Published on: ஜனவரி 15, 2023

அனைத்து மக்களும் ஒன்றாக வாழும் நாட்டிற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும்

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவோம் – தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் கலாசார முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜனாதிபதிக்கு இந்து சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வண்ணமயமான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார சுபீட்சத்தை அடைந்த நாடொன்றை உருவாக்கும் நோக்குடன் 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க ஏற்படுத்திய இலங்கை எனும் தனித்துவத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்த அறிக்கையை பெப்ரவரி மாதம் நாட்டுக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். குறிப்பாக தைப்பொங்கல் என்பது தேசிய விழாவாகும். முற்காலத்தில் விவசாய நாடாக எமது நாடு இருந்தது. நெல் அருவடை கிடைத்த போது அதனை கடவுளுக்குப் படைத்தோம்.

இன்றைய தைப்பொங்கல் நிகழ்வில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றிய இராமநாதன் அழகியற்கலைப் பீட மாணவர்களை பாராட்டுகிறேன். உயர் தரத்திலான கலை நிகழ்வை அரங்கேற்றப்பட்டது. நாதஸ்வர கச்சேரியும் பாரம்பரிய அடிப்படையில் சிறப்பாக அமைந்தது. அனைவருக்கும் பாராட்டை தெரிவிக்கிறேன். இந்த குழுக்களை உலக மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்க முடியும். அது தொடர்பில் இலங்கையர்களாக நாம் பெருமை அடைகிறோம்.

காலியில் நடத்தப்படுவதைப் போன்று யாழ்ப்பாணத்திலும் கலை விழாவொன்றை நடத்த தீர்மானித்துள்ளோம். நாமும் இந்தியாவை விட மாற்றமாக புதிய தமிழ் கலாச்சாரமொன்றை உருவாக்கியுள்ளோம். அதனை உலக அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும்.நல்லிணக்கத்தை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நிறைவு செய்யப்பட்டன.

எமது நாட்டுக்கு நல்லிணக்கம் அவசியமானது. 30-40 வருடங்களுக்கு மேலாக யுத்தம், மோதல்கள்.குழப்பங்கள் மற்றும் பிரிவினைவாத ,இனவாத வங்குரோத்து அரசியல்களினால் நாடு பிரிந்திருந்தது. நாம் ஒரே நாட்டில் வாழ வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்காக 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய தனித்துவமான இலங்கையை நோக்கி பயணிக்க வேண்டும்.

தைப்பொங்கல் விழா மேடையில் பொங்கல் தயார் செய்வதை கண்டேன். நெருப்பின் மேல் பானையை வைத்து தண்ணீர் மற்றும் பால் என்பவற்றை ஊற்றி அரிசி,கருப்பட்டி என்பற்றை இட்டு பொங்கல் தயாரிக்கப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலையில் நாம் சிங்களவர்கள்,.தமிழர்கள் ,முஸ்லிங்கள் ,பேகர் என அனைவரையும் இட்டு அதன் ஊடாக இலங்கையர் என்ற தனித்துவத்தை உருவாக்குவோம்.

வடக்கில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த விழாவின் பின்னர் ஆராய இருக்கிறோம். பாராளுமன்றத்தில் இருக்கும் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். நாம் மீண்டும் நாட்டை ஒன்றிணைக்கவும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் வேண்டும் என்று அவர்களிடம் கோரினேன்.

பாராளுமன்றத்தில் உள்ள தமிழ் கட்சி எம்.பிகளுடன் பேசினேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை மீண்டும் சந்திக்க இருக்கிறேன்.நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றி பெப்ரவரி மாதம் வெளியிட வேண்டும். அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கிறேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை சந்திக்க இருக்கிறேன். இந்தப் பிரச்சினைகளை ஒதுக்கியோ காலங்கடத்தியோ தீர்க்க முடியாது.

தீர்வு என்ன என்பதை பாராளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் வெளியிட வேண்டும்.

பல பிரச்சினைகள் குறித்து ஏற்கெனவே ஆராய்ந்துள்ளோம். காணமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் பேசியுள்ளோம். என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும். அதே போன்று உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும்.

இந்த ஆணைக்குழுவை அமைப்பது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தின் கருத்தை வினவியிருந்தேன். உண்மையை கன்டறிவதை நாமும் விரும்புகிறோம். அதன் மூலம் எம்மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என அவர்கள் தெரிவித்தார்கள்.எனவே உண்மையை கன்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை உருவாக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதே போன்று பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை கொண்டு வர இருக்கிறோம். வடக்கிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வர தயாராவதாக சிலர் கூறுகின்றனர். நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தவே இதனை அறிமுகம் செய்ய இருக்கிறோம். கடந்த வருடம் இதனை தெற்கிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

அடுத்து காணிப்பிரச்சினை காணப்படுகிறது. வன்னியில் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்புள்ள காணிப் பிரச்சினை குறித்து ஆராய இருக்கிறோம். அத்தோடு யாழ்ப்பாணத்தில் மீள காணிகளை கையளிப்பது குறித்தும் ஆராயப்படும்.யுத்த காலத்தில் இந்தப் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக படையினர் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். தற்பொழுது 3000 ஏக்கர் தான் தான் எஞ்சியுள்ளது. அதிலும் மற்றொரு பகுதியை மீள வழங்க இராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது. அது குறித்தும் ஆராயப்படும்.

யாழ் ஆயர் அவர்கள் கோரியது போன்று கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்களை மீள நிர்மாணிக்க இருக்கிறோம். 100 வருடங்களுக்கு மேலாக பூஜை வழிபாடுகள் நடைபெற்ற ஆலயங்கள் உள்ளன. புதிதாக ஆரம்பித்தவைகளும் உள்ளன.

அடுத்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தேசித்திருக்கிறோம். அது வடக்குடன் மட்டும் தொடர்புள்ள பிரச்சினையல்ல. தெற்கில் உள்ள முதலமைச்சர்களும் இதனை அமுல்படுத்துமாறு கோருகின்றனர். இதனை கலந்துரையாடி செயற்படுத்த இருக்கிறோம்.இவற்றை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம்.
வறுமை,பட்டினி,தொழிலின்மை என்பன தமிழ் ,சிங்கள மக்களுக்கு மட்டுப்படவில்லை. அனைவரும் கஷ்டப்படுகின்றனர். அனைவரும் இணைந்து தான் கரைசேர வேண்டும்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் மட்டுமன்றி மேலும் பல பிரச்சினைகள் குறித்தும் ஆராய வேண்டி இருக்கின்றன. மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிகளையும் பாராளுமன்ற கட்சித் தலைவர்களையும் அழைத்து இரண்டாம் கட்ட பேச்சு நடத்த இருக்கிறோம். மலையக தமிழ் மக்களை எமது சமூகத்துக்குள் உள்வாங்கி ஏனைய மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தரும் அவர்களை ஒதுக்க முடியாது.

அதன் பின்னர் முஸ்லிம் எம்.பிகள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து பேச இருக்கிறோம். முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவர்களையும் அழைத்து பேச வேண்டியுள்ளது.

தமிழ் ,முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஓரங்கட்டப்பட்ட கிராமங்கள் உள்ளன. அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. குலபேதம் ,வறுமை காரணமாக ஒதுக்கப்படும் நிலை உள்ளது. கிறிஸ்தவ மக்களுக்கு தமது பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் உள்ளது. அவை குறித்து ஆராய சமூக நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்க இருக்கிறோம். இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து இலங்கையர் என்ற தனித்துவத்தை உறுதிப்படுத்துவோம். இவை அனைத்தையும் முன்னெடுக்க அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், பாதூகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்,பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், குலசிங்கம் திலீபன், பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க,வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா ,பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன , பாதுகாப்பு படைகளின் பணிக்குழாம் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு பிரதானிகள், ஜனாதிபதியின் வடமாகாணத்திற்கான மேலதிகச் செயலாளர் எல்.இளங்கோவன் அரச அதிகாரிகள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.