அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி நாடு
எதிர்நோக்கியுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை முறியடிப்பதற்கு புதிய
பாதையில் பயணிப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்
தெரிவித்தார்.
இன்று (30) பிற்பகல் மல்வத்து மகாநாயக்க அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல
தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டை கட்டியெழுப்புவதற்காக
அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளையும்
வழிகாட்டல்களையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று, (30)
மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்கள் தலைமையிலான
நிறைவேற்று சபை மகாசங்கத்தினரை சம்பிரதாயபூர்வமாக சந்தித்து, ஆசீர்வாதங்களைப்
பெற்றுக்கொண்டார்.
மல்வத்து மகா விகாரையில் கூடியிருந்த மல்வத்து பீடத்தின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய
திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட அனுநாயக்க தேரர்கள் மற்றும் நிறைவேற்று சபை
தேரர்கள் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு, ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
அவர்களுக்கு, அஸ்கிரி மகா விகாரை மண்டபத்தில் ஒன்று கூடியிருந்த, அஸ்கிரி பீடத்தின்
மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர், அனுநாயக்க தேரர்கள்
உள்ளிட்ட நிறைவேற்று சபை தேரர்கள் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வாதம் வழங்கினர்.
மல்வத்து மகா விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி அவர்களுக்கு ஆசி வழங்கும்
விசேட நிகழ்வின்போது, மல்வத்து மகா விகாரையின் நிறைவேற்று சபை உறுப்பினர் ராஜகீய
பண்டித அதி வணக்கத்திற்குரிய மஹவெல ரதனபால தேரர் சிறு அனுசாசனை உரை நிகழ்த்தி,
பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு சக்தி இருப்பதாக தெரிவித்தார்.
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் புகழைப் பெற்ற, முதிர்ச்சியும் திறமையும் கொண்ட
அரசியல்வாதியான அவர், பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள அன்றாடப் பிரச்சினைகளை
உடனுக்குடன் தீர்த்து, தேவையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை
ஏற்படுத்துவார் என்று மகாசங்கத்தினர் நம்புவதாகவும் தேரர் குறிப்பிட்டார்.
அறிவித்தல் இல – 14
2022.07.30
மல்வத்து மகா விகாரை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, சம்பிரதாயபூர்வமாக, நான் செய்ய வேண்டிய இரண்டு கடமைகள்
இருந்தன. பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடுதல். அதற்கு முன்னர் சம்பிரதாயபூர்வமாக
மல்வத்து – அஸ்கிரி மகா விகாரைகளில் ஆரம்பித்து ஏனைய விகாரைகளில் உள்ள மகாநாயக்க
தேரர்களை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வது, உங்களிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களுக்கும்
கிடைத்த சக்திக்கும் நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன். இந்த நேரத்தில், நீங்கள் வழங்கிய ஆதரவு
எனது பணிகளுக்கு பலமாக அமைந்தது.
நாடும் நாட்டின் பொருளாதாரமும் அழிவின் விளிம்பில் இருந்ததால்தான் நான் முதலில் பிரதமர்
பதவியை ஏற்றுக் கொண்டேன். ஒரு நாடாக நாம் இன்று மிகவும் கடினமான இடத்தில் இருக்கிறோம்.
இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். சர்வதேச அமைப்புகளின்
ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு, இந்த பொருளாதாரத்தை சீர்படுத்தி 2023, 2024ஆம்
ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய வகையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான்
செயற்பட்டு வருகின்றேன். இது கடினமானதொரு பணியாகும். ஆனால் அதனை செய்யவில்லை
என்றால், அது இன்னும் கடினமாக இருக்கும். மருந்து கொடுத்து நோயாளியை குணப்படுத்த முயற்சி
செய்வதா அல்லது மருந்து கொடுக்காமல் நோயாளியை இறக்க விடுவதா என்று பார்க்க வேண்டும்.
இன்று, இந்தப் பிரச்சினைகளுடன் அரசியலமைப்பில் பல சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளும்
முன் வைக்கப்பட்டுள்ளன. அதை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த சீர்திருத்தங்கள்
மூலம் பல்வேறு அழுத்தங்கள் வந்தன. சிறந்த, வலிமையான, நல்ல சக்திகள். அதேபோன்று ஒரு
நாட்டை அழிக்கக்கூடிய அழுத்தங்கள். அவை அனைத்துக்கும் மத்தியில் வந்து தற்போது நான்
ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்றுள்ளேன்.
நீங்கள் உபதேசித்தபடி, நாங்கள் மிகவும் கடினமான இடத்தில் இருக்கிறோம். பொருளாதார
சிக்கல்கள் உள்ளன. அரசியல் பிரச்சினைகள் உள்ளன. மகாநாயக்க தேரர்கள் சமர்ப்பித்த
ஆலோசனைகளை நான் வாசித்தேன். அதில் பல நல்ல விடயங்கள் உள்ளன. ஜனாதிபதியாக நான்
புதிய பாதையில் செல்ல விரும்புகிறேன். அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அந்தப்
பயணத்தை மேற்கொள்ள விரும்புகிறேன். சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குங்கள். அதற்கு
இரண்டு வழிகள் உள்ளன. அதில் ஒன்று 19ஆவது திருத்தத்தை முன்வைக்க வேண்டும். அனைவரின்
விருப்பத்திற்கும் ஏற்ப திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிலிருந்து தேசிய அரசாங்கத்தை
முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். இரண்டாவதாக, பாராளுமன்றத்தில் கண்காணிப்பு
ஆணைக்குழுவை நியமித்து, அதன் மூலமும் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கலாம். அதன்படி ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி முன்வைத்த தேசிய சபைக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் புத்திஜீவிகள் எவ்வாறு இதனை ஒழுங்கமைப்பது, சீர்திருத்தங்கள் தொடர்பான
ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அவை அனைத்தும் செய்யப்படும். இவை நமக்கு
முக்கியமான விடயங்கள் ஆகும். அதனால், சர்வகட்சி அரசாங்கம் அல்லது அனைத்துக் கட்சிகளும்
ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை அரசாங்கமாக ஸ்தாபித்து வேலைத்திட்டங்களை
முன்னெடுப்பதற்கு நான் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அறிவித்தேன்.
உங்களின் அறிவுரைக்கும், கொள்கைக்கும் அமைய நான் செயற்படுவேன். அதற்காக மகாநாயக்க
தேரர்கள் உள்ளிட்ட நிறைவேற்று சங்க சபையின் ஒத்துழைப்பும் பொதுமக்களின் ஆதரவும்
கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.
இப்போது உருவாகியுள்ளது கடைசி சந்தர்ப்பமாகும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப்
பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு பொதுவான
திட்டமொன்றையாவது உருவாக்க வேண்டும். இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே எமது
முதன்மைப் பணியாகும். அவற்றை முன்னெடுக்கும்போது எமது பௌத்த தர்மத்தைப் பாதுகாக்கும்
பணியையும் நாம் மறக்க மாட்டோம். நாம் இன்று லிச்சவி மன்னன் குழந்தைகளுக்கு கூறிய
அறிவுரைகளை பின்பற்றினால் இந்த நாட்டை முன்னேற்ற முடியும். அதில்தான் நமது எதிர்காலம்
தங்கியுள்ளது. விசேடமாக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன்
விஜயவர்தன உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
30.07.2022
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.