Published on: செப்டம்பர் 18, 2023

அமெரிக்க – இலங்கை வர்த்தகம்,முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 14ஆவது கவுன்சில் கூட்டம் கொழும்பில்

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான (TIFA) 14 ஆவது கவுன்சில் கூட்டம் இன்று (18) கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை அரசின் சார்பில் சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் பிரதம பேச்சுவார்த்தையாளர் கே.ஜே.வீரசிங்கவும் அமெரிக்கத் தரப்பில் இருந்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கவின் ஜ.நாவுக்கான பதில் உதவி வர்த்தகப் பிரதிநிதியான பிரெண்டன் லிஞ்ச் (Mr. Brendan Lynch, Acting Assistant United States Trade Representative for South and Central Asia) ஆகியோர் இந்த தொழில்நுட்ப மட்டக் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கினர்.

வர்த்தகம், முதலீடு, சுங்கம், தொழிலாளர் உறவுகள், புலமைச் சொத்து, விவசாயம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவன அதிகாரிகள் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க்(Julie J. Chung) மற்றும் ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜேவர்தன ஆகியோர் சந்திப்பின் ஆரம்ப நிகழ்வில் கருத்துத் தெரிவித்தனர்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான கவுன்சில் கூட்டத்தில் , முதலீட்டு சூழலை பாதிக்கும் கொள்கைகள்,அண்மைய தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகள், புலமைச் சொத்து பாதுகாப்பு மற்றும் அமுல்படுத்தல் , சுங்கம் மற்றும் வர்த்தக வசதி அளித்தல், வர்த்தகத்தைப் பாதிக்கும் தொழில்நுட்ப தடைகள், ஆடைகள், இரத்தினங்கள் மற்றும் நகைகள் அதே போன்று விவசாயத்திற்கான சந்தைப் பிரவேசம் உட்பட இரு நாடுகளும் பரந்த அளவிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்தின.

டிஜிட்டல் பொருளாதாரம், இரத்தினங்கள் மற்றும் ஆபரணக் கைத்தொழில், மலர் வளர்ப்பு, படகு கட்டும் துறைகள் மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி வணிகமயமாக்கல் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி குறித்தும் ஆராயப்பட்டது.

இலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை (FDI) அங்கீகரிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவது மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் வலுவான மற்றும் வெளிப்படையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது உள்ளூர் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் என்பதை அமெரிக்காவும் இலங்கையும் அங்கீகரித்துள்ளன.

நல்லாட்சியில் கவனம் செலுத்தி, இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை இதன் போது அமெரிக்கா வலியுறுத்தியது.

அண்மையில் முன்மொழியப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை இலங்கை முன்வைத்ததோடு லஞ்சம் மற்றும் அனைத்து வகையான ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சியைக் கோரியது.

பைடன் – ஹாரிஸ் நிர்வாகத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை ஆதரிப்பதற்காக வர்த்தக பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்கா, இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.

தொழிலாளர் சட்டங்களை திருத்தியமைக்கும் செயல்முறை மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் தரங்களுக்கு இணங்கிச் செயற்படுவதில் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இலங்கை விளக்கமளித்தது.

தொழிலாளர் சட்டங்களை உருவாக்கும் போது அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டியதன் அவசியத்தையும் பொது மக்கள் கருத்தறிவதற்கான நியாயமான காலப்பகுதியொன்றை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமெரிக்கா வலியுறுத்தியது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கைப் பிரதிநிதிகள், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும் விளக்கமளித்தனர். இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிலாளர் சட்டத் திருத்தங்களை அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விவசாயப் பொருட்களுக்கான வர்த்தகத் தடைகளைக் மட்டுப்படுத்துவதை அமெரிக்கா ஊக்குவித்தது. இலங்கையின் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக, கால்நடைத் தீவனம் (input products) உட்பட பல்வேறு விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கான அதிக சந்தை வாய்ப்பை பெற்றுத்தருவதாக அமெரிக்கா கருத்து வெளியிட்டது.

நிலையான விவசாய அபிவிருத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்தும் அமெரிக்க மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

இயற்கை மசாலாப் பொருட்கள் மற்றும் செறிவூட்டும் (concentrates) உயர் பெறுமதியுடைய மற்றும் பெறுமதி சேர் விவசாய உற்பத்திகளுக்கான சந்தைப் பிரவேசம் தொடர்பிலும் இலங்கை ஏற்றுமதியாளர்கள் மற்றும் அமெரிக்க நுகர்வோருக்கு நன்மை பயக்கும் வகையில் ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் தோல் சார் உற்பத்திகளுக்கான தீர்வை வரிச்சலுகைகளை நீடித்தல் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் கவனம் செலுத்தியிருந்தனர்.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் புத்தாக்கங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறையாக புலமைச் சொத்து (IP) பாதுகாப்பு மற்றும் அதனை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு நாடுகளும் உறுதிப்படுத்தின.

இலங்கையின் புலமைச் சொத்துச் சட்டத்தின் திருத்தம் மற்றும் அதற்கமைவான ஏனைய சட்டங்கள் தொடர்பிலான நடைமுறை அம்சங்கள் குறித்தும் கருத்து வெளியிடப்பட்டது. புலமைச் சொத்துச் சட்ட திருத்தங்கள் தொடர்பாக இலங்கையுடன் இணைந்துச் செயற்படுவதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதோடு, அதன் திறன் மேம்பாட்டிற்கு பங்களிப்பு வழங்கவும் இணக்கம் தெரிவித்தது.

2024 இல் நடைபெறவிருக்கும் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பு கூட்டத்திற்கு முன்னதாக வர்த்தக விவகாரங்களில் நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்தன. துறைசார் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.