Published on: ஆகஸ்ட் 10, 2023

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டிணைவில் அங்கத்துவம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது

  • ஆசியான்அங்கத்துவத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்து-பசுபிக் பிராந்தியம் தொடர்பான ‘ஆசியான்’ அமைப்பின் தொலைநோக்கு பார்வைக்கு தான் உடன்படுவதாகவும், அந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற 56ஆவது “ஆசியான்” தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

1967 ஆகஸ்ட் 8ஆம் திகதி தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கையொப்பத்துடன் தாய்லாந்தின் பெங்கொக்கிலுள்ள வெளியுறவு அமைச்சுக் கட்டிடத்தில் உருவாக்கப்பட்டது. புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மியான்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 10 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.

ஆசியான் உறுப்பு நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி “ஆசியான் தினத்தை” கொண்டாடுகின்றன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, ‘ஆசியான்’ அமைப்பில் நுழைவதற்கான முன்மொழிவு நிராகரிக்கப்பட்டதாகவும், அதன் அங்கத்துவம் கிடைக்காததால், அதற்கு மாற்றீடாக, பிராந்திய பரந்த பொருளாதாரக் கூட்டிணைவில் இணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

ஆசியானின் 56 ஆவது ஆண்டு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இந்த அமைப்பு மெதுவாக ஆனால் சீராக வளர்ந்து, பரந்த எதிர்காலத்துடன் உலகின் மிகப்பெரிய பொருளாதார கூட்டிணைவுகளில் ஒன்றாக முன்னேறி வருகிறது. ஆசியாவில் உங்கள் செயற்பாடுகள் எளிதானது அல்ல என்றாலும், உங்களால் அதை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிந்துள்ளது.

இது வாழ்த்துவதற்குரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் அதேநேரம் வருந்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது. ஆசியான் அமைப்பின் ஆரம்ப காலத்திலேயே அதில் இணைந்துகொள்ளுமாறு இலங்கைக்கு அழைப்பு கிடைத்தது. நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு நானும் சாட்சியாளன் ஆவேன் என்பதோடு, எனது தந்தையார் அந்த பணிகளில் பங்கெடுத்தவர் ஆவார்.

1965 ஆம் ஆண்டளவில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னர் திறந்த பொருளாதாரக் கொள்கை தொடர்பிலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. முதற்கட்டமாக அப்போதைய பிரதமரான டட்லி சேனநாயக்கவினால் பசுமை புரட்சி என்ற பெயரில் அமைப்பொன்று நிறுவப்பட்டிருந்தது. அதனூடாக செனோய் அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போதைய பல்கலைக்கழக கல்லூரியின் பொருளாதாரம் தொடர்பிலான விரிவுரையாளராக பணியாற்றிய பேராசிரியர் செனோய் இலங்கைக்கு வருகைத் தந்து மேற்படி அறிக்கையை சமர்பித்திருந்தார்.

எனது தந்தையார் பல்கலைக்கழக கல்லூரியில் கற்ற காலத்தில் பேராசிரியர் செனோய் அங்கு விரிவுரையாளராக பணியாற்றினார். அப்போதைய அமைச்சரான ஜே.ஆர். ஜயவர்தனவின் அழைப்பின் பேரிலேயே பேராசிரியர் செனோய் இலங்கைக்கு வருகைத் தந்தார். பேராசிரியர் செனோயின் அறிக்கையினால், இலங்கையின் பொருளாதாரத்தில் தாராள தன்மை மற்றும் சமூக நலன் மீது அரசாங்கம் கொண்டுள்ள பொறுப்புக்களை உறுதிப்படுத்த முடிந்தது.

இரண்டாவதாகவே இலங்கைக்கு ஆசியான் அமைப்பில் இணைந்துகொள்ள வேண்டும் என்ற அழைப்பு கிடைத்தது. 2 ஆம் உலகப் போர் காலத்தில் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவொன்றை ஏற்படுத்தியிருந்த காரணத்தினால் அவ்வாறானதொரு அழைப்பு விடுக்கப்படுவது பொதுவான விடயமாகும்.

அக்காலத்தில் தென்கிழக்காசிய கட்டமைப்பொன்று இருக்கவில்லை. இருப்பினும் அது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனால் எமக்கு மேலதிக நேரமும் இருந்தது. அமைச்சராகவிருந்த ஜே.ஆர். ஜயவர்தனவின், அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர், அமைச்சரவைக்கு வெளியில் பாராளுமன்றத்திலிருந்த எனது தந்தையார் உள்ளிட்ட சிலருக்கும் செனோய் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் அதேநேரம் ஆசியான் அமைப்பில் இணைந்துகொள்ளுமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் துரதிஷ்டவசமாக அப்போதைய வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட டட்லி சேனநாயக்கவிற்கு அமைச்சின் திறைசேரியின் அதிகாரிகள் பொருளாதாரத்தை திறக்கும் முயற்சிகள் பாதமாக முடியும் என்று எச்சரிக்கை விடுத்திருந்ததோடு, அணிசேரா நாடுகள் அமைப்பின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் ஆசியான் அமைப்பில் இணைய வேண்டாம் என வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

எவ்வாறாயினும் 56 வருடங்களுக்கு பின்னர் நாம் ஆசியான் அமைப்பில் இருக்கின்றோம். ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் பலவும் தற்போது மேம்பாட்டை அடைந்துள்ளன. நாம் 1970 களில் சமூக பொருளாதார முறைமைக்கு மாறினோம். எமது மூலதன வழிமுறைகளை மிதித்து தள்ளிவிட்டே முன்னேறிச் சென்றோம். அந்த பொருளாதார கெடுபிடிகளிலிருந்து இன்னும் மீளவில்லை.

தற்காலத்தில் உங்களுடைய அமைப்பானது உலகின் 5 – 4 வது அமைப்பாக வளர்ச்சி அடையக்கூடிய பொருளாதார பலத்தை கொண்டிருக்கிறது. 55 வருடங்களின் பின்னர் நாம் வங்குரோத்து நிலையில் இருக்கிறோம். இதுவே நாம் வருந்துவதற்கான காரணமாகும்.

எவ்வாறாயினும் வங்குரோத்து நிலையை தற்போது முழுமையாக எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். தற்போது நாம் துரித கதியில் முன்னேற்றத்தை நோக்கி நகரப்போகிறோம். அதன் போது ஆசியான் அமைப்பின் பயணத்தை முன்னுதாரணமாக கொள்வோம்.ஆசியான் அமைப்புடன் மிக நெருக்கமாக செயற்படவும் எதிர்பார்த்துள்ளோம்.

அதுவே எனது அரசாங்கத்தின் கொள்கையாகும். ஏனைய அரசாங்களின் கொள்கையும் அதுவாகவே இருக்கும் என நம்புகிறேன். தென்கிழக்காசியாவுடன் எமக்கு உள்ள தொடர்புகள் மிகவும் வலுவானது. இந்தியா மற்றும் மாலைத்தீவு தவிர்ந்த தென்கிழக்காசியாவுடன் மிகவும் நெருக்கமான நாடாக இலங்கையே உள்ளது. மியன்மார், தாய்லாந்து போன்ற நாடுகளை பாருங்கள்.

மகாவிகாரைபௌத்தமத கற்பித்தல் செயற்பாடுகளுடன் லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பகுதிகளுடன் நாம் கொண்டுள்ள நெருங்கிய தொடர்புகளையும், நாடுகளுக்கிடையிலான நீண்டகாலமாக நடந்துள்ள செயற்பாடுகள் தொடர்பில் பாருங்கள். மலாய் இனத்தவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அநுராதபுரம் ராஜதானியில் ஸ்ரீ விஜய அரசனின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட தொடர்புகள் முக்கியமான மைற்கல்லாகும்.

எமது நாடுகள் மத்தியில் கடந்த காலங்களில் காணப்பட்ட தொடர்புகள் மேற்படி விடயங்களின் ஊடாக வெளிப்படுகின்றன. நாம் எமது கலாசார, பொருளாதார, அரசியல் தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. அதனாலேயே பிரதமராக பதவி வகித்த காலத்தில் மிகவும் அவசியமாகக் காணப்பட்ட சிங்கப்பூருடன் சுந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைசாத்திட்டேன். அதனை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டியுள்ளது.

அதேபோல் தாய்லாந்து உள்ளிட்ட ஏனைய ஆசியான் அமைப்பு நாடுகளுடனும் அதனை விரிவுபடுத்த நாம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம். அதேபோல் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவு (RCEP) அமைப்பிலும் இணைந்துகொள்ள இலங்கை தீர்மானித்துள்ளது. அதில் சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. உலகின் பலமான நாடுகள் தொகுதியொன்றும் அங்கத்துவமும் வகிக்கிறது. பிராந்தியத்தில் வேறு எந்தவொரு நாடும் இதற்காக விண்ணப்பிக்கவில்லை. இருப்பினும் இலங்கை அந்த அமைப்புடன் இணைந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் நிறைவுற்ற பின்னர் RCEP அமைப்பில் இணைந்துகொள்ள எதிர்பார்த்திருப்பதோடு, ஆசியான் அமைப்பின் ஏனைய நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைசாத்திடுவது தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளது.

இதுவே ஆசியான் அமைப்பிற்குள் நாம் நுழைவதற்கான சிறந்த வழிமுறையாக காணப்படுகிறது. ஆசியான் அமைப்பின் அழைப்பினை நாம் புறக்கணித்ததால் அதனில் இணைந்துகொள்ள முடியாமல் போனது. தற்போது பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவுடன் (RCEP) இணைந்துகொள்ள வேண்டிய தேவை எமக்கு உள்ளது.அதனை புறக்கணிப்பதற்கான அவசியங்கள் எவையும் இல்லை.

நாம் கிழக்குடன் இணைந்து பொருளாதாரத்தை நோக்க வேண்டும்.கிழக்கு தான் அபிவிருத்தி அடைந்து வருகிறது. பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவுடன் (RCEP) ஒப்பந்தத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தும் அதேநேரம், இந்தியா மற்றும் பங்களாதேஷ் உடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலிருந்து, கிழக்கில் ஜப்பான் வரையிலான அனைத்து நாடுகளுடனும் மேலும் நெருக்கமான உறவுகளை உருவாக்க இது உதவுகிறது.

நாம் பின்பற்றும் பொருளாதார மற்றும் அரசியல் மூலோபாயம் இதுவாகும். மேலும் அரசியல் ரீதியாக மிக நெருக்கமான உறவுகளை வைத்திருப்பது மிகவும் அவசியம்.

அமைச்சுகள் மட்டத்தில் இந்தத் தொடர்பாடல் இணைப்புகளைப் பேணுவதை உறுதிப்படுத்துமாறு எமது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு அறிவுறுத்தினேன்.

மேலும், இந்த சூழ்நிலைகள் குறித்து எப்போதும் அவதானம் செலுத்தி, அடிக்கடி சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி, பிரச்சினைகள் இருந்தால், அவற்றைத் தீர்த்து, முன்னோக்கிச் செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் நான் அவர்களுக்கு அறிவுறுத்தினேன்.

எம்மால் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது. நாம் முன்னோக்கியே செல்ல வேண்டும். தற்போதைய சர்வதேச நிலைமை குறித்தும் நாம் அவதானம் செலுத்தி வருகிறோம்.இந்து-பசுபிக் பிராந்தியத்தில் ஆசியான் அமைப்பின் எதிர்கால கண்ணோட்டத்துடன் நாம் உடன்படுகிறோம். அந்த நோக்கை முன்னெடுத்துச் செல்வதற்கும் அதற்கேற்ப முன்னோக்கிச் செல்வதற்கும் நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்.

கடல்சார் மையம் என்ற வகையில் இந்தோனேசியாவுக்கு நாம் ஆதரவு வழங்குகின்றோம்.நாம் அதிலிருந்து விலகிச் செல்லவில்லை. இந்த நெருக்கடிகளை முறியடிக்க நாம் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம். ஆசியான் அமைப்பின் நோக்கானது, இந்து சமுத்திர பிராந்தியத்தை ஒரு முனையாகவும், பசுபிக் சமுத்திர பிராந்தியத்தை மறுமுனையாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.

நாம் இந்து சமுத்திரத்தில் உள்ள ஒரு நாடு என்ற வகையில் அதனை இராணுவத் தலையீடுகள் அற்ற பிராந்தியமாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்று உறுதி செய்ய எம்மால் முடியும்.

எனவே, ஆசியான் அமைப்பின் நோக்கும், உறுப்பினர்களாகிய எமது பார்வையும் இலக்குகளும் ஒன்றாகவே இருக்கின்றது. இந்தப் பரிந்துரையை ஆதரிக்க அனைத்துத் துறைகளிலும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இந்தப் பாரிய சமுத்திரத்தில் நாமும் ஆசியான் நாடுகளும் சிறிய மீன்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிறிய மீன்களாக, நாம் பிரிந்திருக்கும் போது எம்மைப் பிடிக்க மிகவும் எளிது. எனவே, அனைவருடனும் தொடர்பு வைத்திருத்தல் அனைவருடனும் நட்புறவு கொள்வது மிகவும் அவசியம்.உங்களை முந்திச் செல்வதற்கோ, உங்களைப் பின்னால் நிறுத்துவதற்கோ எங்களுக்குப் எவ்வித போட்டியும் இல்லை என்று கூற வேண்டும்.காலநிலை மாற்றம் தொடர்பிலும் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

காலநிலை நிகழ்ச்சி நிரலை அவசரமாக அமுல்படுத்துவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அழைப்பின் படி காலநிலை மாற்ற நெருக்கடியின் தீவிரத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

காலநிலை நிகழ்ச்சி நிரல் தொடர்பில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.மேலும், நீலப் பொருளாதாரத்தின் ஆற்றலை உணர்ந்து, ஆசியான் அமைப்பின் பிற நாடுகளும், இலங்கையும் காலநிலை நிகழ்ச்சி நிரலில் இணைந்து செயல்பட முடியும்.எனவே நாம் இணைந்து செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் அதிகம் உள்ளன. அதில் ஒரு பகுதியை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.எனவே, நாம் ஆசியான் அமைப்போடு கைகோர்த்து செயல்பட வேண்டியுள்ளது.

இங்கு உரையாற்றிய இந்தோனேசிய தூதுவர் திருமதி டிவி குஸ்டினா டோபிங்,

670 மில்லியனுக்கும் அதிகமான மக்களுடன், உலக சனத்தொகையில் சுமார் 8.8%, ஆசியான் அமைப்பு என்பது, உலகளவில் மூன்றாவது பாரிய சந்தையாகும்.

ஆசியான் அமைப்பு, இலங்கையை ஒரு முக்கியமான பிராந்திய பங்காளியாகப் பார்க்கிறது.இலங்கையில் ஆசியான் தூதுக்குழு பல்வேறு தரப்பினருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
மேலும், ஆசியான் அமைப்பு, இலங்கையுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தவும், மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்தவும் தயாராக உள்ளது.

அமைதியான, நிலையான மற்றும் வளமான இந்து-பசுபிக் பிராந்தியத்தை உருவாக்குவதே ஆசியான் அமைப்பின் எதிர்பார்ப்பாகும்.இந்து-பசுபிக் பிராந்தியத்தில் தொடர்புகளை வலுப்படுத்த விரும்பும் நாடுகளுக்கு ஆசியான் எப்போதும் திறந்திருக்கும் என்று கூற வேண்டும்.

ஆசியான் அமைப்பின் அபிவிருத்தியின் பிரதிபலன்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும், ஆற்றல்மிக்க மற்றும் பன்முகப் பங்காளித்துவத்தின் அவசியத்தை உணர்ந்துள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம், சூழல் மற்றும் சமூக-கலாசார, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கு, விதிகள் அடிப்படையிலான சர்வதேச செயல்முறையை வலுப்படுத்துவது உட்பட பகிரப்பட்ட மதிப்புகள், கொள்கைகள் மற்றும் ஆர்வங்கள், உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் உறவுகளை நிர்வகிப்பதற்கான அடிப்படையை உருவாக்குகின்றது.

அந்த அடிப்படையின் கீழ், இலங்கையுடன் கட்டியெழுப்பப்பட்ட கூட்டிணைவு பல வருடங்கள் மற்றும் பல தசாப்தங்களுக்கு தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று நாம் அனைவரும் உண்மையாக எதிர்பார்த்துள்ளோம்.

ஆசியானின் 57 ஆண்டுகளில், பொதுவான சவால்களை கூட்டாக எதிர்கொள்ளவும், அனைவருக்கும் அதிக வாய்ப்புகளைக் கொண்டு வருவதற்கு, ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போம் என்ற உறுதிமொழியை புதுப்பிப்போம்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல்ல, விதுர விக்கிரமநாயக்க, நசீர் அஹமட், ஜீவன் தொண்டமான், நளின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உட்பட, இலங்கைக்கான இந்தோனேசியத் தூதுவர் டீவி குஸ்டினா டோபிங், மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் எடம், தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்பொல், வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரக், மியான்மார் தூதுவர் யூ ஹன் து உள்ளிட்ட தூதுவர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.