இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பாதையை பின்பற்றி, போட்டித்தன்மைமிக்க, புதிய சந்தை வாய்ப்புகளையும், வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை” என்ற தலைப்பில் அலரி மாளிகையில் நேற்று (29) நடைபெற்ற நிபுணர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். நிலையான அபிவிருத்தி சபை இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை இனிமேலும் ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் செயற்பட்டமை போன்று, உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி ஒரு நாடாக நாமும் தனித்து முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் நாம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இங்கு குறிப்பிடப்பட்டது. நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடலில் நானும் பங்கேற்கிறேன். நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நாம் இப்போது அடைந்து வருவதோடு, அதன் பிரதிபலன்களும் பாராட்டுக்குரியவை.
ஆனால் இன்று உலகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு கூடுதலாக, காலநிலை மாற்றத்தின் பொதுவான பிரச்சினைகளை கலந்துரையாட பரிஸ் காலநிலை மாநாடு மற்றும் கிளாஸ்கோ மாநாடு ஆகியவை நடத்தப்படுகின்றன.
இது தவிர, உலகம் முழுவதும் பரவிய கொவிட் தொற்றின் பாதிப்பையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கொவிட் 19 தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட நாடாக இலங்கை உள்ளதுடன், எமது நாட்டின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், அனைத்து நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டதோடு, இதன் மூலம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதையும் நாம் அறிவோம்.
ஐரோப்பாவின் பொருளாதாரம் இன்றளவிலும் சரிவை எதிர்கொள்கிறது. மறுமுனையில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக அமெரிக்கா இருந்த நிலையை விடவும் தற்போது ஓரளவு முன்னேற்றம் கண்டுவருகிறது. சீனா இன்னும் மீண்டு வரவில்லை. எனவே, உலகப் பொருளாதார முன்னேற்றம் தடைப்பட்டுள்ளதுடன், அதனால் பெரும் பாதிப்புக்களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
அவ்வாறென்றால், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு நாம் எவ்வாறு நிதியைப் பெற்றுக்கொள்வது? மற்றும் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தணிக்கவும் உலகளாவிய நிதிக் கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நிதி நிவாரணங்களை பெற்றுக்கொள்ளும் முறைமைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அந்த இலக்குகளை அடைவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
2030ஆம் ஆண்டுக்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும், 2050ஆம் ஆண்டாகும் போது காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை அடைவதற்குத் தேவையான நிகழ்ச்சி நிரலை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கும் அனைத்து நாடுகளின் ஆதரவையும் ஐநா பொதுச்செயலாளர் அண்மையில் கோரியிருந்தார்.
இவை அனைத்திற்கும் தேவையான வளங்களைக் கண்டறியும் திறன் நமக்கு இருக்க வேண்டும். இதற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருக்கும் நிதி போதுமானதாக இருக்கும் என்று சிலர் நினைத்தனர். ஆனால் அந்த நாடுகள் அதற்கு முன்வரவில்லை. மேலும், தற்போது அவர்களிடம் அதற்கான வளங்கள் போதுமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது தொடர்பாகவும் கவனம் செலுத்தி, இந்த நிதி மூலங்களைக் கண்டறிவது குறித்தும் சிந்திக்க வேண்டும்.
மேலும், இதற்காக, பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளிடமிருந்து மட்டுமன்றி, தனியார் துறையிலிருந்தும் நிதி நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த வகையில் முதலீடுகளுக்கும் பிணைமுறிகளை வெளியிடுவதற்குமான வாய்ப்புக்களை தனியார் துறைக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால், தற்போதைய நிலவரப்படி பல நாடுகள் தொடர்பில் இது வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், தற்போதுள்ள திறன்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இல்லை என தனியார் துறையினர் நினைக்க வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பிற்காக நாம் மூன்றில் ஒரு பங்கை ஒதுக்கினால், மீதமுள்ள தொகையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
2019 இல் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய, மொத்தத் தேசிய உற்பத்தியில் 9% சதவீதத்தை மாத்திரம் வைத்திருப்பதே எமது தேவையாக இருந்தது. ஆனால் தற்போது, இந்தப் பின்னணியிலும், காலநிலை மாற்ற இலக்குகளுக்காக நாம் நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது.
இலங்கை எதிர்கொண்ட கடன் நெருக்கடியின் விளைவாக, இந்நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க நாங்கள் எதிர்பார்ப்பதோடு, அதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து வருகிறோம். அதற்காக தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பின்பற்றிய பாதை குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளதோடு, இதன்போது உயர் போட்டித்தன்மையுடைய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக எம்மால் மாற முடியும்.
நாம் தொடர்ந்தும் முன்பு இருந்தது போன்று சிறிய பொருளாதாரமாக செயல்பட முடியாது. நாம் நமது பொருளாதாரத்தை விஸ்தரிக்க வேண்டும். இதற்காக புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், இதற்குத் தேவையான வெளிநாட்டு முதலீடு மற்றும் மூலதனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், மற்ற நாடுகளுக்கு நாம் சுமையாக இருக்கக்கூடாது. ஒரு நாடாக, பிற நாடுகளின் உதவியைப் பெற நாம் இனிமேலும் நினைக்கக் கூடாது. நம் நாட்டின் முன்னேற்றத்தை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உலகின் பல நாடுகள் அதைச் செய்துள்ளதோடு, இவ்விடயத்தில், போரினால் முற்றாக அழிந்த வியட்நாமை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
நமது நாடு இந்து மற்றும் பசுபிக் சமுத்திரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. எனவே, எமக்கு பொருளாதார வளர்ச்சியை உருவாக்க பல வாய்ப்புகள் உள்ளன. நாம் இருக்கும் கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், இன்று பரவலான வளர்ச்சி ஏற்பட்டு வருவதை உங்களால் பார்க்க முடியும். இந்தியா இன்று பொருளாதார ரீதியில் வலுவடைந்து வருவதோடு, இந்து சமுத்திரப் பிராந்தியம், எதிர்காலத்தில் உயர் பொருளாதார வளர்ச்சிப் பிராந்தியமாக உருவெடுக்கும். தற்போது நாம் அனைவரும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவது, காலநிலை மாற்ற பாதிப்பைத் தணிப்பது மற்றும் உலகளாவிய கடன் நெருக்கடி ஆகியவை தொடர்பாக மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்று கூற வேண்டும்.
நாம் அதிலிருந்து விலகாமல், இதற்காக கூட்டாகவும் குழுவாகவும் செயல்பட வேண்டும். அதற்காக நாம் ஒரு அணியாக புதிய மூலோபாயங்கள் ஊடாக முன்னோக்கிச் செல்வோம் என்று நான் அனைவரையும் அழைக்கின்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, நிலையான அபிவிருத்திக்கான சபையின் பணிப்பாளர் நாயகம் சமீந்திர சபரமாது, ஆசிய மற்றும் பசுபிக் வலய சமூக பொருளாதார ஆணைக்குழுவின் தகவல் பிரதானி ஆர்மன் பிடக்பேர்க் நியா (Arman Bidarbakth Nia), ஐ.நா சபை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிட பிரதிநிதி அசூஸா குபோடா (Azusa Kuboda), ஐ.நா சபை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ஃப்ரேச் (Marc Andre Frache) உள்ளிட்டோரும் இம்மாநாட்டில் உரையாற்றினர்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான அலி சப்ரி, பவித்ரா வன்னியராச்சி, மஹிந்த அமரவீர, கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜாங்க அமைச்சர்களான செஹான் சேமசிங்க, கீதா குமாரசிங்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, வலுசக்தி அமைச்சின் செயலாளர் யூ.கே.மாபா பத்திரன உள்ளிட்டவர்களோடு உயர்ஸ்தானிகள், தூதுவர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.