Published on: ஜனவரி 3, 2024

எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, வீழ்ச்சியடைந்த பொருளாதார யுகத்திற்கு திரும்பிச் செல்ல முடியாது

  • 2025 இல் 5% பொருளாதார வளர்ச்சியை அடைய, நாம் உடன்பாட்டுடன் பயணிக்க வேண்டும்.
  • பணம் அச்சடிப்பதும் அரச வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதும் ரூபாயின் மதிப்பை மீண்டும் குறைக்கும்.
  • பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கிய நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மாற்றியமைக்க முடியாது.
  • சிரமங்களுக்கு மத்தியிலும் எதிர்காலத்தில் மக்களுக்கு சாத்தியமான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவோம்.
  • கைவினைத் துறையை விரைவில் அந்நியச் செலாவணி ஈட்டும் துறையாக மாற்ற வேண்டும் – கைப்பணி விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.

எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, வீழ்ச்சியடைந்த பொருளாதார யுகத்திற்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்ல முடியாது என்றும், கடினமாக இருந்தாலும் இந்த பாதையில் செல்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக பலப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தவறான பொருளாதார தீர்மானங்களை எடுப்பதன் மூலம் ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் கூறுவது போன்று பிரபலமான தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை இருளடையச் செய்ய தாம் தயாரில்லை எனவும் வலியுறுத்தினார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று (03) இடம்பெற்ற “ஷில்ப அபிமானி 2023” ஜனாதிபதி கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கைவினைத் துறையை அந்நிய செலாவணியை ஈட்டும் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

பாரம்பரிய மற்றும் கலாசார மதிப்புள்ள கைவினைப் பொருட்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், கைவினைஞர்களை கௌரவித்தல் மற்றும் கைவினைஞர்களின் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஆண்டுதோறும் “ஷில்ப அபிமானி” தேசிய கைவினைப் போட்டி மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது.

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மேம்பாட்டுப் பிரிவு மற்றும் தொழில்துறை அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆண்டு, “ஷில்பா அபிமானி” 2023 தேசிய கைவினைப் போட்டி நடைபெற்றது.

31 கைவினைத் துறைகளின் கீழ் 66 உப துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது . பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடங்கிய தகுதி வாய்ந்த நடுவர் குழுவால் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

வெற்றியாளர்களுக்கு தங்கம் மற்றும் அரச விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.உலக கைவினை பேரவை போட்டியில் 2023ல் வெற்றி பெற்ற இரு கைவினைஞர்களுக்கும், இரண்டு தங்க விருது வென்றவர்களுக்கும் பரிசுத் தொகை, சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை ஜனாதிபதி வழங்கினார்.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

இதேவேளை, “ஷில்பா அபிமானி 2023” வடிவமைப்பு போட்டியில் வெற்றி பெற்ற படைப்புகளை பார்வையிட்ட ஜனாதிபதி, வெற்றி பெற்ற கலைஞர்களை பாராட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

2023ஆம் ஆண்டு கைவினைத் துறையில் திறமையை வெளிப்படுத்தியவர்கள் அடையாளங்காணப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நிலவிய நெருக்கடி காரணமாக இந்த விருது விழாவை நடத்த முடியாமல் போனது. ஆனால் இந்தக் இக்கண்காட்சியில் கலைஞர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை பாணிகளை மட்டுமன்றி மேற்கத்திய பாணிகளையும் பயன்படுத்தி நாம் பயனடைய வேண்டும். அதை இந்தியா ஏற்கனவே வெற்றிகரமாக செய்து வருகிறது. அதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த திட்டங்கள் ஊடாக நாட்டின் வருமானத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதி துறையில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதித் தொழிலில் இருந்து விலகிச் செயல்படுவது இன்று ஒரு நாடாக நமக்கு மிகவும் கடினமான விடயமாகும். அதனாலேயே எதிர்காலத்தில் இந்த கைவினைத் துறையை மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது .

நாங்கள் மிகவும் கடினமான காலத்தை கடந்துள்ளோம். அந்த இக்கட்டான நேரத்திலும் எப்படியாவது நாட்டின் வருமானத்தை பெருக்கினோம். அதற்காக அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். 2022 ஆம் ஆண்டில், நமது நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்தது. சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது தடைப்பட்டது. இந்த கைவினைத் துறை சுற்றுலாத் துறையை நம்பியே உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாத்து முன்னேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நமது பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

2022 இல் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்பதை கூறியிருந்தோம். அதன் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்ட வேண்டியிருந்தது. அதனால்தான் நட்டத்தில் இயங்கும் துறைகள் அனைத்தையும் இலாபகரமான துறைகளாக மாற்றி சில நிவாரணங்களை குறைக்க நேரிட்டது.

அதன்படி கடந்த வருடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் பொருளாதார ரீதியாக ஓரளவு முன்னேற்றம் காண முடிந்தது. கடந்த வருடத்தின் கடந்த 02 காலாண்டுகளின் முன்னேற்றம் மற்றும் இந்த வருடத்தின் 04 காலாண்டுகளின் முன்னேற்றம் குறித்து நாம் இப்போது கவனம் செலுத்தி, இந்த வருடம் 2% பொருளாதார வளர்ச்சியை அடைய திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு 2% பொருளாதார வளர்ச்சியை எட்டினால், அடுத்த ஆண்டில் 5% ஆக அதனை அதிகரிக்க முடியும். எனவே இந்த பொருளாதார வளர்ச்சியுடன் நாம் முன்னேற வேண்டும். நாம் உடன்பாட்டுடன் செயல்பட வேண்டும்.

நாங்கள் தொடர்ந்து பணத்தை அச்சடித்துக் கொண்டிருந்தது தான் எமக்கிருந்த பாரிய பிரச்சினையாகும். அத்தோடு வங்கிகளில் கடன் பெற்றதனால் ரூபாயின் பெறுமதி மேலும் சரிந்தது. அரசாங்கத்தின் தேவைக்காக வங்கிகளில் கடன் பெற்று இரண்டு அரச வங்கிகளும் வீழ்ச்சியடையும் நிலைக்கு தள்ளப்பட்டன. எனவே, வங்கிகளில் கடன் பெற மாட்டோம் எனவும் பணத்தை அச்சிட மாட்டோம் என்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு மேற்கொள்ள வேண்டியிருந்தது.

எனவே அரசின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

இந்த ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியின் ஊடாக 12% வருமானம் பெற வேண்டும். அதனை 15% இலக்குடன் நிறைவு செய்யவேண்டியுள்ளது. மொத்த தேசிய உற்பத்தியில் 15% வருமானத்தைப் பெற முடிந்தால் பொருளாதார ரீதியாக முன்னேறும் பலம் நமக்கு உண்டு.

நமக்கு பணத்தை அச்சடிக்க முடியாமலும், வங்கிகளில் கடன் பெற முடியாமலும் இருந்தால், அரச வருமானத்தை அதிகரிப்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. அதன்போது வற் வரியை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டது. அதன்படி, வற் வரி 15% இல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டது. மேலும், வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட பல பொருட்கள் வற் வரியின் கீழ் கொண்டு வரப்பட்டன.

அதன் மூலம் தற்போது நமக்குத் தேவையான வருமானம் கிடைக்கின்றது. இதனால், ரூபாயின் பெறுமதி வலுவடைகிறது. கடினமானாலும் அந்தச் சுமையை நாம் அனைவரும் சுமக்க வேண்டியுள்ளது. இந்த வழியில்தான் நாம் சிரமத்துடனேனும் செல்ல வேண்டும். அதை கைவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை.

மக்களுக்கு அனைத்து விதமான நிவாரணங்களையும் வழங்குவதற்கு நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குதல், “அஸ்வெசும” நன்மைகளை மூன்று மடங்காக அதிகரித்தல், மக்களுக்கு இலவச காணி உறுதிகள் வழங்குவது உள்ளிட்ட நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், எதிர்காலத்தில் மேலும் நிவாரணம் வழங்கப்படும்.

இந்த வழியைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. சிலர் பணத்தை அச்சிடுமாறும் வங்கிகளில் இருந்து கடன் பெறுமாறும் கூறுகிறார்கள். அப்படிச் செய்தால் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாது. இந்தப் பயணத்தில் சிரமங்கள் இருந்தாலும், ஆண்டின் இறுதியில் ரூபாவின் பெறுமதி வலுவடையும்.

எனவே, இது ஒரு பிரபலமான வேலைத்திட்டம் அல்ல. இதனைத் தவிர வேறு வழியில்லை. யாரேனும் நமக்கு சலுகை பெற முடியும் என்று கூறினால் அதனை முன் வந்து அறிவிக்க வேண்டும். அதே நேரத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்பதையும் அவர்கள் அறிவிக்க வேண்டும். எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, வீழ்ச்சி அடைந்த பொருளாதாரமற்ற யுகத்திற்கு எமக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது.

கடினமாக இருந்தபோதிலும், நாடு இப்போது வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஆண்டு சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்படி அத்துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, எதிர்காலத்தில் ஏனைய துறைகளில் உள்ள பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

இருப்பினும், இந்த நேரத்தில் ரூபாவின் பெறுமதியை குறைக்க விரும்பவில்லை. உக்ரைன் போர் நடைபெறுகிறது. காசா போர் உள்ளது. அதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிக்கலாம். செங்கடலில் கப்பல்கள் மீது ஹூதி குழுவினர் நடத்தும் தாக்குதல்களால் கப்பல் போக்குவரத்து ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பல்கள் செங்கடல் ஊடாக பயணிக்காமல் தென்னாப்பிரிக்காவின் ஊடாக சுற்றி வந்தால் அதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிக்கும். எனவே, ஹூதி நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு ஆதரவாக இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடலுக்கு அனுப்ப உடன்பட்டுள்ளோம்.

ரூபாவை வலுப்படுத்தி, சரியான பொருளாதார திட்டத்துடன் முன்னேறினால், விரைவாக முன்னேறும் திறன் நம்மிடம் உள்ளது. மேலும், இந்த கைவினைத் துறையும் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் துறையாக மாற்றப்பட வேண்டும் என்பதையும், அதற்குத் தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர,

இருபது வருடங்களாக இலங்கையின் பாரம்பரிய கைவினைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களை பாராட்டுவதற்காக இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலும் புத்தாண்டில் புது நம்பிக்கையுடன் இந்த கைவினைப் பொருள் கண்காட்சியை நடத்துவது பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது. அரசாங்கம் மற்றும் பாரம்பரிய தொழில் வல்லுநர்களின் வழிகாட்டுதலின் கீழ் கைவினைத் துறை இன்று புத்துயிர் பெற்றுள்ளது. நாடு நெருக்கடியான நிலையில் இருந்தாலும் இத்துறையில் ஈடுபடும் கலைஞர்களை ஜனாதிபதி பாராட்டுவது பெரும் பலம் என்றே கூற வேண்டும். கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் பாரம்பரிய கலைஞர்களுக்கு தேவையான கடன் வசதிகள் வழங்கப்பட்டது. உலகில் கைவினைப் பொருட்களுக்கு அதிக கேள்வி உள்ளது. 2024-2025 ஆம் ஆண்டளவில், கைவினைத் தொழில் மூலம் சுமார் ஒரு பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இந்த கைத்தொழிலாளர்கள் கடந்த காலங்களில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டனர். அவர்களுக்கு தேவையான மூலப்பொருட்களை பெறுவது தடையாக இருந்தது. ஆனால் அவர்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொடுக்கும் பணியில் நாம் ஈடுபட்டோம். இன்று, பாரம்பரிய தொழில்துறை புதிய உத்வேகத்துடன் முன்னேறி வருகிறது. நாம் பாரம்பரிய கைத்தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.எம்.டி. ஜயசுந்தர, தேசிய கைவினைப் பேரவையின் தலைவர் சம்பத் எருஹெபொல, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லசந்த காரியப்பெரும மற்றும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.