Published on: ஜூலை 10, 2023

இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு ஏற்ற மாணவனை உருவாக்கும் வகையில் அடுத்த வருடத்திற்குள் இலங்கையின் கல்வித்துறையில் மாற்றம்

  • நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டம் 2024 ஆம் ஆண்டு முதல்.
  • க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத நடுப்பகுதியில்.
  • தாமதமான அனைத்து பரீட்சைகளையும் 2024 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த்.

அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருபத்தியோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான மாணவனை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.

நிலையான மற்றும் தரமான கல்வியை உருவாக்குவதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பல சீர்திருத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்காக சர்வதேச தரத்திற்க ஏற்ப பாடத்திட்டங்களை அறிமுகம் செய்வதுடன் மனித வளத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்ட “சுரக்ஷா ” மாணவர் காப்புறுதித் திட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த்,

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கல்வி அமைச்சு, மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல. அந்நாடுகளில் கல்வி அமைச்சு மாகாண அமைச்சரின் கீழேயே உள்ளது. இந்தியா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவ்வாறான கல்வி முறையால் அந்நாட்டுக் குழந்தைகளின் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் மத்திய அரசிடமே கல்வி அமைச்சு உள்ளது.

எமது நாட்டில் 399 பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் அனைத்தும் மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் உள்ளன. 2001 ஆம் ஆண்டு ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது, இந்நாட்டில் பதினேழு தேசிய பாடசாலைகளே இருந்தன. ஆனால் ஒவ்வொரு கல்வி அமைச்சரின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது சில அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலோ திடீரென தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால் அதன் ஊடாக தரமான கல்வி முறையொன்று தோற்றுவிக்கப்பட்டதாக கூற முடியாது. ஒரே இரவில் 28 தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்ட சகாப்தம் வரலாற்றில் உள்ளது. ஆனால், தற்போது கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைக்குப் பதிலாக மாணவர்களை மையப்படுத்திய கல்வி முறையொன்று தேவை.

அண்மையில் ஏற்பட்ட கொவிட்-19 மற்றும் பொருளாதார தேக்கநிலை காரணமாக, கல்வித்துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைகள் மற்றும் சமூக பிரச்சினைகள் உருவாகியதன் காரணமாக பாடசாலைகளை முறையாக நடத்த முடியவில்லை. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்ய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் வரவில்லை. தற்போது அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு, உயர்தர விடைத்தாள்கள் மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாத நடுப்பகுதியில் பரீட்சை முடிவுகளை வெளியிடலாம் என நம்புகிறேன். இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திற்குள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அடுத்த வருடத்திற்கான அனைத்துப் பரீட்சைகளையும் குறித்த காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

மேலும், புதிய கல்வி சீர்திருத்தத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்துடன் இணைந்து ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 13,800 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கான பாடப்புத்தகங்களை புதுப்பிக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

தரம் 06 முதல் 09 வரை மற்றும் தரம் 10 முதல் 13 வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டு பாடத்திட்டங்களை கல்வித்துறையில் உள்ளடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, Microsoft போன்ற நிறுவனங்களிடமிருந்து தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஆதரவைப் பெற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிலையான மற்றும் தரமிக்க கல்வித்துறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பல மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்பொழுது சுமார் ஐயாயிரம் அதிபர் வெற்றிடங்கள் உள்ளன. அதற்காக போட்டிப் பரீட்சை மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது தொழிற்சங்கம் ஒன்று நீதிமன்றத்திற்குச் சென்று தடையுத்தரவு பெற்றுள்ளது. ஆசிரியர் நிர்வாக சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு சுமார் 22000 வெற்றிடங்கள் உள்ளன.
அதற்கு அரச பணியில் இருப்பவர்களும் விண்ணப்பித்துள்ளதுடன், அவர்களுக்கு போட்டிப் பரீட்சைக்குத் தோற்ற சந்தர்ப்பம் வழங்கப்படாமைக்கு எதிராக சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர். அதனால்தான் நியமனங்கள் வழங்குவது தாமதமாகி வருகிறது. நூறு பேரில் இருவரின் மனித உரிமைகள் குறித்து நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளதால் 42 இலட்சம் மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவெடுக்கும் என நம்புகிறோம்.

தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது முன்வைத்த 13 பிளஸ்(13+)கல்வித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். கல்வித் துறையை விரிவுபடுத்துவதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டு அதற்கான முன்மொழிவுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.அதன்படி எதிர்காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து கல்வித்துறையை விரிவுபடுத்த தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும்.

அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களுக்கு இணையும் மாணவர்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதுடன் அவர்களை இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய சூழலை உருவாக்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருந்தோட்ட மக்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், தோட்டப் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை ஆசிரியர்களாக பயிற்றுவிக்கும் பயிற்சிப் பல்கலைக்கழகமொன்றை கொட்டகலை பிரதேசத்தில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை மேற்பார்வை செய்யும் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இவ்வாறான அனைத்து விடயங்களுடனும் அடுத்த வருடத்தில் இருந்து கல்வித்துறையில் மாற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.