Published on: மார்ச் 30, 2023

இலங்கை முன்னேற இதுவே இறுதிச் சந்தர்ப்பம்

  • ஒருவரையொருவர் குற்றம் சாட்டாமல், அடுத்த தலைமுறைக்கு வளமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம் – “IMF மற்றும் அதற்கு அப்பால்”கலந்துரையாடலில் பிரதான உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிப்பு.

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார்.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று (30) முற்பகல் நடைபெற்ற “IMF மற்றும் அதற்கு அப்பால்” கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு வளமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசாங்கம் அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

டி.எஸ். சேனாநாயக்கவின் முன்மொழிவுகளுக்கு அமைய செயற்படாதது மற்றும் 1965 ஆம் ஆண்டு ஷெனோய் அறிக்கையை அமுல்படுத்தாதது உட்பட அபிவிருத்தியை அடைவதற்கான வாய்ப்புகளை இலங்கை தவறவிட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 1978 இனப்பிரச்சினையால் நாட்டின் முன்னேற்றம் மந்தமடைந்ததாகவும், அதன் மூலம் நாட்டில் மீண்டும் அபிவிருத்திக்கான அடித்தளத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழந்ததாகவும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார்.

பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையிலுள்ள சாத்தியக்கூறுகள் சாதகமாக உள்ளதாகவும், நாடு அதனை நோக்கிச் செல்வதுடன், விரைவில் டிஜிட்டல் மயமாக்கலை ஆரம்பிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன ஏற்கனவே நாட்டின் வளங்களை அதிகம் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு பணம் தேவைப்படுவதாகவும் இங்கு ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,

”நாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்கள் சிறந்த விளக்கத்தை அளித்தார் அது பற்றி நாம் மேலும் உரையாற்ற எதிர்பார்க்கவில்லை.

நாம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை அமுல்படுத்திய பின்னர் மேற்கொள்ளும் முதலாவது கலந்துரையாடல் இதுவாகும். இதனை எமது வணிக பொருளாதாரத்தின் ஓர் அடையாளமான கோல்பேஸ் ஹோட்டலில் நடத்துவது சிறப்புக்குரியதாகும்.

இந்நாட்டின் காலனித்துவ பொருளாதாரத்திற்கு மாறாக முதலாவது வணிக பொருளாதாரத்தை அமுல்படுத்தியது பிரித்தானியர் காலத்திலாகும். அந்த பெருந்தோட்ட பொருளாதாரத்தில் கோப்பி வியாபாரம் வீழ்ச்சி கண்டிருந்தாலும் தேயிலை , இறப்பர். தெங்கு மற்றும் ஏனைய உற்பத்திகளால் கொழும்பு துறைமுகம் பெரும் மாற்றம் கண்டது. இந்த கலந்துரையாடல் மண்டபத்தில் முதலில் பிரித்தானியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டிருந்தாலும் இரண்டாவதாக இலங்கையரின் பிரச்சினைகள் பற்றி பேசக் கிடைத்திருப்பது சிறப்பான அடையாளமாக காணப்படும்.

அந்த பரம்பரையினர் 50 வருடங்களில் புதிய பொருளாதாரம் ஒன்றை உருவாக்கினர். சுதந்திரத்தின் பின்னர் அதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. நமது நாட்டின் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் அளவு 12.5 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு நாம் மேற்படி பொறுப்புக்களை எவ்வாறு நிறைவேற்றியுள்ளோம் என்பதை அறியலாம். ஒரு வேலை உணவை மறந்து வாழும் மக்கள் இன்று நமது நாட்டில் உள்ளனர். 05 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர். சிறு மற்றும் மத்திய தர தொழிற்துறைகள் பல வீழ்ச்சி காணும் நிலையை அடைந்துள்ன. நமக்கு என்ன நடந்தது? இந்த நிலைக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? நாம் சகலருமே இதற்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அரசியல் வாதிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூகம், ஊடகங்கள், அரச நிர்வாகிகள் உட்பட எவராலும் இந்த பொறுப்பிலிருந்து விடுப்பட்டுச் செல்ல முடியாது. இனியும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதால் வெற்றிகள் கிட்டப்போவதில்லை. இங்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மட்டும் நமக்கு போதுமானதும் அல்ல. அதற்கு அப்பால் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதே முக்கியமானதாகும். நாம் இப்போது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதையே செய்ய வேண்டும். அதற்கான செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கிறது.

அமைச்சர் சியம்லாபிட்டிய எடுத்துக்காட்டியதை போன்று அதன் ஆரம்பம் கடினமானதாக இருந்தாலும் நாம் முன்நோக்கிச் செல்ல வேண்டியது அவசியமாகும். எம்மால் எந்த காரணத்திற்காகவும் அதனைக் கைவிட முடியாது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது மட்டுமின்றி உலக பொருளாதாரத்தின் வளர்ச்சிகளுக்கேற்ப முன்னோக்கிச் செல்வதும் எமது கடமையாகும்.

நாம் அதனை செய்ய முற்பட்டாலும் எமது ஒற்றுமைக்கு மிகப் பெரிய இடையூறாக இனப்பிரச்சினை காணப்படுகின்றது என்பதை உணர வேண்டும். நாம் சகலரும் இலங்கையர்களாக சிந்திக்க வேண்டும். பொருளாதார பிரச்சினைகளிலிருந்து இனப்பிரச்சினையை பிரித்துப் பார்க்க முடியாது. மேற்படி இரு பிரச்சினைகளையும் நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அது பற்றி பேசுவதற்கான இடம் இதுவல்ல என்றாலும் நாம் அந்த பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தீர்மானமிக்க இந்த தருணத்தில் நமது கலந்துரையடல்களை முன்னோக்கி கொண்டுச் செல்வது எவ்வாறு என்பது பற்றி சிந்திக்க வேண்டும். நாம் ஜனநாயக நாடு என்பதால திறந்த கலந்துரையாடல்கள் மிகவும் அவசியமானது. அதனால் அரசாங்கத்தை பிரதிநிதிதுவப்படுத்துவோரும், எதிர்கட்சியினரும், வர்த்தகச் சமூகமும், தொழிலாளர்களும், இங்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நாம் இவ்வாறான கலந்துரையாடல்களை பாராளுமன்றத்திலும் அதற்கு மேலான களங்களிலுமே முன்னெடுக்க வேண்டும் அதனை விடுத்து வீதிகளில் மேற்கொள்வது பொறுத்தமற்றது. அவ்வாறான அமைதியற்ற நிலைமை நம்மை போன்ற நாடுகளுக்கு பொறுத்தமானதல்ல. அதற்கான தீர்மானத்தை நாமே மேற்கொள்ள வேண்டும் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படக்கூடாது.

நாம் இந்த விடயங்கள் பற்றி கலந்துரையாட வேண்டிய இடம் எதுவென ஆராயும் முன்பாக சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்துவதே எமது பணியாகும். அங்கிருந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும்.
நான் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் ஊடாக மேலதிக விடயங்களை குறிப்பிடப்போவதில்லை. இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியது போன்று அதற்கும் அப்பாற்பட்ட பல விடயங்கள் உள்ளன. மேற்படி விடயத்தை குறிப்பிடத்தக்க வருமானத்திற்கான அடித்தளமாக மாத்திரமே கருத முடிவதோடு, முற்போக்கான வரி மறுசீரமைப்புச் செயற்பாடுகள் மொத்த தேசிய உற்பத்தி பங்கை அதிகரிக்கும் அதேநேரம் குறைந்த வருமானம் பெரும் மக்களின் வரிச்சுமையை குறைக்கவும் உதவும்.

அதனால் நாம் 2026 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தை ஸ்திரத் தன்மைக்கு கொண்டு வருகின்ற அதேநேரம் 2019 ஆம் ஆண்டில் காணப்பட்ட நிலைமைக்கு பிரவேசிக்க வேண்டும். அது சவாலாக இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அனுமதி கிடைத்த பின்னர் இலங்கை கடன் வழங்குநர்களுடன் மார்ச் 14 ஆம் திகதியிடப்பட்ட எனது கடித்தின் ஊடாக கடன் மறுசீரமைப்புக்கான என்னால் மேற்கொள்ளப்பட்ட அர்பணிப்புக்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

6 மாதங்களுக்குள் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் ஊடாக மீளாய்வு இடம்பெற்றதை தொடர்ந்து அவர்களின் வாக்குறுதிகளை பாதுகாப்பதற்கு கடன் வழங்குநர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு மறுசீரமைப்புச் செய்வதன் பலன்களை ஈட்டிக்கொள்ளவும் இலங்கையின் நான்கு வருட பொருளாதார திட்டத்தின் கீழ் அர்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகும். அதனால் நாம் கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியதுடன் எமது தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் உள்ளது.

அதேபோல் நாம் கடன் மறுசீரமைப்பு மற்றும் நான்கு வருட வேலைத்திட்டத்தை மாத்திரம் செயற்படுத்துவது போதுமானதல்ல. நமது பிள்ளைகளுக்கும் இளம் சமுதாயத்தினருகுகும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியமாகும். எமது நிறுவன மற்றும் மூலோபாய செயற்பாடுகளில் திருத்தம் செய்து கொள்வதே நாம் முன்னோக்கிச் செல்வதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று இலங்கை மிக முக்கியமான இடத்தில் இருக்கின்ற நிலையில் இலங்கையை செழிப்பான நாடாக மாற்றுவதற்கு இவ்வாறான வாய்ப்புக்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதனை விடுத்துச் செயற்படும் பட்சத்தில் குறைந்த நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக நாம் ஒரு இடத்திலேயே முடங்கிக் கிடக்க நேரிடும்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சுபீட்சமான எதிர்காலத்திற்கான வாய்ப்புக்களை எம்மால் உருவாக்க முடியும். எமது அனைத்து முறைமைகள் பற்றியும் அரசாங்கம் பற்றியும் எதிர்கட்சிகளை போல் சம்பிரதாய அரசியல் குழுக்களுடன் உள்ள வெறுப்பு காரணமாக இளைஞர் சமூகம் காலி முகத்திடலுக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டனர். இதுதான் போராட்டத்தின் ஆரம்பம். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த அமைதியான போராட்டம் வன்முறை அடிப்படைவாதிகளால் கையகப்படுத்தப்பட்டது.

இந்த இளைஞர் சமூகம் அதற்கு எவ்வாறு முகம் கொடுக்கின்றது. நாட்டை விட்டுச் செல்வதே அவர்களின் மாற்று வழி. எனவே நாம் இதனைப் பற்றி சிந்திக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை ஆய்வு செய்து அதன் முதலாம் கட்டத்திற்கு அல்லது இரண்டாம் கட்டத்திற்கு உதவி செய்வது தொடர்பில் ஆராயாமல் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எனவே, வளங்களை திறமையாக ஒதுக்கீடு செய்யவும், போட்டித்தன்மை மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் பொருளாதாரத்தில் அரசின் தலையீடு குறைக்கப்பட வேண்டும்.

எல்லாவற்றையும் அரசாங்கம் செய்யும் வரை நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம். தீர்க்க முடியாத சந்தைப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்கும் வரை நாம் காத்திருக்க முடியாது. அடுத்த விடயம், பெரா சுங்க வரி (Rationalization) உட்பட மேலும் வர்த்தக தாராளமயமாக்கல், உலகப் பொருளாதாரம் மிகவும் போட்டித்தன்மையாதல் ஆகியவற்றை குறிப்பிடலாம். நாமும் அதற்கு ஏற்றார்போல் மாற வேண்டும்.

தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் மூலம் அதிக பெண்களை தொழில்படையணியில் சேர்க்க வேண்டும். ஒழுங்குமுறை மற்றும் வணிகச் சூழலை நவீனமயமாக்குவது உட்பட, தனியார் முதலீட்டுக்கான தடைகளை அகற்றவும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் செயல் திறன்மிக்க மின்சார விநியோகத்திற்கு வழிவகுக்கும். மின் உற்பத்தி கலவைப்படுத்தல் மற்றும் விநியோகத்தை மேம்படுத்துவதன் மூலம் மின்சார செலவைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் நாம் இதைப் பின்பற்ற வேண்டும். எங்களுக்கு வேறு வழியில்லை. வேறு யாருக்காவது சிறந்த மாற்று வழி இருந்தால், அதை முன்வைக்கலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த சமூக சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்குவது எனது முயற்சியாகும். நாம் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும். எனவே, இந்தியாவுடனான நமது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமாக மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோன்று, பிராந்திய பொருளாதார கூட்டாண்மையில் நாம் இணைய வேண்டும்.

நாம் தயங்கக் கூடாது. லாவோஸ், கம்போடியா மற்றும் மியான்மாருக்கு அதைச் செய்ய முடிந்தால், ஏன் நம்மால் முடியாது? அதுதான் பிரச்சினை. எனவே நாம் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும்.

அதிக போட்டித்தன்மைக்கு, அரசாங்க அமைப்பு வலுவாகவும் திறமையாகவும் இருக்க வேண்டும். நான் ஏன் சமூக, சந்தைப் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிறேன்? எங்களுக்கு அதிக பணம் தேவை. எங்களிடம் 10,000 பாடசாலைகள் உள்ளன. இலவசக் கல்வி 90% என்று சொல்லலாம். ஆனால் நமது கல்வியின் தரம் என்ன?

அடுத்த தசாப்தத்தில் தெற்காசியாவிலேயே சிறந்த கல்வி முறையாக அல்லது தெற்காசியாவிலேயே சிறந்த கல்வியைக் கொண்ட நாடாக நமது நாட்டை உருவாக்க பணம் தேவை. அதுதான் சமூக முன்னேற்றம். இரண்டாவது, சுகாதார கட்டமைப்பு. ஆரோக்கியத்திற்காக நாம் அதிக பணம் செலவிடுகிறோம். ஆனால் நாம் செலவிடும் ஒவ்வொரு ரூபாவுக்கும் பலன் கிடைக்கிறதா? நாம் சமூக பாதுகாப்பு வலையமைப்பு மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்காக அதிக பணத்தை செலவிட வேண்டும்.

எனவே, எமது பணத்தின் பெரும்பகுதியை செலவிட வேண்டியது, பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலோ, இலங்கை மின்சார சபையிலோ அல்லது ஸ்ரீலங்கன் விமான சேவையிலோ அல்ல. நாம் அவற்றுக்கு பணத்தை வீணடித்திருப்பது போதும். இப்போது நாம் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும்.

தற்போது பசுமைப் பொருளாதாரத்திற்கான நமது திறன் மிகவும் நன்றாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மட்டுமல்ல, பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா மற்றும் இந்த பசுமை ஆற்றலின் விளைவாக இன்னும் பல பொருட்கள், குறிப்பாக உயிரி ஆற்றல் மற்றும் அலை ஆற்றல் ஆகியவை நம் நாட்டில் கிடைக்கின்றன. எனவே, நாம் உடனடியாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்களுக்கு செல்ல வேண்டும்.

1978 இல் ஆடைத் துறையில் நுழைந்தது போன்று இப்போது டிஜிட்டல் மயமாக்கலைத் தொடங்க வேண்டும். 50% பொருளாதாரம் பரவியுள்ள மேல் மாகாணத்தில் இருந்து ஆரம்பித்து மற்ற மாகாணங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். அதேநேரம், ஒரு இரவுக்கு 500-1000 டொலர்கள் வரை செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளை இந்த நாட்டுக்கு அழைத்து வரும் வகையில் நமது சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும்.

செயல்திறன் குறைந்த விவசாயத் துறையில் இருந்து இதைத் தொடங்க வேண்டும். விவசாயத்தையும் மீன்பிடிக் கைத்தொழிலையும் நவீனமயப்படுத்த வேண்டும். மேலும் நான்காவது தொழில் புரட்சி, தன்னியக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பகுதிகளை நாம் விரைவாக அணுக வேண்டும்.

அப்படியானால், அத்தகைய தொழில்கள் மற்றும் சேவைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும். இவை எனது எண்ணங்கள் ஆனாலும் இதைவிட உங்களிடம் இன்னும் அதிகமான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் இருப்பதாக நான் நம்புகிறேன். அவற்றை நாம் கலந்துரையாட வேண்டும். இனியும் காத்திருக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று நாம் மறுசீரமைப்புக்கான அனைத்து வாய்ப்புகளையும் இழந்துவிட்டோம். நாம் சுதந்திரம் பெற்ற பின்னர், விவசாயத்தில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும் என்று டி.எஸ்.சேனாநாயக்க கூறினார். அப்போது அதற்குப் பயன்படுத்தப்படும் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும்.மேலும் அவர், நீர் மின் நிலையங்களைத் தொடங்க சேர் ஜான் கொத்தலாவலவிடம் பரிந்துரைத்தார்.

அதன் பின்னர் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களில் பிலிப் குணவர்தனவினால் கொண்டுவரப்பட்ட நெல் சட்ட மூலம் குறிப்பிட்டத்தக்க ஒன்றாகும். அமெரிக்கர்கள், ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நெல் நிலம் தொடர்பில் பாரிய சீர்திருத்தத்தை மேற்கொண்டனர். அதை பின்பற்றி விவசாய சேவைகள் திணைக்களத்தை அவர் ஸ்தாபித்தார். ஆனால் அவர் மீதான ஆட்சேபனைகள் எதிர்க்கட்சிகளால் அல்ல, அரசாங்கமே எழுப்பியது. அதனால்தான் இன்று நாம் வலுவிழந்த நெல் நிலச் சட்டத்தை வைத்துள்ளோம்.

எனவே, டி.எஸ். சேனாநாயக்க அவர்கள் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முதல் சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டோம். மீண்டும் 1965 இல், டட்லி சேனாநாயக்கவின் அறிக்கையையும் ஷெனாய் அறிக்கையையும் நடைமுறைப்படுத்தத் தவறியதால், இரண்டாவது வாய்ப்பை நாம் தவறவிட்டோம்.

அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தியிருந்தால், தென் கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை எங்களால் எட்ட முடிந்திருக்கும்.

“அதன் பிறகு மீண்டும் எழுச்சி பெறுவோம்” என்ற இலங்கைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோதும் அதை வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை. எங்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. இதுவே எங்களின் கடைசி வாய்ப்பு. இதை நாம் பயன்படுத்திக்கொள்கிறோமா? இல்லையா? என்பதை நீங்கள் அனைவரும் முடிவு செய்ய வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் உள்ள விடயங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். IMF திட்டம் முடிவடைந்து, அத்திட்டத்திற்கு வாக்களிக்கப்பட்ட பிறகு, அந்த முன்னேற்றத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான பரிந்துரை அல்லது முன்மொழிவு சமர்ப்பிக்கப்படலாம். தேசிய பாராளுமன்ற சபை மற்றும் சமூகத்தில் உள்ள அனைவரையும் இணைத்துக்கொண்டு நமது நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை முடிவு செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.

நாங்கள் விரைவாக முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அரசாங்கம் தொடங்கியுள்ள இந்த திட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரையும் நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் வரவேற்புரை நிகழ்த்திய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய கூறியதாவது,
நாம் பாரிய பற்றாக்குறையுடன் சில காலம் பயணித்தோம். அந்த நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சில காலங்களில் அதனை கண்டுகொள்ளவில்லை. அரச வரவு செலவுக்கு இடையிலான வேறுபாடு தொடர்ச்சியாக காணப்பட்டது.

வட்டியற்ற அரச செலவீனங்களுக்கிடையில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்பட்டன. கொடுப்பனவுச் செயற்பாடுகளின் நிலையும் அதுவாகவே இருந்தது. கடன் பெற்றுக்கொண்டு பெருமளவான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அதனால் டொலர்கள் ஈட்டும் வாய்ப்புக்கள் உரிய சந்தர்ப்பத்தில் கிடைக்கவில்லை. கடன் செலுத்தவும் கடன் பெறப்பட்டது. எதிர்பாராத பல பிரச்சினைகளுக்கு நாடு முகம்கொடுக்க நேரிட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதேபோல் கொவிட் பரவல், பல நாட்கள் நாடு முடக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக சுற்றுலாத்துறை சரிவை கண்டது.

உரக் கொள்கையின் காரணமாக பெரும் முரண்பாடுகள் தோன்றியது. 2022 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தி 8.2 ஆக காணப்பட்டது. எமது கடன்களை முகாமைத்துவம் செய்துக்கொள்ள மேலும் கடன் பெறப்பட்டது. இதன் போது உலகின் தரப்படுத்தல் சுட்டிகள் தொடர்ச்சியாக எம்மை அறிவுறுத்தின. நம்மிடம் ரூபாய்கள் இருக்கவில்லை. இருப்பினும் நாம் நூற்றுக்கு 20 ஐ ஒதுக்கீடு செய்தோம். ஆனால் நூற்றுக்கு 12 ஐ தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. எம்மிடம் தேசிய மட்டத்திலோ சர்வ தேச மட்டத்திலோ நிதி இருக்கவில்லை.

எமது நாட்டில் பண்டங்களுக்கான பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. நீண்ட வரிசைகள் உருவானது. மக்கள் போராட்டங்கள் ஏற்பட்டன. கையிருப்புக்கள் மறை பெறுமானத்தை கொண்டது. கடன் வழங்குநர்களுக்கு கடன்களை திரும்பச் செலுத்த முடியவில்லை என மத்திய வங்கி அறிவிக்க நேரிட்டது. நாம் நாட வேண்டிய ஒரே இடமாக சர்வதேச நாணய நிதியம் மாத்திரமே காணப்பட்டது. 16 தடவைகள் நாம் அவர்களுடன் பணியாற்றியுள்ளோம். நாம் உரிய நேரத்தில் அவர்களை நாடியதால் இருதரப்பு கடன் வழங்குநர்கள் கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்தனர்.

எமது நாட்டின் பொது மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதனை வெற்றியாக கண்டனர். பல சவால்களுக்கு மத்தியிலேயே நாம் முன்னோக்கிச் செல்கிறோம். பிரசித்தமான தீர்மானங்களை மேற்கொள்ள முயன்றதால் சர்வதேச நாணய நிதியத்துடனான பழைய இண்ணக்கப்பாடுகளை நிறைவேற்ற முடியாமல் போனது.

தற்போது எமக்கு மாறுப்பட்ட பல சவால்கள் உள்ளன. சர்வதேச நாடுகள் முன்பை விடவும் நம்மை பற்றி தேடியறிவது தவறல்ல. நாம் செயற்படுத்த வேண்டிய விடயங்களுக்கு மத்தியில் பணவீக்கத்தையும் குறைக்க வேண்டியது அவசியம். எமது உணவு பற்றாக்குறை 90 சதவீதத்திற்கும் அப்பால் சென்றது. பொது மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். நாட்டிற்குள் பண்டங்களை உற்பத்தி செய்யவோ இறக்குமதி செய்யவோ எம்மால் முடியாதிருந்தது. வங்கிக் கடன் வட்டிவீதங்களை அதிகரித்தமையே நாம் மேற்கொண்ட இலகுவான தீர்மானமாக அமைந்தது. மிகவும் கடினமானது. இருப்பினும் மத்திய வங்கியின் கடினமான தீர்மானம் பணவீக்கத்தை மட்டுப்படுத்தி வருகிறது.

நாம் நேரடி வரி விதிப்பை அதிகரிக்க வேண்டும். நாம் இழந்தவற்றை மீளப்பெற வேண்டும். இவற்றுக்கு மத்தியில் நம்மிடமிருந்து நழுவிச் செல்லும் வருமானங்களும் உள்ளன. சூட்சுமாக அவற்றை நாம் ஈட்டுவோம். இல்லாவிட்டால் பல்வேறுப்பட்ட காரணங்களுக்காக இழக்க நேரிடும். நாம் தேசிய பணியொன்றை முன்னெடுத்து வருகின்றோம். அதனை சாத்தியமாக்கிக்கொள்ள வேண்டும்.

மின்சார சபை சிறிது காலம் சமூக நலன்புரி அமைப்பாகவே செயற்பட்டு வந்தது. மின் கட்டணத்தை அதிகரிப்பது பிரசித்தமான தீர்மானம் அல்ல. சரியான விதத்தில் ஒருவருக்கு சமூக பாதுகாப்பினை வழங்க வேண்டும். அந்த பொறுப்புகளை அதிகாரிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிகாரிகள் அந்த பொறுப்புக்களை நிறைவேற்ற தயங்குகின்றனர். நாம் செல்லும் நல்ல பயணத்தில் வேலைச் செய்வதும் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியை சுயாதீனமாக்க வேண்டும். அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோல் நாம் வலுவான ஊழல் ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டு வருவோம். நட்டமீட்டும் அரச நிறுவனங்களையும் மறுசீரமைப்புச் செய்ய வேண்டியது அவசியமாகும்.மக்களோடு பணியாற்று கையில் இவ்வாறானா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அரசாங்கம் வியாபாரச் செயற்பாடுகளிலிருந்து விடுபடுவது சிறந்தது. வெளிப்படைத் தன்மையுடன் அதனை செய்வோம். ஆனாலும் சமூகம் வேறுவிதமாக பார்க்கிறது. நாம் அனைவரும் மக்களுக்கு உண்மை நிலைமையை அறிவுறுத்த வேண்டும். பொது மக்களின் அன்றாட செலவீனங்களை குறைப்பதற்காக அவற்றை செய்ய வேண்டும். பட்டயக் கணக்காளர்கள் மிகச் சிறந்த முகாமையாளர்கள் ஆவர்.

சிறந்த திறமைசாலிகளாகவே அவர்களை நாம் காண்கிறோம். அந்த திறமைச்சாலிகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. நாட்டை எழுச்சி பெறச் செய்வதற்கு உங்களுடைய அர்பணிப்பும் ஒத்துழைப்பும் மிக அவசியமானது. நீங்கள் தான் பிரதான நிறுவனங்களில் வருமானத்தை ஈட்டித் தருகிறீர்கள். இந்த விடயங்கள் தொடர்பில் . சிறந்த முறையிலும் நோக்குங்கள் என கேட்டுக்கொள்கிறேன் .

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, எம்.ஏ. சுமந்திரன், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி மஹிந்த சிறிவர்தன , நிதி அமைச்சின் ஆலோசகர் தேஷால் டி மெல் , இலங்கை வர்த்தக சபையின் தலைவர் கோவிந்தசாமி, சாரத அமலின், சட்டதரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் சட்டத்தரணி ஹஸித பெர்னாண்டோ மென்பொருள் சேவை சங்கத்தின் உறுப்பினர் ஹசிக் ஹலி காலநிலை இலங்கை பட்டய சேவையாளர் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் கென் விஜேகுமார், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் நுவன் கமகே, ஸ்ரீ லங்கா மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சபையின் தலைவி அனோஜி டி சில்வா இலங்கை பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தலைவர் சஞ்சய பண்டார உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.