கடந்த காலங்களில் நாடும், மக்களும் எதிர்கொண்ட துரதிஷ்டவசமான யுகத்திற்கு எதிர்கால சந்ததியினர் முகம் கொடுக்காத வகையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் வெற்றியடைவதால் மாத்திரம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது என்றும், சரியான தீர்மானங்களுடன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதிதாக சிந்தித்து, புதியதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லாவிட்டால், இன்னும் 10 வருடங்களில் நாடு மற்றொரு பொருளாதார சவாலை எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்தார்.
மாத்தளை புனித தோமஸ் ஆண்கள் கல்லூரியின் 150ஆவது ஆண்டு விழாவில் இன்று (13) முற்பகல் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துத் துறைகளையும் நவீனமயமாக்கி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே தனது எதிர்பார்ப்பு என்றும், அதற்கு அவசியமான தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்ள, தொழில்நுட்ப ஊக்குவிப்பு சபை மற்றும் நாட்டில் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்த டிஜிட்டல் மாற்ற ஆணைக்குழு ஆகியவற்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பிரதமராக இருந்த விஜயாநந்த தஹநாயக்கவுக்குப் பின்னர், மாத்தளை புனித தோமஸ் கல்லூரிக்கு முதல் தடவையாக விஜயம் செய்யும் அரச தலைவராக இன்று காலை கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிறுவப்பட்டுள்ள நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன், பழைய மாணவர் சங்கத்துடன் குழு புகைப்படத்திற்கும் இணைந்துகொண்டார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
மாத்தளை புனித தோமஸ் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இப்பாடசாலை நிறுவப்பட்ட போது இந்த நாடு பெருந்தோட்டப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. கோப்பி பயிர்ச்செய்கை பாரிய அளவில் விரிவடைந்திருந்தது. ஆனால் ஒரு சில வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து அரசாங்கத்துக்கு வருமானம் இல்லாமல் போனது. 15-20 வருடங்களின் பின்னர் தேயிலைப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படும் வரை நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
புதிய பெருந்தோட்டப் பயிர்களாக தேயிலை மற்றும் இறப்பர் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பியது.
மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையிலும், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், நாடு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டது.
இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவோம் என்று அப்போது யாரும் நம்பவில்லை. மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பிறகு அந்தப் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை என்பது இதற்கு ஒரு நல்ல உதாரணம். பொதுவாக, ஏனைய சந்தர்ப்பங்களில், பிரதமர் பதவியை கைப்பற்ற வரிசையில் வருவார்கள். ஆனால் அப்போது யாரும் முன்வரவில்லை.
ஆனால் அந்தப் பின்னணியில் நான் ஜனாதிபதி பொறுப்பை ஏற்று, அமைச்சரவையை உருவாக்கி நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளைத் தேட ஆரம்பித்தேன். நாங்கள் எடுத்த தீர்மானங்களால், நாட்டில் அன்று இருந்த வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது. மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர், மற்றும் இந்த வருட ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் அரசாங்கம் என்ற முறையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பலனை மக்கள் இப்போது அனுபவித்து வருகின்றனர்.
இந்த வருட இறுதிக்குள், கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதன் மூலம் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அதைச் செய்ய அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோன்று நாடு உற்பத்திப் பொருளாதாரத்திற்கு மாறுவதும் அவசியம். அந்தத் திட்டத்தை தற்போது செயல்படுத்தியுள்ளோம். இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகளால் நாடு “வங்குரோத்தாகிவிட்டது” என்று குத்தப்பட்ட முத்திரையை அகற்ற முடிந்தாலும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் எடுக்காவிட்டால் இன்னும் 10 வருடங்களில் மீண்டும் நாம் வங்குரோத்து நிலையை அடைவோம். எனவே புதிய பொறிமுறையின் மூலம் அரசாங்கத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஒரு வியாபாரத்தை நடத்துவது போன்ற நிதி ஒழுக்கம் இங்கு இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு அரச நிறுவனத்திலிருந்தும் உச்ச பலன்களைப் பெற வேண்டும். தற்போது அமைச்சுகளின் தேவையற்ற செலவுகளைக் குறைக்க நாம் திட்டமிட்டுள்ளோம். மேலும், அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலம், கட்டிடங்கள், வாகனங்கள் தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணிகள், பிரதமரின் செயலாளர் தலைமையில் நடைபெறுகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தத் தகவல்களைப் பெற முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் நீதிமன்றம் சென்று இதைத தடுக்க முயன்றனர். அதன்போது முன்வைக்கப்பட்ட பிரதான பிரச்சினைதான், ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான விடயம். ஆனால் தற்போது அனைத்து ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கும் 9% வட்டி வழங்குவதற்கான சட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்தத் திட்டத்தை நிறுத்த எந்தக் காரணமும் இல்லை.
அரசியலமைப்பின் 04 ஆவது சரத்தின்படி, நிதி அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே, இந்தச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கேயன்றி வேறு எவருக்கும் இல்லை. மேலும், இது தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தற்போது உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நிறைவுசெய்த பிறகு, பொருளாதார வேலைத்திட்டத்தை நாம் சரியாக செயல்படுத்த வேண்டும். இன்று பலர் இந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிய தொழில் வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, அந்த இடைவெளியை நம்மால் எளிதில் நிரப்ப முடியாது. எவ்வாறாயினும் அனைவரும் வாழக்கூடிய சிறந்த பொருளாதாரப் பின்னணியை இந்த நாட்டில் கட்டியெழுப்புவதற்கு நாம் இப்போது அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்றே கூற வேண்டும்.
அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமானம், செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை, ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதிச் செலவு அதிகரித்திருப்பது இன்று நம் நாடு முகங்கொடுக்கும் முக்கிய இரண்டு பிரச்சினைகளாகும். இதற்காக நாம் ஒவ்வொரு நாளும் கடன் வாங்க முடியாது. கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு, மீண்டும் இந்தப் பிரச்சினை தோன்றும். அதை நாம் தடுக்க வேண்டும். அதற்கு மொத்தத் தேசிய உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும். மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரிக்கும் போது, நாட்டின் வருமானம் அதிகரிக்கும். மறுபுறம், ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டியுள்ளது.
இன்று ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சம்பிரதாயபூர்வமான அரசியல் கோஷங்களால் பயன் இல்லை. நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை ஆராய்ந்து தீர்வுகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அந்தத் தீர்வுகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், பிரச்சினைகளைத் தீர்க்க மாற்று வழிகளை முன்வைக்க வேண்டும். இந்நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு வருடத்திற்கு குறைந்தது ஒரு பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணி தேவைப்படுகிறது. தற்போதுள்ள துறைகளில் இருந்து அந்நியச் செலாவணியை அதிகரிப்பதுதான் முதலில் செய்ய வேண்டும்.
எங்களுக்கு முக்கியமாக வெளிநாட்டு தொழில்கள் மூலம் கிடைக்கும் வருமானமே உள்ளது. இரண்டாவது ஏற்றுமதி வருமானம். ஆடைக் கைத்தொழில் என்று வரும்போது, குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரம் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு அந்தத் துறைகளிடமிருந்து அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே நாம் சுற்றுலாத்துறையில் கவனம் செலுத்த வேண்டும். எனவே, இந்த வருடமும், அடுத்த வருடமும், நாட்டின் சுற்றுலா வர்த்தகத்தில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும், நமது ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும். நாம் முதலீட்டாளர்களை வரவழைத்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதற்காக துறைமுக நகரம் போன்ற புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப அறிவுடன், அடுத்த 10 ஆண்டுகளில் நாம் வேகமாக முன்னேற வேண்டும். அந்த வேகத்தைப் பொறுத்தே நாம் வெற்றி பெறுவோமா அல்லது தோல்வியடைவோமா என்பது முடிவு செய்யப்படுகிறது.
மேலும், அரச மற்றும் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் பலவற்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தப் பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கு மானிய ரீதியல் கடன் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த எதிர்பார்த்துள்ளோம். குறைந்தது 10,000 பொறியியலாளர்களும் 7,500 வைத்தியர்களும் இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்து வருடாந்தம் உருவாக்கப்பட வேண்டும். மேலும், தகவல் தொழிநுட்பத்திற்கும் அதிக தேவை உள்ளது. இந்தத் தேவைகள் தொடர்ந்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது தேவையாகும். அதனால் கடந்த வருடம் நடந்த விடயங்கள், இந்த நாட்டில் ஒருபோதும் மீண்டும் நடக்காத வகையில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.
அதற்கான பல புதிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்பதைக் கூற வேண்டும். முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி சபை ஆகிய இரு நிறுவனங்களிடமிருந்தும் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை. அதற்காக பொருளாதார ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு, குறித்த அதிகாரங்களை மையப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்போது ஒவ்வொரு அமைச்சுக்கும் சென்று முதலீடுகளுக்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. அனைத்துப் பணிகளையும் ஒரே இடத்தில் நிறைவேற்றலாம்.
1978 இல் ஜே.ஆர். ஜெயவர்தன பெரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவை நிறுவி, பாரிய கொழும்பு அபிவிருத்தித் திட்டத்தை இவ்வாறுதான் நடைமுறைப்படுத்தினார். மேலும், முதலீட்டுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தனியான சபையொன்றை நிறுவ எதிர்பார்த்துள்ளோம். அத்துடன், வருடாந்தம் இந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 இலட்சத்தில் இருந்து 50 இலட்சமாக அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம். இந்த மாத்தளை மாவட்டமும் சுற்றுலாத்துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில் விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம். தற்போது நெல் மற்றும் ஏனைய பயிர்களின் உற்பத்தி போதுமானதாக இல்லை. அந்த உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். மேலும், நாட்டிற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கு தொழில்நுட்ப மேம்பாட்டு சபையொன்றை நிறுவவும், டிஜிட்டல் மயமாக்கலை நாட்டிற்கு கொண்டு வர டிஜிட்டல் பரிமாற்ற ஆணைக்குழுவை நிறுவவும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அதன் மூலம் நாட்டின் சகல துறைகளிலும் சிறந்த நவீனமயமாக்கலை எதிர்பார்க்கின்றோம், 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்குவதே எமது நோக்கம் ஆகும் என்றார்.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித். யு. கமகே, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி எம்.பி.பி. தெஹிதெனிய, முப்படைப் பதவிநிலைத் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன, NSBM பசுமைப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சமிந்த ரத்நாயக்க, மாத்தளை புனித தோமஸ் கல்லூரி அதிபர் தம்மிக்க ஹேவாவசம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.