Published on: ஜூன் 18, 2024

உத்தேச வாடகை வருமானச் சட்டம் அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானது

  • சாதாரண வருமானம் ஈட்டுவோரிடம் இந்த வரி அறவிடப்பட மாட்டாதென ஜனாதிபதி உறுதி.
  • சமபாலின திருமணம் குறித்த விடயம் இந்தச் சட்டத்தில் இல்லை.
  • பௌத்த மதப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, பெண்களின் உரிமையையும் பாதுகாக்கும் வகையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் – ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.

உத்தேச வாடகை வருமானச் சட்டம், அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஒவ்வொரு நபரினதும் முதல் சொத்து, இந்த வாடகை வரியிலிருந்து விடுவிக்கப்படும் அதேநேரம், சாதாரண வருமானம் ஈட்டும் மக்களிடத்தில் இந்த வரி அறவிடப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (18) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போதே இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஜனாதிபதி, பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்புக்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

சபாநாயகர் பாலினச் சமத்துவ சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சபையில் அறிவித்தார். ஆனால் இது அரசியலமைப்பின் 4 ஆவது பிரிவின் கீழான இந்த சபையின் அதிகாரங்களை மீறுவதாகும். எனவே அதுகுறித்து ஆராய தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.

2011 முதல், பெண்கள் வலுவூட்டல் மற்றும் பாலின சமத்துவம் குறித்த தேசிய கொள்கை உள்ளது. ஐந்தாவது நிலையான அபிவிருத்தி இலக்குகளின் அடிப்படையிலும், பெண்கள் மாநாடுகள் மற்றும் நாங்கள் கையெழுத்திட்ட பல ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் அதற்கான பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்துள்ளது.

மேலும், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு எதிரான கமலாவதி வழக்கில் தேசியக் கொள்கையை அமைச்சரவையின் அதிகார வரம்பிற்குள் மாத்திரம் பரிசீலித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அது பாராளுமன்றத்தின் செயற்பாடாகும். இது அரசியல் விவகாரம். இதில் உயர் நீதிமன்றம் எந்த வகையிலும் தீர்ப்பளிக்க முடியாது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அவர்கள் பாராளுமன்றத்தின் அதிகார எல்லைக்குள் நுழைவதாக அமையும்.

இரண்டாவதாக, பெண்களின் சமத்துவம் மற்றும் சமூக அந்தஸ்து சார்ந்து ஏராளமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நிரோஷன் அபேகோன் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு எதிரான ரத்நாயக்க தரங்க லக்மாலி வழக்கு விசாரணையில், மக்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வு அடிப்படை உரிமையாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பத்து நீதிபதிகள் கொண்ட குழுவின் முன்னிலையிலான சரத் ஜயசிங்க உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தின் பெறுமதியை அறிய, அதன் விளக்க உரைகளை மட்டும் நம்பியிருப்பது போதுமாதல்ல.

சமத்துவக் கொள்கையை நிர்வகிக்கும் அடிப்படைக் கோட்பாடு அநீதியை தடுப்பதாக அமையுமென நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க வழங்கிய, கருணாதிலக்க – ஜெயலத் டி சில்வா வழக்குகளும் உள்ளன. அதனால் பாகுபாடு – பாரபட்ச செயற்பாடுகளுக்கு கடுமையாக எதிர்ப்பு வௌியிடப்படுகிறது.

இறுதியாக, பிரதம நீதியரசர் வழங்கிய குற்றவியல் சட்டத் திருத்தம் தொடர்பான விசேட தீர்மானமும் புறக்கணிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில்தான் நாம் பெண்கள் வலுவூட்டல் மற்றும் பெண்களுக்கான சமத்துவம் பற்றிப் பேசுகிறோம்.

ஆனால் ஐந்தாவது நிலையான அபிவிருத்தி இலக்குகளின்படி சிறுபான்மையினரும் பாகுபாடு இன்றி அரச சேவைகளைப் பெறக்கூடிய இயலுமை இருக்க வேண்டும். அடிப்படை உரிமைகளின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் சாதாரண அதிகாரங்களுக்கமைய அவற்றை செயற்படுத்த வேண்டும்.

ஆனால் இந்தத் தீர்மானம் இந்த அதிகாரங்கள் எவற்றையும் கண்டுகொள்ளாத வகையில் அமைந்துள்ளது. ஒருபுறம் நீதிமன்றம் இவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு தங்களுக்கு இதற்கான அதிகாரம் இருப்பதாகக் கூறிவருகிறது. இதனால், முன்னைய தீர்ப்புகள் அனைத்தும் கேள்விக்குறியாகிறது. நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்புகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும்.

எனவே இது நீதித்துறைக்கு கேடு விளைவிக்கும் செயலை செய்துவிட்டு அதனை ஏற்றுக்கொள்ளுமாறு சொல்வதைப்போல் உள்ளது. ஆனால் இந்த சபையில் அதைச் செய்ய முடியாது. பத்து நீதிபதிகள் கொண்ட குழுவையும் பிரதம நீதியரசரையும் மிஞ்சி அவர்கள் செயற்ட முடியுமா?

இந்தச் சட்டம் ஒரே பாலின திருமணம் மற்றும் பாலின சமத்துவத்தை அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கும் இந்த சட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதற்கு இடமளிக்கவும் கூடாது. அனைத்து சட்டங்களிலும் காணப்படும் சாதாரண சரத்துக்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர். அவற்றை நாம் உள்ளடக்கவில்லை. சட்டமூலத்தை சட்டமா அதிபரே இறுதி செய்கிறார்.

மற்ற சட்டங்களை விட இந்தச் சட்டம் மிகவும் பயனுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இறுதிச் செயற்பாடுகள் நீதிமன்றத்தின் பொறுப்பெனக் கூறப்பட்டுள்ளது. சாமர சம்பத் (இராஜாங்க அமைச்சர் அல்ல) – நீல் இத்தவெல ஆகியோரும் உண்மைகளை குறிப்பிட்டு கூறியுள்ளனர். அதேபோல் நாட்டின் திருமணச் சட்டங்களை ஒரு பகுதிக்காக மட்டும் மாற்ற முடியாது.

அத்தோடு முழுமையாக பிரிவெனா கல்விச் சட்டத்தை இதனால் ஒதுக்கிவிட முடியும் என்று கூறப்படுகிறது. எந்த அடிப்படையில் இதைச் செய்தார்கள் என்று தெரியவில்லை. அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தில் பௌத்த மதத்தின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த சட்டத்தை தயாரித்து அதை நடைமுறைப்படுத்த பங்களிப்பு வழங்கிய அமைச்சர் என்ற முறையில் எனக்கு அதுபற்றி தெரியும். அந்தச் சட்டம் அரசியலமைப்பின் ஒன்பதாவது பிரிவு மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதைப் போன்ற ஒரு சிறிய ஏற்பாடு அதை மாற்றும் என்று நினைக்கிறீர்களா? அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில சொற்பதங்களை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் விளங்கிக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

இந்த சபைக்கு வருவதற்கு முன் தாங்கள் விகாரைக்கோ, பிரிவெனாவிற்கோ சென்று இதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். இந்த சபையில் மகா சங்கத்தினரும் உள்ளனர். எனவே அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்த உரிமைகள் மற்றும் பௌத்தர்களின் அனைத்து உரிமைகள் ஒரு சிறிய பகுதிகளை கொண்டு பறிக்கப்படலாம். என்ன நடக்கப் போகிறது? பௌத்த மதத்திற்கான அனைத்து பாதுகாப்புகளும் அகற்றப்படும்.

இறுதியாக, உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் 1972 அரசியலமைப்புச் சட்டத்தினை திரும்பிப் பார்க்க வேண்டும். எந்தவொரு அதிகாரமும் அரசியலமைப்புச் சபை மற்றும் அது கட்டமைக்கப்பட்ட 1972 அரசியலமைப்பின் மூலம் நியாயப்படுத்தப்பட வேண்டும். அதனால் சட்டம் குறித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது. அதன் பெறுமதி பற்றிய ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும்.

இது முழுமையான அரசியலமைப்பு பரிசீலிப்பாகும். 1978 அரசியலமைப்பை உருவாக்குவதில், நீதித்துறையின் சுதந்திரம் மேலும் வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக நமது அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அதிகாரங்கள் உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், 1972 இல் பாராளுமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை சமர்பித்த பின்னர் இரண்டு வாரங்கள் கடக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று டி.எஸ். பெர்னாண்டோவின் தீர்மானத்தை அறிவித்த வேளையில், அந்தத் தீர்மானத்தைப் இந்தச் சபை பொருட்படுத்தாமல் விட்டது. முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரவும் அந்தச் சபையில் அங்கம் வகித்தார்.

எனவே இது இந்த சபை அனுமதிக்கக் கூடாத சிக்கலான தீர்ப்பாகும். மேலும் இது குறித்து ஆராய ஒரு சிறப்புக் குழுவை நியமிக்குமாறு பரிந்துரைக்கிறேன். அதற்காக நீதிபதிகளை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இதை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கலாம். அந்த தெரிவுக்கு அதிகளவில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

இருப்பினும், இது பெண்கள் சார்ந்த விடயம். இதனால், இந்நாட்டு மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மேலும், மற்றுமொரு பெரும்பான்மையாக உள்ள பௌத்தர்களின் பாதுகாப்பு அரசியலமைப்பின் மூலம் நீக்கப்பட்டுள்ளது. எனவே இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சபை தனது உரிமைகளை உறுப்படுத்த வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். அடக்கம் செய்தல் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயின்போது இடம்பெற்ற விடயங்கள் என்ன என்பது பற்றி நிறைய கலந்துரையாடல்களும் மனவேதனைகளும் ஏற்பட்டன என்பது உங்களுக்குத் தெரியும். அந்த விடயத்தில் நானும் தலையிட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? முதலில், அனைத்து நாடுகளும் அடக்கம் செய்வதை நிறுத்தியது.

அதன் பிறகு, உலக சுகாதார நிறுவனத்திடம் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் இலங்கையில் நாங்கள் ஒரு குழுவை நியமித்தோம். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று குழு பரிந்துரைத்தது. உலக சுகாதார நிறுவனம் வேறுபட்ட கருத்தை எடுத்தது.

ஆனால் பின்னர் உயர் நீதிமன்றம் அந்தக் குழுவின் பரிந்துரையை உறுதி செய்தது. எனவே அதை அரசாங்கம் பின்பற்ற வேண்டியேற்பட்டது. அப்போது மாற்று வழி இருக்கவில்லை. ஆனால் இப்போது அவை அனைத்தும் முடிந்துவிட்டது.

மேலும், இவை அனைத்தையும் நாம் எதிர்கொண்டோம். இந்த நாட்டில் அடக்கப்படுவதா அல்லது எரிக்கப்படுவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். எனவே, இறந்தவரின் உடலை புதைக்கவோ, தகனம் செய்யவோ அல்லது மருத்துவ பீடத்திற்கு தானமாக வழங்கவோ உரிமை வழங்கும் சட்டத்தை இவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கொண்டு வரவுள்ளார்.

இந்த காலக்கட்டத்தில், முக்கியமாக முஸ்லிம் மக்களுக்குப் மனரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் எனக்கு தெரிந்த இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு அடக்கம் செய்வதை விரும்புகிறார்கள். எனவே நடந்ததற்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இது தொடர்பாக முன்வைக்கப்படும் சட்டமூலத்திற்கு இந்தச் சபை ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன்.

மேலும், உத்தேச வாடகை வருமான வரி குறித்தும் இந்த சபைக்கு கருத்தை தெரிவிக்க வேண்டும். நாம் செல்வ வரியொன்றை அறிமுகப்படுத்துகிறோம். மேலும் அதன் வரையறை மிக அதிகமாக இருக்கும். எனவே, நாட்டின் 90% வீடுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதைப் பற்றி பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீடு பாதுகாப்பாக இருக்கும்.

ஆனால் தரவரிசையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் வாடகை வருமான வரி விதிக்கிறோம். அதன் பிறகு எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த மதிப்பீடுகள் மாகாண சபைகளுக்கு சொந்தமானது. தரவரிசைப் பட்டியலின்படி இந்த வரி விதிக்கப்பட்டால், பெறப்படும் பணம் மாகாண சபைக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் கூறலாம். எனவே, அதற்கான அனுமதியை பாராளுமன்றத்தில் பெற வேண்டும். எனவே வாடகை வருமான வரி என்ற வித்தியாசமான சூத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளோம். இந்த வருமான வரி மத்திய அரசுக்குச் சொந்தமானது.

நாங்கள் பொதுவாக இந்த மதிப்பீடுகளைப் பயன்படுத்துகிறோம். தற்போதுள்ள சட்டச் சிக்கலைத் தீர்க்கவே இதைச் செய்தோம். ஆனால் வரி வரையறை மிக அதிகம் என்பதை குறிப்பிட வேண்டும். இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளைப் பற்றி கவலைப்பட வேண்டி ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நாம் செல்வ வரி விதிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல கோடீஸ்வரர்கள் தங்களுக்கும் வரி விதிக்கப்படுமோ என்று மிகவும் கவலைப்படுவதையும் நான் அறிவேன்.

மேலும், மக்களின் இறையாண்மை பேணப்பட வேண்டும். அந்த இறையாண்மை பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியிடம் உள்ளது. இந்த நேரத்தில் இரண்டு நிறுவனங்களும் ஒரே இடத்தில் உள்ளன. பாராளுமன்றத்தின் மூலம் நீதித்துறைக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. அதைத்தான் 1971 தேர்தலில் முடிவு செய்தோம். 1967 இல் லியனகேவுக்கு எதிரான ரெஜினி வழக்கில், உயர் நீதிமன்றத்திற்கே இந்த அதிகாரங்கள் உண்டு என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து பாரிய விவாதங்கள் இடம்பெற்றன. இதனை 2/3 வாக்குகளால் மாற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள நாங்கள் தெரிவித்தோம். ஆனால் 2/3 ஐ வைத்து அதனை செய்ய முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் 1970 இல், 2/3 அந்த குழுவிற்கு கிடைத்தது. அதன்படி, இந்த அதிகாரம் அரசியலமைப்புச் சபையால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு மூலம் கிடைக்கிறது என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டோம். அந்த அதிகாரத்தை மக்கள் இறையாண்மை பெற்றுக்கொண்டது. நாங்கள் இதுவரை அதை மாற்றவில்லை.

ஆனால் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மக்கள் இறையாண்மைக்காக மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு கொண்டு வந்தோம். எனவே, இந்தச் சபையின் உரிமைகளில் நான் தலையிட விரும்பவில்லை. 1978 இல் நீதித்துறையின் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தினோம். இந்த வழக்கில், நீதிமன்றத்தின் அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இந்த நாட்டின் சட்டங்கள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படுகின்றன. அது தொடர்பில் யாரும் கேள்வி கேட்க முடியாது.

எனவே, சட்டம் அரசியலமைப்புக்கு முரணானதா இல்லையா என்பதை மாத்திரமே பரிந்துரைக்க வேண்டும். நாம் அரசியலமைப்பு நீதிமன்றத்தை நிறுவியுள்ளோம். நியூசிலாந்து, பின்லாந்து போன்ற நாடுகளில், சட்டங்கள் அரசியலமைப்புக்கு இசைவாக உள்ளதா இல்லையா என்பது, பாராளுமனறத் தெரிவுக்குழுவால் முடிவு செய்யப்படும்.

பின்னர் 1978 இல் இதற்கு தனி நீதிமன்றம் தேவையில்லை என்றும், அதனால் பண விரயம்தான் ஏற்படும் என்றும் முடிவு செய்தோம். உயர்நீதிமன்றத்தை மேலும் பலப்படுத்தி பாராளுமன்றம் சார்பில் அதிகாரத்தை வழங்கியதையே நான் செய்துள்ளேன்.

நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தின் மீது அமைச்சரவை முடிவெடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு மற்ற கட்சியினர் பல்வேறு கருத்துகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர்.

ஆனால் ஒரு குழு மூலம் முடிவு எடுக்கப்பட்டது. எவ்வாறேனும் நீதிமன்றத்திற்குச் செல்லப்பட்டது. நீதிமன்றம் அதை உறுதி செய்தது. அதன்பிறகு, அரசாங்கத்தைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை.

கடந்த காலத்தைப் பற்றிப் பேச நான் இங்கு வரவில்லை. எனக்கு அது தேவையில்லை. ஆனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டபோது யார் கதைத்தார்கள் என்று தேவைப்பட்டால் என்னால் கூற முடியும். அதையெல்லாம் மறந்துவிட்டு நாம் கலந்துரையாடி முன்னோக்கிச் செல்லலாம். இங்கு அடிப்படைவாதம் தேவையில்லை.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.