Published on: ஆகஸ்ட் 30, 2024

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஆராயப்பட்டது.

  • கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் பொதுச் செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
  • தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஏற்படும் உள்ளக சவால்களை நிர்வகிப்பது தேசிய பாதுகாப்புக்குட்பட்டது – தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமானசாகல ரத்நாயக்க.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பொருளாதார ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய தேசிய பாதுகாப்புத் தலைவருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

இதேவேளை, கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (CSC) உறுப்பு நாடுகளான இலங்கை, இந்தியா, மாலைதீவு மற்றும் மொரிசியஸ் ஆகிய நாடுகள் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திட்டன.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால், மாலைதீவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் (ஓய்வு) இப்ராஹிம் லத்தீப், இலங்கைக்கான மொரிஷியஸ் உயர் ஸ்தானிகர் ஹேமண்டோயல் திலும் மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்க ஆகியோர் உறுப்பு நாடுகளின் சார்பாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க,

“தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் ஏற்படும் உள்ளக சவால்கள் மற்றும் அவ்வாறான நிலைமைகள் மேம்படுத்தப்படுவததை நிர்வகித்தல் என்பன தேசிய பாதுகாப்பின் எல்லைக்குள் அடங்குகின்றன.

கருத்து சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமையாக இருந்தாலும், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அதன் எதிர்மறையான விளைவுகளை நிர்வகிப்பதற்கு அரசாங்கங்கள் நடைமுறைச் சாத்தியமாக செயற்பட வேண்டும் என சாகல ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.

உறுப்பு நாடுகளை பொதுவாக பாதிக்கும் சர்வதேச அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை கையாள்வதன் மூலம் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதே கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.

கடல் பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல், கடத்தல் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், சைபர் பாதுகாப்பு மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தைப் பாதுகாத்தல் மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் ஆகிய ஐந்து தூண்களில் கொழும்பு பாதுகாப்பு மாநாடு செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய சாகல ரத்நாயக்க மேலும் கூறியதாவது,

”இந்த ஒப்பந்தத்தின் ஊடாக பொதுவான மூலோபாய நோக்கு உறுதிப்படுத்தப்படுகிறது. பிராந்தியத்தில் ஏற்படும் வெளிப்புற தாக்கங்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. அண்டை நாடுகளுடனான மோதல்களைத் தவிர்ப்பதன் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இது பிரதிபலிக்கிறது.

இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பாக 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கொழும்பு பாதுகாப்பு உச்சி மாநாடு பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த மாநாட்டில் மொரீஷியஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை செயற்பாட்டு உறுப்பினர்களாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதில் இணையுமாறு சீஷெல்ஸை அழைத்துள்ளோம். நமது உறுப்பு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, அனர்த்தம் ஏற்பட்டால் தாங்கும் தன்மையையும், பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்கான நமது உறுதிப்பாட்டையும் நிரூபிக்கிறது.

இந்த மாநாட்டை இங்கு நடத்துவதை இலங்கை கௌரவமாக கருதுகிறது. இது நம் அனைவரையும் பாதிக்கும் சிக்கலான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.

வேகமாக மாறிவரும் அச்சுறுத்தல்களின் உலகில், பிராந்திய கூட்டுமுயற்சிகளை வலுப்படுத்துதல், உளவுத் தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டுறவு உத்திகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சைபர் பாதுகாப்பு, நாடு கடந்த குற்றங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற எல்லை கடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது சம்பிரதாயபூர்வ பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம்.

வரிகளைக் குறைத்து 100% இரசாயனப் பயன்பாடற்ற விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்துஅரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் நாட்டின் நிலைமை மோசமாகியது. அரசாங்கம் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய போதும் அதன் விளைவுகள் மோசமாக இருந்தன. இறுதியில், கடனை அடைக்காமல், அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான பணத்தைக் கண்டுபிடிக்க முடியாத நிதி நெருக்கடிக்கு இது வழிவகுத்தது. பணம் அச்சடிக்கும் அளவுக்கு நிலைமை அதிகரித்தது, இறுதியில் அமைதியின்மை மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புக்கு வழிவகுத்தது.

தேசிய பாதுகாப்பு இப்போது வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டதாக மாறியுள்ளது. நாம் முன்னோக்கிச் செல்லும்போது, ​​புதுமையான மற்றும் நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க எங்கள் அனுபவங்களையும் யோசனைகளையும் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும். எங்கள் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், பாதுகாப்பை ஆதரிக்கும் மற்றும் ஆழமான பிராந்திய ஒருங்கிணைப்பை வளர்க்கும் ஒரு நிலையான கட்டமைப்பை உருவாக்க முடியும்” என்று தெரிவித்தார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால், மாலைதீவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் (ஓய்வு பெற்ற) இப்ராஹிம் லத்தீப், இலங்கைக்கான மொரீஷியஸ் உயர்ஸ்தானிகர் ஹேமண்டோயில் திலும் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன (ஓய்வு ), பாதுகாப்புப் பதவிநிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப் படைத்தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகள், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு செயலக அதிகாரிகள் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.