Published on: ஜனவரி 16, 2024

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே பொருத்தமான தருணம்!

  • அடுத்த சில தசாப்தங்களில் முதலீடுகளின் பலன்கள் அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும்.
  • காலநிலை மாற்றத்தைத் தணிக்க உலகளாவிய நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.
  • அர்ப்பணிப்புகளை விட செயற்பாடுகள் குறைவாக இருப்பது வருந்தத்தக்கது.
  • உலகளாவிய தலைமைத்துவ தோல்வியின் விளைவுகளை வளர்ந்து வரும் நாடுகள் சுமக்க வேண்டிய நிலை – சுவிஸ் பசுமை தொழில்நுட்ப மன்றத்தில் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்றும், அடுத்து வரும் தசாப்தங்களில் இது அந்தப் பங்குதாரர்களுக்கும் இலங்கை நுகர்வோருக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக முன்வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் உயர் மட்ட மற்றும் நிலையான கொள்கையை உத்தரவாதம் செய்யும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுவிஸ்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று (15) இடம்பெற்ற “பசுமை தொழில்நுட்ப மன்றத்தில்” (Green Tech Forum) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இதனை சுவிஸ் – ஆசிய வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.

‘எரிசக்தியால் பாதுகாப்பான இலங்கைக்கு வழி வகுத்தல்’ என்ற தொனிப்பொருளில் தனது உரையை ஆற்றிய ஜனாதிபதி, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் உயர் ஆற்றல்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு உகந்த முதலீட்டுடன் கூடிய சூழலை ஏற்படுத்த கடந்த 2 ஆண்டுகளில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதில் இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டுபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டில் முன்வைக்கப்பட்ட “வெப்பமண்டல முன்முயற்சி” உட்பட ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

இலங்கை தனது நிலையான, பசுமையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான இலட்சியத் திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும், 2050 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதில் உறுதியாக உள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

துரித புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம் இந்த முழு முயற்சியின் ஒரு முக்கிய அங்கம் என்றும், இது எரிசக்தி பாதுகாப்பிற்கான பாதையில் இன்றியமையாத நடவடிக்கை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு:

இந்த விரிவுரையை வழங்க என்னை அழைத்த சுவிஸ் – ஆசிய வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்நிகழ்வின் அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

காலநிலை மாற்றத்தைத் தணிக்க உலகளாவிய நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்த பல உலகளாவிய மன்றங்கள் உள்ளன. இருப்பினும், இதற்காக அர்ப்பணிப்பதை விட செயற்படுவது குறைந்த மட்டத்தில் உள்ளது என்று சொல்ல வேண்டும். உலகளாவிய தலைமைத்துவத்தில் ஏற்பட்ட இந்த தோல்வியின் விளைவுகள் பெரும்பாலும் பூகோள தெற்கின் வளர்ந்து வரும் நாடுகளுக்கு சுமக்க நேரிடுகிறது.

பொதுவான காலத்தை விட வறட்சி, நீண்ட காலம் நீடிப்பது விவசாய உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும் போது நமது உணவு பாதுகாப்பு ஆபத்தில் தள்ளப்படுகிறது. மேலும், தாமதமான பருவமழை காரணமாக நீர்மின் உற்பத்தி தடைபடும்போது நமது எரிசக்தி பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது.

வறட்சியின் நிறைவில் வெள்ளம் நிலைமை ஏற்படுகிறது. குறிப்பாக, சாதாரண மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் சீர்குலைக்கிறது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதகமான விளைவுகள் அசாதாரணமானது என்பது இதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.

காலநிலை நீதி தொடர்பான பிரச்சினையைப் போன்று அதனை தணிக்கவும் பூகோள தெற்கின் நாடுகளுக்கு மேம்பட்ட பொருளாதாரங்களின் வலுவான பங்களிப்பின் அவசியத்தையும் இது காட்டுகிறது.

காலநிலை மாற்றத்தைத் தணிக்க இலங்கை உறுதிபூண்டுள்ளது என்பதை வலியுறுத்த வேண்டும். டுபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டில் “வெப்பமண்டல முன்முயற்சி” ஆரம்பிக்கப்பட்டது. இது வெப்பமண்டல நாடுகளில் காடுகள், எரிசக்தி, சமுத்திரம் மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் திட்டத்தை உருவாக்குகிறது.

அத்தகைய முயற்சிகளின் ஒரு முக்கிய அங்கமான, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் நமது முயற்சிகளுக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான நீண்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, இலங்கை நீர்மின் உற்பத்தியில் விரிவான வலையமைப்பை உருவாக்கியது. 1950 இல் அதன் முதல் பாரிய நீர்மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இது நான்கு நீர்த்தேக்கங்களைக் கொண்டுள்ளது. அதன் பின்னர் நாட்டின் ஆற்றல் தேவைக்காக மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்தோம். இவ்வாறு ஐந்து பிரதான நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டு ஆறாவது நீர்த்தேக்கமாக வளவே கங்கை திட்டம் இணைக்கப்பட்டது. மகாவலி கங்கைத் திட்டத்தின் இறுதிக் கட்டம் ஏழு வருடங்களுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டது. இதனால், நீர்மின்சாரத்திற்கு கிடைக்கும் மூலங்களைப் பயன்படுத்தியுள்ளோம்.

இன்றும், இலங்கையின் மின்சார உற்பத்தித் திறனில் சுமார் 40% நீர்மின்சாரமாகும். நீர் மின்சாரம் உகந்த அளவில் பயன்படுத்தப்பட்டதால், காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தியை தேசிய மின் கட்டமைப்பில் ஒருங்கிணைக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் தற்போது இந்த செயல்முறையை துரிதப்படுத்தியுள்ளது. இந்த இலக்கை அடைய 11.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பெரிய முதலீடு தேவைப்படுகிறது. இருப்பினும், அண்மைக் காலம் வரை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தனியார் துறை முதலீட்டிற்கான கட்டமைப்பு மிகவும் சாதகமாக இல்லை.

கடந்த 2 ஆண்டுகளில், இந்த குறைபாடுகளை சீர் செய்யவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு உகந்த முதலீட்டு சூழலை உருவாக்கவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நிதி மறுசீரமைப்புகள்

அதன் முதலாவது முன்னெடுப்பாக, செலவு பிரதிபலிப்பு கட்டண முறையை உருவாக்க வேண்டும். 2014 மற்றும் 2022இற்கு இடையில், இலங்கையில் மின்சார கட்டணத்தில் திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் இலங்கை மின்சார சபைக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதுடன் சில சந்தர்ப்பங்களில் மின்சார விநியோகஸ்தர்களுக்கான கொடுப்பனவுகளில் தாமதம் ஏற்பட்டது.

இருப்பினும், ஒகஸ்ட் 2022 முதல், இது செலவு-பிரதிபலிப்பு விலை சூத்திரத்திற்கு மாறியது. அதன்படி, எதிர்கால மின் உற்பத்தி செலவைப் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு காலாண்டிலும் மின் கட்டணங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன. நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வந்த இலங்கை மின்சார சபை 2023 ஆம் ஆண்டு இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியதன் மூலம் ஏற்கனவே இருந்த கடன்களை கணிசமான அளவில் செலுத்த முடிந்தது.

இந்த நிறுவனம் இப்போது வலுவான இருப்புநிலை மற்றும் வலுவான பணப்புழக்க நிலை மற்றும் நிதி பணப் புழக்கத்தை உறுதி செய்யும் கட்டண அறவீட்டு முறையொன்றைக் கொண்டுள்ளது. உள்ளக மறுசீரமைப்புகள், பசுமை நிதியை ஈர்ப்பதற்கான கட்டமைப்பையும் நாங்கள் தயாரித்து வருகிறோம்.

நிலையான நிதிக்கான வரைபடம், பசுமை நிதி வகைப்படுத்தல், நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான முதலீட்டாளர் வரைபடம் (SDG) மற்றும் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பசுமைப் பிணைப்புக் கட்டமைப்பிற்கான வரைப்படம் ஆகியவை ஊடாக இலங்கைக்கு பலமான காலநிலை நிதியியலைப் பலப்படுத்தி தேவையான சூழல் உருவாக்கப்படுகிறது. நிலையான நிதியுதவியை வழங்குவது இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகளுக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கும்.

சட்ட சீர்திருத்தங்கள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பாரிய அளவிலான தனியார் துறை முதலீடுகளுக்கு சட்டரீதியான தடைகள் உள்ளன. 2022 இல் கொண்டுவரப்பட்ட மின்சாரச் சட்டத் திருத்தம் அந்தச் சட்டத் தடைகளை நீக்குவதற்கான இரண்டாவது படியாகும்.

நிறுவன சீர்திருத்தங்கள்

மூன்றாவதாக, இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் இறுதிக் கட்டத்தில் அரசாங்கம் உள்ளது. இது மின்சார சபையின் விநியோகம், உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தில் அதிக நிதி மற்றும் செயல்பாட்டு சுதந்திரத்தை உருவாக்கும். இதன் விளைவாக போட்டித்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஏற்படும்.

மின் உற்பத்தியில் தனியார் துறை பங்களிப்பு ஏற்கனவே நடைபெற்று வருகிறது, இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் தனியார் துறை பங்கேற்புக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இந்த பாரிய மறுசீரமைப்புகள், நுகர்வோர் மற்றும் மிகவும் போட்டி மற்றும் திறமையான மின் உற்பத்தியாளர்களுக்கு அதிக உற்பத்தி வாய்ப்புகளை உருவாக்குகின்றன. மின்சார சபை திறமையாக செயல்படுவதையும் இது உறுதி செய்கிறது. இந்த மறுசீரமைப்புக்கான சட்ட வரைவு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்

குறிப்பாக 2026 ஆம் ஆண்டளவில் நாட்டின் தேசிய மின்சாரத் தேவைகளில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக, கட்டமைப்பின் செயல்திறனை மேம்படுத்தவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைக்கவும் மேம்பாடுகள் அவசியம். களஞ்சியப்படுத்தல், பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றிலும் முதலீடு தேவைப்படுகிறது. 2030 ஆம் ஆண்டு வரை இந்த ஒருங்கிணைப்புக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் செயல்படுத்தல் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

எதிர்கால நோக்கு

கடந்த இரண்டு ஆண்டுகளில் எரிசக்தி துறையில் செயல்படுத்தப்பட்ட முக்கிய மறுசீரமைப்புகள் இந்தத் துறையில் மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பாரிய அளவிலான சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனம் 350 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளது. இது 2025 இல் தொடங்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் 750 மில்லியன் டொலர்களை காற்றாலை ஆற்றலில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி காற்றாலை மின்சாரம் இலங்கைக்கு பெரும் வாய்ப்பை வழங்குகிறது.

குறிப்பாக கடலோர காற்றாலை மின்சாரத்தின் ஊடாக இலங்கைக்கு தேவையை விட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாத்தியம் உள்ளதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எரிசக்தி தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் முற்போக்கான கட்டத்தில் உள்ளது. மேலதிக மின்சாரத்தை, குறிப்பாக இந்தியாவின் தென்பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைப் பகுதிக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.

சூரிய சக்தி மின்உற்பத்திக்கும் அதிக வாய்ப்பு உள்ளது. இது சுமார் 40 ஜிகாவொட் என மதிப்பிடப்பட்டுள்ளது. கூரைகளில் பொருத்தப்படும் சூரிய தகடுகளினால் உருவாக்கப்படும் ஆற்றலைத் தவிர, சூரிய சக்தி ஆற்றல் சுமார் 200 ஜிகாவாட் ஆகும். அதன்படி, மொத்த அளவை அதிகரிக்க வேண்டும். இது இலங்கையின் காற்றாலை சக்தியை விட அதிகம். இலங்கையில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமைஆமோனியாவின் சாத்தியக்கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

இலங்கையின் நிலையான, பசுமையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கான நம்பிக்கைக்குரிய திட்டங்கள் உள்ளன. 2050 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய இலங்கை உறுதிபூண்டுள்ளது.

துரித புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம் இந்த முழு முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் இது ஆற்றல் பாதுகாப்பிற்கான இன்றியமையாத படியாகும்.
இலங்கை தற்போது வறட்சிக் காலத்தில் அதிக விலைகூடிய எரிபொருளைச் சார்ந்து இருப்பதால், இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் உற்பத்திச் செலவைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இலங்கை தற்போது காலநிலை மாற்றத்தைத் தணித்தல் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது பசுமை ஆற்றலுக்கான தற்போதைய வாய்ப்புகளை மேலும் திறந்து விடும்.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையின் திசையை பல்வேறு உந்துதல்களும் பங்குதாரர்களும் ஆதரிக்கின்றனர் என்பது தெளிவாகிறது. எனவே, முதலீட்டாளர்கள் இந்தத் துறையில் உயர்தரம் மற்றும் நிலையான கொள்கையை எதிர்பார்க்கலாம். இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம். மேலும் இதுபோன்ற முதலீடுகள் எதிர்வரும் தசாப்தங்களில் அதன் பங்குதாரர்களுக்கும் இலங்கை நுகர்வோருக்கும் அதிக வருமானத்தை தரும் என்பதில் எனக்கு எதுவித சந்தேகமும் கிடையாது.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.