Published on: பிப்ரவரி 16, 2024

அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்புக்கள் அரசியல் ரீதியில் பாதகமானதாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்

  • நாளை பற்றிய சிந்தனையுடன் ஜனாதிபதி நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார்- சாகல ரத்நாயக்க.

நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்ட நாட்டுக்குத் தேவையான பல பொருளாதார மறுசீரமைப்புகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான திட்டங்கள் அரசியல் ரீதியாக பாதகமானதாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தேர்தலை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களே நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களின் பலன் இன்றே கிடைக்காவிட்டாலும், நாட்டின் இளைஞர் யுவதிகளும் எதிர்கால சந்ததியினரும் அதனால் பயனடைவர் என்று உறுதியளித்தார்.

மாத்தறை மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற 2024 வரவு செலவு திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வு தொடர்பாடல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்த போதிலும், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை ஒப்பிடுகையில் மக்களின் வருமானம் போதிய அளவில் அதிகரிக்கவில்லை. அதனால் அனைத்து துறைகளையும் மறுசீரமைப்புச் செய்து அரசாங்கம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சிறிய மற்றும் நடுத்தர திட்டங்களை செயற்படுத்துவதற்கான நிதி இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நிர்மாணத்துறையை பலப்படுத்துவதால் மீண்டும் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதால் அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒன்றரை வருடங்களுக்கு முன்னரான இந்நாட்டின் நிலைமையை நாம் மறந்துவிட முடியாது. அப்போது, ​​எரிவாயு வரிசைகளிலும், எரிபொருள் வரிசைகளிலும் மக்கள் நேரத்தை செலவிட வேண்டியிருந்தது. மருந்துகள் கிடைக்கவில்லை, வாழ்க்கைச் சூழல் மிகக் கடினமானதாக மாறியிருந்தது.

அந்த நேரத்தில் நாடு முழுமையாக வங்குரோத்து நிலையில் காணப்பட்டது. அரசாங்கத்தை நடத்துவதற்கு ஒரு சதம் கூட வருமானம் இருக்கவில்லை. எரிபொருள், எரிவாயு இறக்குமதிக்கும் பணம் இருக்கவில்லை. அதனால் மக்கள் வீதியிலிறங்கி போராடிய போதிலும் நாளடைவில் அவை சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அரச சொத்துகளுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்துதாக மாறியிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற ஓரிரு வாரங்களின் பின்னர் நாட்டில் சட்டம் ஒழுங்கு மீண்டும் நிலைநாட்டப்பட்டது. நிதி நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டதுடன், எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த தருணத்தில் உரம் கிடைத்திருக்காவிட்டால் விவசாயத்துறை சரிவடைந்திருக்கும்.

இரண்டு முக்கிய காரணிகள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. முதலாவதாக உரக் கொள்கையால் விவசாயத் துறை வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. இரண்டாவதாக வரி குறைக்கப்பட்டதால் அரசாங்க வருமானம் குன்றியது. தேர்தல் குறித்த நோக்கத்தில் மாத்திரமே எடுக்கப்பட்ட முடிவுகளே இந்த நிலைக்கு வழிவகுத்திருந்தாலும் பிற்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து கிடைத்த உதவியால் அவற்றுக்குத் தீர்வைக் காண முடிந்தது.

பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்த வேலைத்திட்டத்திற்கு செல்ல ஜனாதிபதி தீர்மானித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அழுத்தங்களைக் குறைத்து அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. அதன்படி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வரிக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது.

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்தது. இதன் மூலம் வரியை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டை எந்த வகையிலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால் இந்த கஷ்டங்களை இரண்டு மூன்று வருடங்கள் தாங்கினால் இயல்பு நிலைமை ஏற்படும். அதன்படியே, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அதற்கமைவான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம்.

மற்ற நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள நீண்ட காலம் சென்றது. ஆனால் நமது நாடு விரைவில் ஒப்பந்தம் செய்து கொண்டதன் காரணமாக சர்வதேச சமூகத்திற்கு எம்மீது நம்பிக்கை ஏற்பட்டது.

எமது நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் எமக்கு வழங்கிய உத்தரவாதம் எமக்கு சாதகமாக அமைந்தது. அதன்படி, பல புதிய சீர்திருத்தங்களுடன் அடுத்த திட்டத்தை செயல்படுத்தினோம். சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களுடன் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளையும் முன்னெடுத்தோம்.

அதன்படி செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய திட்டமாக ‘அஸ்வெசும’ உள்ளது. எதிர்காலத்தில் இத்திட்டத்தை மேலும் பலப்படுத்த முடியும் என்று கருதுகிறேன். இத்திட்டத்தின் மூலம் மக்களின் நிதி நெருக்கடிகளை ஓரளவுக்குத் தீர்க்க முடியும். திட்டத்தினால் பயனடைவோரின் எண்ணிக்கையை 24 இலட்சமாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு அதிகமான தொகையை இதற்காக ஒதுக்கினோம். இத்தொகை பயனாளிகளின் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படுகிறது. எதிர்காலத்தில் டிஜிட்டல் மயமாக்கலுடன் இந்த திட்டத்தை மேலும் பலப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணி தாய்மாருக்கு சத்துணவுப் பொதி வழங்கும் திட்டத்தை மீள ஆரம்பிக்கவுள்ளோம். முதியோர், சிறுநீரக நோயாளர், விசேட தேவையுடையோர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களின் போசாக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதுபோன்ற திட்டங்களை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

அத்துடன் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்து பாரிஸ் (Paris) சமவாயத்துடன் இணக்கப்பட்டு எட்டப்பட்டு அது குறித்த அறிவிப்பு விரைவில் விடுக்கப்படவுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக மீண்டுவரும். அதனால் சர்வதேச கடன்களை பெறுவதற்கான வாய்ப்பும் உதவிகளும் கிடைப்பதோடு நாட்டுக்குள் பெருமளவான முதலீடுகளும் வந்தடையும்.

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி கணக்கு வழக்குகளை ஆரம்பிக்க வேண்டும். மேலும் புதிய வருமான வழிகளை உருவாக்க வேண்டும். எதிர்வரும் நாட்களில் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்துவோம். அந்த நோக்கிலான முதன்மை திட்டமாக விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

தற்போது இலங்கையில் ஒரு ஹெக்டயரில் 4 மெட்ரிக்தொன் விளைச்சலையே பெற முடிகிறது. தற்போது அதை இரட்டிப்பாக்கக்கூடிய திட்டத்தை தயாரித்து செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளோம். இந்த ஆண்டு கிராம பகுதிகளில் அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சுற்றுலாத்துறையிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். ஏற்கனவே இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 1,489,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். அது முன்னைய ஆண்டை விடவும் இரட்டிப்பாகும். மேலும், 2017 ஆம் ஆண்டில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வந்துள்ளனர். அதே அளவானோரை மீண்டும் வரச் செய்வதே எமது பிரதான இலக்காகும்.

அடுத்த ஆண்டுக்குள் இதை மேலும் உயர்த்த வேண்டும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு 100 டொலரை செலவிடுகிறார்கள். அவற்றுக்கு மேலதிகமாக, நாளொன்றுக்கு சுமார் 500 டொலரை செலவழிக்கும் உயர்தர சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான புதிய திட்டங்களை வகுத்துள்ளோம்.

மேலும், உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை ஆகிய அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமிடலையும் அரசாங்கம் கொண்டுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியால் நாம் அனைவரும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தோம். நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்ட பல சீர்திருத்தங்களை தற்போது நாம் மேற்கொண்டு வருகின்றோம். இது அரசியல் ரீதியாக பாதகமாக இருந்தாலும், நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

சில நேரங்களில் எடுக்கப்படும் முடிவுகளின் பிரதிபலன்களை 100 சதவீதம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், எதிர்கால சந்ததியினரும், இளைஞர் யுவதிகளுக்கும் அதனால் பயனடைவார்கள். அதற்காக நாம் இந்தப் பாதையில் பயணிக்க வேண்டியது அவசியம். இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மீளவும் தடுக்க முடியாத வகையில் நாடாளுமன்ற சட்டத்தை நிறைவேற்றிய பின்பே செயற்படுத்துகிறோம். இருப்பினும் அந்த திட்டங்களை முறையாக நிறைவு செய்ய வேண்டுமெனில் நாம் ஒரு நாடாக ஒன்றுட வேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க கருத்துத் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி கடனை செலுத்த முடியாது என்று அரசாங்கம் முதல் முறையாக அறிவித்தது. நாங்கள் கடனை செலுத்தவில்லை, வெளிநாடுகளின் கடனையும் சர்வதேச பத்திரங்களின் கடனையும் மட்டுமே செலுத்தினோம். அப்போதிருந்து, நாங்கள் உள்நாட்டு கடன்களையும் முக்கிய சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்களையும் தொடர்ந்து செலுத்தி வருகிறோம். ஆனால் அவற்றில் பெரும்பாலான வெளி நாடுகளில் இருந்து பெற்ற கடன்கள் மற்றும் தனியார் கடன்கள் இன்னும் செலு்தப்படவில்லை.

இருப்பினும், தனியார் கடனை செலுத்த முடியவில்லை என்பதை வங்குரோத்து நிலையாகவே கருத வேண்டும். கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் இந்த நிலை ஏற்பட்டதில்லை. எனவே, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கையின் பொருளாதார சமூக அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆண்டு மற்றும் திகதியென குறிப்பிடப்படும்.

இதன்போது பாராளுமன்றமும் மக்களும் இந்த நிலையில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது ஒன்றே செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதன்படி சர்வதேச நாணய நிதியத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அந்த அதிகாரிகள் அப்போது இலங்கைக்கு வரவே அஞ்சினார்கள். ZOOM தொழில்நுட்பத்தின் வாயிலாகவே பேச்சுக்கள் நடத்தப்பட்டன. மிகவும் கடினமான பயணத்திற்குப் பிறகு, செப்டம்பர் 1 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் நிபந்தனையுடன் கூடிய இணக்கப்பாட்டினை எட்ட முடிந்தது. 4 வருட காலத்திற்கு 3 பில்லியன் டொலர் உடன்படிக்கைக்கு வந்துள்ள போதிலும், இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தாதுள்ளதாக அறிவித்துள்ளதால் அதனை வழங்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடனை திருப்பிச் செலுத்தும் முறைமை தொடர்பில் இணக்கப்பாட்டினை எட்டுமாறு வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, இரண்டு சர்வதேச அமைப்புகளின் வழிகாட்டலுடன் 7 மாதப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 2023 மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் இணக்கப்பாட்டை பெற்றோம். அதனால் பாரிய தொகை கிடைக்காவிட்டாலும், இலங்கையில் பொருளாதார நிலைமை வலுவடைந்திருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது என்றார்.

ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய பேசுகையில்,

2024 வரவு செலவுத் திட்டம் இந்த ஆண்டு நாடு எங்கு கொண்டு செல்லப்படும் என்பதை விவாதிக்கும் நிதிசார் ஆவணமாகும். அதை முறையாகப் படிப்பதும், அதற்கு எவ்வாறு பங்களிப்பது என்பது பற்றிய சரியான யோசனையைப் பெறுவதும் மிகவும் முக்கியமானதாகும். மக்கள் வரிசையில் நின்று இறக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் உருவாக்கப்பட்டது. மேலும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எண்ணெய் பவுசர் வந்தபோது மக்கள் குழு ஒன்று கைதட்டியதைக் கண்டோம். இப்படிப்பட்ட கடினமான காலகட்டத்திற்கு நாம் முடிவு கட்டினோம்.

ஜனாதிபதியின் சரியான வேலைத்திட்டத்தினால் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு நாடாக எழுச்சி பெற முடிந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அந்த வேலைத்திட்டத்தை இன்று உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று சர்வதேச நாணய நிதியம் கூட வீழ்ச்சியடைந்த நாடுகளுக்குள் விரைவாக எழுச்சி பெறும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக அறிவித்துள்ளது என்றார்.

தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி. கமகே, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்‌ஷ, மாகாண செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், காலி மாவட்டச் செயலாளர், ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர், முப்படை, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.