விதிக்கப்பட்டதைப் போன்ற பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் ஊடாக இந்த வரியை விதிக்கலாம்.

காலநிலை மாற்றம் மற்றும் அதன் தணிப்புக்கான கலப்பு நிதி திட்டங்களுக்கு நிதியளிக்க இந்த வரிகள் பயன்படுத்தப்பட வேண்டும். உலகளாவிய கலப்பு நிதியியல் முன்முயற்சி, சேதம் மற்றும் இழப்பு நிதிக்கு ஒரு துணையே அன்றி மாற்றீடு அல்ல. இந்த இரண்டு நடவடிக்கைகளையும் ஒன்றாகச் செயல்படுத்த வேண்டும்.

எனவே, கூட்டமைப்பு செயலகத்தை அமைப்பதிலும், ஜி20 உச்சிமாநாட்டில் இந்த திட்டத்தை முன்வைப்பதிலும் இந்தோனேசியா மேற்கொண்ட கடின முயற்சிக்கு இந்த மாநாட்டில் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீர்வள முகாமைத்துவம் மற்றும் உலகளாவிய கலப்பு கூட்டமைப்பை ஒன்றிணைக்கும் வகையில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ வழங்கிய பங்களிப்புக்கு மீண்டும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவினால் (Joko Widodo) மாநாட்டில் பங்கேற்ற அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு நேற்று (19) பாலி கலாசார பூங்காவில் வழங்கிய இரவு விருந்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.