சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
கிராமிய பொருளாதார மையங்களை வலுவூட்டும் பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பில் அம்பாறை மாவட்டத்திற்கான அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (15) முற்பகல் அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதுவரை நாம் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டிருந்தாலும் எவரும் பட்டினியால் வாட அனுமதிக்கப்பட மாட்டார்களென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்த செயற்திட்டத்தை வெற்றி கொள்வதன் மூலம் உலக உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதேவேளை அடுத்த வருடம் முதல் விவசாயம் நவீனமயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பலதரப்பு கூட்டுப் பொறிமுறையை அமுல்படுத்துவது, அம்பாறை மாவட்டத்தை அபிவிருத்தியடைந்த சமூகத்துடன் வளமான மாவட்டமாக மாற்றுவது என்பன மூலம் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் நெல் உற்பத்தியில் 22% அம்பாறை மாவட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுவதுடன், எதிர்வரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அரச அதிகாரிகளிடம் களப்பணியில் அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக கேட்டறிந்தமை விசேட அம்சமாகும்.
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் விவசாய மற்றும் கடற்றொழில் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை செவிமடுத்த ஜனாதிபதி, அவை தொடர்பில் ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இக்கலந்துரையாடலின் பின்னர், ஹார்டி பண்ணை வளாகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, பண்ணை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் மேலும் கூறியதாவது,
உணவுப் பாதுகாப்பு திட்டம் குறித்து அம்பாறை மாவட்டத்தின் நிலைமையை ஆராய்வதற்காகவே இங்கு விசேடமாக வந்தேன். இதில் உங்களின் கருத்துக்களைத் தெரிவித்திருந்தீர்கள். அதில் உள்ள குறைபாடுகளையும் அடையாளம் கண்டுகொண்டோம். இயற்கை உரம் குறித்து முதலில் பேசப்பட்டது. கடந்த வருடம் அமைச்சின் ஊடாக இயற்கை உரம் விநியோகிக்கப்பட்டது. ஆனால் இம்முறை அவற்றை நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளோம். அந்த நிறுவனங்கள் ஊடாக உங்களுக்கு விநியோகிப்படும்.
அந்த நிறுவனங்களுக்கு கடந்த வருடத்தில் 8 பில்லியன் ரூபா நிலுவைத் தொகை இருக்கிறது. எனினும் அவற்றை செலுத்துவதற்கு ஆரம்பித்துள்ளோம். இவற்றில் சுமார் 4 பில்லியன் ரூபா வரை செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
சிவில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து அடுத்த செவ்வாய்க்கிழமை ஆராயப்படவுள்ளது. இங்கு விவசாயம் செய்யும் ஒரு தரப்பினர் குறித்து பேசப்படவில்லை. முப்படையினர் பெருமளவில் பயிரிடுகின்றனர். விசேடமாக அவர்களையும் இந்தத் திட்டத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் முதல் தடவையாக இவ்வாறான செயல்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான நிலைமை இதற்கு முன்னர் இருக்கவில்லை.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது உணவை பெற முடியாத நிலை இருந்தபோதிலும் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. ஆனால் தற்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது பொருளாதாரத்தை கடந்த வருடத்தைவிடவும் ஓரளவு மீட்டுள்ளோம். இன்னும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒருபக்கம் பணத்தை நாம் அச்சிட்டால் பணவீக்கம் அதிகரிக்கும். கையிருப்பில் உள்ள பணத்துடன் பணிகளை முன்னெடுத்தால் வரையறைகள் ஏற்படுகின்றன.
எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு, முன்நோக்கிச் செல்ல நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம். எனவே இங்கு விவசாயத்தை மட்டும் நான் பார்க்கவில்லை. முழுமையான செயற்திட்டம் குறித்து பார்க்க வேண்டியுள்ளது. தற்போது உங்களின் பிரதேசங்களில் பயிர்ச் செய்கையை ஆரம்பியுங்கள்.
எமக்கு என்ன உணவு வகைகள் மேலதிகமாக தேவைப்படுகின்றன என்பது குறித்து எமது உணவு பாதுகாப்பு செயலணி மூலம் அறிவிக்கப்படும். நெல் பயிர்ச் செய்கை குறித்து பிரச்சினை இருக்காது.
இந்த நிலைமை தொடர்ந்தால் எமக்கு கையிருப்பு இருக்கும். எனினும் சோளம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். முடிந்த இடங்களில் அந்தப் பயிர்ச் செய்கையை அதிகரிக்க வேண்டும். எனவே உங்களின் பிரதேசங்களிலும் இதனைச் செய்ய வேண்டும். எனவே கிராமப் புறத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் இந்த செயல் திட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளோம். அனைவரும் இதற்காக பணியாற்ற வேண்டும்.
முழு மாவட்டத்திலும் இதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். அடுத்ததாக போஷாக்குக் குறைபாட்டில் உள்ளவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டமொன்று வேண்டும். எனவே, இதற்கான உணவு வங்கிகள், உணவுகளைப் பகிர்ந்தளிக்கும் சமூக சமையலறைகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். இந்த செயல்திட்டங்களுக்கு அரசாங்கமும் முடிந்தளவு உதவிகளை வழங்கும்.
இந்தக் காலகட்டம் மிகவும் நெருக்கடியானது. எவரையும் பட்டினியில் இருக்க நாம் இடமளிக்கக்கூடாது. நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். ஆனால் பெரும்போகத்தின் விளைச்சல் கிடைத்த பின்னர் இந்த நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். எனினும், 2023ஆம் ஆண்டு இறுதிவரை நாம் இந்த செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தாலும் உலக உணவுப் பற்றாக்குறை இருக்கும் என்பதால் எமது நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதன் பின்னரும் நாம் இந்தப் பொறிமுறையை நிறுத்தமாட்டோம். இதன் தொடர்ச்சியாக விவசாயத்தை நவீனமயப்படுத்த வேண்டும். எனவே தான் நாம் புதிய செயற்திட்டமொன்றை முன்னேடுத்துள்ளோம். இந்தப் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தப் பணிகளின்போது எமக்கு கட்சி அரசியல் இருக்காது. கட்சி அரசியலை நாம் புறந்தள்ள வேண்டும்.
மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் அரசியலுக்கு நாம் செல்ல வேண்டும். எனவே, சம்பிரதாய அரசியலில் எந்தப் பயனும் இல்லை. தற்போதிருந்து அடுத்த ஏப்ரல் மாதம் வரை நாம் உற்பத்திகளை முன்னெடுக்க வேண்டும். விசேடமாக பெரும்போகத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும். இதற்கு ஒத்ததாக நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா வருகிறது. விசேடமாக சுதந்திரம் கிடைத்த பின்னர் டி.எஸ்.சேனாநாயக்கவினால் முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்ட கல்ஓயா நீர்ப்பாசன செயற்திட்டம் அம்பாறை மாவட்டத்திலேயே இருக்கிறது.
இந்தச் செயற்திட்டத்திற்கு யாரிடமும் கடன் வாங்கவும் இல்லை, உதவி வாங்கவும் இல்லை. இங்கிலாந்திற்கு கடன் வழங்கிவிட்டு, மீதமிருந்த பணத்தில் கல்ஓயா திட்டத்தை முன்னெடுத்தோம். இதனை முன்னுதாரணமாக கொண்டு அம்பாறை மாவட்டம், நாட்டிற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் என நம்புகிறேன்.
அரசியல் பேதங்கள் இன்றி அனைவரும் இணைந்து இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விவசாய அமைச்சரும், பிரதமரும் இந்தப் பிரதேசத்திற்கு வந்து, இந்தச் செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்து பார்ப்பார்கள். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பணியை முன்னெடுப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன். நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் இந்த சவால்களை இதற்கு முன்னர் நாம் எப்போதுமே எதிர்கொண்டதில்லை. எமது பெற்றோர், மூதாதையர் கூட இவ்வாறான சவால்களை எதிர்கொள்ளவில்லை. இது எமக்கு புதிய சவால். நாம் சரியாக செயல்பட்டால், இதில் வெற்றியடைந்து இன்னும் பலம் பெறுவோம். எனவே, அடுத்த வருடத்தில், இந்த அடிப்படை பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள நாம் பணியாற்றுவோம் என்றும், இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, எச்.எம்.எம். ஹாரிஸ், பைசல் காசிம், டொக்டர். திலக் ராஜபக்ஷ, என்.எம்.எம். முஷாரப், டி. கலை அரசன், சரத் வீரசேகர, ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர், முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனோமா கமகே, தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அம்பாறை மாவட்டச் செயலாளர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண சபை தலைவர் மற்றும் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயம், நீர்ப்பாசனம், சமுர்த்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய அரச அதிகாரிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.